விடுதலைப் புலிகளை பூரணமாக வீழ்த்துவதென்பது பகல் கனவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பூரணமாக வீழ்த்துவதென்பது அரசாங்கத்தின் பகல் கனவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
யுத்த தொடர்பான நீண்ட அனுவம் கொண்ட விடுதலைப் புலிகள் தங்களது யுத்த அணுகுமுறைகளை மாற்றியமைத்து போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என ஆங்கில ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். உலகின் முன்னணி இராணுவங்களின் ஒன்றான இந்தியப் படையினருக்கு விடுதலைப் புலிகள் பெரும் சவாலாக திகழந்தார்கள் என்பதனை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு பயங்கரவாத முலாம் பூசப்படுவது வேதனைக்குரியதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆசிய பிராந்திய நாடுகளில் இடம்பெறும் அரசியல் போராட்டங்கள் குறித்து மேற்குலகம் எப்போதும் ஓர வஞ்சனையுடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பேரவலம் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரல் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைவதன் மூலம் அவர்களைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் அரங்;கேற்றப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிப் பிரதேசத்தில் சொல்லொன்னா துயரங்களை எதிர்நோக்கி வரும் மக்களின் மனிதாபிமான தேவைகளைவிட நிலப்பரப்புக்களை கைப்பற்றுவதில் அரசாங்கம் அதிக சிரத்தை காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்ன விலைகொடுத்தேனும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டெடுப்பதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலன் கருதி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை பேசைக்கு திரும்புவது மிகவும் இன்றியமையாததென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கை இராணுவப்படையின் தளபதி சரத் பொன்சேகா பேரினவாத கொள்கைகளை கடைபிடித்து வருவதாகவும், தொழில்சார் நிலையைத் தாண்டி இனாவத கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயற்பட்டு வருவதகாவும் என். ஸ்ரீகாந்தா குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

No comments: