கனடிய பொதுத்தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் இலங்கைத் தமிழர்களின் வாக்குகள்


எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது இலங்கைத் தமிழர்களின் வாக்குகள் ஆட்சியமைக்கும் கட்சிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த 400,000 த்திற்கும் மேற்பட்டோர் கனடாவில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு நிலவரத்தை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்கள் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கனடாவின் லிபரல் கட்சி இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை ஓரளவு நியாயமாக அணுகக் கூடிய கட்சி எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஆட்சியில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்ததுடன், நிதி திரட்டும் நடவடிக்கையை முடக்கியது.

இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கனடாவில் குடியேறிய இலங்கைத் தமிழர்களின் வாக்குகள் இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுத தளபாடங்களைத் தருவித்துள்ளார்கள் - சண்டேரைம்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுதங்களைத் தருவித்துள்ளனர் என்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

வவுனியா படைத் தலைமையகம் மீது 09.09.08 விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு அரசு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

வவுனியா வான்படைத் தளத்தின் வான்படை கட்டளை அதிகாரி குறூப் கப்டன் றொமேஷ் பெர்னாண்டோ இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலின் போது படைத்தளத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான ஆய்வுகளை இக்குழு மேற்கொள்ளவுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இந்திரா இரு பரிமாண கதுவீ (ராடர்) சேதமடைந்ததுடன் அதனை ஒத்த மேலும் பல முக்கிய இலக்குகளும் குறிவைக்கப்பட்டிருந்தன.

எனினும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அதனை வெளியிட முடியவில்லை.
இதனிடையே விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுத தளபாடங்களைத் தருவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

நான்காவது ஈழப்போர் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் தீவிர எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். அவர்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

விடுதலைப் புலிகளின் 80 விகிதமான பலத்தை முறியடித்து விட்டதாகப் படைத்தரப்பு தெரிவித்து வருகின்ற போதும் அண்மைய வாரங்களில் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இளைஞன் சுட்டுக்கொலை


யாழ் மாவட்ட செயலகப் பகுதிக்கு அருகாமையில் வாலிபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் குமாரராஜ் என்பவராக இருக்கக் கூடும் என யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தேசிய அடையாள அட்டையில் குறித்த தகவல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி பலியானவரின் சடலம் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தில் ஒத்திகை நடவடிக்கை


கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கடற்படையினர் மேற்கொண்ட பாரிய ஒத்திகையால் பெரும் பதற்றமேற்பட்டது. நேற்றுக் காலை 8 மணியளவில் ஆரம்பமான இந்த ஒத்திகையில் பெருமளவு கடற்படையினரும் கடற்படைக் கமாண்டோ படையினரும் ஈடுபட்டனர்.

துறைமுகத்தின் வெளிப்புறத்திலும் கடற்படையினர் நிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின்போது துறைமுகத்தினுள் பலத்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டன. இதனால் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமேற்பட்டது.

இவ்வேளையில் அடுத்தடுத்து நான்கு குண்டு வெடிப்புச் சத்தங்களும் கேட்கவே மக்கள் மேலும் அச்சமடைந்தனர். பலர் வீடுகளுக்கு வெளியே வந்து வேறிடங்களுக்குச் செல்லவும் முற்பட்டனர். இவ்வேளையில் துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பில் பீரங்கிப் படகுகளும் தாக்குதல் நடத்தின.

எனினும் துறைமுகப் பாதுகாப்பை முன்னிட்டு கடற்படையினர் மேற்கொண்ட ஒத்திகையே இதுவெனத் தெரிய வந்ததும் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

நிலைமை இவ்வாறிருக்கையில், வானில் உயரப் பறந்து வந்த ஹெலிகொப்டர்களிலிருந்து பரசூட்களில் பல படையினர் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் குதிக்கவே துறைமுகத்திற்குள் ஏதோ நடந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டது.

அதேவேளை இன்று திங்கட்கிழமையும் காலை 9.30 மணியளவில் ஹெலிகொப்டர்களிலிருந்து பரசூட்களில் படையினர் அப்பகுதிகளிலும் சுகததாச ஸ்ரேடியத்திலும் குதித்துப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கொழும்பில் ஆட்பதிவில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் உளவு நடவடிக்கை



கொழும்பில் கடந்த 5 வருடங்களாகத் தங்கியுள்ள வடக்குப் பகுதி தமிழர்கள் தொடர்பான பதிவுகள் சிறீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன.


இன்று காலை 8:00 மணிமுதல் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் பதியப்பட்டன.


சிறீலங்கா காவல்துறையினரது இந்த நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தமிழ் மக்கள் பதிவுகளை மேற்கொள்ள சென்ற காவல் நிலையங்களில், வட பகுதிகளைச் சேர்ந்த துணைப்படைக் குழு உறுப்பினர்களும், தமிழ் விரோத சக்திகளும் பொது உடையில் நின்று மக்கள் மத்தியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.


பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது விபரங்களைப் பதிவு செய்வதற்கு ஒரு நாள் அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டிருந்ததாக, அனைத்துலக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


அத்துடன், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் இன்றைய ஆட்பதிவைப் படம்பிடிக்கவும் சிறீலங்கா காவல்துறையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.

ராஜீவ் காந்தி படுகொலையில் கைதுசெய்யப் பட்டு மரண தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்.

ராஜீவ் காந்தி படுகொலையில் கைதுசெய்யப் பட்டு மரண தண்டனைக் கைதியாக வேலூர் தனிமைச் சிறையில் இருக்கும் பேரறி வாளன், சில கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக முதல்வருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அந்த கடித நகலை நமக்கும் அனுப்பியிருந்தார். அதை வாசகர்களின் பார்வைக்கு அப்படியே வைத்திருக்கிறோம். பேரறிவாளனின் மனநிலை மட்டுமின்றி, சிறை வாழ்க்கை பற்றிய சில கண்ணோட்டங்களும் நம்மை கவனிக்க வைக்கின்றன இதில்!

''முதல்வருக்கு வணக்கம்.

'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை' என்ற நிலையற்ற இவ்வுலகில் தன்னுடைய இருத் தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் மனிதனின் விண்ணப்பம். மீண்டும் மீண்டும் என்னுடைய பின்னணி குறித்துக் கூறுவது, தங்களுக்கு சலிப்பூட்டுவன. என்றாலும், தேவையின் பொருட்டுக் கூறுகிறேன், பொருத் தருள்க.

அய்யா, நான் பெரியாரின் கொள்கைவழிப் பெயரன். பகுத்தறிவு என் பாதை; அதுவே என்னு டைய இன்றைய நிலைக்கு முதல் காரணமும்கூட. அடுத்து... நான்

மொழி, இனப்பற்றாளன். தொப்பூழ் கொடி உறவாம் தமிழக மக்கள் படும் இன்னல் கண்டு, இதயம் நொந்தவன். உலகத் தமிழரைப் போல் என்னால் இயன்றதை அவர்களுக்கு இயல்பாகச் செய்தவன். என்னைக் கொலைக் களத்தில் நிறுத்த இந்த காரணங்கள் போதுமானதாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன்... கொலையாளன் அல்ல. இதனை என்னுடைய 'தூக்குக் கொட்ட டியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூல் வடிவிலான வாதுரை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

'தடா' சட்டம் என்ற கொடுங்கருவி குறித்துத் தாங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். அந்த ஆட்தூக்கிச் சட்டம், குற்றமற்ற பலரையும் விலங்கினைப் பூட்டி சிறைக் கொட்டடியில் தள்ளிய வரலாற்றினை உணர்ந்தவர் தாங்கள்! அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே அளவில் அச்சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கைவிரித்து வந்த கயவர்கள், பொய்விரித்துப் புலன்கள் மறைத்து, எம்மைக் கொலையாளியாக்கிய உண்மை உணராதவர் அல்ல தாங்கள்!

மற்றபடி, பிற 'தடா'வினருக்கும் எனக்குமுள்ள பெருத்த வேறு பாடெல்லாம், அவர்கள் மீது நல்வாய்ப்பாக முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக, அதனினும் சிறிய அளவிலான கொலைக் குற்றங்களில் தொடர்பு படுத்தப்பட்டார்கள். அடுத்து, எனக்குக் கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் இழைத்த பெரும்பிழைகள்.

அய்யா... கட்சி நம்பிக்கை துளியும் அற்றுப்போன மனிதனாக மெள்ள மெள்ள சாவை நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப் படுத்தப்பட்ட மனிதனாக இம்முறையீட்டு மனுவினை எழுதுகிறேன். ஏனெனில் இனத்தின்பால், மொழியின்பால் பற்றுகொண்ட ஓர் இளைஞன், தன்னுடைய கடுமையான உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால் தமிழர் தம் தலைமையேற்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' அதற்கான விடை பகிர்கிறது. அதன் நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள் கூறியவற்றைத் தங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்கு பொருத்தருள்க.

'இருபது ஆண்டு சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்து விடுகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட மனிதனாகத்தான் அவனை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை.

வாலிபத்தை கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால், வாழ்வின் சுகத்தை இனிமேல் அனுபவிக்க முடியாது என்ற பருவத்தில் சக்கை மனிதனாக அவனை சிறைச்சாலை வெளியே உமிழுகிறது. ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்!'

ஆம், அய்யா..! பதினெட்டு ஆண்டு சிறைவாசம்... அதிலும் தனிமைச் சிறைச்சாலை. இதனினும் கொடியதாக எவ்வித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம்... இவையெல்லாம் சிறிய துன்பங்களே எனக்கூறும் அளவிற்கு சாவின் நிழலில்தான் வாழ்வே நகர்த்தவேண்டும். அய்யா, கற்பனை செய்ய முடிகிறதா தங்களால்? கற்பனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டது எம்முடைய துன்பம். அதன் பின்னரும் இம்மனுவினை நல்ல மனநிலையோடு என்னால் எழுத முடிகிறதென்றால், நீதியின்பால் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், கொள்கை எனக்களித்த மன உறுதியுமே காரணங்கள்.

அய்யா, அன்றாடம் எத்தனையோ மனுக்கள் தங்கள் மேசையில் வந்து விழும். எதனையோ எதிர்பார்த்து ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு பல கோரிக்கைகளை முன்வைக்கும் அதுபோன்ற மற்றுமொரு மனுவல்ல இது.

உள்ளபடியே எவ்வித குற்றமும் புரியாமல், செய்யாத குற்றத்துக்காகப் பிழைபட்டுப் போன நீதியின் விளைவால் வாழ்வின் பதினெட்டு ஆண்டு கால வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன்.

'யாருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம்' என்றீர்கள். மகிழ்ந்து போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது 'ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களை கிழித்து விடாதீர்கள்' எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். 'மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்கு கூடாது' என்றீர்கள். வியந்திருக்கிறேன். அண்மையில், 'பாகிஸ்தான் சிறையில் வாடும் சரப்ஜித்சிங் தூக்கினைக் குறைக்க உலக நாடுகள் குரல் எழுப்பவேண்டும்' என வேண்டுகோள் விடுத்தீர்கள். தங்களுடைய உள்ளக்கிடக்கையை புரிந்து, பெருமை கொண்டேன்.

ஆனால் அய்யா... வேதனையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம்- பிறகேன் எம்முடைய தூக்கினை மாற்றத் தயங்குறீர்கள்? எம்முடைய வழக்கில், 'நால்வரையும் தூக்கிலிடுவதில் தனக்கோ தன்னுடைய புதல்வர்களுக்கோ விருப்பமில்லை' என திருமதி சோனியா அம்மையார் கூறிய பின்னரும் ஏன் என்னுடைய தூக்கினைக் குறைக்க முடியவில்லை? திருமதி நளினி அவர்களின் தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள், மகிழ்ச்சி. அவருக்குத் தூக்கினைக் குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால் அதைவிடக் கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதைத் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அய்யா, இனியும் நான் தூக்கினைக் குறைக்கும் வேண்டுதலோடு என்னுடைய முறையீட்டைத் தங்கள் முன் வைக்கத் தயாரில்லை. எனக்கு விடுதலை வேண்டும். ஒரு ஆயுள் சிறைவாசியைக் காட்டிலும் கூடுதலான துன்பத்தினைக் கண்டுவிட்டேன். எனவே எனக்கொரு முடிவு, என்னுடைய நிலைக்கோர் முற்றுப்புள்ளி விழவேண்டும்.

'காந்தியடிகள் நூற்றாண்டை ஒட்டி 12.11.68-க்கு முன்பு மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டதன் விளைவால் 111 கைதிகள் தூக்கிலிருந்து தப்பினர்' என்ற வரலாற்று நிகழ்வைத் தாங்கள் நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டினையட்டி மீண்டும் அவ்வரலாற்று நிகழ்வு புதுப்பிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

ஏனெனில், கடந்த 18 ஆண்டுகளாக 'தம்முடைய வாழ்வே என்னை மீட்பதுதான்' என சலிக்காது போராடிவரும் என்னுடைய பெற்றோரின் முதுமை தரும் அச்சம் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக என்னுடைய கடமையை செய்யத் தவறியிருந்தாலும், குறைந்தளவு, என்னுடைய நிலையால் அவர்கள் இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வுகாணவே ஆசை கொள்கிறேன்.

அய்யா, 18 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தூக்கு நிறைவேற்றப்பட்டிருக்குமானால், இன்று என்னுடைய பெற்றோர் தம்முடைய மற்ற பேரப்பிள்ளைகளோடு தன்னுடைய இனிமையைக் கண்டிருப்பர். குறைந்தளவு, தாங்கள் என்னுடைய கருணை மனுவினை தள்ளுபடி செய்த 25-04-2000 அன்று என்னைத் தூக்கிலிட்டிருந்தாலும் இன்று என்னைப் பற்றிய துன்பம் என்னுடைய பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் ஆட்கொண்டிருக்காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை; என்னுடைய பெற்றோருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை. இரண்டுமற்ற இந்த நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

திருமதி பிரியங்கா, திருமதி நளினி ஆகியோர் சந்திப்பு அதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்களெல்லாம் எம்முடைய துன்பத்தை எதிரொலிப்பதாக உள்ளது. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடிவு கிட்டவில்லையானால், விடுதலை பிறக்கவில்லையானால்... இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை.

வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ... தற்போதே இறுதிசெய்யப்பட்டாக வேண்டும். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டில் பெரியாரின் பேரப்பிள்ளையன்று நீதிபெற்றது என்ற வரலாறு எழுதப்படட்டும் அல்லது இனமொழி பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்.

வேதனை மிகுந்த இந்த நீண்ட நெடிய 18 ஆண்டு சிறைவாசம் முற்றுப் பெற துணை புரியுங்கள். ஓர் உண்மை மனிதனின் உயிர்ப் போராட்டத்துக்குக் கொள்கையாளனின் மனக்குமுறலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், முடிவுரை எழுதுங்கள்!

நன்றி: ஜூனியர் விகடன், Sept 24, 2008

ஓமந்தை பாதை எந்நேரமும் பூட்டப்பட்டு வன்னிக்கான உணவு வருவதும் தடைப்படலாம்


ஓமந்தையூடான வன்னிக்கான போக்குவரத்து, எந்த வேளையிலும் நிறுத்தப்படலாம். அதன் விளைவாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்துச் செல்லும் சேவை எந்த நேரத்திலும் தடைப்படும் அபாயம் உருவாகிவருகிறது.
ஏ9 வீதியில் கிளிநொச்சிக்கு அடுத்த பெரிய நகரமாக விளங்கும் மாங்குளத்தைக் கைப்பற்றும் இலக்குடன் படையினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை திசைதிருப்பி முடுக்கியுள்ளனர். இராணுவத்தின் 57 ஆவது படையணி இப்போது மாங்குளத்தை இலக்குவைத்தே தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
இராணுவத்தினர் மற்றும் ஒரு களத்தை புதிய முறிகண்டிப் பகுதியில் திறந்து தாக்குதல்களை நடத்துகின்றனர். சுமார் 4 கிலோமீற்றர் தொலைவிலேயே அவர்கள் இப்போது நிலை கொண்டிப்பதாகவும் இன்னும் ஒரு சில தினங்களில் அந்த வழியால்ஏ9 பாதையை அடைந்துவிடுவர் என்றும் பாதுகாப்பு ஆய்வுத் தரப்புகள் நேற்று ஊகம் தெரிவித்தன.
எதிர்வுகூறப்படுவது போன்று இராணுவத்தினர் ஏ9 வீதியை அடையும் பட்சத்தில், அதன் ஊடான போக்குவரத்துக்கள் யாவும் ஸ்தம்பித்துவிடும் எனப் பாதுகாப்புத்துறையுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்கள்மேலும் தெரிவித்தன.
ஓமந்தைப் பாதை போக்குவரத்துக்கு மூடப்படும் பட்சத்தில் வன்னிக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகன அணிகள் செல்ல முடியாத நிலை தோன்றும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இத்தகைய ஒரு நிலை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டால் வன்னிக்கு பொருள்களையும் மற்றும் அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்துச் செல்லும் பணிகள் தடைப்பட்டால் வன்னியில் உணவுப் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் ஏற்படும் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.

முதலைக் கண்ணீர் வடிக்கும் சிறிலங்கா



புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழரினதும் இதயங்களிலும் "தமிழ் ஈழம்'


தமிழ் ஈழம் ஏற்கனவே இருக்கின்றதென நான் நினைக்கிறேன். இது புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழரினதும் இதயங்களிலும் மனதிலும் உள்ளது. இதுவே யதார்த்தம் என்று புகழ்பெற்ற இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப் கூறியுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக தெற்காசிய மோதல்கள் யாவற்றையும் பற்றி எழுதியிருக்கும் அனிதா பிரதாப், கடந்த 14 ஆம் திகதி நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர்கள் விரிவான வரலாறு (கி.மு.300 கி.பி.2000) (Tamils in Srilanka- A comprehensive History cc 300 b.c- 2000 A.D) என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கலாநிதி குணசிங்கத்தின் உன்னதமான பணியைப் பாராட்டிய அனிதா பிரதாப், இலங்கைத் தமிழரின் வரலாற்று முக்கியத்துவத்தையும் அழுத்தியுரைத்திருக்கிறார்.

"தமிழரின் அடையாளத்துவம் வலிமையானது. தமிழ் தேசம் பலமானது. எவராலும் உங்களிடமிருந்து அதனை அகற்றிவிட முடியாது' என்று அனிதா பிரதாப் கூறியுள்ளார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; ஆனால், இந்த அடையாளத்துவத்துக்கு உங்களால் எதனை திருப்பிக் கொடுக்க முடியுமென்பதே கேள்வியாகும். ஒவ்வொருவருமே விடுதலைப்புலியாக இருந்து தனது வாழ்வை தியாகம் செய்ய முடியாது. பல நாடுகளில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களால் அதனை செய்யமுடியாது. அது அவசியமும் அல்ல. ஆனால், நோர்வேயின் பிரஜை அல்லது வேறொரு நாட்டின் பிரஜையாக இருக்கும் நீங்கள் தமிழ் அடையாளத்துவத்தை கொடுக்க முடியும். இது உங்கள் திறமையாகும். நீங்கள் எதனைச் செய்தாலும் எந்தத் துறையிலிருந்தாலும் எந்தக் கிளையில் இருந்தாலும் அந்தத்துறையில் சிறப்பாக இருத்தல் வேண்டும். அதுவே தொழில்சார் நிபுணத்துவமாகும். அதுவே புலமையை கொண்டுவரும். அது இந்த வடிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தங்களின் உன்னதமான பங்களிப்பாகும். உதாரணமாக யூதர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தத்தமது வித்தியாசமான துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்ந்தனர்.

கலை, விஞ்ஞானம், இசை, மருத்துவம் ஆகிய எந்தத்துறையிலும் அவர்களில் ஒருவர் முன்னணியான இடத்திலிருந்து புகழ்பெற்றுள்ளார்.

1983 இலிருந்து இலங்கையிலுள்ள தமிழருக்கு "துன்பியல்' ஆரம்பமாகிவிட்டது. பெருந்தொகையான தமிழர் இலங்கையை விட்டு வெளியேறினார்கள். ஏனெனில், இலங்கையில் தமிழராக இருப்பது பாதுகாப்பற்றதாகும். அவர்கள் தமது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இன்று கடைசித் தலைமுறை, எனது தலைமுறை காணாமற்போன தலைமுறையாகிவிட்டது. 20 வயதில் பெரும்பான்மையானோர் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டனர். இப்போது அவர்கள் 50, 60 வயதுடையவர்களாக இருக்கின்றனர். இது உயிர் வாழ்வுக்கான விடயமாகும். தமது உயிரை, குடும்பத்தைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருந்தனர்.

ஆனால், இன்று அவர்களின் பிள்ளைகள் வளர்ந்துவிட்டனர். அவர்கள் திறந்த, ஜனநாயக கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் நாடுகளில் வாழ்கின்றனர். நோர்வே, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் பலவற்றில் வாழ்கின்றனர்.

தமது பெற்றோர்கள், பாட்டன், பாட்டிகள் வாழ்ந்த வாழ்விலும் பார்க்க இப்பிள்ளைகள் அதிகளவு பாதுகாப்பான வாழ்வை முன்னெடுக்கின்றனர். நல்ல பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கின்றனர். அவர்களால் உன்னதமான விடயங்களை கொண்டுவர முடியும். தாங்கள் எத்தகைய ஆற்றல் உடையவர்களாக இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த இந்தத் தலைமுறையினருக்கு வேளை வந்துள்ளது. தமிழர்கள் எத்தகைய ஆற்றல் உடையவர்கள் என்பதை வரலாறு காட்டி நிற்கிறது என்றும் இதுவே யதார்த்தம் என்றும் அனிதா பிரதாப் கூறியுள்ளார்.