இந்தியாவின் எச்சரிக்கைக்கு இலங்கை மசியாவிடில் மத்திய அரசின் ஆட்சி வேண்டுமா என தி.மு.க. தீர்மானிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை

இந்திய மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் விலக நேரிடும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அர சாங்கம் நடத்தும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற இந்திய(மத்திய) அரசின் எச்சரிக்கைக்கு அந்த நாடு செவிசாய்க்கா விடில் மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்பது குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மறு பரிசீலனை செய்யும்.
மயிலாப்பூர், மாங்கொல்லையில் இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் அரச படை களால் கொலைசெய்யப்படுவதை கண்டித்து நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையிலேயே முதலமைச்சர் மு.கருணாநிதி மேற்கண்டவாறு எச்சரித்தார்.
இலங்கையில் நடைபெறும் இனப்பிரச் சினையை முடிவுக்கு கொண்டுவரப் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் துரிதமாக செயலாற் றுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
""அவர்கள் ஒத்துழைப்பு நல்கினால் எங்களுக்கு வாழ்வுண்டு. அவ்வாறில்லை யென்றால் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியத் தமிழர்களும் அழிவார்கள்' என்று உணர்ச்சி பொங்க ஆவேசமாக தமது உரையை முடித்தார் கலைஞர் கருணாநிதி.ஈழத் தமழர்களின் பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்றை காண்பதற்கு தமிழ கத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

பிரிதானிய பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வில் 5000 ற்கும் மேற்பட்ட மக்கள்

இன்று பிரிதானிய பாராளுமன்றம் முன்பாக மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை பிரித்தானிய தமிழர் பேரவையினால் எற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பிரித்தானிய தமிழர்கள் உனர்வுபூர்வமாக கலந்துகொண்டது, குறிப்பிடதக்கவிடையமாகும்
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தரை மற்றும் வான் தாக்குதல்களினால் தமிழ் மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்து லண்டன் வாழ் தமிழர்கள் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நேற்று நடத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் வான் குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 230,000த்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த மண்ணில் இடம்பெயர்ந்து வாழ்வதாகவும், பிரித்தானிய தொடர்ந்தும் மௌனம் காக்காது இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழர்கள் மீதான குண்டுத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், தமிழர் இன ஒடுக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், இலங்கைக்கு எதிராக பிரித்தானிய தடைகளை விதிக்க வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜோன் மெக்டொனல், விரேந்திர சர்மா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா வைத்தியாலைக்கு அதிகளவான காயமடைந்த இராணுவத்தினர்: வைத்தியர்கள் பற்றாக்குறையெனத் தகவல்

வன்னி முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடையும் அதிகளவான இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இவ்வாறு அனுமதிக்கப்படும் இராணுவத்தினர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் போதுமான வைத்தியர்கள் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் தட்டுப்பாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பெரும் எண்ணிக்கையான காயமடைந்த இராணுவத்தினர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடையும் இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றபோதும் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு வவுனியா வைத்தியசாலையில் ஒரு சத்திரசிகிச்சை நிபுணரும், ஒரு மயக்க மருந்து செலுத்தும் நிபுணர் மாத்திரமே காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் உபுல் குணசேகர தெரிவித்தார்.
அரசசார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய இரண்டு சத்திரசிகிச்சை நிபுணர்கள் வைத்தியசாலையை விட்டுச் சென்ற பின்னர் சத்திரசிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து செலுத்தும் நிபுணரும் வைத்தியசாலையில் எந்தநேரமும் கடமையில் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“கிளிநொச்சி மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கணிசமான அளவு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் வைத்தியசாலையில் 80 வைத்தியர்கள் மாத்திரமே உள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் மேலதிகமான வைத்தியர்களும், பணியாளர்களும் அவசியம்” என வைத்தியர் குறிப்பிட்டார்.
அத்துடன், வைத்தியசாலையுடன் தொடர்புடைய வைத்தியர்களுக்கான போதியளவு அடிப்படை வசதிகள் இல்லையெனவும் குறிப்பாக வைத்தியர்களுக்கான போக்குவரத்து வசதிகள் இல்லையெனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
“இவ்வாறான அடிப்படை வசதிகள் சுகாதார அமைச்;சினால் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் கடமையாற்ற பல வைத்தியர்கள் முன்வருவார்கள்” என்றார் வைத்தியர் உபுல் குணசேகர கூறினார்.
எரிபொருள் மானியம் வழங்கக் கோரி வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் கடந்த வாரம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேஜர் ஜெனரல் ஜானகப் பெரேரரா தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்- மனைவி உட்பட 28 பேர் பலி 80 பேர் படுகாயம் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - UNP

மேஜர் ஜெனரல் ஜானகப் பெரேரரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவிலானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் ஜானகப் பெரேராவின் மனைவி உள்ளிட்ட குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாக பெரேரா மீது இந்தக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்;பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுரத்திலுள்ள எதிர்க்கட்சி தலைமையகத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதலில் ஜானக பெரேரா, அவருடைய மனைவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் வைத்தியர் ஜோன் புள்ளே ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


அண்மையில் நடைபெற்ற வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் ஜானக பெரேராவே அந்த மாகாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இவர் தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு அண்மையில் மீண்டும் சிறீலங்கா இராணுவ வீராங்கனை ஒருவரை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா முன்னாள் ராணுவத் தலைமை அதிகாரியான அவர் அவுஸ்திரேலியா,இந்தனேசியா நாட்டு உயர்ஸ்த்தானியரும் ஆவார் பின்பு வடமத்திய மாகான எதிர்க்கட்சித் தலைவரானார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜானக பெரெரா கொழும்பு ஜோசப் கல்லூரியில் கல்வி கற்ற அவர் 1966ஆம் ஆண்டு இங்கிலாந்து றோயல் இராணுவ கல்லூரியில் ஆரம்ப பயிற்ச்சி பெற்ற அவர் ராணுவப் பொறியியல் பிரிவில் 2வது லெப்டினனாக இனைந்த அவர் பாதுகாப்புப் பட்டதாரியுமாவார்.

யாழ்பாணத்தில் நடந்த நூற்றுக்கணக்கானோரின் காணாமல் போதல் மற்றும் செம்மணி படுகொலைகள், மாணவி கிருசாந்தி குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டமை உட்பட,1988- 89 களில் ஜேவிபியின் சிங்கள இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதிலும் முக்கிய சூத்திரியாக செயற்பட்ட இவர் ஒரு போர் குற்றவாளியாக கருதப்பட்டவர்.

அவுஸ்ரேலிய தூதுவராக இருந்த காலத்தில் புலிகளை அவுஸ்ரேலியாவில் தடை செய்வதற்கான மூல காரணமாக செயற்பட்டவர்.இவர் போர் குற்றவாளியாக இவர் மீது எழுந்த புகார்களையடுத்து அவுஸ்ரேலியாவிலிருந்து விலக்கப்பட்டார்.

பின்னர் இந்தோனேசிய தூதுவராக செயற்பட்ட காலத்திலும் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தீவிரமாக செயற்பட்டவர் எனவும் தெரிய வருகிறது.இவர் கொல்லப்பட்டதானது இப்போதய சூழலில் பொருத்தப்பாடானதாக இல்லாதபோதும் முன்னய குற்றவாளிகள் இன்னமும் மறக்கப்படவில்லை என்பதையே கோடிட்டு காட்டுவதாக தென்னிலங்கை பத்தியாளர் தெரிவித்தார்.

இவர் தமிழர்களை மட்டுமல்லாது சிங்களவர்களையும் தனது எதிரியாக தேடி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அண்மைக்காலத்தில் சிறிலங்கா இராணுவ கட்டமைப்பையும் மிக கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

அத்துடன், வடமத்திய மாகாணசபைத் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் வைத்தியர் ஜோன் புள்ளேயின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அவருடைய வாகனம் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மீது ஜோன் புள்ளே வழக்குத் தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை ஜானக பெரேரா அண்மைக்காலமாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுரதபுரக் குண்டுவெடிப்பு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - UNP

அனுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பின் போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் ஜானக்க பெரேரா மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை, அவரின் பாதுகாப்பைக் குறைத்த இந்த பாதுகாப்பு அமைச்சும் ஏற்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் குண்டு வெடிப்புத் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜானக்க பெரேரா தனது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்தது.
கடந்தகால நிலைமைகளை நோக்கும் போது, இந்தக் கொலை தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்படுகிறது. அரசாங்க அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மரணம், மகேஸ்வரனின் மரணம் போன்ற மரணங்கள் தொடர்பில் வினைத்திறனான விசாரணைகள் நடத்தப்படவில்லை. இந்த நிலைமையில் இந்த சம்பவம் குறித்தும் உரிய விசாரணையை அரசாங்கம் நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் மீது பொருளாதாரத் தடையை விதிக்கக் கோருக! புலம்பெயர் தமிழரிடம் ஐரோப்பிய தமிழர் பேரவை விடுக்கும் வேண்டுகோள்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே!
தமிழர் தாயகப் பகுதிகள் மீது முற்று முழுதான இராணுவ, பொருளாதார யுத்தத்தை ஏற்படுத்தி தமிழர் பலத்தை சிதறடித்து அவர்;களை தனக்கு கீழ்படியும் ஒரு இனக்குழுவாக மாற்றுவதற்கான முழுமுயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் மீண்டுமொருமுறை வரிந்து கட்டியிறங்கியுள்ளது.
இதன் ஒருகட்டமாக சிங்கள இராணுவ இயந்திரத்தை அப்பாவி தமிழ்பொதுமக்கள்மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிட்டு அவர்களை பால், வயது வேறுபாடின்றி கொன்றொழித்து வருகின்றது.
அண்மைய செஞ்சோலை, அல்லைப்பிட்டி, மூதூர் மற்றும் மன்னார் படுகொலைகள் சிறிலங்கா அரசின் இந்த இலக்கை அடைவதற்கானதொரு வழிமுறையே. அதன் அடுத்தகட்டமாக தமிழர் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினிபோட்டு இனப்படுகொலை செய்வதை குறியாகக் கொண்டு தமிழர் தாயகப் பகுதிகளை நோக்கிய சகல வழங்கல் பாதைகளையும் மூடி ஒரு இறுக்கமான பொருண்மிய தடையை ஒட்டு மொத்த தமிழினம் மீதும் சிங்களஅரசு அமுல்படுத்தி வருகின்றது.
சிறிலங்கா அரசின் இந்த நாசகார திட்டத்தை தவிடுபொடியாக்க தாயகத்தில்; எதிரியின் இராணுவத்தை விரட்ட தமிழர்சேனை முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதேவேளை சிறிலங்கா அரசின் இந்த கபட எண்ணத்தை அடையாளம் கண்டு அதன் இனவாதநோக்கை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி சிறிலங்காவின் தமிழர் மீதான அடக்குமுறைக்கு முதுகெலும்பாக தொழிற்படும் அதன் பொருளாதாரத்தை முடக்கவேண்டிய பெரும்பொறுப்பு புலத்தில் வாழும் எம்தமிழ் உறவுகளுக்குரியதாகின்றது.
எனவே தமிழர் தாயகத்தின் மீது சிறிலங்கா ஏற்படுத்திய பொருளாதாரத்தடைக்கு ஒப்பான ஒரு பொருளாதாரத்தடையை சிறிலங்காமீது அனைத்துலக சமூகம் ஏற்படுத்தக் கூடிய ஒரு ஏதுநிலையை ஏற்படுத்தும் ஒருமுன்முயற்சிக்கு உங்கள் அணைவரதும் ஒத்துழைப்பு வேண்டிநிற்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான இனத்துவேச, இனவொடுக்கு, இனவழிப்பு நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து அணைத்துலக சமூகத்தினையும் சிறிலங்காவினூடன கீழ்காணும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறுகோரும் ஒரு பரந்துபட்ட போராட்டத்தை புலம்பெயர்ந்து வாழும் எம்தமிழ் உறவுகளை முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம்
1. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அனைத்து வகையான ஆயுத ஏற்றுமதிகளையும் சிறிலங்காவிற்கு விற்பனை செய்வதை முற்று முழுதாக நிறுத்தக் கோருதல்.
2. தமிழருக்கெதிரான அடக்குமுறைகளினை முடிவிற்கு கொண்டுவரும்வரை சிறிலங்காவிற்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தக் கோருதல்.
3. சிறிலங்காவிற்கு உல்லாசப்பயணிகள் வருவததை நிறுத்தக் கோருதல்.
4. சிறிலங்காவில் முதலீடு செய்வதை நிறுத்தக் கோருதல்.
5. சிறிலங்காவின் உற்பத்தியாகும் பொருட்களை புறக்கணிக்கக் கோருதல்.
6. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா வங்கிகளுக்கூடாக தாயக உறவுகளுக்கு பணம் அனுப்புவதை தவிர்த்து வேறுவழிகளை கையாளுதல்.
7. சிறிலங்கா வங்கிகளில் வைப்பிலிட்டுள்ள பணத்தை உடனடியாக மீளப்பெறுதல்.
8. சிறிலங்கா விமான சேவையில் பயணித்தலை தவிர்த்தல்.

இந்தியப் பிரதமர் தலையிட வலியுறுத்தி லட்சக்கணக்கில் தந்தி: தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதி இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் இடைவிடாது நடக்கும் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தவரை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இதுவரை நடந்துள்ள விரும்பதகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இனவெறி படுகொலை தொடர மேலும், மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அபாய அறிவிப்பு போன்றதாக இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
"இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்" என்ற வாசகத்துடன் லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் எதிர்ப்பு காரணமாக இந்திய மத்திய அரசு இலங்கைக்கு எதிரான போக்கை வெளிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக இந்தியா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, இன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகர், ஜி; ஜி டி ஏ பளிதாகனேகொடவிடம் மனு ஒன்றை கையளித்துள்ளார். இதில் இலங்கையின் தமிழ்பகுதிகளில் படையினரின் தாக்குதல்கள் காரணமாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பாக இந்தியா தமது கவலையை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் சேதங்கள், ஏற்படுவதும் விரும்பத்தக்கதல்ல என்றும் எம் கே நாராயணன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடிய போது கருணாநிதி அளித்த விளக்கங்களை அடுத்தே இந்திய மத்திய அரசாங்கத்தின் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேர் பலி

அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை 8.45 அளவில் இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கிளையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டபோது இந்தக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மற்றும் அவரது பாரியார் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர் டொக்டர் ராஜா ஜோன் புள்ளே ஆகியோர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா அவரது பாரியார் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர் டொக்டர் ராஜா ஜோன் பொர்னாண்டோ புள்ளே ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது