சிறிலங்கா, ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அடிப்படை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்


சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்காது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான கொள்கைப்பிரிவு ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பெனிற்றா பெரியோ வல்ட்னர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுவது அர்த்தமற்றது.

இலங்கையில் அமைதியான வழிகளில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருகின்றது.

அனைத்துத்தரப்பினரும் வன்முறைகளை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என நாம் பல தடவை வலியுறுத்தி வந்துள்ளோம். சிறிலங்கா அரசு மீது நாம் எதனையும் திணிக்கப்போவதில்லை.

சிறிலங்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளதாக சிறிலங்கா ஊடகங்களில் வெளிவந்த பத்திகள் தொடர்பாக நாம் கவலை கொண்டுள்ளோம். அது அடிப்படை தவறானது.

சிறிலங்கா அரசு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழப்பதை நாம் விரும்பவில்லை.

எனினும் அதனைப்பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அடிப்படை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். சிறிலங்கா அரசு அதனை பின்பற்றும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார் அவர்.

No comments: