செங்கலடி பதுளை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு படையினர் பலி

செங்கலடி பதுளை வீதியில் மகோயா காவற்துறைக் காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயங்களுக்குள்ளானார்.

இச்சம்பவம் நேற்று மாலை (செப்25) 06.05 மணியளவில் இடம்பெற்றது. கடமையிலிருந்த ஊர்காவற்படைச் சிப்பாயே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்டகொண்டதாகவும் காவலரனில் நிறுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி வாடகை வண்டி எனவும் தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் இராணுவச் சிப்பாய் எனவும் மற்றையவர் விமானப் படைச் சிப்பாய் எனவும், இவர்கள் சாதாரண உடையிலேயே பயனித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் சட்டநாதர் வீதிப்பகுதியில் இளம் குடும்பத்தவரை காணவில்லை. படையினர் மீதே சந்தேகம் - மனைவி


யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட சட்டநாதர் வீதிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது கணவர் காணாமல் போவதற்கு முதல் நாள் படையினர் தமது வீட்டில் இருந்து கணவரின் புகைப்படத்தை எடுத்துச் சென்றதாக மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் பல தடவைகள் வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 23 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருணமதிதுரை கிஷோர்குமார் என்பரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கிஷோர்குமாரின் இரண்டு சகோதரர்கள் ஏற்கனவே தொடர் மரண அச்சுறுத்தல்களை அடுத்து காணாமல் போயினர் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இனவாதத்தை கக்கும் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா..இலங்கை சிங்களவர்களுக்கே உரியதாம்.

தமிழ் சிறுபான்மையினரினால் நாடு துண்டாடப்படுவதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படையினர் முன்னெடுக்கும் யுத்தம் ஒரு வருடத்திற்குள் முடிவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிலிருந்து வெளியாகும் தி நெசனல் போஸ்ட் என்ற ஊடகத்திற்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நாடு சிங்களவர்களுக்கே உரிமையானது என்பதில் சந்தேகம் இல்லை எனவும், சிறுபான்மை மக்களையும் இந்த மண்ணின் மைந்தர்களாகவே நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் 75 வீதமான சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களது உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நடவடிக்கைகளின் போது சிவிலியன்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது எனவும், மிகவும் குறைந்தளவு சிவிலியன்களே யுத்தத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் குரல் கொடுப்பது போன்று படையினர் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான ஆளணித் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் 8000 விடுதலைப் புலி உறுப்பினர்களும், கிழக்கில் 2000 உறுப்பினர்களும், விமானபடைத் தாக்குதல்களின் மூலம் 1000 உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வட்டாரத் தகவல்களுக்கு அமைய மேலும் 4000 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே எஞ்சியிருப்பதாகவும், சுமார் 250,000 அரச படையினரும் பாரியளவிலான ஆயுதங்களும் கைவசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் காட்டுப் பகுதிகளில் புதைக்கப் பட்டிருக்கும் கண்ணி வெடிகளை முற்றாக அகற்றுவதற்கு இன்னமும் 20 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பூரணமாக நாடு விடுதலைப் பெறும் வரையில் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் நான்காவது ஈழப்போர் பற்றி அதீதமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி அடுத்த வாரமளவில் கைப்பற்றப்படும் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தென்மராட்சியில் சிறீலங்கா படையினரது அடக்கு முறைகள்


யாழ் தென்மராட்சியில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாடுகள் காரணமாக தமது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சீவல் தொழிலாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


தென்மராட்சியில் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பல முகாம்களை அமைத்துள்ள சிறீலங்கா படையினர், தமது முகாமிலிருந்து 500 மீற்றர் தொலைவில் தொழில் செய்ய தடை விதித்துள்ளனர்.


கச்சாயில் முகாம் ஒன்றிற்கு அருகில் தொழில் செய்த இரண்டு சீவல் தொழிலாளிகள் சிறீலங்கா படையினரால் நேற்று புதன்கிழமை கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தனர்.


இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இருவரின் குடும்பத்தினரும் படையினரிடம் தமது வறுமை நிலை பற்றி எடுத்துக் கூறியபோது, எச்சரிக்கை செய்யப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


முகாம்களுக்கு அருகிலுள்ள பனை, தென்னை மரங்களில் சீவல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், விடுதலைப் புலிகளுக்கு உளவு நடவடிக்கையில் ஈடுபடலாம் என படையினர் சந்தேகிக்கின்றனர்.


இதேபோன்ற தடைகள் கடற்றொழிலாளர்களுக்கும் நீடிக்கப்பட்டு வருவதால், அவர்களது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும் யாழ் குடாநாட்டில் பாதிக்கப்பட்டுள்ளன.


தொன்டமனாறு பகுதியில் தூண்டில் மீன்பிடித்தொழிலாளர்கள் தமது தொழிலில் ஈடுபடவும் கடந்த சில நாட்களாக சிறீலங்கா படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.


அத்துடன், இடைக்காடு உயர் பாதுகாபபு வலய மண் அரண்களுக்கு அருகில் வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, மழை கால ஆரம்பத்தில் வேலிகள் தழைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அனைத்து வேலிகளையும் அரைவாசி உயரத்துடன் வெட்டுமாறு படையினரால் பணிக்கப்படுகின்றது.

கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் காணாமற் போனோர் விபரம்!

ஸ்ரீலங்காவில் 2008 ஜனவரி முதல் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவினரின் மக்கள் பணியகத்திலும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு 2 - 144 இலக்க காரியாலயத்திலும் நேற்று வரை சுமார் 239 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 152 பேர் பற்றிய தகவல்கள் எதுவுமில்லாததால் இவர்கள் பற்றிய தகவல்களை அக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் தருமாறு செத்சிறிபாய இயந்திரவியல்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவினர் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவிடம் கேட்டுள்ளனர்.

இக் கூட்டத் தில் குழுவின் அங்கத்தவர்களான பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், வாசுதேவ நாணயக்கார, இணைப்பு அதிகாரிகளான ஆர். திவ்வியராஜன், லால் வெடிக்கார, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண, பயங்கரவாத தடுப்புப் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அசோகா கல்கமுவ, கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குநர் வாக்கிஸ்டர், இரகசிய பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

காணாமல் போனவர்களில் தகவல் எதுவும் கிடைக்காத 152 பேர் பெயர் விபரங்கள்:

1. அன்ரனிப்பிள்ளை தனபாலன், யாழ்ப் பாணம் 36 வயது
2. சிதம்பரப்பிள்ளை நித்தியலக்ஷ்மி, புத் தளம், 30 வயது
3. குணசெல்வம் மஹிந்தன், கிராண்ட்பாஸ், 37 வயது
4. சிதம்பரபிள்ளை சிரோன் சிவபாதம் புத்தளம், 28 வயது
5. டீ. கமலகாந்தன், மட்டக்குளிய, 26 வயது
6. சுப்பிரமணியம் இராமச்சந்திரன், துன்னாலை,யாழ்ப்பாணம், 37 வயது
7. திலகராஜா செல்வகுமார், கொழும்பு, 26 வயது
8. தங்கரட்ணம் பாலசுப்பிரமணியம், உடப்பு, 35 வயது
9. டீ. சிவராசா ஜெயகாந், தெஹிவளை, 28 வயது
10. டுலிப் அரிகுமார் கல்கிசை, 21 வயது
11. சுப்பிரமணியம் மயூரன், கொழும்பு, 25 வயது
12. மொஹமட் நசீர், நீர்கொழும்பு, 26 வயது
13. ஆசீர்வாதம் சூரியகுமரன் கிராண்ட்பாஸ், 22 வயது
14. அசன் மொஹமட் நசீர் கொழும்பு, 27வயது
15. சூரியகுமார் கொழும்பு, 25 வயது
16. சூசைப்பிள்ளை அன்டன், வவுனியா
17. தர்மகுலசிங்கம் மயூரன் கொள்ளுப்பிட்டி, 22 வயது
18. திஸ்ஸ வீரசிங்கம் பெனடிக் மட்டக் குளிய, 39 வயது
19. வீரபத்திரன் வைரமுத்து களுவாஞ் சிக்குடி, 51 வயது
20. செல்வமுத்து ஜெயகாந்தன் மொனராகலை, 27 வயது
21. கே. இராசதுரை, புத்தள, 32 வயது
22.நல்லதம்பி தம்பிமுத்து கல்முனை, 34 வயது
23. முத்துலிங்கம் உதயகுமார், கொட் டாஞ்சேனை, 37 வயது
24. ஜெயராம் ஜெசுதன், வவுனியா, 23 வயது
25. அழகப்பன் நடராஜா வவுனியா, 22 வயது
26. எம். தர்மராஜா மொனராகலை, 22 வயது
27. எம். தினேஷ்குமார் மொனராகலை, 26 வயது
28. வேலுசாமி புண்ணியமூர்த்தி மொனராகலை, 26 வயது
29. சடாச்சரம் திருவருள் பண்டாரவளை, 22 வயது
30. ஆர். ஜெயகாந்தன் மொனராகலை, 25 வயது
31. சிவராசா ஜெயந்தன் தெஹிவளை, 27 வயது
32. பீ.ஏ.எம். ரபீக் கொழும்பு, 40 வயது
33. குமாரரட்ணம் கிருஷ்ணராஜ், கொழும்பு, 30 வயது
34. வி.எஸ். குங்ஜா, புத்தளம், 38 வயது
35. கே.என். நாகேஸ்வரன், கொச்சிக்கடை, 41 வயது
36. செபஸ்டியன் என்டனிராஜ், மன்னார், 30 வயது
37. தேவபிரகாசம் ஜோன், தம்புள்ள, 57 வயது
38. கோவிந்தன் நாகராஜ், புத்தளம், 27 வயது
39. இமானுவேல் அன்டனிதாஸ் கொட்டாஞ்சேனை, 57 வயது
40. யு.எல். நிசார் திருகோணமலை, 31 வயது
41. நாகலிங்கம் நதிகுமார் மொனராகலை, 28 வயது
42. ரவீந்திரன் ரஞ்சித் கொழும்பு, 25 வயது
43. முத்துவேல் ஸ்ரீவினோதரன், மொனராகலை
44. தம்பிராஜா கார்தீபன், கொழும்பு, 26 வயது
45. சடாசரம் அருள், பண்டாரவளை, 28 வயது
46. எம். சனுன் முனீர்,மாதம்பிட்டி, 42 வயது
47.கருணேந்திரன் கருணாகரன், மட்டக்குளி, 29 வயது
48. செல்வச்சந்திரன் நிசான், மட்டக்குளி, 22 வயது
49. நடுவிலான் சரஸ்வதி, கதிரேசன் வீதி, 31 வயது
50. நாகேந்திரன் ஜெயபிரபா, கொழும்பு, 26 வயது
51. செல்லையா தர்மலிங்கம், மட்டக்களப்பு, 26 வயது
52. கனகசூரியம் ராஜா, மட்டக்களப்பு, 27 வயது
53. பரமானந்தன் துஷ்யந்தன், கதிரேசன் வீதி, 24 வயது
54. கே. வசீகரன், கதிரேசன் வீதி, 26 வயது
55. செல்லத்துரை கண்ணன், கதிரேசன் வீதி, 24 வயது
56. வரதராஜன், வெள்ளவத்தை
57. ஸ்ரீதரன் வெள்ளவத்தை, 28 வயது
58. தங்கவேல் உதயகுமார், வத்தளை, 31 வயது
59. பரமலிங்கம் சந்திரகாந்தன், கொழும்பு, 47 வயது
60. வீரகுட்டி சதாரலிங்கம், பம்பலப்பிட்டி, 40 வயது
61. எஸ்.ஜீ. பிரதீபன், மட்டக்களப்பு, 22 வயது
62. தில்லையம்படி முரளிதரன், மட்டக்களப்பு, 36 வயது
63. யஸ்பன் கிரிபர்ட், ஜெம்பட்டா வீதி, 43 வயது
64. ஸ்ரீகாந்தன் சசிதரன், கதிரேசன் வீதி, 30 வயது
65.மகாராஜா குகதாசன், நீர்கொழும்பு, 26 வயது
66.விநாயகம் வாகீசன், கதிரேசன் வீதி, 24 வயது
67.பேரின்பன் நிசாந்தன், புத்தளம், 26 வயது
68. கதிரேசன் சிவபாலன், தெஹிவளை, 38 வயது
69. சிவஞானரட்ணம் ,முகுந்தன், வெள்ளவத்தை, 32 வெள்ளவத்தை
70. எம். புகாரி எம். நிஸ்தார்,புத்தளம், 32 வயது
71. விவேகானந்த ராஜா, வெள்ளவத்தை, 29 வயது
72. வேலாயுதம் மதுரகுலசிங்கம், கொழும்பு, 29 வயது
73. நடேசமூர்த்தி கோணேஸ்வரன், கொட்டாஞ்சேனை
74. டாசன் ரொபின்சன், கொழும்பு
75. சுதர்சனா கொழம்பகே, பிலியந்தல, 36 வயது
76. சுலான் சஞ்சன, பிலியந்தல, 05 வயது
77. செல்வரட்ணம் கௌசிகா, கொச்சிக்கடை, 22 வயது
78. நடராஜா சுகுமாரன், யாழ்ப்பாணம்
79. புஸ்பராசா புஸ்பநாதன், யாழ்ப்பாணம், 29 வயது
80. புஸ்பராசா கிருஷ்ணகுமார், கொட்டாஞ்சேனை, 36 வயது
81. வீரையா பத்மநாதன், கொட்டாஞ்சேனை, 45 வயது
82. செல்லையா சுப்பிரமணியம், கொட்டாஞ்சேனை, 28 வயது
83. சுப்பிரமணியம் பிரதீபன், யாழ்ப்பாணம், 24 வயது
84. கே.டீ. சிவதாசன், யாழ்ப்பாணம், 35 வயது
85. விவேகானந்தன் கிருஷ்ணகுமார், வத்தளை, 33 வயது
86. விவேகானந்தன் ரஜனிகுமார், வத்தளை, 27 வயது
87. வெள்ளைசாமி சாரூன், அக்கரப்பத்தனை, 31 வயது
88. புஷ்பராஜா கிருஷ்ணகுமார், கொழும்பு
89. கேசவன் கருணாகரன், திருகோணமலை, 37 வயது
90.தங்கராசா ராஜு, திருகோணமலை, 32 வயது
91. மூக்கையா ரஞ்சன், மகாபாகே, 29 வயது
92. பரமசாமி கணேசமூர்த்தி, தெஹிவளை, 39 வயது
93. வில்வரட்ணம் ஜெயவதன், தெஹிவளை, 23 வயது
94. ஏ. நிசாந்த மதுரபெருமா, வரலபன, 42 வயது
95. ஏ.என்.எம்.கைனு, வரலபன, 05 வயது
96. அப்துல் சபிதுல்லா, புத்தளம், 30 வயது
97. நாராயணசிங்கம் லோகநாதன், தெஹிவளை, 30 வயது
98. முருகையா சதாசிவம், தெஹிவளை, 31 வயது
99. முருகையா சுதெவன், களுபோவில, 31 வயது
100. மயில்வாகனம் பிரதிவிராஜ், வெள்ளவத்தை, 37 வயது
101. நடராஜா சுகுமாரன், புறக்கோட்டை, 60 வயது
102. ராஜேந்திரன் வின்சன்ட் விமல்ராஜ், கொழும்பு, 26 வயது
103. செல்வராசா சுதன், வவுனியா, 25 வயது
104. அப்துல் முதலிப் மொஹமட், புத்தளம், 35 வயது
105. ஜபீர் ரிசாட் முகமட், புத்தளம், 30 வயது
106. சுப்பிரமணியம் உதயகுமார், வவுனியா, 34 வயது
107. நடராசா பேரின்பராசா, வவுனியா, 33 வயது
108. பழனியாண்டி சண்முகராசா, தெஹிவளை, 34 வயது
109. முத்துக்குமார் செல்வகுமார், தெஹிவளை, 28 வயது
110. அருணாசலம் சந்திரகலா, லுணுகல, 28 வயது
111. குப்பமுத்து பேரின்பநாயகம், லுணுகல, 33 வயது
112. அமத்தன் சண்டீப், கடவத்தை, 04 வயது
113. நிரோசா செல்வதுரை, கடவத்தை, 24 வயது
114. டீ.எஸ். ஜலில் ஜுமாட், வத்தளை, 71 வயது
115. சின்னையா தேவநாயகம், தெஹிவளை, 38 வயது
116. பதிநாதர் பிரசன்னா, யாழ்ப்பாணம், 26 வயது
117. ஆரண் பிரபானந்த், யாழ்ப்பாணம், 21 வயது
118. ரட்ணசபாபதி இளமாறன், தெஹிவளை, 28 வயது
119. சண்முகம் காளிதாஸ், வட்டவளை, 28 வயது
120. நாகேந்திரன் பிரதீபன், திருகோணமலை, 25 வயது
121. திருச்செல்வம் தவனேசன், கிராண்ட்பாஸ், 38 வயது
122. பீ. காராளசிங்கம், வவுனியா, 55 வயது
123. சிவஞானம் அன்பழகன், வவுனியா
124. மகேந்திரராஜா சாரங்கன், வவுனியா, 23 வயது
125. பரமநாதன் சிவகுமார், மட்டக்குளி, 23 வயது
126. செல்வராஜா பாலகுமரன், கொழும்பு, 34 வயது
127. பாலசுப்பிரமணியம் சந்திரசேகரன், கொழும்பு
128. முருகப்பிள்ளை சிவகுருநாதன், வவுனியா, 30 வயது
129. கந்தையா கேதாரன், வவுனியா, 30 வயது
130. மு. சிவகுருநாதன், திருகோணமலை, 28 வயது
131. வி. ராசநாயகன், தம்பலகாமம்
132. கணகபிள்ளை யோகராஜா, மட்டக்களப்பு, 32 வயது
133. வைரமுத்து யோகநாதன், மட்டக்களப்பு, 32 வயது
134. அன்டனி ஜோன் ரீட், வத்தளை, 24 வயது
135. ஸ்டென்லி லியோன், கொச்சிக்கடை, 51 வயது
136. ஸ்டென்லி ரொசான் லியோன், கொச்சிக்கடை, 21 வயது
137. பிரபாத் சக்கரவர்த்தி, யாழ்ப்பாணம், 26 வயது
138. கணபதி ரஜிகுமார், வவுனியா, 22 வயது
139. கெட்ளின் ஸ்டேனிஸ் வின்சன், வத்தளை, 39 வயது
140. அரியரட்ணம் கோபிநாத், வவுனியா, 32 வயது
141. சகாதேவன் உதயகுமார், செட்டித்தெரு, 39 வயது
142. ராஜநாயகம் ஜெயநேசன், மன்னார், 32 வயது
143. பிரான்சிஸ் திருராஜா, மன்னார், 34 வயது
144. எம்.ஜே.எம். பாயிஸ், வெல்லம்பிட்டி, 37 வயது
145. தேவசேனாதிபதி சுகந்தன், யாழ்ப்பாணம், 27 வயது
146. பரமநாதன் முருகானந்தன், யாழ்ப்பாணம், 34 வயது
147. தியாகராஜா ஜெகன், திருகோணமலை, 29 வயது
148. நாகநாதன் ரஜீவ், கொழும்பு, 21 வயது
149. விஸ்வநாதன் பிரதீப், கொழும்பு, 17 வயது
150. இராமலிங்கம் திலகேஸ், கொழும்பு, 17 வயது
151. மொஹமட் டிலான், கொழும்பு, 24 வயது
152. மொஹமட் சஜீத், கொழும்பு, 24 வயது

இன்று தியாக தீபம் திலீபனின் 22ம் ஆண்டு நினைவு நாள்.

சாட்சியமில்லாது போகும் வன்னிமக்களின் அவலம்- வெளியேறிய தன்னார்வ தொண்டு பணியாளர் ஒருவரின் வேதனைக் குரல்!!


இலங்கையில் மனிதநேயப் பணியாளர் ஒருவர் வன்னியில் இருந்து வெளியேறியதனால் தனக்கு ஏற்பட்ட வலி என்னும் தலைப்பில் கடந்த 23ம் திகதி செவ்வாயன்று பிபிசி ஆங்கில இணையத்தளச் செய்திக்கு விபரித்த தகவல்களின் தமிழ் வடிவம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களைக் கைப்பற்றும் நோக்கத்தோடு இலங்கை இராணுவத்தின் வலிந்த தாக்குதல்கள் மிகவும் ஆக்ரோஷமாக இடம்பெறுவதால் வடக்கில் மனிதாபிமான நிலையானது மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதோடு மிகவும் பாரதூரமான நிலையையும் தொட்டு நிற்கின்றது. மோதல்கள் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ள சூழலில் ஒரு வாரத்திற்கு முன்பு ஐ.நா. சபையும் மற்றும் அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும் வெளியேறியுள்ளார்கள். ஒரு தன்னார்வ தொண்டர் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் வன்னியில் இருந்து வெளியேறிச் செல்கையில் எவ்வளவு கடினமாக இருந்தது என தனது மன உணர்வுகளை விபரிக்கின்றார்.

கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் நான் இருந்தபோது ஒரு மிகப் பெருமெடுப்பிலான இராணுவ முன்னெடுப்பு தென்மேற்கு முனையில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இந்த யுத்தத்தின் தீவிரமானது நகர்ப்புறத்தை நோக்கி அண்மித்து வருவதாகவே தென்படுகின்றது. இந்த நடவடிக்கைகளினால் பாரிய அளவிலான மனித இடப்பெயர்வு அவலங்கள் வன்னி மண்ணில் அரங்கேறுகின்றது. நான் முன்னொருபோதும் கேட்காத அளவிற்கு சத்தங்களும் துப்பாக்கிச் சூடுகளும் மிக நெருக்கமான சண்டைகள் நடைபெறுவதை உணர்த்தின, இரவு பகல் வித்தியாசமின்றி தொடர்ச்சியாக குண்டுகளும் ஆட்டிலெறி, மற்றும் பல்குழல் எறிகணை தாக்குதல்களும் சற்றுத் தள்ளி வீழ்ந்து வெடிப்பதையும் கணிக்க முடிந்தது.

நாளுக்கு நாள் ஆக்ரோஷமான மிகமோசமான ஆட்டிலெறி எறிகணை வீச்சுக்கள் மிக அண்மையில் நெருங்கி வீழ்ந்து வெடிப்பதையும் உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் செல்கள் விழுந்து வெடிக்கும்போது எனது அலுவலகம், எனது படுக்கையறை, எனது சமையலறை ஏன் எனது பதுங்குகுழி கூட அதிர்வுகளால் நடுங்கிக்கொள்ளும். நிஐ யுத்தம் ஒன்று வாசல்படியை நெருங்கி வருவதையே எனக்கு அது உணர்த்திற்று. ஒரு தன்னார்வத் தொண்டர் நிறுவனப் பணியாளனாக தினமும் யுத்த அவலத்தால் இடம்பெயர்ந்து திரண்டு வரும் மனித ஜீவன்களுக்கு தேவையான அடிப்படை வாழ்வாதாரத்தை வழங்குவதில் மிகவும் சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்ட அதேவேளை சில கணங்களில் செய்வதறியாது திணறிவிட்டேன்.

ஆரம்பத்தில் வன்னியின் தென்மேற்குப் பகுதிகளில் இருந்தே மக்கள் ஆட்டிலெறி சத்தத்தின் அதிர்வுகளாலும் பயத்தினாலுமே வேறு இடங்களை நோக்கி ஓடத் தொடங்கினர். மிகமிக மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே வாகன வசதிகள் இருந்ததால் மக்கள் மிகக் குறுகிய தூரத்திற்கே இடம்பெயர முடிந்தது, அங்கு மரநிழல்களில் அடைக்கலம் தேடிக் கொண்டார்கள். இராணுவம் தொடர்ச்சியாக தமது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னேறியதால் மீண்டும் குண்டு மழையில் இருந்து தப்பிப்பதற்காக ஒருசில தினங்களில் மீண்டும் இடம்பெயரவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தன்னார்வ நிறுவனங்களின் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பொதுவாக வன்னி தென்மேற்குப் பகுதிகளில் எமது பணியாளர்கள் கடமை புரியவில்லை. ஆனால் யுத்தத்தின் தீவிரத் தன்மையாலும் இராணுவ முன்னேற்றத்தாலும் மக்கள் கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்ததால், அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் அவர்கள் ஒருதடவையல்ல இரண்டுதடவையல்ல பல தடைவைகள் இடம்பெயர்ந்த சோகமான கதைகளையும் கேட்க முடிந்தது.

அத்துடன் அம்மக்கள் மிகவும் பசியுடனும், களைப்புடனும், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனும் காணப்பட்டனர். அதில் இருந்த தந்தையர் தமது வாழ்வாதாரத்தை முற்றாக இழந்துள்ளாகள். தொழில்களை இழந்ததோடு தமது சொத்துகளாக இருந்த மீன்பிடிப் படகுகள், வலைகள், படகு, இயந்திரம் என்பவற்றையும் இழந்து போக்கற்றவர்களாக காட்சியளித்தனர். அங்கிருந்த தாய்மார் உணர்வுகளின் உச்சத்தில் நின்று குடும்பத்திற்கான உணவு, உறைவிடம் இல்லாமல் அல்லாடும் சோகக் காட்சி இன்னும் என் மனதில் தெரிகின்றது. சிறுவர்களோ பள்ளிப்படிப்பை மறந்து பல மாதங்கள் கடந்துவிட்டது. தன்னார்வ மனிதநேயப் பணியாளர்களாக நாம் எம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். தலைக்கு மேல் ஒரு கூரை, தண்ணீர் வசதி, களிவறை வசதி என்பவற்றை எம் சக்திக்குட்பட்டு செயற்படுத்தினோம்,

தவிரவும் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கிளிநொச்சியைப் பாதுகாப்பான இடமாகக் கருதியதாலும் அனைத்து வசதிகளையும் முடிந்தளவு நிறைவேற்றினோம். ஆனாலும் நாட்கள் நகர நகர நிலைமை மோசமாகத் தொடங்கியது. அதாவது குண்டுகளும் ஆட்டிலெறிகளும் கிளிநொச்சி நகருக்குள்ளும் அதனையண்டிய பகுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கியது. இதனால் மனிதநேயப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லாத ஒரு இறுக்கமான நிலை தோன்றியதால் எமது பணியைத் தொடரமுடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

பாதுகாப்பு நிலைவரமானது பாரதூரமான உச்சநிலையை எட்டியது. ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களும், விமான குண்டுவீச்சு தாக்குதல்களும் கிளிநொச்சியில் சாதாரண நிகழ்வாக இடம்பெற ஆரம்பித்தது. இனிமேலும் மனிதநேய தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது எனவும், இதனால் வன்னியை விட்டு வெளியேறும் வண்ணம் இலங்கை அரசால் எமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. அத்தருணத்தில் மொத்தமாக 10 சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்கள் வன்னியில் இருந்தோம். எமது அலுவலகங்களை அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு நகர்த்தவேண்டிய மனதை உருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

உணர்வுகளும் உள்ளக்குமுறல்களும் அதிகமாக இருந்த நேரமது, நாம் வன்னியை விட்டுப் புறப்பட எடுக்கும் ஆயத்தங்கள் எமக்கு ஒருவித குற்ற உணர்வையும் எமது கையாலாகாத்தனத்தையும் புலப்படுத்தியது. இதே மக்களுக்கு, மக்களுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களுடனான நல்லுறவு ஒன்றை வளர்த்து, அவர்களுக்கு மனிதாபிமான தேவை பாரிய அளவில் தேவைப்படும் நேரத்தில் இம்மக்களைக் கைவிட்டுப் பிரிய நேருகின்றதே என்ற மனஅழுத்தம் என்னை முழுமையாக ஆட்கொண்டது. எமது வேலைத்திட்டங்களை கைவிட்டுச் செல்வதென்பது தொழில்ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது.

ஆனாலும் எமது உள்ளுர் பணியாளர்களின் உணர்வுகளும்,ஏக்கங்களும் எம்மை மிகவும் வருத்தியது. வன்னியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதானால் த.வி.புலிகளிடம் அனுமதி பெற்றாகவேண்டும். அதாவது பாஸ் நடைமுறை. எமது உள்ளுர் பணியாளர்கள் எதாவது ஒரு காரணத்தால் வன்னியை விட்டு வெளியேற பாஸினைப் பெற முடியவில்லை. பாஸ் நடைமுறையானது தனி நபர்களுக்கே வழங்கப்படும், குடும்பமாகப் பாஸ் பெறமுடியாது. எனவே எமது உள்ளுர் பணியாளர்கள் குண்டு மழைக்குள்ளும், வான்வெளித் தாக்குதலிலும் தமது குடும்பத்தாரைத் தவிக்கவிட்டு எம்மோடு அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து தமது வாழ்வாதாரத்தைத் தேடுவதென்பது நடைமுறைக்கு ஒவ்வாதது,

எனவே அவர்கள் தமது தொழிலையும் இழந்து தொடர்ந்தும் வன்னியிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. இவர்கள் வலோத்காரமாக புலிகளால் போரில் அந்த விமானம் வானத்தில் இருந்து கீழ் நோக்கி வரும்போது அதன் இயந்திரம் ஏற்படுத்திய அச்சமூட்டும் பயங்கர ஒலியையும், எனக்கு மிக அருகாமையில் வீழ்ந்து வெடித்த குண்டின் தாக்கத்தையும் என்றுமே என்னால் மறக்கமுடியாது. எனது கடைசி ஞாபகமானது இவ்வாறன குண்டுத் தாக்குதல்களின்போது மக்கள்படும் வேதனைகளை ஒருமுறை என் மனக்கண் கொண்டு வருகிறது.

ஒரு மனிதநேயப் பணியாளர் என்ற வகையில் எமக்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் கொங்கிரீட்டினால் ஆனது, ஆனால் சாதாரண மக்களின் பதுங்குகுழிகளோ வெறும் தரையில் அமைக்கப்பட்டதோடு சேறு சகதிகளும் காணப்படும். ஆட்டிலெறி மற்றும் விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களின்போது சிறுவர்கள் அச்சத்துடன் நடுங்கிய வண்ணம் தமது அன்னையரைக் கட்டிப் பிடிப்பதையும்; தாமும் நடுங்கியவாறு அந்த பிஞ்சுக் குழந்தைகளை தாய்மார் ஆசுவாசப்படுத்துவதையும் என் கண்கள் ஊடாகக் கண்டேன்.

கடந்த செப்ரெம்பர் 12ம் திகதி வெள்ளியன்று கிளிநொச்சி நகரைவிட்டு வெளியேறுவதாக முடிவானது. ஆனால் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் எம் கட்டிடத்தைச் சூழ்ந்து எம்மை விட்டு பிரியவேண்டாம், எம்மை விட்டு செல்ல வேண்டாம் என அழைப்புவிட்ட வண்ணம் இருந்தனர். ஆர்பாட்டத்தில் அமைதியாகவும் அதேவேளை கண்ணியமாகவும் நடந்துகொண்டனர். நாம் தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் உண்மை நிலையை எடுத்து விளக்கியதும் அம்மக்கள் நமது வெளியேற்றத்தைப் புரிந்துகொண்டதோடு இனிவரும் நாட்களில் தமது நிலையை தாமே எவ்வாறோ சமாளிப்போம் என எமக்கு தெரிவித்தனர். ஆனாலும் இனிவரும் காலங்களில் மனிதநேய நிறுவனங்களின் வெளியேற்றத்துடன் வன்னியில் நடக்கப்போகும் அக்கிரமங்களுக்கு சாட்சியுமில்லாது போய்விடும் என்ற அச்சமே அம்மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்ததை என்னால் உணரமுடிந்தது.

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விபரீதங்களை கண்டுகொள்ள யாருமே இருக்கமாட்டார்கள். மூன்று நாட்களாக அமைதி ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. எம் அனைவராலும் மக்களின் அச்சஉணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது, எனினும் எமது கைகள் கட்டப்பட்ட நிலையில் எதுவுமே செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். போர்க்கள நிலைமை படுமோசமாகி வருவதை உணர்ந்து கொண்டோம். சில உதவி நிறுவனங்கள் தங்கள் கட்டிடத் தொகுதியையே கைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடிக் கொண்டனர், ஏனெனில் அவர்கள் இருக்கும் கட்டிடத்திற்கு சில நூறு மீட்டர்களுக்கு அப்பால் ஆட்டிலெறி செல்கள் வந்து விழ தொடங்கிவிட்டிருந்தன.

தற்போது ஆட்டிலெறி மற்றும் விமாக்குண்டு வீச்சுக்களும் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டிருந்ததால் கடைசி இரு தினங்களும் பெரும்பாலான நேரத்தை பதுங்குகுழிகளிலேயே கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. விபரிக்க முடியாத அளவிற்கு குண்டுச் சத்தங்களும், விமானத்தில் இருந்து போடப்படும் குண்டுகளும் முழு நகரத்தையும் நடுங்கவைத்துக் கொண்டிருந்தது. இதைவிட மேலதிகமாக உலங்கு வானூர்தியில் இருந்தும் றொக்கற்றுக்கள் நகர் பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் ஏகதாளத்தில் தாக்கின. அனைவரும் பயத்தில் உறைந்த நிலையிலேயே இருந்தோம். கிளிநொச்சி பிரதேச மக்களும் தமது மூட்டை முடிச்சுகளுடன் நகரை விட்டு வடக்கு நோக்கி ஆட்டிலெறி எல்லைக்கு அப்பால் செல்லத் தொடங்கி விட்டனர். மறுநாளே கிளிநொச்சியை விட்டு நாம் புறப்படாவிட்டால் நாமும் வன்னியில் சிக்கிவிடும் அபாயத்தை தெளிவாக உணர்ந்து கொண்டோம்.

செப்ரெம்பர் 16ம் திகதி காலைநேரம் எமது வாகனங்கள் அனைத்தும் ஒரு தொடரணியாக எமது கட்டிடத் தொகுதிக்கு முன்னால் புறப்படத் தயாராகின்றது. ஆட்டிலெறி தாக்குதல்களும் வான்குண்டு தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமேயிருந்தது. இருப்பினும் எமது வாகனத் தொடரணி கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி விரைந்தது. எம்மோடு சேர்ந்து பணிபுரிந்த பல பணியாளர்களை பாஸ் கிடைக்காத காரணத்தால் வன்னியிலேயே விட்டு நாம் திரும்பவேண்டிய நிலை. கண்களில் கண்ணீர் மல்க அவர்களைப் பிரிந்தேன், பயத்தினால் ஏற்பட்ட அவர்களின உணர்வுகளையும், உள்ளக்குமுறல்களையும் எண்ணி குற்ற உணர்வுடனேயே வன்னியை விட்டு வெளியேறினேன். எனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள குண்டு துளைக்காத ஆடைகளுடன் வாகனத் தொடரணியில் நான் புறப்படும்போது அங்கு கூடி நின்ற சாதாரண மக்கள் காற்சட்டைகளுடனும், சேட்டுகளுடனும், சாறிகளுடனும் அப்பாவி விழிகளினால் என்னைப் பார்த்தபோது நான் வெட்கித் தலைகுனிந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கின்றேன்.

நாம் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் வழியில் மிக அண்மையில் ஏ 9 வீதியில் நடத்தப்பட்டிருந்த வான்குண்டுத் தாக்குதலின் அகோரக் காட்சியையும் காணமுடிந்தது. அந்த காட்சியானது இனி கிளிநொச்சி வாழ்மக்களின் வாழ்கையில் எப்படியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பதை எனக்கு உணர்த்தியது. எனது பாதுகாப்புக் காரணங்களுக்காக நான் வன்னியை விட்டு புறப்பட்டது சரியான முடிவுதான் எனத் தோன்றினாலும், அந்த மக்களைக் கைவிட்டுவிட்டோம் என்ற உணர்வு என் இதயத்தின் ஆழத்தில் இன்னமும் இருந்துகொண்டேயிருக்கின்றது. என்னோடு பணிபுரிந்த உள்ளுர் பணியாளர்களை வன்னியிலேயே விட்டுவிட்டு வன்னி மண்ணை விட்டு வெளியேறும்போது எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வையும் வலியையும் சொற்களால் விபரிக்க முடியவில்லை.

கனடா தூதரகத்தால் புதிய சிங்களப்புலி கண்டு பிடிப்பு - விக்கிரமபாகு கருணாரத்ன வுக்கு விசா மறுப்பு


இடது சாரி கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன விண்ணப்பித்த கனேடிய விசா அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

விக்கிரமபாகு கருணாரத்ன தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதன் காரணமாகவே அனுமதியை நிராகரித்துள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வுகளில், கலந்துகொண்டமையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசனுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் கனேடிய விசா மறுப்புக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் பூண்டோடு அழியக்கூடிய அபாயம் நிலவுகிறது – ஐநா சபைக்கு பிரித்தானிய சட்டத்தரணிகள் அமைப்பு எழுத்து மூலம் அறிவிப்பு

]
தமிழர்கள் பூண்டோடு அழியக்கூடிய அபாயம் நிலவுவதாகப் பிரித்தானிய சட்டத்தரணி கரென் பார்கர் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆயுதப் போராடட்ங்களின் காரணமாக மிக மோசமான வகையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத அல்லலுறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வறான ஓர் பின்னணியில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றுவரும் இன ஒடுக்குமுறை என்ற தலைப்பில் சர்வதேச கல்வி அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான சட்டத்தரணிகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் பரிதவிக்கும் மக்களுக்கு உணவுப்பொருட்கள் அனுப்புங்கள்: த.தே.கூ. வலியுறுத்தல்


வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க சிறிலங்கா நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற எரிபொருட்கள் விலையேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே சேனாதிராஜா மேலும் கூறியதாவது:

உலக சந்தையில் எண்ணெய் விலையேற்றம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பவையே இலங்கையில் பிரதான எரிபொருள் விலையேற்றத்துக்கான பிரதான இரண்டு காரணி என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போது இங்கு எரிபொருட்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கம் அங்கு எண்ணெய் விலை குறைவடையும் போது மட்டும் இங்கு குறைக்காதது ஏன் என்று கேட்கின்றோம்.

ஒரு அரசாங்கத்தால் கஸ்டப்படும் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகளைக் கூட இந்த அரசாங்கம் வழங்க தவறிவிட்டது.

வடக்கு-கிழக்கில் குறிப்பாக வடக்கில் இன்று மீன்பிடிக்கைத்தொழில் இராணுவத்தினரால் முடக்கப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

விவசாயமும் செய்ய முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் எண்ணெய் விலையை காட்டி அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளைக் கூட்டிக் குறைத்தாலும் அதை வாங்க சக்தியற்ற நிலைமையில் வடக்கு மக்கள் இருக்கின்றனர்.

வரி விதிப்பதற்கு போரை காரணமாகக் காட்டுகிறார்கள் எதற்காக இந்த போர்? ஐக்கிய தேசியக் கட்சியின் போது வரி அதிகரிக்கப்படுவதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம் கடந்த ஆட்சியிலும் வரிகள் அதிகரிக்கப்பட்டதாக கூறிக்கொண்டு தானும் அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.

தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்காக வரிகளை அதிகரித்தும் பெரும் நிதியை செலவிடும் அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூட தவறி வருகிறது. தமிழ்த் தேசியத்தில் அரசாங்கம் எரிய விட்டிருக்கும் இந்த தீ சிங்களப் பகுதிகளிலும் எரியும்.

பயங்கரவாதம் என்ற போர்வையில் ஒரு தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்தை மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் இந்த நாட்டில் போர் நடைபெறும் வரை நாட்டின் பொருளாதாரத்தையோ மக்களையோ சுதந்திரமாக செயற்பட வைக்க முடியாது.

எமது தமிழினத்தை அழிக்க போருக்காகப் பயன்படுத்தப்படும் நிதி இந்த நாட்டின் அபிவிருத்திக்கு தேவைப்படுகின்றது என்பதனாலேயே அதற்குப் பதிலாக இன்று வரிச்சுமைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படும் வரை நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அம்மக்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதனை விடுத்து தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவதற்காக எரிகிற நெருப்பில் பேரினவாதம் என்ற எண்ணெயை ஊற்றி வரிச் சுமைகளையும் அதிகரித்து வருகின்றீர்கள்.

எனவே, வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் சென்றடைவதற்கு நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அவர்.

ஆதாரம்: தினக்குரல்

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வேண்டுகோள்


புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிறிலங்கா இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்டு தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த வேண்டுகோளை வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திலிருந்து விடுக்கின்றோம்.

இத்தீவில் தற்போது வாழ்ந்து வரும் தமிழ் மக்கள், சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்ற போதும், அதனை முன்வந்து சொல்லவும் முடியாத அளவுக்கு அந்த இராணுவம் தமிழ் மக்களின் கழுத்தை திருகிய வண்ணம் உள்ளது.

பாதிக்கப்பட்ட பின், வெளிநாடுகளில் பாதுகாப்பை தேடிக்கொண்டவர்களாலேயே பூட்டபட்ட தமிழ் மக்களின் துயரத்தை வெளிக்கொண்டுவர முடியும்.

உங்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் பாதிப்புக்கள் எக்காலத்தில் ஏற்பட்டதாயினும் அதனை ஆவணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆயினும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் உங்களுக்கோ உங்களின் உறவுகளுக்கோ ஏற்பட்ட பாதிப்புக்களை வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் ஆவணப்படுத்த விரும்புகின்றது.

நீங்கள் விரும்பினால் நீங்கள் தரும் விபரங்களின் இரகசியத்தன்மை பேணப்படும்.

அதேநேரம், நீங்கள் விரும்பினால், ஐ.நா. அமைப்புக்களின் முன் உங்கள் அனுபவங்களை எடுத்துச்சொல்லவதற்கும் நாம் ஒழுங்குபடுத்திக் கொடுப்போம்.

முதற்கட்டமாக பின்வரும் மின்னஞ்சல் ஊடாக வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்கின்றோம்.

nesohr.victims@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் முன்வந்து உங்களுக்கோ உங்கள் உறவுகளுக்கோ ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் எம்மிடம் தொடர்பு கொள்ளும்போது அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்கான உங்கள் பணியாகவும் இருக்கும் என்பதையும் இங்கு கூறவிரும்புகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மகிந்தவின் வருகையினை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கண்டனப் பேரணி

ஜக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக நேற்று புதன்கிழமை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர்.

கனடாவின் ரொறன்ரோ, மொன்றியல் நகரங்களில் இருந்து மட்டும் அறுநூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள் பேருந்துகளிலும் வானூர்தியிலும் தமது சொந்த வாகனத்திலும் சென்று கண்டனப் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் பங்கேற்பதற்கான வாகன ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.





விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக திமிரோடு பேசியும் தமிழ் மண்ணை வல்வளைப்புச் செய்தும் வானில் இருந்து குண்டுகளைப் பொழிந்தும் எறிகணைத் தாக்குதல் நடத்தியும் 225,000 அதிகமான மக்களை ஏதிலிகளாக்கியும் ஒரு முழு அளவிலான இனப்படுகொலையை நடத்தி வரும் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கோர முகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தோலுரித்து உலகுக்குக் காட்ட இக்கண்டனப் பேரணி உதவியுள்ளது.

கண்டனப் பேரணியில்

எங்கள் தலைவர் பிரபாகரன் (Our Leader Prabhakaran)

எங்கள் தாகம் தமிழீழம் (We Want Thamizh Eezham Now)

எங்களுக்கு வேண்டும் சுதந்திரம் (We Want Freedom)

ராஜபக்ச இனப்படுகொலையாளன் (Rajapakse Mass Killer)

என ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் ஆவேசமான முழக்கங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில் மோதி வானை நோக்கி எதிரொலித்தன.





சிறிலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஏராளமான முழக்க அட்டைகளையும் பதாதைகளையும் தமிழ் உணர்வாளர்கள் பேரணியில் தாங்கியிருந்தனர்.

கண்டனப் பேரணி நிகழ்வினை கனடாவில் உள்ள அனைத்து தமிழ் ஒலி, ஒளி ஊடகங்கள் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்தன.

கண்டனப் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன், வழக்கறிஞர் நாதன் சிறீதரன், திருமதி உசா சிறீஸ்கந்தராஜா, திருமதி வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.





வழக்கறிஞர் வி.உருத்திரகுமார் பேசும் போது,

"தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன நடத்திய ஆயுதப் புரட்சி ஒன்றை மேற்கொண்டு சிங்கள மக்களைப் படுகொலை செய்தபோது சிறிலங்கா அரசு அங்குள்ள ஊர்கள் மீது குண்டு வீசவில்லை, எறிகணைத் தாக்குதலை நடத்தவில்லை, சிங்கள மக்கள் சுற்றி வளைக்கப்படவில்லை, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக் கொட்டில்களில் பூட்டி வைக்கப்படவில்லை.

ஆனால் தமிழர்கள் மீது இன்றைய சிறிலங்கா அரசு காட்டுமிராண்டித்தனமான- கண்மூடித்தனமான வான்-தரை வழியாகத் தாக்குதல்களை நடத்தித் தமிழ் மக்களைக் கொல்கினன்றது.

வன்னிப்பெரு நிலப்பரப்பின் மீது 6 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை வீசி விட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றது. எனவே, தமிழ் மக்கள் பாதுகாப்போடும் சுதந்திரமாகவும் வாழ உலக நாடுகள் தமிழ் மக்களின் தன்னனாட்சி உரிமையை அங்கீகரிக்க இப்போதாவது முன்வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.





வழக்கறிஞர் நாதன் சிறீதரன் பேசும் போது,

"குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்து வாழமுடியாவிட்டால் ஒத்து வாழும்படி முதலில் அறிவுரை செய்கின்றோம் அதற்குப்பின்னரும் அவர்கள் ஒத்துப் போகவில்லை என்றால் மணமுறிவுதான் சரியான வழி என அவர்களைப் பிரிந்து வாழ விட்டுவிடுகிறோம். அதேபோல் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே நாட்டில் ஒத்துவாழ முடியாத நிலை இருக்கிறது. எனவே நாட்டைப் பிரித்து தமிழர்களின் நிலப்பரப்பை தமிழர்களிடமே கொடுத்துவிடுவதுதான் இனச் சிக்கலுக்கு சரியான தீர்வாக இருக்கும்" என வலியுறுத்திக்கூறினார்.

மருத்துவர் எலின் சண்டரும் உரையாற்றினார். மிகச் சொற்பமான சிங்களவர்கள் கண்டனப் பேரணிக்கு எதிராகக் கூடி நின்று கூச்சலிட்டனர். இவர்களில் பெளத்த பிக்குகள் சிலரும் காணப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றுவிட்டனர்.





நியூயோர்க் காவல்துறை கண்டனப் பேரணி நடத்துவதற்கு முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

ஏராளமான பிறமொழிச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் கண்டனப் பேரணியில் காணப்பட்டார்கள். பலரை நேர்காணல் செய்தனர்.

இதே பூங்காவில் சீனாவுக்கு எதிராகத் திரண்டிருந்த திபெத்தியர்களும் ஈரானிய ஆட்சித்தலைவருக்கு எதிராகத் திரண்டிருந்த யூதர்களும் தமிழர்களின் கண்டனப் பேரணிக்குத் தங்களின் ஆதரவைக் தெரிவித்தனர்.

ஈரானிய - சிறிலங்கா ஆட்சித்தலைவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி இருக்கும் படத்தை அங்கு வந்திருந்த தமிழர்கள் பேரணியில் தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்டனப் பேரணி பெருவெற்றி என இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்புப் தெரிவித்தது. வேறு இனத்தவர்கள் நடத்திய பேரணிகளை விட தமிழர்கள் நடத்திய பேரணி அளவிலும் உணர்விலும் மேலோங்கி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

எலியாஸ் ஜெயராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதோடு காலமறிந்து கண்டனப் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

பொது மக்கள் மீது யுத்தம் திணிக்கப்படாது பார்த்துக்கொள்வது ஜனநாயக அரசாங்கத்திற்கு அவசியம் - பெளச்சர்

இலங்கையில் மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பது ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கடமையென அமெரிக்காவின் ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் அதிகரித்திருக்கும் மோதல் சம்பவங்கள் குறித்தும், அங்குள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் இலங்கைக்கு உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக பௌச்சர் கூறினார்.

“வடக்கை நோக்கி மோதல்கள் நகர்ந்து வருகின்றன” என்று நியூர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பௌச்சர் குறிப்பிட்டார்.

“மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பது ஜனநாயக அரசாங்கத்தின் கடப்பாடு. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருக்கும் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என பௌச்சர் கூறினார்.

மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமென்பது இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.

“இலங்கையின் பிரதிநிதிகளை நாங்கள் அனைவரும் நியூயோர்க்கில் சந்தித்துக் கலந்துரையாடுவோம்” என்றார் பௌச்சர். சில அரசியல் கட்சிகள் தமது செயற்பாடுகளின் போது விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் வன்னியில் தொடர்ந்தும் நடைபெற்றுவரும் நிலையில் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகள் நேற்று புதன்கிழமை நியூயோர்க்கில் கூடி, இலங்கையின் பிந்திய நிலவரம் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீதான விசாரணை அவசியமற்றது - இலங்கை வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச் சலுகையை நீடிப்பதற்காக விசாரணைகள் நடத்தப்படுவது தேவையற்றது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் பெனிடா பெரேரோ வொல்னரைச் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். உத்தேச விசாரணை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியேகபூர்வ அழைப்புக்காகக் காத்திருப்பதாகவும், அழைப்புக் கிடைத்ததும் உரிய பதில் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வரிச்சலுகையை நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகக்கும், நாட்டின் தேசிய பாதுகாப்பு, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றைக் கவனத்தில்கொண்டு உரிய பதில் வழங்கப்படும் என ரோகித்த போகல்லாகம சுட்டிக்காட்டினார்.

வன்முறைகளின் பின்னர் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்களை இலங்கை முன்னெடுத்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு நடந்துகொள்வது கவலையளிப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இலங்கை நெருங்கிய உறவுகளைப் பேணுவதற்கே விரும்புவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கிலுள்ள மக்களின் சந்தைவாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் அவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கப் படைகள் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகக் கேட்டறிந்த பெனிடா, இந்த இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கூறினார்.