இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக கட்சிகள் பிரதமரை சந்திக்க வேண்டும் - தொல் திருமாவளன்


இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகக் கட்சிகள், இந்தியப் பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய குடியரசுத் தலைவி பிரதீபா பட்டேலிடமும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இந்திய மத்திய அரசு, இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் இன்று உண்ணாவிரதப் போராட்டாமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

எட்டு மாதங்களில் களமுனைகளில் 1,509 மாவீரர்கள் மட்டுமே வீரச்சாவு: மாவீரர் பணிமனை


இந்த வருட ஆரம்பத்தில் இருந்து ஓகஸ்ட் வரையான எட்டு மாதங்களில் 1,509 போராளிகளே களப்பலியானார்கள். அரசு வெளியிடும் தகவல்களில் உண்மையில்லை. விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை மேற்கண்டவாறு நேற்று அறிவித்துள்ளது.

இதுவரை களப்பலியான போராளிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அந்தப் பணிமனை நேற்று வெளியிட்டது. இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் 1,047 ஆண் போராளிகளும் 462 பெண் போராளிகளுமாக 1,509 பேர் களப்பலியாகியுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 6,500 போராளிகள் கொல்லப்பட்டனர் என்று அரசு அறிவித்துள்ளது. அது பெரும் தவறாகும். போராளிகள் மரணமானதும் வானொலி மூலம் அறிவிப்போம். அத்துடன் களப்பலியானவர்கள் விபரங்கள் மாத அடிப்படையில் வெளியிடுவோம். அவற்றைக் கொண்டு களப்பலியானவர்களின் எண்ணிக்கையை எவரும் இலகுவில் கணக்கிட்டுவிட முடியும் என்று மாவீரர் பணிமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.

1982 ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி தொடக்கம் 2008ம் ஆண்டு ஓகஸ்ட் 31 ம் திகதி வரை 21,648 போராளிகள் களப்பலியாகியுள்ளனர். அவர்களில் 16,953 ஆண் போராளிகளும் 4,695 பெண் போராளிகளும் அடங்குவர் என மாவீரர் பணிமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு உண்ணாவிரதம்; தே.மு.தி.க. பங்கேற்பு


ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும், சிறிலங்கா அரசைக் கண்டித்தும், சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய அரசினைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த அதிமுக கட்சி பங்கேற்கவில்லை. அதிமுக கட்சியின் சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக திடீரென உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது சிறிது பரபரப்பாக இருந்தது.

உண்ணாநிலை போராட்டப் பந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் தா.பாண்டியன், இணைச் செயலாளர் சி.மகேந்திரன், விஜயகாந்தின் தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சரும், ஈழத் தமிழர் பிரச்சினையை ஐ.நா. சபையில் ஒலிக்க செய்தவருமான பண்ருட்டி இராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டபிள்யூ ஆர்.வரதராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.





இவர்களுடன் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், உலகத் தமிழர் பேரவை தலைவர் இரா.ஜனார்த்தனம், ஜெகவீரபாண்டியன், சேக்தாவூத், விஜய டி.இராஜேந்தர், இயக்குநர் சீமான், கவிஞர் முத்துலிங்கம், படைப்பாளி பா.ஜெயப்பிரகாசம், ஓவியர் புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

சேப்பாக்கத்தில் சாலையின் இருமருங்கிலும் போடப்பட்டிருந்த இருக்கைகள் நிரம்பி நிற்கக்கூட இடமில்லாமல் மேலும் மேலும் கூட்டம் சேர்ந்ததால் சேப்பாக்கம் சாலையில் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

உண்ணாநிலை போராட்டத்தினை தொடக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.ராஜா ஆற்றிய உரை:

இது இலங்கையின் உள்விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. அங்குள்ள தமிழ் மக்கள் மீதான தாக்குதல் இந்தியாவையும் பாதிக்கக்கூடியதாகும். அங்கே தாக்கப்படும் தமிழர்கள் இங்கேதான் ஓடி வருகின்றனர்.

எனவே, இந்தியாவை பாதிக்கும் இந்த பிரச்சினையை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தையோ, குறிப்பிட்ட தலைவரையோ ஆதரித்து நடக்கும் போராட்டம் அல்ல. தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்டம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.





தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ராஜபக்ச அரசு கொடுங்கோல் அரசாக மாறி தமிழ் இனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

அண்மையில் இலங்கையின் வடக்குப் பகுதியில் மூன்று இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் இந்திய தூதரகம் குண்டுவைத்து தாக்கப்பட்ட போது இது ஒரு தேசிய துக்கம் என்று கூறிய மத்திய அரசு, இலங்கையில் இந்தியர்கள் கொல்லப்பட்டது பற்றி மெளனம் சாதித்துள்ளதே ஏன்?

சிறிலங்காவுக்கு இந்திய அரசு அறிவிக்கப்படாத இராணுவ உதவி செய்கிறதோ என்ற கடுமையான சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அதை இந்திய அரசு மறுக்க தயாரா? அவ்வாறு இராணுவ உதவி அளித்தால் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கின்றோம். சிறிலங்கா குறித்த இந்தியாவின் கொள்கை மாற வேண்டும். மறைமுக இராணுவ உதவி நிறுத்தப்பட வேண்டும்.

கச்சதீவு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்கள் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். மத்திய அரசை நாங்கள் வெறும் அணுசக்தி ஒப்பந்தத்திற்காக மட்டும் எதிர்க்கவில்லை. இலங்கை பிரச்சினைக்காகவும் எதிர்த்தோம் என்று திமுக தலைவருக்கு கூறிக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களின் உணர்வை வெளியிடும் இந்த போராட்டம் தொடர வேண்டும். அதற்காக தொடர்ந்து ஒன்றுபட்டு போராடுவோம் என்றார் அவர்.





உண்ணாநிலைப் போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆற்றிய விளக்கவுரை:

தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் அவர் கடைப்பிடித்த வழியிலேயே அண்டை நாடான இலங்கையில் அநியாயமான படுகொலைக்கு பலியாகி நிற்கக்கூடிய சகோதரர்களின் அழுகுரல் கேட்டு இதயம் துடித்த காரணத்தால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்.

நாங்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பதால் இந்திய அரசின் மூலமாகவே சிறிலங்கா அரசை வற்புறுத்தக் கேட்கின்றோம். கொலை செய்வதை நிறுத்துங்கள் என்றும், வானூர்திகள் மூலம் குண்டுகள் போட்டும், தரைப்படைகள் மூலம் கொன்று குவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பசியால் வாடும் எங்கள் தாய்மார்களுக்கு நீங்களாவது உண்வு கொடுக்க வேண்டும் இல்லயேல் நாங்களாவது உணவு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றூதான் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தினை தமிழகம் முழுக்க நடத்துகின்றோம்.

ஆறரை கோடி தமிழ் மக்களின் மனிதாபிமான கோரிக்கையாகத்தான் இதனை முன்வைத்துப் போராடுகின்றோம். இந்த உண்ணாநிலைப் போராட்டத்துக்கு பலர் அழைத்தோம் வந்திருக்கின்றனர். அழைக்காமலும் பலர் உணர்வால் உந்தப்பட்டு வந்திருக்கின்றனர்.

ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் எழுப்புகின்ற குரல் அரசியல் நோக்கம் கொண்டதல்ல. இந்த நெருக்கடியான நேரத்திலும் இது நெருங்கி வருகின்ற தேர்தலுக்கான கூட்டணி சேர்வதற்கான முயற்சி எனச் சிலர் எழுதுகின்றனர்.

இருபத்தி நான்கு மணிநேரமும் தேர்தல் - தொகுதி - வெற்றி அதற்குப் பிறகு பதவி என்று எப்போதும் இந்தக் கனவிலேயே மிதப்பவர்களுக்கு இரக்கமுள்ள இதயத்தோடு மனிதர்கள் இருக்கின்றனர் என்று சிந்திப்பது கொஞ்சம் கடினம்தான்.

இது தேர்தல் கூட்டணிக்கான கூட்டம் அல்ல. அங்கே இலங்கையில் ஈழத்தமிழர்கள் நமது சகோதரர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் நாம் இங்கே தேர்தலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போமேயானால் நாங்கள் எங்களை தமிழர்கள் என்று அழைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்கள்.

சொந்த சகோதரங்கள் சாதல் கண்டு நாம் கோட்டையை நினைத்து கனவு கண்டு கொண்டிருக்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த போது அமைதியாக இருந்தீர்களே என்று ஒரு முதிர்ந்த அரசியல்வாதி இன்று காலை கேட்டிருக்கின்றார். அவருக்கு பத்திரிகைகள் படிக்கின்ற பழக்கம் இருக்கும் என நினக்கின்றேன்.

கட்சி தொடங்குவதற்கு முன்பே முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுகின்றவர்கள் பத்திரிகைகள வாசித்தல் நல்லது. கடந்த நான்காண்டுகளாக சிறிலங்காவுக்கு அரசுக்கு இந்தியா எந்தவிதமான உதவியும் செய்யக் கூடாது என்று எங்கள் டி.ராஜா மாநிலங்களவயில் குரல் கொடுத்தார்.

இந்திய அளவில் ஹைதராபாத் மாநாட்டில் நாங்கள் குரல் கொடுத்தோம். அந்த மாநாட்டின் தீர்மானத்தை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று பெரியவர் நெடுமாறன் வலியுறுத்தினார். அரசியல் என்பது எங்களுக்கோ ஜயா நெடுமாறன் அவர்களுக்கோ தொழில் அல்ல. எங்களின் தீர்மானத்தை படிக்காதவர்கள்தான் இன்று எங்களை கேள்வி கேட்கின்றனர். தமிழகத்தைப் பிடித்த சாபக்கேடு இதெல்லாமல் வேறென்ன?

தமிழக மீனவர்கள் 420 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவ்ர்கள் குடும்பத்துக்கு நிதி கொடுப்பதோடு விடயம் முடிந்து விட்டது. சுட்டவனை இன்னும் இந்தியா கண்டிக்கவில்லை.

பீகார், ஒரிஸ்ஸா போன்ற மாநில மீனவர்கள் எல்லை கடந்து அண்டை நாடுகளுக்குள் சென்று விட்டால் அந்த நாடுகள் சுட்டுக்கொல்வதில்லை. ஆனால் சுண்டைக்காய் சிறிலங்காக்காரன் சுடுகிறான். அதனை நீங்கள் கண்டிக்க மறுக்கின்றீர்கள் என்றால் மறமுகமாக நீங்கள் அதனை ஆதரிக்கின்றீர்கள் என்றுதானே பொருள்.

மியான்மர், பர்மா, பாகிஸ்தான் என எந்த அரசுகளும் இந்திய மீனவரை சுட்டுக்கொல்லவில்லை. பர்மா பாகிஸ்தான் செய்யாததை சிறிலங்கா செய்கின்றது. இதனை தடுத்து நிறுத்துங்கள் என்று ஒரு கண்டனக்குரல் டில்லியில் இருந்து வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை.

இந்திய மந்திரி சபையில் தமிழகத்தைச் சார்ந்த 10 பேர் மந்திரிகளாக இருக்கின்றனர். மத்திய மந்திரி சபை தமிழர்களால் ஆதிக்கம் செய்யப்படுகின்றது என்று வட இந்தியர்களால் குற்றம் சாட்டப்படும் அளவுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டில்லியில் செல்வாக்கு செலுத்துகின்றனர். எது எதற்கோ ஆதரவினை பின்வாங்குகிறோம் என்று மிரட்டுகின்றனர்.

ஆனால் எங்கள் சொந்த சகோதரர் கொல்லப்படுவதற்கு எதிராக வாயே திறக்க மறுக்கின்றனர். கொல்பவனுக்கு ஆயுதம் கொடுக்கின்ற இந்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் வாங்க வேண்டியதானே. வசூலித்து எம் சகோதரர்களுக்கு அனுப்பச் சென்ற நெடுமாறன் அவர்களயும் தடுத்து இழிவுபடுதினீர்களே?

ஆக, ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொடுக்கிற மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும் என்றார் அவர்.

உண்ணாநிலைப் போராட்டம் முடிவடையும் மாலை நேரம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.கே.சிவாஜிலி்ங்கம், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து உரையாற்றினர்.

இன்று நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம் என்பது அதிமுக, திமுக என்கிற இரண்டு சக்திகளையும் தவிர்த்த மூன்றாவது வலுவான சக்திகள் நடத்தியது மிக முக்கியமானது.

அரசியல்துறை, சமாதான செயலகங்களின் மீது வான்படையினர் தாக்குதல்: விடுதலைப் புலிகள்


கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த புலிகளின் அரசியல்துறை மற்றும் சமாதான செயலகங்களின்மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலி்ல் அந்தச் செயலகங்கள அழிந்துள்ளதாகவும் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்- 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு விமானங்கள் தாழப்பறந்து இந்தப் பிரதேசத்தில் 16 குண்டுகளை வீசியுள்ளன. வீசிய 16 குண்டுகளும் வெடித்துள்ளன.

இதில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம், சமாதான செயலகம் மற்றும் சர்வதேச செஞ்சி்லுவைச் சங்கம் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனங்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ளும் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகக் கட்டிடங்கள் அழிந்துள்ளன.

அத்துடன் இந்தப் பிரதேசத்தில் உள்ள 16 வீடுகளும் சேதமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைப் பன்னாட்டு இராஜதந்திரிகளும்- முக்கியஸ்தர்களும்- குறிப்பாக நோர்வே நாட்டின் முக்கிய தலைவர்கள் இராஜதந்திரிகள் ஆகியோர் இந்தச் சமாதான செயலகத்திலும் அரசியல்துறை செயலகத்திலுமே சந்தித்துப் பேச்சுக்கள் நடத்துவது வழக்கம்.

ஐநாவின் முக்கிய அதிகாரிகளும் அண்மையில் இந்தச் செயலகங்களிலேயே விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள 2 பொதுமக்களில் எவருமே அடையாளம் காணப்படவில்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 16 பேரும் கிளிநொச்சியின் பழைய வைத்தியசாலையில் இயங்கி வருகின்ற மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் - இறந்தவர்களின் உடல்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் விபரம்

தங்கவேல் ரகு (வயது 30)

சுப்பையா சிவலிங்கம் (வயது 48)

இராசலிங்கம் சந்திரா (வயது 40)

ஐயாத்துரை மகாலிங்கம் (வயது 55)

சங்கரப்பிள்ளை ஆனந்தசிவம் (வயது 60)

சின்னக்குட்டி வேலும்மயிலும் (வயது 70)

சந்திரராசா வினோத் (வயது 15)

சிவகுருராசா டெனிஸ் (வயது 22)

மகேந்திரராசா சந்திரகுமாரி (வயது 14)

கருணாநந்தநேசராசா சந்திரசேனன் (வயது 24)

செல்வநாயகம் கந்தசாமி (வயது 64)

தேவகுருசேனன் குருகுலதேவன் (வயது 34)

சிவசற்குணராசா சங்கரன் (வயது 27)

விமலநாதன் சிவகாந்திமதி (வயது 18)

தேவராசா கருணாகரன் (வயது 21)

கோகுலராசா சண்முகதர்சினி (வயது 18)

ஆகியோர் இதில் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர். இவர்களின் பெயர் விபரம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

இலங்கை வான்படையின் குண்டுத் தாக்குதலில் கிளிநொச்சி உயர்தொழில்நுட்ப நிறுவனம் அழிப்பு


கிளிநொச்சியில் இயங்கி வந்துள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது இலங்கை வான்படை நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:30 நிமிடமளவில் குண்டுவீசி அழித்துள்ளது.

கல்வி மேம்பாட்டுக்காக செயற்பட்டு வந்த கணிநுட்பக்கூட்டு நிறுவனம், கணனி கற்பித்தல் மற்றும் ஆசிரியர்களை உருவாக்குதல், கணனி கற்கையை ஊக்குவித்தல் போன்ற கல்விப்பணிகளை செய்து வருகின்றது. அத்துடன் மாணவர்களின் கணனி கல்வி வளர்ச்சிக்காக புலமைப்பரிசில் திட்டங்களையும் அது செயற்படுத்தி வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனத்தின் பணிமனைத் தொகுதி இலங்கை வான்படையினால் நேற்று பிற்பகல் குண்டுவீசி அழிக்கப்பட்டது.

திட்டமிட்டு தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடுப்பதற்காக இந்த கல்வி நிறுவனத்தின் மீதான அழிப்புத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியுள்ளது என்று கல்வியிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசின் திட்டமிட்ட கல்வி அழிப்புத் தாக்குதலாக இது அமைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தமிழ்க் கணனி நிபுணர்களின் துணையுடன் கணிநுட்பக்கூட்டு நிறுவனம் தனது பணியை கல்விச் சமூகத்துக்கு ஆற்றி வந்துள்ளது.

நேற்று ரம்ழான் நாளானதால் நிறுவனத்தின் பணியாளர்கள் பணிக்கு வராததால் உயிர் இழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

ராடார் வசதியுடன் நவீனமயப்படுத்தப்பட்டு நெடுந்தீவில் புதிய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


நெடுந்தீவு கடற்படை முகாம் மிக நீண்ட நாட்களின் பின் மிக நவீன வசதிகளுடன் மீளப் புனரமைக்கப்பட்டுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் இருந்த இடத்திலேயே புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய ராடார்கள் மற்றும் நவீன உபகரணங்களுடன் நெடுந்தீவு கடற்படை முகாம் நவீன மயப்படுத்தப்பட்டு கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் வட பிராந்தியத்தை சேர்ந்த கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எனினும் இந்தக் கடற்படை முகாமின் முன்னாள் பொறுப்பதிகாரி மாற்றப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டவர் அன்றைய தினம் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட முற்பகுதியில் நெடுந்தீவு கடற்படை முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டு அங்கிருந்த நவீன ராடார்களும் அவர்களால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் இந்தக் கடற்படை முகாம் வேறு கடற்படை முகாம்களிலிருந்து வந்த கடற்படையினரின் உதவியுடன் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகாமில் பொருத்தப்பட்டுள்ள ராடாரானது புலிகளின் பகுதிக்கும் இந்தியாவுக்குமிடையிலான படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்களைக் கண்டுபிடிக்கக் கூடியவையெனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி தினக்குரல்

யாழ். வலி மேற்கு கோவில்களில் படையினர் தேடுதல்: இரு குருக்கள் உட்பட 10 பேர் கைது


யாழ்ப்பாணம் வலி மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலின்போது 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இத்தேடுதலின்போது இரு ஆலயங்களின் குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர் கடவுளை வணங்குவதற்காக ஆலயத்திற்கு வந்தவர்கள் என பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை மாசியப்பிட்டிப் பகுதியில் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலை அடுத்தே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்றும் தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. உணவு லொறியில் வெடிபொருட்கள் இருந்ததென்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது - கோர்டன் வைஸ்


வன்னிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சரக்கு ஊர்திகளில் சீ4 வெடிபொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதென அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட சீ4 வெடிபொருட்கள் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சரக்கு ஊர்தியிலேயே கண்டு பிடிக்கப்பட்டதாகவும், சில ஊடகங்களில் குறித்த தகவல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

வன்னிக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ஊர்திகளைச் சோதனையிட்ட போது ஓர் சரக்கு ஊர்தியில் சீ4 வெடிபொருட்கள் மற்றும் மின்கலங்கள் காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சரக்கு ஊர்தி அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டதொன்றென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் கோர்டன் வைஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

போர் அல்ல அரசியல் தீர்வே நாட்டை மீட்கும்; யதார்த்த நிலை விரைவாக உணரப்பட வேண்டும்


ஐ.நா.வின் 63 ஆவது வருடாந்த கூட்டத் தொடரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்ற வாரம் உரையாற்றுகையில் தான் ஒரு சிங்கள இனத்தவர் என்பதை முதன்மைப்படுத்தியே "எனது தாய் மொழி சிங்களம்' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், சில எண்ணங்களைச் சகோதரத் தமிழ் மொழியில் பேசவிரும்புகிறேன் எனக் குறிப்பிட்டு ஒரு சில வார்த்தைகளைத் தமிழ் மொழியில் கூறி வைத்தார்.

அது மிகவும் பாராட்டுக்குரியதென குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவி இன்றைய அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிப்பவர்களாகிய வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகம, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஜனாதிபதி ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் வானளாவப் புகழ்ந்துள்ளனர். அது ஜனாதிபதியின் பற்றுறுதியைக் காட்டுவதாகவும் அரச மற்றும் அரசாங்கத் தலைவரால் தமிழ் மொழி மதிக்கப்பட்டதும் பாவிக்கப்பட்டதும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒரு பலமான சமிக்ஞையைக் கொடுத்துள்ளதெனவும் அவர்கள் புளாகாங்கிதம் அடைந்துள்ளனர்!

உண்மையை மூடி மறைக்கும் யுக்திகள்

தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரை ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றியதானது, சர்வதேச சமூகத்திற்கு ஏமாற்று வித்தை கற்பிக்கும் தந்திரோபாயமேயொழிய வேறல்ல எனலாம். இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டு எமது நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மையை மூடி மறைக்கும் செயலாகும்.

ஏனென்றால், 1956 இல் தனிச்சிங்களச் சட்டத்தினை இயற்றி தமிழ் மக்கள் பெரிதும் அந்நியப்படுத்தப்பட்டு 32 வருடங்களின் பின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இயற்றப்பட்டதாகிய 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மொழிக்கு அரச கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்த போதும், அது இன்று வரை பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் ஒற்றையாட்சி முறையில் மாற்றமெதுவும் கிடையாதென இறுக்கமான நிலைப்பாட்டினையே அரசாங்கம் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஐ.நா. சபையிலோ வேறு எந்த அரங்கிலோ தமிழ் மொழியிலும் உரையாற்றுவதில் முக்கியத்துவம் எதுவுமே இல்லை. தமிழ்த் தலைவர்கள் தனது அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் உள்ளனர் என்பதை ஒரு பேறாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். கடந்த 60 வருட காலத்தில் எல்லா அரசாங்கங்களிலும் தமிழ் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்துள்ளனர் என்பதை அவர் நிச்சயமாக மறந்திருக்க முடியாது.

அடுத்து, 1904 செப்டெம்பரில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் சிங்கள மக்கள் போல் நட்புணர்வும் உயர் குணவியல்புகளும் கொண்டுள்ள வேறு ஒரு இனத்தவர்களையும் தான் கண்ணுற்றதில்லை எனக் கூறியதாக ஜனாதிபதி தனது ஐ.நா. உரையில் மேற்கோள் காட்டியதோடு, அந்த வகையில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையே நிலவிய ஒற்றுமைக்கு அது ஒரு தெளிவான எடுத்துக் காட்டாயிருந்தது எனினும், இன்று ஒரு நாசகாரக் குழுவினர் அவை யாவற்றையும் தலை கீழாக மாற்றியுள்ளனர் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 20 ஆம் நூற்றாண்டு வரலாற்றில் எத்தனையோ பக்கங்களை அவர் தட்டிப் பார்க்கத் தவறி விட்டார் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. அதாவது குறிப்பாக 1910 களில் சிங்கள மக்கள் சார்பில் குரல் கொடுப்பதற்காக அன்றைய இக்கட்டான பயண நிலைமைகளையும் பொருட்படுத்தாது இராமநாதன் இங்கிலாந்து சென்று பிரித்தானிய ஆட்சியாளருடன் முகங்கொடுத்து கடுமையாக வாதாடியவர்.

அவர் அந்தப் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், சிங்களத் தலைவர்களால் வானளாவ பாராட்டப்பட்டவர். ஆனால், 1920 களின் பின்பு அதே இராமநாதன் அதே சிங்களத் தலைவர்களால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இராமநாதன் தனது இறுதி வாழ்நாட்களில் பெரிதும் விரக்திக்கு உள்ளாகியிருந்தவர்.

1930 கள் முதல் 1970 கள் வரை சிங்கள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினரால் தமிழ் மக்கள் பல்வேறு புறக்கணிப்புகள் பாரபட்சங்கள், அடக்கு முறைகள், தமிழர் விரோத வன்முறைத் தாக்குதல்கள், இனக்கலவரங்கள் மற்றும் உயிர் உடைமை அழிப்புகளுக்கு தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஜனாதிபதி குறிப்பிட்டிருந்த "நாசகாரக் குழுவினர்' தோற்றம் பெற்றனர் என்பதெல்லாம் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களால் வெகு வசதியாக மறக்கப்பட்டு விடுகின்றன என்பது மிகுந்த கவலைக்கு உரியதாகும்.

மங்கள சமரவீர சாடுகிறார்

2005 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷவின் வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைத்தவரும் முதலில் வெளிநாட்டமைச்சர் பதவி வகித்தவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ராஜபக்ஷ அரசாங்கத்தின் போக்குகள் கண்டு சலித்துப் போன நிலையில், பல்வேறு பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அரசாங்கத்திலிருந்தும் வெளியேறிவிட்டார். அவர் அண்மையில் ஆங்கில ஏடுகளுக்கு வழங்கியிருந்த செவ்விகளில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் வருமாறு:-

ஹிட்லர் யூதர்களைப் பகிரங்க எதிரிகளாக்கியது போலவே இந்த அரசாங்கம் தமிழ் மக்களைப் பகிரங்க எதிரிகளாக்கியுள்ளது. யுத்த மனோபாவத்தினை மேலோங்கச் செய்துள்ளது. இந்த அரசாங்கம் தனது தவறுகளை ஒதுக்கி வைத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத் துறை குட்டிச் சுவராக்கப்பட்டுள்ளது. ஊழல் உச்ச கட்டத்தில் உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு காணப்பட வேண்டும். அரசாங்க தரப்பினரின் உயர் மட்டத்தில் அரசியல் உறுதியோ வலிமையோ, அற்ற நிலையில் ஏன் எத்தனையோ சர்வகட்சி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

மேற்கண்டவாறு அவர் கூறியதோடு, சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை மீது சந்தேகங் கொண்டுள்ளீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், மிக நிச்சயமாக நான் சந்தேகங் கொண்டுள்ளேன். நான் அதில் பங்குபற்றி வந்தவன் என்ற வகையில் அக்குழு ஏன் அமைக்கப்பட்டது என்பதை நான் கூறுகின்றேன். சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்கான கைங்கரியமாகவே அது நிறுவப்பட்டது.உண்மையில் அதனை வைத்து சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்துமாறுதான் எனக்குப் பணிப்புரை செய்யப்பட்டது எனக் கூறினார்.

இந்த சர்வ கட்சிக் குழு பூச்சாண்டியானது. உதாரணமாக, மாநாட்டின் போது அல்லது இலங்கைத் தூதுக்குழுவொன்று அமெரிக்காவுக்கான விஜயம் மேற்கொள்ளும் போது தோன்றி மறைந்து விடுமென சமரவீர மேலும் கூறி வைத்தார்.

இராணுவத் தளபதியின் செவ்வி

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் கனடா, "நஷனல் போஸ்ட்' ஏட்டுக்கு வழங்கியிருந்த செவ்வியானது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இலங்கை சிங்கள மக்களுக்குச் சொந்தமானது என தான் கடுமையாக நம்புவதாகவும் சிறுபான்மை இனத்தவர்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்காமல் இங்கு வாழலாம் என்பதாகவும் அவர் அந்தச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தது இன்று யாரும் அறிந்த விடயமாகும்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரால் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, தளபதி சரத் பொன்சேகாவின் கூற்றானது குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் மத்தியில் பதற்ற உணர்வை ஏற்படுத்துவதுடன், இனங்கள் மத்தியில் மேலும் வேற்றுமைகளை உருவாக்கக் கூடியது என்றெல்லாம் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐ.தே.க. உயர் பீடத்தினர் இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், தலைமையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் இராணுவத் தளபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக அறியக்கிடக்கிறது.

பாதுகாப்பு படையினர் பயங்கரவாதத்தை வெற்றிகரமாகத் தோற்கடித்து வருவதை எல்லா இனத்துவ மக்களும் பெரிதும் மதித்து வரும் இந்த வேளையில் தளபதி இவ்வாறு கூறி வைத்தது ஆச்சரியமாயிருப்பதாக கபீர் ஹாசிம் கூறியதாகவும், கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக குறிப்பாக முஸ்லிம் மக்கள் இராணுவத் தளபதிக்கு அதிகளவு மதிப்பளித்துள்ளனர். முஸ்லிம்களும் சிங்களவர்களும் இரத்த உறவினர்கள். மற்றும் முஸ்லிம்கள் ஒரு போதும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைத்தது கிடையாது என்றெல்லாம் ஹாசிம் மேலும் குறிப்பிட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

நாடு சிங்களவர்கட்குச் சொந்தம் பழைய கதை

இலங்கை சிங்கள பௌத்த நாடு,சிங்களவர்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதுதான் அன்று வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத் திட்டங்களை முடுக்கிவிட்ட டி.எஸ். சேனநாயக்க முதல், இன்று ஒற்றையாட்சி முறைமையில் மாற்றம் கிடையாதெனக் கங்கணம் கட்டி நிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரையிலான நிலைப்பாடாகும். இதனைத் தான் இராணுவத் தளபதி நேரடியாகக் கூறி வைத்துள்ளார்.

இன்று ஏறத்தாழ 100% அரச நிறுவனங்கள் மற்றும் குறிப்பாக ஆயுதப் படையினர் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பதையிட்டு பெரிதும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதாவது, அது தனது வேலை அல்ல என்பதை அவர் எண்ணவில்லை என்ற அளவுக்கு இனவாத அரசியல் ஆயுதப் படைத் தலைமைகளையே ஆட்கொள்ளும் அளவுக்கு மோசமாக ஊடுருவியுள்ளதையே இது கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நாட்டு ஆளும் வர்க்கத்தினர் காலாதிகாலமாக சுயநல அரசியல் இலாபம் கருதி நாட்டு நலனைக் காற்றில் பறக்க விட்டுச் செயற்பட்டு வந்ததன் ஒட்டுமொத்த அறுவடையின் வெளிப்பாடகவே இதனை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

அன்று பொன்னம்பலம் இராமநாதன் கூறியது போலவே பரந்துபட்ட சிங்கள மக்கள் நல்ல குண இயல்புகளைக் கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் மக்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்கு அவர்கள் எதிரானவர்கள் என்று கூற முடியாது. ஆனால், ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தினர் வரித்துக் கொண்ட பெரும்பான்மை மேலாதிக்க நிலைப்பாடுதான் நாட்டின் நாசகார சக்தியாயுள்ளது. அதாவது, சிங்கள மக்களல்ல, சிங்கள பேரினவாத சக்திகளே நாட்டைப் படுகுழியில் தள்ளுவதற்கு அன்று முதல் செயற்பட்டு வந்துள்ளனர்.

அத்தகைய சக்திகள் தான் தமிழர் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினை பிரசவிப்பதற்கும் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர் என்ற வரலாற்று யதார்த்தத்தினை உணர்ந்து அனைத்து மக்களையும் சமாதானப்பாதையில் பயணிக்க வைப்பதற்கான அரசியல் தீர்வு தான் நாட்டை மீட்க வல்லதே ஒழிய நிச்சயமாக யுத்தம் அல்ல என்பது விரைந்து உணரப்பட வேண்டும்.

வி.திருநாவுக்கரசு

கிளிநொச்சியில் இலங்கை வான்படை குண்டுத் தாக்குதல்: 2 அப்பாவி பொதுமக்கள் பலி; 2 சிறார்கள் உட்பட 13 பேர் காயம்


கிளிநொச்சி நகர் கனகாம்பிக்கைக்குளம் வீதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

குண்டுச் சிதறல்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனைப் பகுதிகளிலும் வீழ்ந்துள்ளன.

கிளிநொச்சி நகரில் உள்ள கனகாம்பிகைக்குளம் வீதி ஏ-9 சாலை அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபீர் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.

இக்குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நான்கு வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 16 வீடுகள் சேதமாகியுள்ளன.

இதில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர்.
இவர்களின் உடலங்கள் சிதைந்துள்ளதால் அவை உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

இத்தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் விவரம்:

இராமையா விஜயதர்சினி (வயது 16)

பரந்தாமன் கௌரி (வயது 03)

செல்லையா யோகராணி (வயது 68)

செபமாலை இந்திராணி (வயது 28)

அருட்சோதி ஆரோக்கியம் (வயது 49)

காந்தரூபன் சிவாஜினி (வயது 28)

தர்மன் கோகுலவாசன் (வயது 04)

கந்தசாமி சத்தியஞானதேவி (வயது 57)

வர்ணகுலசிங்கம் இராஜேந்திரம் (வயது 45)

செல்லையா சுப்பிரமணியம் (வயது 53)

செல்வநாயகம் பெருமாள் (வயது 65)

விக்கினேஸ்வரன் கமலாதேவி (வயது 26)

வேலு லட்சுமிப்பிள்ளை (வயது 68)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.சிறிலங்கா வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலின் சிதறல்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனைப் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்ததில் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

Tamilwin.com

Tamilwin.com