இலங்கைக்கு இந்திய நாடாளுமன்றக் குழு அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை: பா.ம.க. ராமதாஸ்


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை ஏற்படவேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இந்தநிலையில் அவர், இலங்கை அரசாங்கத்திற்குப் பாடம் கற்பித்துக் கொடுப்பதற்காக ஒரே முன்னணியாகச் செயற்படுவதற்கு கருணாநிதி முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தமிழக மக்களின் வெளிப்பாட்டை இலங்கையின் ஜனாதிபதிக்குத் தெரிவிக்குமாறு தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுள்ளார்.அத்துடன் தற்போது யுத்தத்தில் எந்தத் தமிழரும் கொல்லப்படக் கூடாது என்பதை மன்மோகன் சிங்கின் ஊடாக இலங்கையின் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இனப்படுகொலைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரையும் காங்கிரஸின் தலைவி சோனியா காந்தியையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என ராமதாஸ் கோரியுள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவின் நாடாளுமன்றக் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டு அங்கு வடக்கில் உள்ள தமிழர்கள் படும் கஷ்டங்களைக் கண்டறிய வேண்டும் என கோரியுள்ள ராமதாஸ், இதில் தமிழக அமைச்சர்களும் உள்ளடங்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார்..

அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: