தமிழக மீனவரை சுட்டது கடற்படை இல்லையாம், மூன்றாம் தரப்பாம்.. இலங்கை தூதரகம்


தமிழக மீனவர் ஒருவர் நேற்று முன்தினம் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலை இலங்கை மறுத்துள்ளது.

கச்சத்தீவுப் பகுதியில் இவ்வாறான சம்பவம் ஒன்றில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடவில்லை என சென்னையில் உள்ள இலங்கையின் உதவி உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை உடனடியாக இலங்கையின் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது இலங்கைக் கடற்படையினர் குறித்த சம்பவம் தம்மால் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ளதாகச் சென்னையின் இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சம்பவத்திற்கு மூன்றாம் தரப்பு ஒன்று காரணமாக இருக்கலாம் என இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது

சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் கண்டனம்


இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தை மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் கண்டித்துள்ளது.

கனடாவின் நெசனல் போஸ்ட் செய்தித்தாளின் ஸ்டுவர்ட் பெல்லுடனான செவ்வியின் போது சரத் பொன்சேகா தமது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது. சிங்களவர்கள், இந்தநாட்டில் 75 வீதம் என்ற அளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் கோரிக்கை விடுக்கமுடியாது என சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் இவ்வாறான கருத்துக்களை சரத் பொன்சேகா பல்வேறு பொது இடங்களிலும் தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ள மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் நாட்டின் இராணுவத் தளபதி என்ற வகையில் அவர் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இது இலங்கையின் ஜனநாயக வலுவையும், இலங்கையின் அரசியலமைப்பையும் மீறும் செயல் என்றும் மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் பணியாற்றுவதையே இராணுவம் கடமையாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர தனிப்பட்ட ரீதியில் செயற்படுவதற்கு அதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் கருத்து இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். 1961 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம், முதல் தடவையாக அரசியலமைப்பை மீறும் செயலில் ஈடுபட்டது. அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இராணுவம் கட்டுப்படுத்த முனைந்தது.

இதேவேளை இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ள இந்தக் கருத்தின் மூலம், பாகிஸ்தானின் நிலைமையை இலங்கையில் தோற்றுவிக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் கோரியுள்ளது.

இவரின் கருத்து தற்போதைய அரசாங்கத்தின் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி உரையாற்றியபோது அனைத்துத் தமிழர்களும் புலிகள் அல்ல என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தமையை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் உரிய நிர்வாக கட்டமைப்பைத் தோற்றுவிக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவின் இரட்டை வேடம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமன்: வினோநோகராதலிங்கம் எம்.பி


இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என இருந்த போதிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல இரட்டை வேடம் போடுகின்ற இந்தியாவை நம்பிப் பயன் இல்லை என த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

சர்வதேசத்தின் பக்கச்சார்ப்ற்ற தன்மை இலங்கைப் பிரச்சினை தொடர்பில் கடைப்பிடிக்கபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

யுத்தத்தால் இடம் பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்களின் நிலைமைகள் மற்றும் தேசிய, சர்வதேச நடவடிக்ககைள் எவ்வாறு அமைந்துள்ளன எனக் கேட்டதற்குப் பதிலளிக்கையிலேயே வினோ நோகராதலிங்கம எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:

தினமும் ஏதிலிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது தமிழ்ச் சமூகம் வாழவே வழியற்றவர்களாக உணவுக்கும் உறங்குவதற்கும் அல்லாடிக் கொண்டிருக்கினறது. இதில் சிறுவர்களினதும் குழந்தைகளினதும் நிலைகள் மிக மிகப் பரிதாபமானதாகும்.

யுத்தத்தின் நடுவில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலை குறித்து அலட்டிக் கொள்ளாத சிங்கள அரசு லொறிகளில் உணவு அனுப்புவதாகப் படம் பிடித்து சர்வதேசத்துக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. வன்னிக்கு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடையவில்லை. இராணுவத்தினரின் கெடுபிடிகளால் வன்னிக்குள் உணவு லொறி அனுமதிக்கப்படுவதில்லை

சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழுகின்ற வன்னிப் பிரதேசத்ததக்கு நூற்றுக்காணக்கான லொறிகளில் அத்தியாவசிப் பொருட்களை அனுப்பினாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், அரசு ஐந்தும் பத்தும் என உணவு லொறிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

அகதிகளை வைத்து ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கின்றது சிங்களப் பேரினவாத அரசு.

இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் வன்னி நிலைவரங்கள் குறித்து சர்வதேச பிரதிநிதிகள் பக்கச்சார்பு காட்ட வேண்டாம் என்று த.தே.கூட்டமைப்பினா கேட்டுக் கொள்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக யுத்த நிலைவரம் தொடர்பில் இங்கு வருகின்ற சர்வதேசப் பிரதிநிதிகள் அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையவே வந்து செல்கின்றனர். அத்துடன் அரசுக்கு சாதகமான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

சர்வதேசத்துக்கு உண்மை புரிய வேண்டுமானால் பக்கச்சார்பற்ற விதத்தில் சர்வதேசப் பிரதிநிதிகளின் வருகை அமைய வேண்டும். யுத்தப் பிரதேசங்களுக்குச் சென்று நிலவரங்களை நேரில் அறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுகின்றது. யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுக்கு செல்ல வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு அறிவிக்கின்ற இந்தியா, இலங்கை அரசுக்கு ஆயுத உதவியையும் ஆட்புல உதவியையும் அளித்து வருகின்றமை எமது தமிழினத்தையே ஏமாற்றுகின்ற செயலாகும்.

இனப்பிரச்சினை தொர்பில் இந்தியாவின் தலையீடு மிக மிக இன்றியமையாதது என்பதே த.தே.கூட்டடமைப்பின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் அண்மைக்கால நிலைப்பாடுகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் அமைந்திருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்களினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் இலங்கைத் தமிழர் மீதான உணர்வலைகள் மகத்தானவை. அதற்காக நாம் கடமைப்பட்டுள்ளோம். தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்காக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

ஆனால், கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அவருக்கு அதிகாரங்கள் இருந்தும் அதனைச் செய்யத் துணியவில்லை. கருணாநிதி இலங்கைத் தமிழர்கள் குறித்து சிந்திக்கப் போவதில்ல. தனது அதிகாரத்தையும் கட்சியின் செல்வாக்கையும் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் கருணாநிதியையோ அல்லது இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தியாவையோ நாம் நம்பிப் பயன் இல்லை. அவர்களை நம்பி ஏமாறுவதை விட எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வதே சிறந்தது.

பொலநறுவையில் சிவில் பாதுகாப்பு படைவீரர் சுட்டு இளைஞர் பலி


பொலநறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் சிவில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது ஒரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸாரது உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக கிராம மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல்களின் காரணமாக இரண்டு பொது மக்களும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர்.

அப்பாவிப் பொதுமக்கள் மீது சிவில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இருவர் சுட்டுக் கொலை


திருகோணமலையில் பிரபல மீன் வியாபாரியொருவரும், அவரது உதவியாளரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத நபர்களினால் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

திருகோணமலை கண்டி வீதி நான்காம் கட்டையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டபிள்யூ.ஜீ. பிரசன்ன புஸ்பகுமார (41) மற்றும் பிரின்ஸ் உதயகுமார (38) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இருக்கும் போது ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு


கொழும்பு புறக்கோட்டைப் பகுதி மல்வத்தைச் சந்தியில் இன்று பி.ப. 12.30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மல்வத்த வீதியில் உள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் வண்டியொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெறுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்தாகவும், ஆறு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த பிரதேசத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் புறக்கோட்டையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழருக்காக குரல் கொடுக்க தனி ஈழம் தோன்ற வேண்டும் -மலேசியாவில் தொல் திருமாவளவன்



ஈழ நாட்டில் வன்னி கிளிநாச்சி மண்டலத்தில் ஏறக்குறைய
3 இலட்சம் தமிழர்கள் வாழ்க்கை அடிப்படைத் தேவைகளான குடிநீர் இணவு இருப்பிடம் சுகாதார வசதி
கல்வி ஏதுமின்றி அல்லல்படுகின்ற அவல நிலையில் தமிழ் மக்கள் தலையில் குண்டு மழை பொழிகின்ற சிங்களவரின் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரும் இருக்கின்றனர்.

போரினால் மடிகின்றவர்கள் ஒருபக்கம் இருக்க பசிப் பிணியால் மாண்டு
போகின்ற தமிழர்களின் எண்ணிக்கை இன்னொரு பக்கம் அதிகரிக்கின்றது.
இந்த நிலையில் தமிழனுக்காக குரல் கொடுக்க வேண்டிய தரப்பிலிருந்தே
வஞ்சக காய் நகர்த்தப்படுகின்றது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு
தமிழனுக்கென்றுதனி அதிகாரம் கொண்ட நாடு தோன்ற வேண்டும்
என்று நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியததமிழர்
தேசிய முன்னேற்றக் கழக "தமிழர் கலைவிழா"வில் சிறப்புரையாற்றிய
தமிழக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்
தொல்.திருமாவளவன் கூறினார்.

இன்று உலகம் முழுக்க தமிழன் அறியப்படுகிறான் என்றால் அதற்கு
ஈழத்தமிழர்தம் சுதந்திரப் போர் தான் காரணம். பழந்தமிழர் வீரத்தை
இன்று நிறுவுகின்ற ஈழ நாட்டு மறவர்கள் படைக்கின்ற தோற்றுவிக்கின்ற
மாண்பில் துப்பாக்கி பிடிக்கின்றஆற்றல் இல்லா விடினும் நானும் அதில்
பங்கெடுக்கின்றேன்.

பூச்சொங், 12 வது மைல், ராக்கான் மூடா அரங்கில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில்கூட்டரசுப்பிரதேச துணையமைச்சர் டத்தோ மு.சரவணன்,
பிபிபி கட்சியின் குணா, சிங்கைத்தமிழ்மறையான் இணையர் மற்றும்
பல பெருமக்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் உள்நாட்டு அரசியல்கட்சி
- பொது இயக்கங்கள் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து தமிழ்
உணர்வோடு ஏராளமானோர் கலந்து கொண்டது எழுச்சியுடன்
காணப்பட்டது.

விடுதலைப் புலிகளை பூரணமாக வீழ்த்துவதென்பது பகல் கனவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பூரணமாக வீழ்த்துவதென்பது அரசாங்கத்தின் பகல் கனவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
யுத்த தொடர்பான நீண்ட அனுவம் கொண்ட விடுதலைப் புலிகள் தங்களது யுத்த அணுகுமுறைகளை மாற்றியமைத்து போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என ஆங்கில ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். உலகின் முன்னணி இராணுவங்களின் ஒன்றான இந்தியப் படையினருக்கு விடுதலைப் புலிகள் பெரும் சவாலாக திகழந்தார்கள் என்பதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு பயங்கரவாத முலாம் பூசப்படுவது வேதனைக்குரியதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆசிய பிராந்திய நாடுகளில் இடம்பெறும் அரசியல் போராட்டங்கள் குறித்து மேற்குலகம் எப்போதும் ஓர வஞ்சனையுடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பேரவலம் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைவதன் மூலம் அவர்களைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் அரங்;கேற்றப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிப் பிரதேசத்தில் சொல்லொன்னா துயரங்களை எதிர்நோக்கி வரும் மக்களின் மனிதாபிமான தேவைகளைவிட நிலப்பரப்புக்களை கைப்பற்றுவதில் அரசாங்கம் அதிக சிரத்தை காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்ன விலைகொடுத்தேனும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டெடுப்பதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலன் கருதி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை பேசைக்கு திரும்புவது மிகவும் இன்றியமையாததென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கை இராணுவப்படையின் தளபதி சரத் பொன்சேகா பேரினவாத கொள்கைகளை கடைபிடித்து வருவதாகவும், தொழில்சார் நிலையைத் தாண்டி இனாவத கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட்டு வருவதகாவும் என். ஸ்ரீகாந்தா குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

யால பகுதியில் படையினர் விடுதலைப்புலிகள் தாக்குதல்

அம்பாந்தோட்டை யாலப் பகுதியின் மூன்றாவது வலயப் பகுதியில் சிறிலங்காப்படையினரை இலக்குவைத்து விடுதலைப்புலிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இதில் சிறிலங்காப்படையினர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.


காயமடைந்த படையினர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலையடுத்து சிறிலங்காப்படையினர் அந்தப் பகுதியில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

வன்னேரிக்கு மேற்கே சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினருக்கு பாரிய இழப்பு




வன்னேரிக்கு மேற்கே முன்னரண் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காப்படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை நடத்தினர்
இதில் படையினர் பழைய நிலைகளுக்கு பின்தள்ளப்பட்டதுடன், படையினருக்கு இழப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

வத்திக்கான் பிரதிநிதியின் கருத்துக்களை தவறாகப் பிரசுரித்தமைக்கு அரசு மன்னிப்புக் கோர வேண்டும் - ஜயலத் ஜயவர்த்தன

வத்திக்கானின் பிரதிநிதியாக இலங்கை வந்திருந்த கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே தெரிவித்த கருத்துக் குறித்து அரச ஊடகம் தவறான தகவலை உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டுள்ளது. எனவே தவறான செய்தியை வெளியிட்டமைக்கு வத்திக்கான் அரசிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் ஜயலத் ஜய வர்த்தன கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாப்பரசரின் மக்கள் யாத்திரை அமையத்தின் தலைவர் அதி.வண. கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை கடந்த 16ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கர்தினால் சந்தித்து உரையாடியபோது மடுமாதா தேவாலயம் தொடர்பான அவர் தெரிவித்த கருத்துகள் அரச இணையத்தளத்தில் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி கீழ்வருமாறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மடுமாதா தேவஸ்தானத்தை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த செயற்பாடு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைதாங்கும் அரசிற்கு அனைத்து கத்தோலிக்க மக்களதும் நன்றி உரித்தாக வேண்டும் என வத்திக்கான் கர்தினால் பிரான்ஸிஸ் அரின்சே செப்ரெம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார்.
ஆயினும் செப்ரெம்பர் 20ஆம் திகதி இலங்கை வத்திக்கான் தூதுவராலயத்தின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
கௌரவ ஜனாதிபதியுடனான நட்புறவுடனான சந்திப்பின்போது மடுமாதா தேவஸ்தானம் தொடர்பாகவோ, வேறு எந்தவித அரசியல் தொடர்பான கருத்துக்களோ அதி.வண.கர்தினால் அவர்களால் வெளியிடப்படவில்லை.
இதற்கிணங்க அரச ஊடகத்தின் வாயிலாக இவ்வாறு உரோம் வத்திக்கானின் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்த கௌரவத்திற்குரிய சமயத் தலைவர் பெரும் தர்மசங்கடத்திற்குள் உட்படுத்தப்பட்டுள்ளார். உண்மையில் இது பெரும் கவலைக்குரிய விடய மாகும்.
தற்போதாவது அரச ஊடகம் உண்மையை எடுத்துக்கூறி தம்மால் வெளியிடப்பட்ட செய்தியை சரிப்படுத்தல் அவசியம். அவ்வாறே தவறான செய்தியை வெளியிட்டதற்காக வத்திக்கான் அரசிடம் மன்னிப்புக் கோருதலும் அவசியம் என்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு மக்கள் வருவார்களா?


வன்னியில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் மோதல்கள் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிவரும் நிலையில்,

எதிர்பார்த்தளவுக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர், பாராளுமன்ற உறுப்பினர் பேசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை தங்கவைத்துப் பராமரிக்கக்கூடிய வசதிகள் வவுனியாவில் செய்யப்பட்டுள்ளபோதிலும், மிகக் குறைந்தளவு தொகையினரே இதுவரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவுக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பேசில் ராஜபக்ச, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் செயலாளர் ஆகியோர், ஐ.நா. இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதிநிதி மொஹமட் சலாஹீன் ஆகியோரின் உதவியுடன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.

எனினும், எதிர்பார்த்தளவுக்கு மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று கூறும் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஏற்கனவே ஆறு இடைத்தங்கல் முகாம்கள் இதற்கென அமைக்கப்பட்டுள்ளபோதும், இதுவரையில் எவரும் வவுனியாவுக்கு வரவில்லை என்று தெரிவிக்கிறார்.

மோதல்கள் கிளிநொச்சியை அண்மித்துவரும் நிலையில், மக்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடு பிரதேசங்களுக்கு அதிகளவில் இடம்பெயர்ந்திருப்பதாக வன்னித் தகவல்கள் கூறுகின்றன.

எப்படியும் வருவார்கள் - பசில் ராஜபக்ஸ

எனினும், இவர்கள் படிப்படியாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச கூறுகிறார்.

“கிழக்கு மாகாணத்தில் எமது அனுபவத்தின்படி, மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முதலில் சம்பூருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஈச்சிலம்பற்றுக்கும், வாகரைக்கும் சென்றனர். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார்கள். இதேபோல், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து இடம்பெயரும் மக்கள் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு படிப்படியாக வந்து சேர்வார்கள். இதற்குச் சிறிது காலம் பிடிக்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.

மார்க்கம் என்ன?

கடைசியாக வெளியாகியிருக்கும் களநிலவரங்களின்படி, இலங்கை இராணுவத்தின் 57வது படைப்பிரிவு கொக்காவில் ரயில் நிலையப் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இராணுவத்தினர் தற்போது ஏ-9 வீதியிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் தரித்திருப்பதாகவும் படைத்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

கிளிநொச்சியை நோக்கிய தாக்குதல்கள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்திருக்கும் நிலையில், படையினரின் அடுத்த கட்ட நகர்வுகள் ஏ-9 வீதியை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிடும் என்றே எதிர்பார்க்கலாம். இந்த நிலையில், கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரும் மக்கள் வவுனியாவை வந்தடைவதற்கான பிரதான மார்க்கமான ஏ-9 வீதி முற்றாகத் தடைப்பட்டுவிடும்.

அதன் பின்னர் மக்கள் வவுனியாவுக்கு வருவதானால், பரந்தன் வீதியூடாக புதுக்குடியிருப்புக்குச் சென்று அங்கிருந்து ஒட்டுசுட்டான் ஊடாக மாங்குளத்தை அடைந்து பின்னர் ஏ-9 வீதியூடாக, புளியங்குளம் மார்க்கமாக ஓமந்தைக்கு வரவேண்டும்.

வன்னியில் தற்போதுள்ள சூழ்நிலையில் இவ்வளவு தூரத்தைக் கடந்து பயணித்து மக்கள் வவுனியாவை வந்தடைவது மிகவும் சிரமமானது என்று உதவிப் பணியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கான சீரான போக்குவரத்து மார்க்கங்களும் கிடையாது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வவுனியாவில் படைக்குவிப்பு: மக்கள் அச்சம்

இதேவேளை, கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வவுனியா நகரில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் மிக அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றபோதிலும், இது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அங்குள்ள அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் கூறுகின்றனர். தமது நடமாட்டம் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையிட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வவுனியா முற்றிலும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வருவார்களா என்பது சந்தேகமே என்று தம்மை வெளிக்காட்ட விரும்பாத உதவிப் பணியாளர்கள் சிலர் கூறுவதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு நகர அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஒரு தடுப்பு முகாமுக்கு வருவதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுவதாக அந்தப் பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை வவுனியாவுக்கு வருமாறு அரசாங்கம் விடுத்த செய்தி அந்தப் பகுதி மக்களைச் சென்றடைந்ததா என்பது சந்தேகமே என்று தெரிவித்துள்ள உதவிப் பணியாளர்கள், அவ்வாறு மக்கள் வருவதாக இருந்தால், அவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிக்கு உணவு அனுப்ப ஏற்பாடு; விநியோகம் முடிவும்வரை ஐ.நா. அதிகாரிகள் அங்கு தங்கியிருப்பர் - நீல் பூனே


வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்கான உணவு லொறிகள் ஓரிரு தினங்களில் அங்கு செல்லவிருப்பதாக ஐ.நா. இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தெரிவித்தார்.

உணவு விநியோகம் முடியும் வரையில் ஐ.நா. அதிகாரிகள் அங்கு தங்கியிருப்பர் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய, வன்னியிலிருந்து ஐ.நா. அமைப்புக்கள் உட்பட அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும் வெளியேறிய பின்னர் முதற்தடவையாக இந்த உணவு விநியோகம் இடம்பெறுவதாகத் தெரிவித்த அவர், ஐ.நா. கொடிகளுடன் உலக உணவுத் திட்டத்தின் வாகன அணி வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளுக்குச் செல்லும் என்று கூறினார்.

மக்களுக்கு உரிய முறையில் உணவு நேரடியாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதே எமது பிரதான இலக்கு என்று தெரிவிக்கும் பூனே, முதலாவது முயற்சி வெற்றிபெற்றாலே அதே வழியில் தமது முயற்சிகளைத் தொடர முடியும் என்றும் கூறினார்.

உணவுப் பொருள்கள் அங்கு களஞ்சியப்படுத்தப்படமாட்டாது. அவை நேரடியாக மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் இடங்களுக்கே எடுத்துச்செல்லப்பட்டு விநியோகிக்கப்படும். என்று மேலும் தெரிவித்த அவர், ஐ.நா. அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழேயே உணவு விநியோகம் இடம்பெறும் எனவும், விநியோகம் முடியும் வரையில் அவர்கள் வன்னியில் தங்கியிருப்பார்கள் என்றும் கூறினார்.

ஏ-9 வீதியில் மோதல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதால், மாற்றுப் பாதைகளினூடாக கிளிநொச்சி கிழக்குப் பகுதிக்கு உணவுப் பொருள்களை எடுத்துச்செல்லத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

திருமலையில் துரிதமாக நிறைவேறும் அரசின் சிங்கள மயமாக்கல் திட்டங்கள்--சிவநடேசன்

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைவடைந்து வரும் நிலையில் அச்சமடைந்து பீதியில் உள்ளார்கள்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அங்குள்ள மூவின மக்களும் ஜனநாயகமாக வாழ்கின்றார்கள் என கொக்கரிக்கும் அரசாங்கத்தின் பரப்புரைக்கு நேர்மாறான நிகழ்வுகளே இடம்பெற்றுவருகின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடூரமான செயற்பாடுகளை படையினர் இதுவரையில் கைவிடவில்லை. கிழக்கில் விடுதலை புலிகள் இருந்த காலப்பகுதியில் மக்கள் இவ்வாறான துப்பங்களை அனுபவிக்கவில்லை.

ஆனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு கிழக்கு வந்தபின்னர் இராணுவத்தினாலும் துணைக் குழுக்களினாலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.

1985,86 காலப்பகுதியில் இருந்து துணை இராணுவக்குழுக்கள் இருந்தன. இன்று தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கடத்தல்கள், கொலை, கொள்ளைகள், கப்பம் கோரல் போன்ற வன்முறைகளும், அநீதிகளும் குறிப்பிடத்தக்களவு இடம்பெற்றன எனக் கூறலாம். எனினும் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவத்தின் பகுதிகளுக்கு வரும் மக்களை புலி என்ற பார்வை இருந்தது. அன்றைய காலப்பகுதியில் மாற்று இனமான இனவெறி பிடித்த இராணுவத்தினரே பெரும்பாலான அட்டூழியங்களை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழ் இன அழிப்புக்கு தமிழர்களே துணைபோகின்றனர். . கிழக்கு மக்களை வாழவைப்போம், கிழக்கு மண்ணை மீட்போம் என்றெல்லாம் கூக்குரல் எழுப்பும் தரப்பினருக்கு ஒழுங்கான அரசியல் கொள்கை இல்லை. அவர்களிடையே ஒன்றுமையில்லை, தமிழ் இன அழிப்புக்கு துணை போகும் இவர்கள் மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும். பொது மக்கள் இன்று பல்வேறு வழிகளிலும், பல்வேறு விதமான முறைகளிலும் வன்முறைகளை எதிர் நோக்குகின்றனர்.

இதனால் தமிழர்களின் கல்வி, பொருளாதாரம் மிகவும் பின்தள்ளப்படுகின்றது, இருக்கின்ற வளமும் இராணுவத்தினால் அழிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய உள்ளுராட்சி மற்றும் கிழக்கு மாகாண ஆட்சிகளை கைப்பற்றி மக்களின் குறைகளை தீர்ப்போம் என்பது வெறு வாய்ப்பேச்சாக மட்டுமே இருக்கும்.

அரசாங்கம் இந்த குழுக்களை வைத்தது தமிழர்களை அழிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றார்களே தவிர தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை ஒரு போதும் நிறைவேற்றித் தரப்போவதில்லை. இவ்வாறு பாதிக்கப்படும் தமிழ் மக்களின் துன்ப துயரங்களை வெளியுலகுக்கு சென்றுவிடாமல் தடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவர்களின் மாவட்டங்களுக்கு செல்லவிடாது குழுக்களின் மூலம் அச்சுறுத்தி மிரட்டி வைத்துள்ளனர்.

ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் மாவட்டங்களில் இருந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளியுலகுக்கு வெளிக்காட்டிவிடுவார்கள் என்பதை உணர்ந்த அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் திட்டம் மிகவும் துல்லியமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அங்குள்ள அரச அலுவலகம், தனியார் கம்பனிகள், பெரிய வர்த்தக நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் சிங்களவர்கள் தான் உயர் பதவியில் இருக்க வேண்டும். இதனால் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியார் சுட்டுக் கொல்லப்பட்டார், வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அரச ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள், இவ்வாறு தமிழர்களை படுகொலை செய்து தமிழர்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் சிறந்த முறையில் காய்களை நகர்த்துகின்றது.

தற்போதைக்கு வணக்கஸ்தலங்களிலும் கைவைக்கத் தொடங்கியுள்ளனர். அவற்றில் ஒன்றுதான் திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தின் பிரதம குருக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம்.

இவ்வாறான படுகொலைகள் அனைத்தும் உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றுவருகின்றது. அப்படியென்றால் படைத்தரப்புக்கு, காவல் துறையினருக்கு தெரியாமல் இடம்பெற வாய்ப்பில்லை. 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என படைத்தரப்பினர் தெரிவித்தனர். இருந்தாலும் அவர்கள் புலனாய்வுப் பிரிவினர், மற்றும் பிஸ்டல் குழு உறுப்பினர்கள் சிலர் இருக்கலாம்.

ஆனால் அவர்களினால் ஆலய குருக்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கடந்த 18ஆம் திகதி ஆரையம்பதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட யோகநாத் சுரேஸ் வயது 25, கணேசமுதலி சுகந்தன் வயத 16 இரு இளைஞர்கள் கால்நடை விற்பனைக்காக காத்தான்குடி பகுதிக்கு சென்றவர்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக ஆரம்பத்தில் இவர்களை வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் ஆயுதக்குழுக்கள் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது முஸ்லிம்களினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் இந்த இரு இளைஞர்களுக்கும் என்ன நிகழ்ந்துள்ளது என்பது மர்மமாகவே உள்ளது. இரு இளைஞர்களும் ஆடு விற்பனைக்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்த பணத்திற்காகத்தான் இச்சம்வம் இடம்பெற்றதாகவும் மற்றொரு தகவல் தெரியவந்துள்ளது. விடுதலை புலிகள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்து தமிழர் கிராமங்களை சுற்றிவளைத்து தேடுதல்களை மேற்கொண்டு அப்பாவி தமிழர்களை கைது செய்து தடுத்து வைக்கும் படையினர் ஏன் முஸ்லிம் பகுதிகளில் உள்ள ஆயுதங்களையும் அதனுடன் தொடர்புடைய தரப்பினரையும் கைது செய்ய முடியவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அத்துடன் இனங்களிடையே நல்லூறவை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்க சபைகளை முதல் அமைச்சர் அண்மையில் உருவாக்கியிருந்தார். இரு இளைஞர்களும் கடத்தப்பட்டமை தொடர்பாக ஏன் இந்த அமைப்பு விரைந்து செயற்படவில்லை என்ற கேள்விக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.

கிழக்கு மாகாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்து அசம்பாவிதங்களும் அங்குள்ள பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தான் இடம்பெற்றுவருகின்றது. இந்தக் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட தரப்பி னர் மறுத்தால் கிழக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற பரப்புரையை கைவிட வேண்டும். அத்துடன் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.