வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியற் பெண் கைதிகள் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுகின்றனர்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் பெண் கைதிகள் பல்வேறு கஷ்டங்கள் துன்பங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இப்பெண்கைதிகளை ஆண் சிறைக்ககாவலர்களே உடற்சோதனை செய்து வருவதாகவும் இதனால் தாம் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுவதாகவும், ஏனைய கைதிகள் முன்பு அவமானப்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

600 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பிரிவுகளில் 40 தமிழ் அரசியல் பெண் கைதிகள் அடிப்படை வசதிகள் இன்றித் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர மலசலகூடம் மற்றும் பெண்களுக்கான சுகாதார வசதிகள் இன்றி தாம் அவதியுறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊறவினர்கள் இவர்களைப் பார்வையிடச் சென்றால்; ஐந்து நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், அவர்கள் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களைத் திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிய வருகிறது.

பெண் சிறை அதிகாரி ஒருவர் இவர்களைச் சில சமயங்களில் சித்திரவதையும் செய்கிறார். அத்தோடு இப்பெண் கைதிகள் பழிவாங்கவும் படுகின்றனர். இந்தத் தமிழ் பெண் அரசியல் கைதிகளுள் நாவல்வர் பத்து வருடங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பெண் கைதிகள் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்துக்கு இவர்கள் குழந்தையுடன் செல்லும் போது குழந்தையைப் போர்த்துவதற்குத் துணியின்றி பொலித்தீனால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயங்கள் தொடர்பாக இப்பெண் தமிழ்அரசியற் கைதிகள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புப் பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணிக்குப் பல தடவைகள் கடிதமூலம் முறையிட்ட போதும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவி;ல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமது உறவினர்கள் மூலம் பெண்கள் அமைப்புக்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் இது பற்றித் தெரிவித்ததாகவும் ஆனால் தாம் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இன்றி அரசியல் தீர்வு சாத்தியமா? - ஜெஹான் பெரேரா கேள்வி

விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியிருப்பதை ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் தீர்வு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் கட்சிகளான ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பது தெரியவருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டரை வருட காலத்தின் பின்னர் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அரசாங்கப் படைகள் கிளிநொச்சியின் வாயில் நிற்கும்போதே அவர் இவ்வாறு கூறியிருப்பதாக ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். 'பெரும்பான்மை' தீர்வு காலத்துக்குக் காலம் சர்வகட்சி மாநாடுகள் கூட்டப்பட்டபோதும் அவற்றின் மூலம் தீர்வொன்று முன்வைக்கப்படாததுடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது பற்றிய தீர்வு யோசைனை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லையெனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜெஹான் பெரேரா, அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிற்கு பெரிய தமிழ் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார். கடந்த சில காலங்களாக சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்துவரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சர்வகட்சி மாநாடு உலகத்தை ஏமாற்றும் சூழ்ச்சியெனக் கூறி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டைப் புறக்கணித்திருந்தது. எதிர்த்தரப்பினருடனும், தமக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றைக் கொண்டுவருவதற்குப் பதிலாகத் தன்னுடன் சேர்ந்திருக்கும் கட்சிகளுடன் மட்டும் கலந்தாலோசித்து தீர்வொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதையே இது காட்டிநிற்பதாக ஜெஹான் பெரேரா குறிப்பிடுகிறார். பேரம்பேசும் சக்தி தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பெரும்பான்மையின மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பொறிமுறையை தமிழர்கள் அடிப்படைப் பிரச்சினையாகப் பார்ப்பதாகவும், அப்படி இருக்கும்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுடன் இணைந்து முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இல்லாமல் சிங்களத் தேசியவாதக் கட்சிகளை மட்டும் இணைந்துகொண்டு முன்வைக்கப்படும் அரசியல் தீர்வை குறைந்தபட்சமேனும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வர்கள் என்பது சந்தேகமேயெனவும் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். தமிழ் போராட்ட வரலாறு முழுவதும் சிங்களப் பெரும்பான்மைக்கான ஆதிக்கத்தைக் கையாள்வதாகவே இருந்திருப்பதாகவும், இதனால்தான் விடுதலைப் புலிகள் தொடர்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இருந்துவந்ததாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. �விடுதலைப் புலிகள் கொண்டிருக்கும் இராணுவப் பலமே அவர்களின் பிரதான பேரம் பேசும் சக்தியாகக் கருதப்படுகிறது. இது வேறெந்த தமிழ் கட்சிகளிடமும் கிடையாது. ஈ.பி.டி.பி., ரி.எம்.வி.பி. ஆகிய கட்சிகள் தங்களுடைய இருப்புக்கே அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கும் நிலையில் அவர்களிடம் பேரம் பேசும் சக்தி சிறிதேனும் இருப்பதாகக் கொள்ளமுடியாது� என ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அரசபக்க நியாயம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமில்லையென அரசாங்கம் நம்புவதற்கு சில நியாயமான காரணங்களும் உண்டு எனக் குறிப்பிடும் அவர், அது சிங்கள தேசியவாதப் பார்வை மட்டுமன்றி விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகக் கையாழும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக இருந்துவரும் சர்வதேசத்தின் பார்வையும் இதுவாகவே இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பின்னணிப் பலத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கை முழுமையாக அமுலிலிருந்த காலப்பகுதியே பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வுக்கு சிறந்த காலமாக விளங்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தனியான அரசைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற நோக்கோடு அந்த சமாதான முயற்சிகளை விடுதலைப் புலிகள் குறைத்து மதிப்பிட்டிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொண்ட கட்சி தற்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதுடன், இரண்டரை வருடங்களுக்கும் மேலாக வடக்கு, கிழக்கில் யுத்தம் முன்னெடுக்கப்படுவதாகவும், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், 2003ஆம் ஆண்டு மார்ச்சில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகப் போவதாகவும், ஜுலை மாதம் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளில் கலந்துகொள்ளமாட்டோமெனவும் அறிவித்ததன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையின் அத்திவாரத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டனர் எனவும் ஜெஹான் பெரேரா தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல்-காணொளி

அதிகரித்துவரும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுக்கு மத்தியில், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்கானல். தமிழாக்கம்.

இந்திய மத்திய அரசிடமும் , குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புலிகளின் மீதுள்ள தடையை நீக்குமாறு ப.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இனியும் பயங்கரவாத இயக்கமாக நோக்கவேண்டாம் எனவும் தாம் இந்தியாவுக்கு எதிரிகள் அல்ல எனவும் பகிரங்கமாக அவர் தெரிவித்திருப்பது, இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருக்கின்றது.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது உண்மையான நண்பர்களை இனம்கானவேண்டும் என்றும், சிங்கள இராணுவத்திற்கு பல அதிர்ச்சி தாக்குதல்கள் காத்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் இலங்கை இராணுவம் தாம் புலிகளை வெற்றிகொண்டதாக அறிவித்த பின்னர் பல முனைகளில் தாக்குதலுக்குளளாகி சின்னாபின்னமான பல வரலாறுகளை நினைவுகூர்ந்தார் ப.நடேசன் அவர்கள்.

சீமான் - சேரன் - அமீர் கைது செய்யப்படலாம் - திரையுலகம் இவர்களின் பின்னால் திரள வேண்டும் - சத்தியராஜ்

தமிழ் திரைப்பட இயக்குனர்களான சீமான், சேரன் மற்றும் அமீர் ஆகியோரை தமிழக காவற்துறையினர் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ் திரையுலகின், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்,

இந்த இயக்குனர்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசியதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைதுசெய்யப்பட்டதை அடுத்து, சீமான், சேரன், அமீர் ஆகியோரும் கைதுசெய்யப்படலாம் என தமிழக காவற்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்களை கைதுசெய்ய முடியுமா என காவற்துறையினர் சட்டஆலோசனைகளை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

அதேநேரம் முழு தமிழ் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் உரையாற்றிய அவர், தனது வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்று காரணமாக தன்னால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய பேரணியில் கலந்துகொள்ள முடியாது போனதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தை தான் வரவேற்பதாகவும் முதல்வர் கூறியது போல், போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்க அருகதையற்றவர்கள் என சத்தியராஜ் கூறியுள்ளார் தான் இதனை கட்சி சார்பாகவோ அல்லது வேறு எவருக்கும் வால்பிடிப்பதற்காகவும் கூறவில்லை எனவும் தமிழன் என்ற உணர்வோடு தெரிவிப்பதாக சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி, மொழி இன பேதமின்றி அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இயக்குனர் அமீர், சீமானை அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றனர். இவர்கள் பேசியது சரியா, தவறா என தான் கூறவில்லை எனவும் இந்த விடயத்தில் முழுத் திரையுலகமும் சீமான், அமீர் பின்னால் நின்று ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என சத்தியராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். ஏனெனில் தனக்கு தனிப்பட்ட முறையில் இதுபோன்ற பிரச்சினை எற்பட்ட போது திரையுலகம் தன்பின்னால் நிற்கவில்லை.

திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும் தான் தனக்கு உதவி செய்ததாகவும் ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் அமீரும் சீமானும் இவ்வாறு பேசி உள்ளனர். எனவே இவர்கள் பின்னால் திரையுலகம் நிற்க வேண்டும் எனவும் சத்தியராஜ் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை மனிதச் சங்கிலி போராட்டம்:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் சார்பில் நாளை சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் (ஒக்21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மனிதச் சங்கிலி போராட்டம், சென்னையில் பெய்த கடும்மழை காரணமாக 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு எதிரில் நாளை பிற்பகல் 3 மணிக்கு மனிதச் சங்கிலி போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல்வர் கருணாநிதி மனிதச் சங்கிலியை ஆரம்பித்து வைத்து, நிறைவடையும் வரை அதனை பார்வையிட உள்ளார்.

இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் அதிமுக மதிமுக, தேமுதிக பாஜக ஆகிய கட்சிகளைத் தவிர, தமிழகத்தில் உள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்கின்றன. மேலும் திரையுலகத்தினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் எராளமான பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான காவற்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பிரிவினை வாதம் பேசுவோர் மீது தமிழக அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இல.கணேசன்:

பிரிவினை வாதம் பேசுவோர் மீது தமிழக அரசு சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இலங்கையில் இன்னலுறும் தமிழருக்காக இரக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. இதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், தனித் தமிழ்நாடு கோரிக்கை விடுப்பவர்களும்,இலாம் அடைய முயற்சிப்பதால், தமிழக மக்கள் இந்த பிரச்சினையில் இருந்து விலகி நிற்ககூடும் என இல.கணேசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே பிரிவினை வாதம் பேசுபவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் எனவும் தமிழக அரசு இவ்வாறான பேச்சுக்களை அலட்சியப்படுத்தாது, உறுதியுடள் செயல்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜகவின் தமிழ்மாநில தலைவர் கேட்டுள்ளார்.

காங்கிரஸ் மீது சீமான் கடும் தாக்கு

இலங்கையில் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக தனது இயக்கத்தின் 21,000 பேரை பலிகொடுத்த விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் மீதான தடையை இந்திய அரசு உடனே நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் சீமான்.

இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்து சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டுஉள்ளது. 86 சதவீதம் மக்கள் அவர்களை தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர்.

ஆட்சியையே மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். புலிகளின் இயக்கம் எப்படிப்பட்டதென அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தீர்மானிக்கக் கூடாது. அதை மக்கள் சொல்வார்கள்.

ஒரு இனத்தை அழித்து ஒழிக்கும் அரசு பயங்கரவாத அரசா... அவல்லது அப்படிப்பட்டவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பவர்கள் தீவிரவாதிகளா?

விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல, தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்துள்ளனர் என்கிறார் பால்தாக்கரே. அவர் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என்று உங்களால் கண்டிக்க முடியுமா? முடியாது, காரணம் அவரைச் சீண்டினால் மராட்டியம் மண்மேடு ஆகிவிடும்.

தமிழர்கள் இளிச்சவாயர்கள். அதனால் வாயிலும் வயிற்றிலும் குத்துகிறீர்கள்.

தமிழக மீனவர்கள் 400 பேரை நடுக்கடலில் சுட்டு வீழ்த்தி நாட்டையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது சிங்கள அரசு. அதை கண்டிக்க துப்பில்லை. நானும் அமீரும் பேசியதில் நாடு சுக்குநூறாகி விட்டதா?.

அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பாற்றும் மனித நேயப்பண்பு இல்லாமல் கீழ்த்தரமான அரசியல் நடத்துகின்றனர் இங்கே.

தமிழ் மக்கள் செத்து விழுகிறார்கள். அவர்களுக்காக கண்ணீர் சிந்துவது தப்பா? தமிழன் என்பதை விடுங்கள்... ஒரு சக மனிதன் செத்தால் வருந்த மாட்டீர்களா? தமிழ் மீனவன் கடலில் செத்து விழுகிறான். பேரியக்கம் என்று கூறிக் கொள்பவர்கள் (காஙகிரஸ்) ஏன் கண்டிக்கவில்லை?.

நம்மிடமிருந்து ரேடார் வாங்கிக் கொண்டு, ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு ராணுவ பயிற்சி எடுத்துக் கொண்டு நம் இனத்தைச் சேர்ந்த மீனவரை ஒருவன் சுட்டுத் தள்ளுகிறான். அவனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறீர்களே இதை விட கொடுமை என்ன இருக்கிறது?

மீனவர்கள் சுடப்படுவது கண்டிக்கத்தக்கது என்றாவது நீங்கள் பேசியது உண்டா? பெரியார், மார்க்சியா, அம்பேத்காரின் புதல்வர்கள் நாங்கள். சொந்த இனம் அழிவதைப் பார்த்து பேசாமல் மெளனமாக இருக்க முடியவில்லை.

உலகில் எந்த தீவிரவாத இயக்கத்திலும் 21,000 பேர் உயிர் நீத்த சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் தீவிரவாத இயக்கம் அல்ல. மக்கள் விடுதலைக்காக போராடும் போராளிகள்.

பொறுத்திருப்போம்... எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.

நெல்சன் மண்டேலாவைக் கூட தீவிரவாத பட்டியலில்தான் வைத்திருந்தனர். சுபாஷ் சந்திர போஸ் பெயரையே அந்தப் பட்டியலில் இருந்து இப்போதுதான் நீக்கியுள்ளனர்.

எனவே தயவு செய்து புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என்று கெஞ்சுகிறோம். நாங்கள் எங்கள் எழவுக்காக அழுகிறோம். நீங்களோ எங்கள் பிணத்தின் மேல் ஏறி நின்று பிரசாரம் செய்கிறீர்கள் என்று கூறியுள்ளார் சீமான்.

ஈழத்தில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது : இராமதாஸ்

ஈழத்தில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருவதாகக் கு‌ற்ற‌ம்சாட்டியுள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் மருத்துவர் இராமதா‌ஸ், தமிழ் உணர்வுள்ள ஒவ்வொருவரும் இந்த கொடுமையை எதிர்க்க முன்வர வேண்டும் எ‌ன்று‌ம் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு செய்ய மனமில்லாதவர்கள் தேவையற்ற பிரச்சனைகளையும், வாதங்களையும் எழுப்பி தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எ‌ன்று‌ம் அவர் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ஈழப் பிரச்சனை என்பது சிங்கள படைகளுக்கும், போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வருகிற சண்டை மட்டுமல்ல, அது ஈழத்தில் தமிழ் பேசுகின்ற 52 இலட்சம் மக்களுடைய உரிமைப் பிரச்சனை எ‌ன்று கூறினார்.

ஈழத்தில் சம உரிமை கேட்டு போராடி வரும் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் ராஜபக்ச செயல்பட்டு வருவதாகவும், கு‌‌ற்‌ற‌ம்சாட்டிய இராமதா‌ஸ், இது வேறு ஒரு நாட்டில் நடைபெறுகிற உள் விவகாரம் என்று இந்தியா பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியாது எ‌ன்று‌ம் மாறாக, உரிமையோடு தலையிட்டு தட்டிக்கேட்க வேண்டும் எ‌ன்றும் கேட்டுக்கொண்டார்.

''ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்க மனமில்லை என்றாலும், அவர்களை கொன்று குவித்து வரும் சிங்கள படையினருக்கு மறைமுகமாக அளித்து வரும் அனைத்து உதவிகளையும் ம‌த்‌திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்'' எ‌ன்றும் இராமதா‌ஸ் வ‌லியு‌த்‌தினா‌ர்.
செ‌ன்னை‌யி‌ல் நாளை நடைபெறும் மனித‌ச்சங்கிலியில் தேனாம்பேட்டையில் தானும் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்த இராமதா‌ஸ், இந்த அணிவகுப்பில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எ‌ன்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளை இதில் காண்பிக்கக்கூடாது எ‌ன்று‌ம் வே‌‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.
அனைத்து‌க்கட்சி கூட்டத்திற்கு பின்னரும் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி தரவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ராமதா‌ஸ், ''இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பது நிறுத்தப்பட்டு விட்டது, பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறார்கள், இந்திய அரசின் சார்பாக உணவும், மருந்தும் நேரடியாக இலங்கைக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் வந்தால்தான் திருப்தியாக இருப்போம்'' எ‌ன்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வுடன், பா.ம.க.விற்கு கருத்துவேறுபாடுகள், அரசியல் மோதல்கள் இருந்தாலும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக அவற்றை ஒதுக்கிவிட்டு முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளை பா.ம.க ஆதரிக்கிறது எனவும், இதுதான் தமது நிலைப்பாடு எ‌ன்றும் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை

ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டும்சர்ச்சைக்குரியவற்றை தவிர்க்க வேண்டும்
இலங்கையின் குடிமக்களான தமிழ்ப்பேசும் மக்கள் மீது இலங்கை அரசு மூர்க்கத்தனமாக நடத்தி வரும் விமான, தரைப்படை தாக்குதல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.. பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரும் கூட சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் காந்தியடிகள் பிறந்த அக். 2ம் நாள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தங்களுடைய மனிதாபிமான ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்மக்களுக்கு எதிரான போரை இலங்கை அரசு உடனே நிறுத்தவேண்டும், இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் படைக்கு இந்திய அரசு எந்த விதமான ஆயுதங்களையும் அனுப்பகூடாது.

அனுப்பிய ஆயுதங்களை உடனே திரும்பப்பெறவேண்டும். குண்டுதாக்குதலால் அகதிகளாக கொட்டும் மழையில் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து ஆகியவற்றை தாமதமின்றி அனுப்பவேண்டும்.

இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொல்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவைத் தந்து தமிழகத்தின் ஒற்றுமையை காந்தி பிறந்தநாளில் வெளிப்படுத்தினார்கள்.

இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்பொழுதும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இதைப்போலவே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இதில் இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அவ்வாறு எடுக்கத் தவறினால், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலக நேரிடும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வலியுறுத்துவதற்காக அக்டோபர் 24ந் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேயில்லை. இலங்கை அரசு வெளியிட்டு வரும் பொறுப்பற்ற கருத்துக்கள் தமிழக மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்திய அரசு அளித்துவரும் இதற்கான விளக்கங்களும் மனநிறைவையும், நம்பிக்கையையும் தருவதாக இல்லை.

எனவே தமிழக மக்கள் தங்களது ஆத்திரத்தையும், கவலையையும் தெரிவிக்கும் வகையில் போராடிவருகின்றனர். மாணவர்கள், வணிகர்கள், வழக்குறிஞர்கள், மருத்துவத்துறையினர், திரைப்படக்கலைஞர்கள் என்று சமூகத்தின் அனைத்து பகுதியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
உலக தமிழர்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் இந்த எழுச்சிக்கு பெரிய ஆதரவையும் வரவேற்பையும் அளித்து வருகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் ஒன்றுகூடி இலங்கைத் தமிழர்களின் துயரத்தை எப்படியாவது போக்க வேண்டும் என்பதில் தங்களுடைய மேலான விருப்பங்களை வெளியிட்டு வருகிறார்கள்..

இந்த நிலையில் தமிழகத்தின் கடமையும், பொறுப்புணர்வும், மிகவும் கூடுதலாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை எழுப்பிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இதனை தவறாக சிலர் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது என்பதில் நமக்கு எச்சரிக்கை வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களை வைத்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே அறிக்கைப்போர், விமர்சனப்போர் நடத்துவதை கைவிடவேண்டும். போர் மேகத்தின் குண்டு மழைக்கிடையே நொடிகள் தோறும் செத்துக்கொண்டிருக்கிற தமிழ்மக்களின் பெயரால் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதி திரும்பியப் பின் அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முயற்சி செய்யவேண்டும். இதுதான் இப்பொழுது இலங்கை தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது.

இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன், ஒருமித்துக்குரல் கொடுக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. இந்தப் பிரச்சனையை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா?

என்ற சர்ச்சையாக மாற்றுவதை தவிர்க்கவேண்டுமென்று சம்பந்தப்பட்டவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தமிழகத்தின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் விதத்திலும் அமையவேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்த விரும்புகிறது..

சில அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மனிதச் சங்கிலி போராட்டத்திலும் தமிழகத்தின் தனித்த அரசியல் சூழ்நிலையால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், இந்தப் பிரச்சனையை தீர்ப்பதில் அவர்களும் முழுமுயற்சி எடுக்கவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

(தா.பாண்டியன்)
மரிநலச் செயலாளர்

பிரிவினைவாத பேச்சு: வைகோ கைது-கண்ணப்பனும் கைதாகிறார்

நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார்.

ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையி்ல்,

புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.

தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.

கண்ணப்பனின் பிரிவினைவாத பேச்சு:

அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.

வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

விரைவில் கண்ணப்பனும் கைது செய்யப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார். க்யூ பிராஞ்ச் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இலங்கை தூதரகம் மீது கல்வீச்சு:

இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் புகையிரத மறியற் போராட்டம் - தொல் திருமாவளவன் கைது

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு அனைத்திலும் இ‌ன்று வியாழக்கிழமை தொடரூந்து ம‌றிய‌லி‌‌ல் ஈடுப‌ட்ட விடுதலை சிறுத்தை க‌ட்‌சியை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னை மத்திய தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌‌திய தொ‌ல்.திருமாவளவன் உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர் கைது செய்யப்பட்டனர். ‌

இ‌ந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் கலந்து கொண்டார்.

மத்திய தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ள் திருமாவளவ‌னை நுழையாது தடுப்பதற்கு காவ‌ல்துறை‌யின‌ர் அரண் அமைத்து ‌நி‌ன்ற போதிலும், அந்த தடையையும் உடைத்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜப‌க்சவு‌க்கு எ‌திராகவு‌ம், இந்திய ம‌த்‌திய அரசு‌க்கு எ‌திராகவு‌ம் முழக்கங்கள் எழு‌ப்ப்பட்டது.

இந்த மறியல் போரா‌ட்ட‌த்தினால் டெல்லியில் இருந்து சென்னை சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு ‌விரைவு தொடரூந்து, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார தொடரூந்து 5 தொடரூந்துகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டன.

சென்னை மத்திக்கு செல்ல வேண்டிய 12 தொடரூந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தினால் தொடரூந்து போக்குவரத்தில் ‌பல ம‌ணி நேர‌ம் பாதி‌க்க‌ப்ப‌ட்டது.

இதேவேளை, திரு‌ச்‌சி‌ தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட ‌விடுதலை ‌சிறு‌த்தை க‌ட்‌சியை சே‌ர்‌ந்தவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

இதன்போது பே‌சிய மா‌நில பே‌ச்சாள‌ர் த‌மிழரச‌ன், ''ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது கொடூரமாக தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றில‌ங்கா படைகளுக்கு இ‌ந்‌திய அரசு எ‌ந்த‌விதமான உத‌வியு‌ம் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று‌ம், ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் ந‌ட‌ந்து வரு‌ம் போரை இ‌‌ந்‌திய அரசு உடனடியாக தடு‌த்து‌ ‌‌நிறு‌த்த‌ வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இதேபோ‌ன்று ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் லா‌ல்குடி, ஜெய‌புர‌ம், மண‌ப்பாறை ஆ‌கிய தொடரூந்து ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த நூ‌ற்று‌க்கண‌க்கான ‌விடுதலை ‌சிறு‌த்தை‌யின‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

புது‌‌க்கோ‌ட்டை தொடரூந்து ‌நிலைய‌த்‌தி‌ல் விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌‌ர் அ‌ப்து‌ல் நாச‌ர் தலைமை‌யி‌ல் ம‌‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

இதேபோன்று தமிழ்நாடு அனைத்திலும் கடைபெற்ற தொடரூந்து மறியல் போரா‌ட்ட‌த்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆயிரக்கனக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறையில் சிறீலங்கா படையினரது படைக்கல பிரதான வழங்கல் கப்பல் தாக்கியழிப்பு

சிறீலங்கா கடற்கடையினரின் வடபுல பிரதான கடல்வழி வழங்கல் தளமான காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற படையினரின் வழங்கல் கப்பல் விடுதலைப் புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை காலை 5:10 அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலி சிறப்பு தாக்குதல் அணியினர் காங்கேசனதுறை துறைமுகத்தில் தரித்து நின்ற றுஹுன (Ruhuna), மற்றும் நிமலாவ (Nimalawa) ஆகிய இரு பிரதான படைத்துறை வழங்கல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மற்றைய கப்பலான எம்.வி. றுகுணுவ பலத்த சேதங்களுடன் சிறிலங்கா கடற்படையினரால் கட்டியிழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ள பொதுமக்களின் உணவு விநியோகத்துக்கு இந்த கப்பல்களை பயன்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவ வழங்கல்களை இந்த கப்பல்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை இந்த கப்பல்கள் படையினருக்கான தமது வழமையான வழங்கல் பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற வேளை, கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி மின்னல் வேக தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதலில் எம்.வி. நிமல்லாவ கப்பல் தீப்பற்றி எரிந்தவாறே மூழ்கத்தொடங்கியது. எம்.வி. றுகுணுவ கப்பல் கடும்சேதங்களுக்குள்ளானது. கரையிலிருந்து விரைந்து வந்த சிறிலங்கா கடற்படையினர் அதை மூழ்கவிடாது கரைக்கு இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.