பாதுகாப்பு அமைச்சின் பொய்ப்பிரச்சாரத்திற்கு கண்டனம் - வத்திக்கான்


வத்திகானின் மக்கள் யாத்திரை கேந்திர நிலையத்தின் தலைவர் பிரான்சிஸ் அரின்சஸ் கர்தினால் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது, மடு தேவாலயம் குறித்தோ, அல்லது வேறு அரசியல் தலைப்புகளிலோ எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை என இலங்கையில் உள்ள வத்திகான் அபோஸ்தலர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மடுதேவாலயத்தை இராணுவம் கைப்பற்றியமையை வத்திகான் பாராட்டியுள்ளது என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

வத்திகான் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்த போது மடு தேவாலயம் பற்றியோ, அரசியல் விடயங்கள் குறித்தோ எதுவும் பேசாத நிலையில் அரச ஊடகங்களின் ஊடாக ராஜபக்ஸ அரசாங்கம் அரசியல் லாபம் பெறும் நோக்கில் மத தலைவர்களை இணைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுவது குறித்து ஐக்கிய தேசிய கட்சி தனது எதிர்ப்பையும் அருவருப்பையும் தெரிவித்து கொள்வதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கத்தோலிக்க தலைவரான வத்திகான் கர்தினால், கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு செய்த அவதூறு எனவும் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டார்.

No comments: