கந்தளாய் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் : படையினர் நால்வர் பலி

திருகோணமலை கந்தளாய் உள்ள காவலரண் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை கந்தளாய் பகுதியில் உள்ள சேரநாவ பகுதியில் அமைந்துள்ள காவலரனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதில் சிறீலங்காப் படையினரும், சிறீலங்கா ஊர்காவல் படையினரும் காவல்கடமையில் ஈடுபட்ட போது இக்காவலரண் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுத தளபாடங்ளும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

ரி56 ரக துப்பாக்கி 01
அதற்குரிய ரவைகள் 30
சொட் கண் 01

ஆகிய விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

வன்னேரிக்குளம், ஆன்டான்குளத்தில் படையினர் ஐவர் பலி, 19 பேர் காயம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம், மற்றும் ஆன்டான்குளம் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பில் படை அதிகாரி ஒருவர் உட்பட படையினர் ஐந்து பேர் கொல்லப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


இதன்போது மேலும் 19 படையினர் காயமடைந்திருப்பதாகவும் அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இந்தப் பகுதிகளில் நேற்று கடும் மோதல்கள் இடம்பெற்றதாகக் கூறியுள்ளது.


இதேவேளை, வன்னேரிக்குளம் மேற்கு களமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக, விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுக்குத் திரும்புவது மாத்திரம் போதாது: கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்


விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவது மாத்திரம் இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் போதுமானதாக அமையாது என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கூறியுள்ளார்.

“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஆழமான அர்ப்பணிப்பு இல்லாமை மற்றும் ஜனநாயகப் பகிர்வு தொடர்பாக ஒரு அர்ப்பணிப்பு இல்லாமை போன்ற காரணங்களே 2001ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இல்லாமல் போவதற்குக் காரணமாக அமைந்தன. இதுவே இரண்டு தரப்பிற்கும் பிரச்சினையை உருவாக்கியது” என அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்புக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்ததுடன், பலர் கொல்லப்பட்டதாகவும், இந்த நிலையில் சுதந்திரமான கண்காணிப்பாளர்களை மீண்டும் வரவழைத்து இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவது கடினமானது எனவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

சம அந்தஸ்து, புதிய முறையிலான சுதந்திரம், அதிகாரப் பகிர்வுகொண்ட ஆட்சிமுறை போன்றவற்றை உள்ளடக்கிய தீர்வுமுறைபற்றியே இலங்கை அரசாங்கம் தற்பொழுது கவனம் செலுத்தவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படுகொலைகள், ஊழல்மோசடிகள், பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றுக்கு மாற்றீடு தேடவேண்டிய சூழல் இலங்கைக்கு உருவாகியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

“இந்த விடயத்தில் கனடா அக்கறை செலுத்தாமல் இருக்கமுடியாது, எனெனில், சமஷ்டி, முரண்பாட்டுத் தவிர்ப்பு மற்றும் பல்லினத்தன்மை தொடர்பான விடயங்களில் கனடாவுக்கு சொந்த அனுபவங்கள் இருக்கிறது. எனவே, இந்த விடயத்தில் கனடா கூடுதலான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்” என அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் மோதல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர், இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களில் இதுவரை 75,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை அவசியம் - கனடா

இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் பரஸ்பர மரியாதை, அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை, அசாதாரணமான திடசங்கற்பம் என்பன அவசியமாகிறது என கனேடிய லிபரல் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் பொப்ரே தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து பகைமையை களைய கனடாவினால் முயற்சிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சுட்டிக் காட்டி உள்ளார்.


இலங்கையின் யுத்தம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், தன்னார்வு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியாது என்ற அடிப்படையில் அவர்களை யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றியமையில் இருந்து இதனைத் தெளிவாவதாக புரிந்து கொள்ள முடியும் எனவும்; குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தற்போது ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலைமையை பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமே கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக சுயாதீனமான கண்காணிப்புக் குழு ஒன்றின் ஊடாக நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டியது அவசியம் என்பதனை போப் ரே சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரணப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பொறுத்தமாட்டில் உலகின் மிக அபாயகரமான நாடுகளின் பட்டியலில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் இலங்கையின் பெயரையும் இணைத்துள்ளது. இந்த நிலைமை ஆரோக்கியமான நிலைமையாக கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனநாயக சூழ்நிலை குறித்து சர்வதேச ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை போன்றவை தொடர்பாக கனடா கவனம் செலுத்த வேண்டும் என லிபரல் கட்சி சார்பில் பொப் ரே கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனால் இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான முனைப்புகள் உடனடியாக எடுக்கப்படல் வேண்டும். அத்துடன் நாடாளுமன்ற ஜனநாயகம், மனித உரிமைகள் காப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனையே கனடா எதிர்ப்பார்க்கிறது.

இதனை விடுத்து 10 ஆயிரம் கிலோமீற்றர் அப்பாலில் இருந்துகொண்டு கனடா இந்தப்பிரச்சினையில் பங்காளியாக இருக்கவோ அல்லது விரலை சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதையோ விரும்பவில்லை என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் போப் ரே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் அப்பதவியில் இருக்கத் தகுதி அற்றவர் - பிரதம நீதியரசர்


குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளரின் ஊழல் நடத்தை மற்றும் மக்களின் உரிமை மீறல் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளர் பதவியில் இருக்க அவர் தகுதியற்றவர் என்றும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உத்தரவிட்டுள்ளார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவருமான வாசுதேவ நாணயக்கார மற்றும் நிஹால் அமரசேகர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதம நீதியரசர் இந்தக் கடுமையான விமாசனத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இருந்து காலிமுகத்திடல் வரையுள்ள அனைத்து வீதி தடைகளையும் அகற்றுமாறு பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நேற்று (29) உத்தரவிட்டிருந்தார். மக்கள் சுதந்திரமாக பயணம் செய்யும் வகையில் இந்த வீதி தடைகளை அகற்றுமாறு நீதியரசர் காவற்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்துக்களை இலகுவாக மேற்கொள்ளும் நோக்கில் டுப்ளிகேஷன் வீதியூடான ஒரு வழிபாதை போக்குவரத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அவர் பணித்துள்ளார். இதேவேளை வாகன நிறுத்த தடைத் தொடர்பான அறிவிப்பு பலகைகளை கொழும்பு நகரில் பொருத்துமாறும் கொழும்பு மாநகர சபைக்கு நீதியரசர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆராய்ந்த போதே நீதியரசர் சரத் என் சில்வா இந்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அண்மைய நாட்களில் நீதியரசர் சரத் என் சில்வா தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளை வழங்கிவருகிறார். இதனால் அவர் அதிகார தரப்பினரின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வாறெனினும் 2008 ஆம் ஆண்டு இறுதியுடன் அவர் ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்க் காவற்துறையினருக்கு இந்தியாவில் விசேட பயிற்சி?

இந்தியாவின் புதுடெல்லி காவற்துறைப் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த தமிழ்க் காவற்துறை அணி ஒன்று ஓரிரு தினங்களில் இலங்கை திரும்பவுள்ளதாக கிழக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு அரசாங்க கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட பின்னர் 2007ஆம் ஆணடு தனியே தமிழர்களைக் கொண்ட காவற்துறை அணி ஒன்று உருவாக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் 90க்கும் மேற்பட்ட பெண்களும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் தேர்வு செய்யப்பட்டு கல்லடி பயிற்சி முகாமில் 6 மாதகால பயிற்சி வழங்கப்பட்டபின்; கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி புதிய பதவிநிலைகளைப் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

இவர்கள் இங்கு நிர்வாகப்பயிற்சிகளை மட்டுமே நிறைவு செய்த காரணத்தால் நிர்வாகக் கடமைகளுக்கு மட்டுமே பயன்படுத்த நேரிட்டது. பாட வரையறையில் 8ம் ஆண்டு வரையே படித்தவர்களாக இருந்தால் ஆண்களில் 50க்கும் மேற்பட்டவர்களைத் தேர்ந்து அவர்கள் இந்தியாவில் உள்ள புது டில்லி பயிற்சி முகாமில் ஆயுதப்பயிற்சி பெற்றுக் கொள்வதற்காக அனுப்பிவைக்கப்படடதாக தெரியவருகிறது. இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களிள் இலங்கைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்னியில் விமானப் படையினர் புதிய வகை எரிகுண்டுகளை வீசுகின்றனர்

வன்னிப் போர்முனையில் தற்போது விமானப் படையினர் புதிய வகை எரிகுண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

கடந்த இரண்டு மாதங்களாக நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடுமையான எதிர்த் தாக்குதல்களை சந்தித்து வருகின்ற படையினரின் முன் நகர்வுகள் மந்த நிலையை அடைந்து வருவதனைத் தொடர்ந்து அரசு புதிய வகையான திரவ எரிகுண்டுகளை விமானப்படை விமானங்கள் மூலம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் வீசத் தொடங்கியுள்ளது.

விமானப் படை கடந்தவாரம் இத்தகைய குண்டுகளை கிளிநொச்சி மற்றும் அக்கராயன் களமுனைகளை அண்டிய பகுதிகளில் வீசியுள்ளது. இக்குண்டுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

விமானத்திலிருந்து வீசப்படும் இக்குண்டுகள் தரையில் மோதி வெடித்ததும் பாரிய நெருப்புக் கோளங்களை உருவாக்குவதுடன் வெடிக்கும் சுற்றாடலில் இருந்து வாயுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது. எனவே, அப்பகுதியில் வசிப்பவர்கள் மூச்சுத்திணறி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தாக்குதல் நடத்தப்பட்டதும் ஒருவர் உயிரிழக்காவிட்டாலும் பாரிய பதுங்கு குழிகளுக்கு வெளியில் இந்தக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தால் பதுங்கு குழிகளினுள் இருப்பவர்களின் சுவாசப் பையினுள்ளி ருக்கும் ஒட்சிசனைக் கூட உறிஞ்சி வெளியேற்றிவிடுமென்பதால் அவர் மரணமடையும் நிலையேற்படும்

சனிக்கிழமை கிளிநொச்சியில் வீசப்பட்ட விமானக் குண்டுகளால் எண்மர் பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகளும் அடங்கும்.

நான்காவது ஈழப்போரில் விமானப்படை, பதுங்குகுழிகளை தகர்க்கும் கனரக குண்டுகளைப் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது எரி குண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

அக்கராயன் மற்றும் வவுனிக்குளம் பகுதிகளில் முன் நகர்வில் ஈடுபட்ட படையினர் மீது விடுதலைப்புலிகள் "சி.எஸ்.' எனப்படும் நச்சுவாயுவைப் பயன்படுத்தியதாக அரசு பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்ட சில நாட்களில் எரிகுண்டுகளை வன்னிப்பெரு நிலப்பரப்பின் மீது விமானப்படை விமானங்கள் வீசத் தொடங்கியுள்ளதானது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராஜதந்திர அழுத்தங்களால் அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்தியது! வன்னிக்கு மீண்டும் ஐ.நா.உணவு லொறிகள்


ஐ.நா.உட்பட எந்தச் சர்வதேச அமைப்புகளோ, அவற்றின் பிரதிநிதிகளோ வன்னிப்பக்கம் செல்ல அனுமதிக்க முடியாது என்று முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இலங்கை அரசு, உலகின் பல்வேறு பக்கங்களிலும் இருந்து வந்த இராஜதந்திர அழுத்தங்களால் தனது நிலைப்பாட்டைச் சற்றுத் தளர்த்தி, ஐ.நாவின் கண்காணிப்புடன் வழித் துணையுடன் உணவு லொறிகளை வன்னிக்குள் அனுப்ப இணங்கியிருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நெருக்கடிகளில் சிக்கியுள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையுடன் 60 உணவு லொறிகள் எதிர்வரும் வியாழக்கிழமை வன்னிக்குச் செல்கின்றன.
உணவு லொறிகளுடன் வன்னி செல்லும் கண்காணிப்பாளர்கள் அங்கு தங்கியிருந்துவிடாமல் பொருள்களை விநியோகித்துவிட்டு உடனடியாகத் திரும்பி வந்துவிடவேண்டும் என்றும் அறிவித்திருக்கின்றது.
வன்னியிலிருந்து சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த அரசு, மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான கட்டமைப்பு பலம் தன்னிடமுள்ளதாகத் தெரிவித்து வந்தது.
அண்மையில் நியூயோர்க்கில் நோர்வேயின் பிரதிநிதிகளைச் சந்தித்த ஜனாதிபதி எதிர்காலத்தில் அரசினூடாக மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் உத்தரவாதம்
எனினும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை அரச அதிபர்களிடமும் அவர்களது பிரதிநிதிகளிடமும் வழங்குவது குறித்து மனிதாபிமான அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டதுடன் மனிதாபிமான உதவி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான உத்தரவாதம் வழங்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தன.
இதனை அடிப்படையாக வைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகளின் கண்காணிப்பாளர்கள் அங்கு பிரசன்னமாகியிருப்பதற்கு அரசு அனுமதியளிக்கவேண்டுமென்றும் கோரப்பட்டது.
இந்த விடயத்தில் அரசு எதிர்கொண்ட சர்வதேச இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லும் வாகனத் தொடரணியுடன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருள்களுடன் 60 லொறிகள் வன்னிக்குச் செல்லவுள்ளன என்று உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் முகமட் சலிகீன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். சர்வதேச கண்காணிப்பாளர்களின் வழித்துணையுடன் அடுத்தவாரம் வாகனத் தொடரணிகள் வன்னி செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகங்களை மேற்பார்வை செய்வதற்காக சர்வதேசப் பணியாளர்கள் வன்னிக்குச் செல்வதற்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் வன்னிக்குச் செல்லவுள்ள பல வாகனத் தொடரணிகளுக்கான ஆரம்பமாக இது அமையும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வன்னியிலிருந்து சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்கள் வெளியேறி இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் உணவுப் பொருள்கள் அங்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வன்னிக்கு உணவு விநியோகம் இடம்பெறவுள்ளமை, தீவிரமடைந்து வரும் மோதலில் சிக்கியுள்ள வன்னி மக்களை ஐக்கிய நாடுகள் மறந்து விடவில்லை என்பதைப் புலப்படுத்துவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டென் வைஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் சந்தித்தவேளை வன்னி மக்களின் நிலைமை குறித்து ஐ.நா. செயலர் கடும் கவலை வெளியிட்டார் என்றும் இதனையடுத்தே அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முன்வந்ததாகவும் ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

நோர்வேயில் மாபெரும் கவனயீர்ப்பு நடவடிக்கை


தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதலைகளைக் கண்டித்து, நோர்வேயில் அடையாள உண்ணாநிலை, மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் இன்று திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு ஆரம்பித்துள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் நோர்வே செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


நோர்வே நாடாளுமன்ற முன்றலில் ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டம் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணி வரை 32 மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.


தமிழீழ மக்களின் மனித அவலத்தை அறிந்திருந்தும், பாராமுகமாய் இருக்கும் உலகின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் முகமாக இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

.

நோர்வே நாடாளமன்றத்திற்கு முன்பாக இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு போரட்டமும் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை தொடரவுள்ளது.

பெரியவர்கள் பெண்கள் என 20 வரையான தமிழீ உறவுகள் காலை 8.00 மணியிலிருந்து அடையாள உண்ணா நிலையை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, நுற்றுக்கனக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் நோர்வே நாடாளமன்றம் முன்பாக அணி திரண்டுள்ளனர்.

நாளை 10மணி முதல் 15 மணி வரை உண்ணாநிலைப் போராட்டத்துடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அதே இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணிதிரண்டு தமிழீழ மக்களின் அவலத்தை வெளிப்படுத்தி, அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவான தமது ஒன்றுபட்ட குரலை வெளிப்படுத்தவுள்ளனர் என நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.



காத்தான்குடியில் கைக்குண்டுத்தாக்குதலில் சிறுவர்கள் காயம்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 7 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயம் அடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்தக் கைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைநேர பிரார்த்தனையில் ஈடுபட்ட முஸ்லீம்களே இந்த கைக்குண்டுத் தாக்குதலின் இலக்கு எனக் கூறப்படுகிறது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியில் தற்போது பதட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிஙறது.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி நகரில் உள்ள மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களே கைக்குண்டுகள் இரண்டினை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இத்தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். ஆறு பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு உந்துருளிகளும் சேதமாகியுள்ளன.

காயமடைந்த அனைவரும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையாகும்.

இலங்கைக்கு, பாகிஸ்தானும் சீனாவும் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனூடாக இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக ஒரு நிழல் யுத்தத்தை அவை நடாத்துகின்றன என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமிழ் நாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையாகும். ஆனால் அதனை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று கருதுவது துரதிர்ஸ்டவசமானது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு எதுவித அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. இலங்கையில் அரச படையின் மனித உரிமை மீறல்களால் இதுவரை 75ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20ஆயிரம் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

தமிழ் மக்களின் பிரதேசங்களில் கட்டம் கட்டமாக சிங்கள மக்களைக் கொண்டு சென்று அரசு குடியேற்றுகிறது. சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து ஆயுதங்களையும் இராணுவ உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகின்றன. இலங்கையில் தங்களது நிலைகளை வலுப்படுத்தவே இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. போர் ஓய்வதையோ அமைதி ஏற்படுவதையோ அவை விரும்பவில்லை.. இந்தியாவுக்கெதிரான நிழல்யுத்தத்தை இவ்விரு நாடுகளும் நடாத்துகின்றன.

எனவே பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது. அதிகாரப்பகிர்வுத் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழ் ஈழம் என்பது புலிகளின் கோரிக்கையாக இருக்கலாம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமெனில் தமிழ்நாட்டைப்போல மொழிவாரி மாநிலத்தை அமைக்க இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையேல் நாடு பிளவுபடுவதைத் தவிர்க்க இயலாது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கைப் பாராளுமன்றில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மங்களவுக்கு பிறந்துள்ள ஞானம் - சர்வதேசத்தை ஏமாற்றவே சர்வகட்சி குழுவாம்.


இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு புகைமண்டலம் என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

டெய்லி மிறர் பத்திரிகையின் ஊடகவியலாளர் சகுந்தலா பெரேராவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மங்கள சமரவீர இவ்வாறு கூறியிருந்தார்.
“சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உருவாக்கப்பட்டபோது அதில் நானும் ஒரு பங்குதாரராக இருந்ததால் அது ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நான் கூறுகின்றேன். சர்வதேசத்தை பிழையாக வழிநடத்துவதற்கே இது உருவாக்கப்பட்டது. சர்வதேச சமூகத்திடம் அனைத்தையும் முடிமறைக்கும் ஒரு புகைமண்டலமே இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு. இதற்கு சிறந்த உதாரணம், 2006ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது நடைபெற்ற சம்பவத்தைக் கூறலாம். கலாநிதி. ரோஹான் பெரேரா இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளித்து அவர்கள் கவரப்பட்டிருந்தனர். ஆனால், நாங்கள் நாடு திரும்பியதும் மேலதிகமான அதிகாரங்கள் தேவையென பெரேரா முழங்கியிருந்தார். சார்க் மாநாடு நடத்தப்படும்போது அல்லது அரசாங்கக் குழுவினர் அமெரிக்கா செல்லும்போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தெரியும் பொருளாக இருக்கும். இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வொவை மாத்திரமே இந்த அரசாங்கம் விரும்புகிறது” என மங்கள சமரவீர தெரிவித்தார்.

அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பே சிறந்த ஆயுதம்

விடுதலைப் புலிகளுடனான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த காலங்களில் பலதடவைகள் கிளிநொச்சி அரசாங்கப் படைகளால் மீட்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர, இராணுவத்தினரின் சிறந்த செயற்பாட்டாலேயே இவற்றை முன்னெடுக்க முடிந்ததாகக் கூறினார். எனினும், அவ்வாறு மீட்கப்பட்ட பகுதிகள் மீண்டும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டிருந்ததாகவும், இவ்வாறு மாறி மாறி மோதல்கள் தொடரும் எனவும் அவர் கூறினார்.

எனவே, இவ்வாறு தொடர்ச்சியாக நீண்டுவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசியல் ரீதியான தீர்வொன்றே சிறந்த வழி எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர, “சிறுபான்மையினருக்கு நேர்மையாக அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்கும் அரசியலமைப்பொன்றை முன்வைப்பதே விடுதலைப் புலிகளைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த வழி. அன்றையதினமே விடுதலைப் புலிகளை முற்றாக அழித்த தினமாக அமையும்” என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளை இணைத்து அரசாங்கத்துக்கு எதிரான பாரிய சக்திமிக்க கட்சியொன்றை உருவாக்கவேண்டியதே தற்பொழுது தோன்றியிருக்கும் அவசியமான தேவையனெ மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்

தனது பதவியை தக்க வைக்க ஈழத்தமிழர் விடயத்தில் மெளனம் காத்த கருணாநிதி தமிழக மீனவர் கொல்லப்படும் போதும் பேசாது இருப்பது வேடிக்கை.

பதவியைத் தக்க வைத்துக் கொள்கிற சுயநல நோக்குடன் இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து இலங்கையிலுள்ள இந்திய இராணுவப் பொறியியலாளர்களை திருப்பியழைக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள பாரதிய ஜனதாக்கட்சியின் பொதுக்குழு இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்தியா செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சனியன்று (செப்27) சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது அதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கெதிராக இந்திய அரசின் செயற்பாடு அமைந்துள்ளது. இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இராணுவத் தீர்வு சாத்தியமில்லை. இலங்கை இராணுவத்திற்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து இராணுவப் பொறியியலாளர்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இத்தகைய செயலைத் தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு செய்துள்ளதைக் கண்டிக்காமல் கருணாநிதி மௌனம் காப்பது கண்டனத்திந்குரியது.

தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள இலங்கைத் தமிழர் நலனைக் காற்றில் பறக்க விட்ட கருணாநிதி இனியாவது தனது தவறை உணர்ந்து இந்திய இராணுவப் பொறியியலாளர்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

வலி.தென்மேற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்

யாழ் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரை இராணுவத்தினர் ஊடரங்குச்சட்டம் பிறப்பித்திருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல் கந்தரோடைப் பகுதியில் இராணுவத்தினருக்கும், பிறிதொரு குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இரு தரப்பிற்குமிடையில் பரஸ்பரம் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாசியப்பிட்டி, கந்தரோடை, சுண்ணாகம், உடுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய, சங்கானை உள்ளிட்ட பகுதிகளில் பகல் 1 மணிமுதல் மறு அறிவித்தல்வரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதிகளூடான போக்குவரத்துக்களுக்கு இராணுவத்தினர் தடைவிதித்திருப்பதுடன், பொதுமக்களின் நடமாட்டம் அற்றிருப்பதாகவும் யாழ் பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ் நகரின் அன்றாட நடவடிக்கைகள் 12 மணியுடன் குழப்பமடைந்ததாகவும், யாழ் நகரிலிருந்த பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் தத்தமது வீடுகளுக்கு விரைந்ததாகவும் தெரியவருகிறது.