இலங்கைக்கு இந்திய நாடாளுமன்றக் குழு அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை: பா.ம.க. ராமதாஸ்


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை ஏற்படவேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இந்தநிலையில் அவர், இலங்கை அரசாங்கத்திற்குப் பாடம் கற்பித்துக் கொடுப்பதற்காக ஒரே முன்னணியாகச் செயற்படுவதற்கு கருணாநிதி முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தமிழக மக்களின் வெளிப்பாட்டை இலங்கையின் ஜனாதிபதிக்குத் தெரிவிக்குமாறு தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுள்ளார்.அத்துடன் தற்போது யுத்தத்தில் எந்தத் தமிழரும் கொல்லப்படக் கூடாது என்பதை மன்மோகன் சிங்கின் ஊடாக இலங்கையின் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இனப்படுகொலைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரையும் காங்கிரஸின் தலைவி சோனியா காந்தியையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என ராமதாஸ் கோரியுள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவின் நாடாளுமன்றக் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு வடக்கில் உள்ள தமிழர்கள் படும் கஷ்டங்களைக் கண்டறிய வேண்டும் என கோரியுள்ள ராமதாஸ், இதில் தமிழக அமைச்சர்களும் உள்ளடங்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார்..

அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத் தமிழருக்காகப் போராட முதல்வர் முன்வந்தால் படைதிரட்டிக் களமிறக்குவேன் - சரத்குமார்


ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் சுமுகத்தீர்வு காண்பதற்குத தமிழக அரசியல் கட்சிகள் தனித்தனியாகப் போராடுவது பயனற்றது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகளைக் காப்பாற்ற தமிழக முதலமைச்சர் தனது அதிகார ஆசைகளை தவிர்த்தும் அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டும் தமிழ் இனம் வாழ களம் இறங்கிப் போராட முன்வந்தால் அதற்கு சமத்துவ மக்கள் கட்சி துணை நிற்கும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் திரட்டிக் களம் இறங்குவேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து R. சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவை வருமாறு.

தமிழினப் போராளிகளை வேரறுப்போம் என்று சூளுரைத்து இலங்கை இராணுவம் நடத்தும் இராணுவத் தாக்குதல்களால் அங்கு வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே கருவறுக்க முயலும் படுபாதகச் செயலுக்கு மறைமுக இந்திய அரசும் துணை போகிறதோ என்ற வெகுநாளைய சந்தேகம் இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் புலிகளின் தாக்குதலில் படுகாயமுற்ற சமீபத்திய நிகழ்வால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கையின் உள் விவகாரங்களில் இராணுவத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு இரகசியமாக உதவி வருவது வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தனித்தனி அணிகளாகப் போராடுவது பயனற்றது என்பதே எங்கள் கட்சியின் கருத்து.

கடந்த 19.12.2006 அன்று தமிழக முதலமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திலேயே "ஈழப்பிரச்சினையின் தன்மையைப் புரிந்துகொண்டு உள்ளார்ந்த உணர்வோடு இனப்பிரச்சினையின் தன்மையை தீர்த்திட குழுவொன்றை அமைக்க வேண்டும். அக்குழு இலங்கை சென்று இலங்கை அரசோடும் தமிழ் இனப் போராட்ட அமைப்புகளோடும் பேச்சு நடத்துவதற்கு இந்திய அரசின் அனுமதியைத் தமிழக முதலமைச்சர் பெற வேண்டும். மேலும் அக்குழுவில் நானும் பங்கேற்பதற்காகத் தயாராகவே உள்ளேன்" என்பதையும் தெரிவித்தேன்.

உடனடியாக தமிழக முதலமைச்சர் மத்திய அரசை நிர்ப்பந்தித்து இலங்கையில் நடைபெற்றுவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திடவும், திறந்த மனதோடு சுமுக பேச்சுக்களை இந்திய அரசே முன்னின்று தொடங்கிடவும் இலங்கை அரசைக் கடுமையாக வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

எமது இனம் ஈழத்தில் அழியும் போது தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த நாம் இன்னும் கைகளைப் பின்புறம் இறுகக்கட்டி, யாருக்காக காத்திருக்கிறோம்? - இந்திய ஊடகம்

ஈழத் தமிழர் பிரச்னை மீண்டும் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அரசியல் கட்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் அதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையை ஆளும் ராஜபக்ஷே அரசாங்கம் அப்பட்டமான இனஅழித்தொழிப்பு போரை நடத்தி வருவது எல்லோரும் அறிந்ததுதான். அதை சிங்களவர்களுக்கான அரசாங்கம் என்று குறிப்பிடுவதே பொருத்தம்.

அண்மையில் 'நேஷனல் போஸ்ட்' என்ற பத்திரிகைக்கு இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அளித்திருந்த பேட்டியில், ''இலங்கையில் சிங்களவர் களாகிய நாங்கள் எழுபத்தைந்து சதவிகிதம் இருக்கிறோம். இந்த நாட்டை ஆள்வதற்கு எங்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. மற்றவர்கள் இங்கே வாழலாம். ஆனால், சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் எந்தச் சலுகையையும் கேட்கக் கூடாது'' என்று கூறியிருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், ''மற்றவர்களைவிட தமிழர்கள் வசதியாக இருக்கிறார்கள்'' என்றும் அவர் கேலியாகக் கூறியிருக்கிறார்.

இலங்கையின் இனஅழித்தொழிப்பு போர் இப்போது முக்கிய மான கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு, இலங்கை ராணுவம் தொடர்ந்து தமிழர் பகுதிகளைத் தாக்கி வருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் அது தன்னு டைய பிடியை வலுவாக்கிக் கொண்டுள்ளது. அங்கிருக்கும் இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுக்களைப் பயன் படுத்தி அந்தப்பகுதியில் புலிகளின் செல்வாக்கை இலங்கை ராணுவம் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் புலிகள் இப்போது இலங்கையின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே நிலைகொண் டிருக்கிறார்கள். அங்கும்கூட அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தம்முடைய பிரதேசங்களை ராணுவத்திடம் இழந்து வருகிறார்கள். இதை யுத்த தந்திரத்தின் அடிப்படையிலான பின் வாங்கல் என்று சிலர் வர்ணிக்கப்படுகின்றது. இதற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.

இலங்கையின் வடக்கே உள்ள வவுனியா, முல்லைத்தீவு, கிளி நொச்சி ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் இப்போதும் புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. இதோ ஒருசில நாட்களில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம் என்று கொக்கரித்த சிங்கள ராணுவம் அங்குலம் அங்குலமாகத்தான் நகர முடிகிறது. அதற்கும்கூட பெரிய அளவில் அது இழப்பைச் சந்திக்கவேண்டிய நிலை. இதுவரை நடந்துவரும் யுத்தத்தில் புலிகள் தம்முடைய ராணுவ வலிமையை முழுவதுமாகப் பயன்படுத்தவில்லை. யுத்த முனைகளில் அனுபவம் பெற்ற தேர்ந்த வீரர்கள் புலிகளின் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இனிமேல்தான் போர் உக்கிரமாக இருக்கும் என்று ராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

போரில் பின்வாங்குவதும், முன்னேறுவதும் புலிகளுக்குப் புதிதல்ல. அவர்கள் பலவீன மடைந்து விட்டனர் என்று சிங்கள ராணுவம் எண்ணியபோதெல்லாம்,
திடீர் தாக்குதல் களை நடத்தி சிங்கள ராணுவத்துக்கு மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியதோடு புதிய பிரதேசங்களைப் புலிகள் கைப்பற்றியவரலாறு ஏராளமாக இருக்கிறது. அப்படி இப்போதும்கூட நிகழலாம் என்ற அச்சம் சிங்கள ஆட்சியாளர் களிடம் உள்ளது. வடக்கில் நிலை கொண்டுள்ள யுத்த முனையை மாற்றுகிற விதத்தில் சிங்கள வர்கள் பெரும்பகுதியினராக வாழும் தெற்குப் பகுதியில் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற பயம் சிங்கள மக்களிடமும் பரவ லாக இருக்கிறது.

ராஜபக்ஷே அரசு தன்னுடைய அரசியல் எதிரிகளைத் தற்காலிகமாக அமைதிப்படுத்தி வைத்திருந்த போதிலும், இலங்கையின் பொருளாதார நிலை வலுவாக இல்லை. யுத்தம் நீடிக்க நீடிக்க இலங்கைக்குள் அது மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். இப்போதே அங்கு சுமார் நாற்பது சதவிகிதம் என்கிற அளவுக்கு பணவீக்கம் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அத்தி யாவசியப் பொருட்களின் விலை வானத்தில் இறக்கைக் கட்டிப் பறக்கிறது. அடிப்படை வசதிகள் எதுவும் அங்கே சரியாக இல்லை. எல்லாவற்றுக்கும் யுத்தம் ஒன்றையே சாக்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் ராஜபக்ஷே. ஆனால், இதை வெகு காலத்துக்குச் செய்யமுடியாது என்பது அவருக்கும் தெரியும். போர் நீடிக்குமேயானால், இலங்கைப் பொரு ளாதாரம் படுபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுவிடும். அதைத் தொடர்ந்துவரும் அரசியல் குழப்பங்கள் நிச்சயம் இன்னும் மோசமான நிலைமையைத்தான் அங்கு ஏற்படுத்தும். அதனால்தான் சீக்கிரம் போரை முடிவுக்குக் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது.

கருணா குழுவின் பிரிவுக்குப் பிறகு கிரமமான யுத்தத்தை நடத்துவதில் புலிகளுக்குப் போதுமான வீரர்கள் இல்லையென்பது உண்மைதானா என்பது தெரியவில்லை. என்றாலும், அவர்கள் கெரில்லா போர் முறையில் இன்னும் வலுவாகவே இருக்கிறார்கள். எனவே, சிங்கள ராணுவம் அவ்வளவு எளிதாக கிளிநொச்சியைப் பிடித்துவிட முடியாது. அதனால்தான், அவர்கள் விமானங்களின் மூலம் தமிழர் பகுதிகளில் குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள் என தினந்தோறும் ஏராளமானவர்களைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறார்கள். போரின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாகப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக சிங்கள அரசு கூறுகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் சேலைகளையும், கிழிந்த துணிகளையும் கொண்டு தாங்களே அமைத்துக் கொண்டுள்ள டென்ட்களில்தான் வாழ்ந்து வருகி றார்கள். அங்கும்கூட அவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இலங்கையில் செயல்பட்டு வரும் 'மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்ற அமைப்பு சில நாட்களுக்கு முன்னால் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. யுத்தம் நடந்து வரும் வவுனியா மாவட்டத்தில் எப்படியெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிங்கள ராணுவத்தோடு கூட்டு சேர்ந்துகொண்டு ப்ளோட், ஈ.பி.டி.பி., டெலோ ஆகிய அமைப்புகளுடன், பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோரின் தலைமையிலான ஆயுதக்குழுக்களும் தமிழ் மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இருபத்து நான்கு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். பத்தொன்பது பேர் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

'வெள்ளை வேன் கடத்தல்' என்பது அங்கே பிரபலமாக இருக்கும் ஒரு விஷயமாகும். பட்டப்பகலில் சாலைகளில் சென்று கொண்டிருப்பவர்களை திடீரென்று வெள்ளை வேன் களில் வரும் கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து வருவது அங்கே சகஜமாகி விட்டது. மேலே சொன்ன ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்த நபர்கள் அண்மையில் செட்டிக்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்குச் சென்று அங்கு படித்துக்கொண்டிருந்த சிறுவர்களையெல்லாம் தம்முடைய படைக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி பிடித்துச்செல்ல முயன்றபோது, பொதுமக்கள் சேர்ந்து அதை முறியடித்துள்ளனர். ஆட்களைக் கடத்தி ஒருகோடி முதல் பத்து கோடி ரூபாய் வரை பணம் பறிப்பது அந்தப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், கள்ளச்சாராயத் தொழிலிலும் இந்த ஒட்டுக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன. சாராயம் காய்ச்சக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த பெண் ஒருவரை, அவர்கள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.

முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு அனைத்துவித பாதுகாப்பும் வழங்கப்படுவதாக சிங்கள அரசு கூறுகிறது. ஆனால், முகாம்களுக்குச் செல்பவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி சித்ரவதை செய்வது அதிகரித்துள்ளது. முகாம்கள் என்பவை சிறைச்சாலைகளாகவே செயல்படுகின்றன. தலைகீழாகத் தொங்கவிடுதல், தண்ணீருக்குள் அமுக் குதல், நகங்களைப் பிடுங்குதல் போன்ற சித்ரவதைகளுக்குத் தமிழ் மக்கள் ஆளாக்கப் படுகிறார்கள். சிங்கள ராணுவத்தினர் மட்டு மின்றி, அவர்களோடு சேர்ந்துகொண்டு அட்டூ ழியம் செய்யும் ஒட்டுக்குழுக்களும் தமிழ்ப் பெண்களை பலாத்காரம் செய்வதாக புகார்கள் எழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் அதுபற்றி எவரிடமும் முறையிடக்கூட முடியாத அவலநிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்.

இதற்கெல்லாம் மேலான இடியாக, சிங்கள ராணுவம் இப்போது தமிழர்கள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிங்கள விமானங்கள் தமிழர் பகுதிகளில் 'தெர்மோபாரிக்' குண்டுகளை வீசத்தொடங்கியுள்ளன. இந்த குண்டுகள் காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி எடுத்து விடும் என்பதுதான் இவற்றின் கொடூர தன்மை. இதனால், மூச்சுத்திணறி மக்கள் செத்துப்போவார்கள். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினர் இப்படியான குண்டுகளை தாலிபன் படையினருக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றில் உபயோகப்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் முற்றாக எரிந்து போகாவிட்டால், அவை சுற்றுச்சூழலில் நஞ்சைக் கலந்து நிரந்தரமான அபாயத்தை உண்டுபண்ணும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படியான ஆயுதங்களை இதுவரை பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது எவரும் பயன்படுத்தியதில்லை. ஆனால் சிங்கள ராணுவமோ, தமிழ் மக்களை அழிக்க இத்தகைய ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகத் துவங்கியிருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பும் தமிழக அரசியல் கட்சிகள் யாவும் இந்திய அரசு இதில் தலையிட வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. இலங்கையில் தலையிடுவதால் இந்திய அரசுக்குப் பொருளாதார லாபம் எதுவும் கிடையாது. நம் அரியானா மாநிலத்தைவிட மக்கள் தொகையில் சிறிய நாடு இலங்கை. அங்கு வாங்கும் சக்தி கொண்ட மத்தியத்தர வர்க்கம் பெரியதாக இல்லை. மொத்த மக்கள் தொகையில் சுமார் இருபது சதவிகிதம் பேர்தான் கொஞ்சம் பொருளாதார வசதியோடு உள்ளனர். எனவே, பொருளாதார நோக்கத்தோடு இந்தியா அங்கே தலையிட முன்வராது.

ராணுவ ரீதியில் இலங்கை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அதனால்தான் இந்திராகாந்தி காலத்தில் இருந்து இலங்கைக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் நாட்களில் இலங்கையில் அமெரிக்கா கால்பதித்து விடக்கூடாது என இந்தியா எச்சரிக்கையாக இருந்தது. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் புண்ணியத்தில் இப்போது இந்தியாவே அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாக மாறிவிட்டது. அதனால்தான், இலங்கைப் பிரச்னையை இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அதுமட்டுமின்றி, பிரதமருக்கு ஆலோசனை தரும் அதிகாரிகள் பெரும்பாலும் தமிழர் விரோத சிந்தனையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஈழத் தமிழர் பிரச்னையை விடுதலைப்புலிகள் பிரச்னையாக மட்டுமே சுருக்கி அதை, ராஜீவ்காந்தி படுகொலையோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கிறார்கள். அதைச்சொல்லியே இந்திய அரசின் அணுகுமுறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் பிரச்னையை தேர்தல் சதுரங் கத்தில் நகர்த்தப்படும் காயாகப் பார்க்காமல், மனிதாபிமானத்தோடும், அக்கறையோடும் தமிழக அரசியல் கட்சிகள் அணுகுவது உண்மை யானால், அதற்காக ஒருங்கிணைந்து குரலெழுப்ப முன்வரவேண்டும். ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால்தான் இனஅழித்தொழிப்புக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும். சிங்கள ராணுவம் மூர்க்கமான இறுதிகட்டப் போரை தொடங்கியிருக்கிறது. அங்கு தமிழ்ப் பெண்களெல்லாம் கெடுக்கப்பட்ட பிறகு, தமிழர்களெல்லாம் கொல்லப்பட்ட பிறகு இங்கே ஒப்பாரி வைப்பதால் பயன் எதுவுமில்லை. ''நெஞ்சங் குமுறுகிறார் - கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினிலே மிஞ்ச விடலாமோ'' என்று பிஜித் தீவை எண்ணி பாரதி பாடியது, ஈழத் தமிழருக்காகப் பாடியது போல் உள்ளது!

தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த நாம் இன்னும் கைகளைப் பின்புறம் இறுகக்கட்டி, யாருக்காக காத்திருக்கிறோம்?

வைகோ போர் பிரகடனம்

http://img359.imageshack.us/img359/4610/p44bcl3.jpg

''நம்ம மேடமா இப்படியரு அறிக்கை விட்டிருக்காங்க..! சூப்பர்! இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியாம ஆளுங்கட்சியான தி.மு.க. திணறுவதை கரெக்டா புரிஞ்சுகிட்டு உறுதியா ஒரு 'லைன்' எடுத்திருக்காங்க, மேடம்!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகக் குரல்கள்! அதேபோல், இவர்களின் கூட்டணியான ம.தி.மு.க-வில் ஆளாளுக்கு 'ஸ்வீட்' பரிமாறிக் கொள்கிறார்கள்.

இலங்கைத் தமிழர் மீது அங்குள்ள அரசு நடத்தும் அடக்கு முறைகளுக்கு எதிராகக்

குரல் கொடுத்து... தமிழக முதல் வரையும் இந்தியப் பிரதமரையும் சாடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் கடுமையான அறிக்கைதான் இதற்குக் காரணம்!

பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு கோத்துப் பார்த்து, கொஞ்சம் அடக்கி வாசிப்பதுதான் ஜெயலலிதாவின் அணுகுமுறை. புலிகளின் சீனியர் ஆலோசகராக விளங்கிய ஆண்டன் பாலசிங்கம், உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வில் இறங்கவேண்டிய நிலை வந்தபோது, மனிதாபிமான கண்ணோட்டத்தை எல்லாம் தாண்டி அதற்கு எதிர்ப்புத் தெரிவத்தவர் ஜெயலலிதா. கடந்த வாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்ட நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்களித்து, கடைசி நேரத்தில் தன் பிரதிநிதி யாரையும் அனுப்பாமல் அ.தி.மு.க. கழண்டுகொண்டதும்கூட சர்ச்சை அலைகளைக் கிளப்பியது.

இத்தனைக்கும் நடுவே, இலங்கை பிரச்னையில் மட்டும் தன் கூட்டணித் தலைமையோடு கருத்தொருமித்த கண்ணோட்டம் இல்லாமல் நெருடலுடனேயே இருந்துவந்தது ம.தி.மு.க! இப்போது அதிரடியாக ஜெ. அறிக்கை வந்துவிடவும்... அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னருகில் இருந்தவர்களுடன் இனிப்பு பரிமாறிக் கொண்டார் வைகோ!

''ம.தி.மு.க-வுக்கு இது உணர்வுபூர்வமான பிரச்னை என்றால் அ.தி.மு.க-வுக்கு அரசியல்ரீயான பிரச்னையும்கூட..! தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பதோடு, இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் தி.மு.க-வின் பலவீனங்களை வெளிச்சப்படுத்தி, ஓட்டு வங்கியை பலப்படுத்த முடிவெடுத்துவிட்டார்'' என்றே போயஸ் தோட்டத்துத் தகவல்கள் சொல்கின்றன.

இத்தகைய சூழலில் வைகோவை நாம் சந்தித்தோம்.

''இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதாவின் மனமாற்றத் துக்குக் காரணம் நீங்கள்தானா?''


''மேடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்தப் பிரச்னையை ஆழ்ந்து யோசித்திருப்பார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் ஈவு-இரக்கமற்ற கொடூரங்களைப் பற்றிய விவரங்களை திரட்டியிருப்பார். ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகங்கள் குறித்த தகவல்களை முழுமையாக சேகரித்திருப்பார். அதில் தெளிவு பெற்ற பின்னர் தான் இப்படியரு அறிக்கையை வெளியிட்டி ருக்கிறார்.



சிங்கள ராணுவத்தை எதிர்க்க ஈழத் தமிழர் களுக்குக் தளம் அமைத்துக் கொடுத்தது எம்.ஜி.ஆர்தான். அவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்திக் கொண்டுதான் ஒவ்வொரு ஈழத் தமிழனும் இந்த நிமிடம் வரையில் போர்க்களத்தில் நிற்கிறான். புரட்சித் தலைவரின் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இன்றைக்கு அவருடைய வழியிலேயே ஈழத் தமிழனைப் பாதுகாக்க முன்வந்திருக்கிறார்.

இதற்கு முன்பு 2006-ம் வருடம் ஈழப் பிரச்னைக்காக டெல்லி யில் எங்கள் கட்சி உண்ணாவிரதம் இருந்தபோது, அ.தி.மு.க-வின் மூன்று எம்.பி-க்களை அனுப்பி ஆதரவு கொடுத்தார் ஜெயலலிதா. 2007-ம் வருடம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கைதானோம். அப்போதும் எங்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். அப்போதே இலங்கைக்கு ராணுவ உதவி செய்யக்கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இப்போது வந்திருக்கும் அவருடைய அறிக்கை தமிழக முதல்வர் பதவியில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தமிழர் நலனையே விட்டுத் தரத் தயாராக இருக்கும் கலைஞரின் உண்மையான கலரை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது! ஜெய லலிதாவின் அறிக்கைக்குப் பிறகுதான் ஈழத் தமிழர்கள் மீது திடீர் பாசம் வந்தவராக பிரதமருக்குத் தந்திகள் அனுப்பச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஈழத் தமிழனுக்கு மயிலை மாங்கொல்லையில் இவர் பொதுக்கூட்டம் போட்டுப் பேசு வாராம்... அதைக் கேட்டு இலங்கை அரசாங்கம் தன் அட்டூழியத்தை உடனே நிறுத்தி விடுமாம். யாரை ஏமாற்றும் வேலை இது?

கலைஞர் நினைத்தால், அவர் வீட்டுக் கொல்லையில் டெல்லி மந்திரி பிரதானிகள் அத்தனை பேரும் வந்து நிற்பார்களே..! இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவின் உதவியை உடனே நிறுத்தவேண்டும் என்று அவர்களிடம் இவர் கட்டளை போடலாமே. அதைவிட்டுவிட்டு மாங்கொல்லையில் கூட்டம் கூட்டுவானேன்?''

''இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை என இந்திய அரசு சொல்கிறது. ஆனால், ஜெயலலிதா சில மீடியா செய்திகளை மேற்கோள் காட்டி சாடியிருக்கிறாரே..?''


''ஆமாம்... நூறு இலங்கை ராணுவத்தினருக்கு ஹரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சிகள் அளித்ததாக வந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளை மேற்கோள் காட்டியிருக்கிறார் ஜெயலலிதா.

இதுபோல் ஏராளமான ஆதாரங்களை எடுத்து வைக்க முடியும். செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சிங்கள ராணுவ கேந்திரத்தின் மீது புலிகள் விமானத் தாக்கு தல் நடத்தினார்கள். கரும்புலிகள் பிரிவு இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய மறுநாள், தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து ஒரு செய்தி வெளியாகிறது. அதில் இந்திய அதிகாரிகளான ஏ.கே.தாகூர் மற்றும் ரவுட் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட் டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் இடத்தில் இந்திய அதிகாரிகளுக்கு என்ன வேலை? இதற்கும் மறுநாள் இலங்கை செய்தி நிறுவனம் ஒன்று, மற்றொரு செய்தியை வெளியிடுகிறது. அதில் '265 இந்திய ராணுவ வல்லுநர்கள் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பெயர் சொல்ல விரும்பாத இந்திய செய்தி தொடர்பாளர் ஒருவர் சொன்னதாக அதே செய்திக்குறிப்பு சொல்கிறது. இந்த இரண்டு செய்திகளையும் இந்த நிமிடம் வரை இந்திய அரசு மறுக்கவில்லையே.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஒரு மூத்த செய்தியாளர் என்னிடம் பேசினார். ராணுவ அதிகாரிகளுக்கான ஒரு கூட்டத்தில் அவரும் கலந்து கொண் டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசிய இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, 'இந்திய சர்க்கார் நம் பக்கம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டில் 'தமிழ்... தமிழ்' என்று முழங்கும் சில கைக்கூலிகள்தான் நம்மை எதிர்க்கிறார்கள். அவர்கள் பேச்சு எடுபடாது. இந்தியாவின் துணையோடு நம் இலக்கை அடைந்துவிடுவோம்' என்று பேசியதாக அந்த செய்தியாளர் சொன்னார்.

இந்திய அதிகாரிகளான எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் ஆகியோர் கொழும்புக்குச் சென்று திரும்புகிறார்கள். இலங்கைக்கு இரண்டு சதவிகித வட்டியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது இந்தியா! இந்தக் கடன் தொகையைக்கொண்டு பொன்சேகா பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வாங்கும் முயற்சிகளில் இருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. தமிழனை அழிக்க தமிழினத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் பங்கு வகிக்கும் இந்திய அரசு பணம் கொடுக்கிறது!''

''இலங்கை விவகாரத்தில் இத்தனை எதிர்ப்புக்கு நடுவிலும் இந்திய அரசு அசைந்துகொடுக்காமல் நிற்பதன் அவசியம் என்ன?''

''அரசியல்வாதிகளைவிட அதிகாரிகள் தான் இலங்கை விவகாரத்தில் இந்திய அரசைக் குழப்புகிறார்கள். முதலில் இப்படி குழப்பப்பட்டவர் ராஜீவ்காந்தி! போஃபர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கிய சமயத்தில் அதை மறைக்க எதையாவது செய்யவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ராஜீவ். அந்த நேரத்தில் அவரை தன்னுடைய தந்திர வலையில் சிக்க வைத்து இலங்கை-இந்திய ஒப்பந்தம் போட்டார் ஜெயவர்த்தனே. அந்தத் தவறை நியாயப்படுத்த, இப்போதும் எந்த அரசாங்கம் வந்தாலும் இலங்கை அரசாங்கத்துக்கு விசுவாசிகளாகவும் தமிழர்களுக்கு வில்லன்களாகவும் இந்திய அதிகாரிகளில் ஒரு கூட்டமே செயல்படுகிறது.

அப்போது போட்ட ஒப்பந்த ஷரத்துக்களை மீண்டும் ஒப்பந்த வடிவில் கொண்டுவர இந்தியா முயன்றபோது நான் எதிர்த்தேன். உடனே, அது கைவிடப்பட்டதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால், ஒப்பந்தம் போடாமலேயே ஷரத்துகளை மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த துணிச்சலில் 'பிரபாகரன் பிடிபடுவார், ரொம்ப நாள் அவர் உயிரோடு இருக்க முடியாது' என்று இலங்கையின் ராணுவ தளபதி பொன்சேகா சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரபாகரனை வீழ்த்த யாராலும் முடியாது. அவருடைய போர்த்தந்திரங்களை எதிர்கொள்ள எத்தனை நாட்டு ராணுவம் இலங்கைக்குத் துணையாக நின்றாலும் ஜெயிக்க முடியாது!''

வைகோ-வின் உற்சாக முழக்கம் இப்படி யிருக்க, இலங்கைப் பிரச்னை தொடர்பான ஜெயலலிதாவின் அறிக்கைக்கு, புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியிருப்பது அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம். 'இலங்கை விவகாரத்தை முழுமையாக கையில் எடுத்து இன்னும் சில நாட்களில் கருணாநிதிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் ஜெயலலிதா தயாராகி வருகிறார்' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர் தலைவர்கள் சிலர்.

நன்றி விகடன்

ஈழத்தமிழ் மக்களிற்காக உயிரையும் கொடுப்போம் : கலைஞர் கூறியதாக கனிமொழி

E-mail Print PDF

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஈழத்தமிழர் பிரச்சினையில் "தி.மு.. நிலையும்-மத்திய அரசுக்கு வேண்டுகோளும்" என்ற தலைப்பில் சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் சிறப்புரையாற்றிய கலைஞர் கருணாநிதி, ஈழத்தில் தமிழ் மக்கள் மடிந்தால், அவர்களுடன் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து மடியத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருப்பதாக, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.


தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டிப்பதாகவும், இதனாலேயே முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நேற்று பல இலட்சக்கணக்கான மக்கள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்பி வைத்திருப்பதாகவும், கனிமொழி கூறினார்.


தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி விடுத்த போராட்ட அழைப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஏனைய பல கட்சிகளும், அமைப்புக்களும் ஆதரவு கொடுத்திருப்பது, ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் அனைவரும் ஓரணியில் நிற்பதை எடுத்துக்காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.


இதேவேளை, தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுதல், தாக்கப்படுதல் என்பவற்றைக் கண்டித்து, முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் M.K.நாராயணன் இந்தியாவிற்கான சிறீலங்கா தூதுவரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.








பழுத்த அனுபம் மிக்கதும், யுத்த தந்திரோபாயங்களை நுட்பமாக முன்னெடுக்கக்கூடியதுமான தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும்

E-mail Print PDF
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என சர்வதேச யுத்த ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பழுத்த அனுபம் மிக்கதும், யுத்த தந்திரோபாயங்களை நுட்பமாக முன்னெடுக்கக்கூடியதுமான அமைப்பாக விடுதலைப் புலிகளை குறித்த ஆய்வேடு சித்தரித்துள்ளது.

மேலும், இராணுவப்படையினர் சற்று அயரும் சந்தர்ப்பத்தில் மிக மோசமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்தே படையினர் வேகமான முன்நகர்வுகளை தவிர்த்து நிதமானமாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

விடுதலைப்புலிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறும் வரை அரசாங்கத்திற்கு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது சுலபமானதாக அமையாதென அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி நோக்கிய படையினரின் முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 20 படையினர் பலி; 3 உடலங்கள் மீட்பு


கிளிநொச்சியை நோக்கி இலங்கைப் படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருமுறிகண்டி - அக்கராயன் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இலங்கைப் படையினர் விடுதலைப் புலிகளின் முன்னரணைக் கைப்பற்றும் நோக்கில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் தாக்குதலை மேற்கொண்டனர்.

முன்னரணைக் கைப்பற்றும் நோக்கில் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதில் 20-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான படையினர் காயமடைந்தனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, வன்னிவிளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று காலை பெருமெடுப்பில் நகர்வினை மேற்கொண்டனர்.

இந்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதல் மூலம் படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டது.

படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

அதேநேரம், இன்று காலை வன்னேரிக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத்தாக்குதல் மற்றும் வான்படையின் தாக்குதல் துணையுடன் முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கைக்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர்.




Tamilwin.com

வன்னிக் களமுனைகளில் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் 62 படையினர் பலி;72 பேர் காயம்: விடுதலைப் புலிகள்


கிளிநொச்சி மாவட்டம் தெற்குப் பிரதேச அக்கராயன்குளம் முறிகண்டி பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் நடைபெற்ற மோதல்களில் இலங்கைப் படையினர் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 49 படையினர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் வன்னிவிளாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 16 படையினரும் வன்னேரிக்குளத்தில் 20 படையினரும் கொல்லப்பட்டனர். இவ்வாறு மூன்று களமுனைகளிலும் மொத்தமாக 62 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் அக்கராயன்குளம் பகுதியில் 49 படையினரும் வன்னிவிளாங்குளம் பகுதியில் 23 படையினரும் காயமடைந்துள்ளனர்.

இம்மோதல்களில் புலிகளின் அகோரத் தாக்குதலால் படையினர் தமது பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதன்போது விடுதலைப்புலிகளால் படையப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாரிய தாக்குலையடுத்து படையினர் கிளிநொச்சி புறநகர்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆட்டிலறித் தாக்குதல் பல்குழல் பீரங்கித்தாக்குதல் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு நேற்று செவ்வாயக்கிழமை மாலை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.