கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு மக்கள் வருவார்களா?


வன்னியில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் மோதல்கள் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிவரும் நிலையில்,

எதிர்பார்த்தளவுக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர், பாராளுமன்ற உறுப்பினர் பேசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை தங்கவைத்துப் பராமரிக்கக்கூடிய வசதிகள் வவுனியாவில் செய்யப்பட்டுள்ளபோதிலும், மிகக் குறைந்தளவு தொகையினரே இதுவரையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவுக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறும் பேசில் ராஜபக்ச, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் செயலாளர் ஆகியோர், ஐ.நா. இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதிநிதி மொஹமட் சலாஹீன் ஆகியோரின் உதவியுடன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.

எனினும், எதிர்பார்த்தளவுக்கு மக்கள் வவுனியாவுக்கு வரவில்லை என்று கூறும் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஏற்கனவே ஆறு இடைத்தங்கல் முகாம்கள் இதற்கென அமைக்கப்பட்டுள்ளபோதும், இதுவரையில் எவரும் வவுனியாவுக்கு வரவில்லை என்று தெரிவிக்கிறார்.

மோதல்கள் கிளிநொச்சியை அண்மித்துவரும் நிலையில், மக்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடு பிரதேசங்களுக்கு அதிகளவில் இடம்பெயர்ந்திருப்பதாக வன்னித் தகவல்கள் கூறுகின்றன.

எப்படியும் வருவார்கள் - பசில் ராஜபக்ஸ

எனினும், இவர்கள் படிப்படியாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச கூறுகிறார்.

“கிழக்கு மாகாணத்தில் எமது அனுபவத்தின்படி, மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முதலில் சம்பூருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து ஈச்சிலம்பற்றுக்கும், வாகரைக்கும் சென்றனர். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார்கள். இதேபோல், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து இடம்பெயரும் மக்கள் படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு படிப்படியாக வந்து சேர்வார்கள். இதற்குச் சிறிது காலம் பிடிக்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.

மார்க்கம் என்ன?

கடைசியாக வெளியாகியிருக்கும் களநிலவரங்களின்படி, இலங்கை இராணுவத்தின் 57வது படைப்பிரிவு கொக்காவில் ரயில் நிலையப் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இராணுவத்தினர் தற்போது ஏ-9 வீதியிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் தரித்திருப்பதாகவும் படைத்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

கிளிநொச்சியை நோக்கிய தாக்குதல்கள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவித்திருக்கும் நிலையில், படையினரின் அடுத்த கட்ட நகர்வுகள் ஏ-9 வீதியை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிடும் என்றே எதிர்பார்க்கலாம். இந்த நிலையில், கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரும் மக்கள் வவுனியாவை வந்தடைவதற்கான பிரதான மார்க்கமான ஏ-9 வீதி முற்றாகத் தடைப்பட்டுவிடும்.

அதன் பின்னர் மக்கள் வவுனியாவுக்கு வருவதானால், பரந்தன் வீதியூடாக புதுக்குடியிருப்புக்குச் சென்று அங்கிருந்து ஒட்டுசுட்டான் ஊடாக மாங்குளத்தை அடைந்து பின்னர் ஏ-9 வீதியூடாக, புளியங்குளம் மார்க்கமாக ஓமந்தைக்கு வரவேண்டும்.

வன்னியில் தற்போதுள்ள சூழ்நிலையில் இவ்வளவு தூரத்தைக் கடந்து பயணித்து மக்கள் வவுனியாவை வந்தடைவது மிகவும் சிரமமானது என்று உதவிப் பணியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கான சீரான போக்குவரத்து மார்க்கங்களும் கிடையாது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வவுனியாவில் படைக்குவிப்பு: மக்கள் அச்சம்

இதேவேளை, கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வவுனியா நகரில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் மிக அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றபோதிலும், இது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அங்குள்ள அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் கூறுகின்றனர். தமது நடமாட்டம் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் தம்மிடம் முறையிட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வவுனியா முற்றிலும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்கள் வவுனியாவுக்கு வருவார்களா என்பது சந்தேகமே என்று தம்மை வெளிக்காட்ட விரும்பாத உதவிப் பணியாளர்கள் சிலர் கூறுவதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு நகர அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலும், ஒரு தடுப்பு முகாமுக்கு வருவதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுவதாக அந்தப் பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை வவுனியாவுக்கு வருமாறு அரசாங்கம் விடுத்த செய்தி அந்தப் பகுதி மக்களைச் சென்றடைந்ததா என்பது சந்தேகமே என்று தெரிவித்துள்ள உதவிப் பணியாளர்கள், அவ்வாறு மக்கள் வருவதாக இருந்தால், அவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: