உலகத் தமிழர்களின் நன்றி: தமிழக முதல்வர் மகிழ்ச்சி- ஒரணியில் திரள அழைப்பு


நோர்வே தமிழ்ச் சங்கம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் ஆதரவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சென்னையில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஓரணியில் திரளக் கூடாதோ?

சரித்திரம் படைத்த தமிழர்
சாகிறார் என்ற செய்தி
செவியினில் எட்டியவுடன்
கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம்
கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க
கரமும் நீட்டியது.

நாடு கடந்து வாழ்கின்ற
நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்;
நம்பிக்கை துளிர்த்திடக் கடிதம் எழுதி
நன்றி தெரிவிக்கின்றார்! லண்டன்
நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர் குழுவின்
நற்றமிழர் சார்பில் நமது முயற்சியைப் பாராட்டி
வீரேந்திர சர்மா வெளியிடுகிறார், விடியல் தோன்றுமென்று!
வெந்த புண்ணுக்கு மருந்தாக வன்றோ
வெளிநாட்டில் வாழ்கின்ற இன உறவுத்
தமிழர்களின் இதயம் துடிக்கிறது!
அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் என்பார்
அடைந்திடும் மகிழ்ச்சிக்கு அளவு தான் ஏது?

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜா, எம்.பி.,
இதயம் மலர இனிய வாழ்த்துக் கூறி இன்புறுகின்றார் -
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் -
வாழ்த்துக்களை வாரியன்றோ இறைக்கின்றார்
வற்றாத அன்பைப் பொழிந்து இலங்கையில்
பொற்றாமரை போல் அமைதி பூத்திட தவமிருக்கின்றார் -
உலகத் தமிழ்ச் சாதி ஒன்று திரண்டு ஓர் உளம் கொண்டு
உதயமாகட்டும் ஈழத்தில் அமைதியென்று இறைஞ்சி நிற்கும்போது;
இங்குள்ள தமிழரிடை ஆயிரம் அரசியல் வேறுபாடு உண்டெனினும்
மூட்டை கட்டி அவற்றையெல்லாம் வைத்து விட்டு -
ஒன்றுபட்டு இலங்கைத் தமிழர் கேட்டை நீக்கிட
ஓரணியில் தான் திரளக் கூடாதோ?

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழக முதல்வரின் குரல் எமக்கு நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது: நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்


ஈழத் தமிழினத்திற்கெதிராக கொடிய இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்துவிட்டுவரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக தாங்கள் நெஞ்சுரத்துடன் குரல்கொடுத்துள்ளமை எமது இதயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்று நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்பக்களின் ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை (09.10.08) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத் தமிழினத்திற்கெதிராக கொடிய இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக தாங்கள் நெஞ்சுரத்துடன் குரல் கொடுத்துள்ளமை எமது இதயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

கட்சி அரசியல் வேறுபாடின்றி தமிழகத்தின் அனைத்து சக்திகளும் தமிழீழ மக்களின் உயிர் காப்பிற்கும் உரிமை மீட்பிற்கும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டுமென்ற தங்களின் அழைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல் முன்னெடுப்பாகும்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு" என்ற பாவேந்தரின் புரட்சி மொழியை உங்கள் செயலில் காண்கிறோம். தமிழீழ மக்களின் காயங்களுக்கான ஒத்தடமாகவும், நாளைய விடியலுக்கான நம்பிக்கை ஒளியாகவும் அதனைக் காண்கிறோம்.

தமிழினத்தின் வேரறுக்கும் நோக்குடன் செயற்பட்டு வரும் சிங்களப் பேரினவாதமானது, அறுபது ஆண்டு கால இன அழிப்பின் உச்சமாக இன்று எமது மக்களின் குரல் வளைகளை நெரித்து நிற்கின்றது. குண்டு மழைக்குள்ளும் குருதி மழைக்குள்ளும், ஊரூராய் அலைகின்ற அவலங்களுக்குள்ளும் தோய்ந்துள்ளது எமது மக்களின் இன்றைய வாழ்நிலை.

நோர்வே அரசின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியிலும் கூட அரசியல் தீர்வுக்கான அனைத்துக் கதவுகளையும் இறுக மூடியது சிறிலங்கா அரசாங்கம்.

ஆழிப்பேரலை பேரழிவுக்குப் பின்னரான மறுவாழ்வுப் பணிகளுக்கென இணக்கங்காணப்பட்ட கட்டமைப்பினையே உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் தகர்த்தெறிந்தது.

தமிழர்களுக்கான மனிதாபிமான உதவிகளையே கங்கணங் கட்டி நின்று தடுக்கும் சிறிலங்கா பெருந்தேசியவாத ஆட்சியானது, எங்ஙணம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை ஏற்றுக்கொள்ளும் என்பது வரலாற்றுப் பட்டறிவினூடாக தமிழீழ மக்களுக்கு இயல்பாக எழுகின்ற கேள்வியாகும்.

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியதோடு, இருதரப்பிற்கு மத்தியில் போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கென ஆறு ஆண்டுகளாக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருந்த ஸ்கன்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களையும் வெளியேற்றியது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செப்ரெம்பர் மாத ஆரம்பத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து ஐ.நா. உட்பட்ட அனைத்துலக அரச சார்பற்ற உதவி நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளில் அனைத்துலக சமூகத்தின் பிரசன்னத்தை இல்லாமற் செய்வதனூடு, தமிழின அழிப்பைத் தீவிரப்படுத்துவதே சிங்கள அரசின் உள்நோக்கமென்பது வெள்ளிடை மலை.

தமிழீழ மக்கள் உலகில் நாதியற்ற இனம் அல்ல. தாய்த் தமிழகத்தில் எமது தொப்புள் கொடி உறவுகள் ஆறு கோடி தமிழர்கள் உள்ளனர். எமக்காக உரத்துக் குரல் கொடுக்கும் உறுதியோடு இன்று உணர்வலைகளை எழுப்பியுள்ள தமிழக உறவுகளுக்கு எமது பெருநன்றியை பகிர்ந்து கொள்கின்றோம்.

இந்திய அரசியல் விரிதளத்தில் நிராகரிக்க முடியாத முக்கியத்துவமுடைய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது என்பதை நாம் அறிவோம்.

எனவே

- இந்திய அரசு, சிறிலங்கா பேரினவாத அரசிற்கு வழங்கி வரும் படைய உதவிகளை நிறுத்த வேண்டும்

- சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்

- தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பான இந்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் சாதகமான மாற்றம் நிகழ வேண்டும்

- தமிழ் மக்களின் நியாயமான வாழ்வுரிமைக் கோரிக்கைகளுக்கு இந்தியப் பேரரசு ஆதரவளிக்க வேண்டும்

இதற்கான அழுத்தங்களைத் தாங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டுமென உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

தமிழீழ மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக உங்கள் ஆட்சியில் தமிழகம் கண்டுள்ள இந்த எழுச்சி, அரசியல் தளத்தில் தொடர் தாக்கங்களை விளைவிக்கவல்ல செயற்பாடுகளுக்கு இட்டுச்செல்லப்பட வேண்டுமென்பதே வாழ்வுரிமைக்காகப் போராடும் ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் பேரவா என்பதையும் இங்கு பதிவுசெய்து கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பகுதிகளில் தமிழ் பிரஜைகள் கைது செய்யப்படுதல், காணாமல் போதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பு


வெள்ளவத்தைப் பிரதேசத்தில் தங்கியிருந்த மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை எனக்கூறி இராணுவ வீரர்களால் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னரே இவர்கள் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

சாவகச்சேரி சிவன் கோவிலடியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்துரை சிவதீபன் , 50 வயதான கதிர்காமத்தம்பி பிரகலாதன் மற்றும் 20 வயதுடைய பிரகலாதன் துவாஹரன் என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த 6 இராணுவ வீரர்களும் இவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும், மறுநாள் காலை காவலநிலையங்களில் வந்து சந்திக்கும்படி உறவினர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் குறித்த வீட்டில் கடந்த முதலாம் திகதி முதல் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் வெளிநாட்டுக்கு செல்வதற்காக இங்கு வந்து தங்கியிருந்தனர். இந்தநிலையில் இவர்கள் வசம் சகல பதிவுகளும் இருந்தன. எனினும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் காணாமல் போயுள்ளதாக முறையிடப்படவுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் குறித்து காவற்துறையினரிடம் முறைபாடு செய்ய முற்பட்டபோதும் அவர்கள் அந்த முறைப்பாட்டினை ஏற்க மறுத்து விட்டதாகவும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பி இராதாகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு கிரேண்ட்பாஸில் கடந்த 6 வருட காலங்களாகத் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பிரதீப்குமார், ஆறுமுகம் திலீபன் ராஜ் ஆகிய சகோதரர்களைக் கிராண்ட்பாஸ் காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலையகத்தின் கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் சக்திவேல் மற்றும் அக்கரப்பத்தனை அயோனாவைச் சேர்ந்த ராஜ் ஆகியோரும் சந்தேகத்தின் பேரில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவின் சாட்சியமில்லா இனவழிப்பு போரைக் கண்டித்து யேர்மனியில் இடம்பெற்ற மாபெரும் கண்டனப் பேரணி


சிறிலங்கா அரசானது வன்னிப்பகுதியிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், வன்னிப் பகுதியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், தாயகத்தில் இடம் பெயர்ந்து அல்லறும் மக்களுக்கான உதவிகளை தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டும்...

என கேட்டு, யேர்மனி வாழ் தமிழீழ மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று 10.10.2008 அன்று வெள்ளிக்கிழமை யேர்மனியின் தலைநகரான பேர்லின் மாநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணியளவில் பேர்லின் மாநகர மத்தியில் உள்ள அலெக்ஸ்ரண்ட பிளட்ஸ் எனும் இடத்தில் ஆரம்பித்த கண்டனப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தலைமை செயலகம் முன்பாக சென்றடைந்தது.

இப்பேரணியில் தாயகத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை விளங்கும் படங்கள், வாசகங்கள் தாங்கிய பதாதகைகள், தாயகத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக யேர்மனி வாழ் தமிழீழ மக்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள், மருந்துவகைகளை தாங்கிய மாதிரி பெட்டிகளையும் சுமந்து சென்றதுடன் தாயக மக்களின் இன்றைய நிலையை எடுத்துரைக்கும் யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் யேர்மனி வாழ் ஏனைய சமூகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

யேர்மனியில் பிற நகரங்களிலிருந்து இப்பேரணிக்காக 11 மணி நேரம், 8 மணி நேரம், 6 மணி நேரம் எனப் பேருந்துகளில் பயணித்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழீழ மக்கள் வருகை தந்து தமது உணர்வுகளை யேர்மனிய அரசுக்கு வெளிப்படுத்தினர்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து 180 பாகை கோணத்தில் இருப்பவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்ததும் குண்டுதாரி தனது உடலின் மார்பு பகுதி மாத்திரம் உள்ளடங்கும் வகையில் வெடிகுண்டு அங்கியை அணிந்திருப்பதே இதற்கான காரணம்.

ஆனால், அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். குண்டுதாரி, உடலின் இரண்டு பக்கங்களும் உள்ளடங்கும் வகையில் வெடி மருந்துகளை பொருத்தி இருந்தமையே இதற்கான காரணம் என இராணுவப் புலனாய்வுதுறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதலின் ஆரம்ப இலக்கு இராணுவத் தளபதி, உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளாக இருக்கலாம் என இராணுவ புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர்.

புலிகள் தற்கொலைத் தாக்குதலுக்கு இவ்வாறான தற்கொலை அங்கியைப் பயன்படுத்திய முதல் முறை இதுவெனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி அனுராதபுரத்தின் ஸ்ரீமாபோதி விகாரைக்குச் சென்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா உள்ளிட்ட அதிகாரிகளை இலக்கு வைத்து இந்த தற்கொலை தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம் எனவும் இராணுவ புலனாய்வுத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்புக் காரணமாக தற்கொலை குண்டுதாரிக்கு பூஜைகள் நடைபெறும் இடத்தை நெருங்க முடியாத நிலையில் தாக்குதல் இலக்கை மாற்றியிருக்கலாம் எனவும் புலனாய்வுதுறையினர் கூறியுள்ளனர்.

இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கை விரைவில்


இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படுமெனத் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் முன்வைத்த அறிக்கை குறித்து கடந்த செவ்வாய்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் ஆராயப்பட்டது. இவற்றைக் கொண்டு இலங்கை தொடர்பாக இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் கொள்கைகள் பணிப்பாளர் நாயகம் பிலிப்பே கமாரிஸ் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.

கடந்த ஜுலை மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தமது அறிக்கையை செப்டம்பர் மாதம் கையளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை தொடர்பாக செவ்வாய்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட இலங்கைக்கான தூதுவர், இலங்கை தொடர்பாக பக்கச்சார்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன், இலங்கை குறித்துப் பிழையான எண்ணத்தைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் அந்த அறிக்கை மூலம் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவற்றையும் கருத்தில்கொண்டு இலங்கை தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பிலிப்பே கமாரிஸ் மேலும் தெரிவித்தார்.

ஏற்றுமதி வரிச்சலுகைக் காலத்தை மேலும் நீடிப்பதற்கான முக்கிய நிபந்தனையாகக் கருதப்படும் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா விமானப்படையின் நவீன குண்டுவீச்சு விமானங்களை இயக்கும் இந்திய விமானிகள்

அண்மையில் உக்ரேன் நாட்டிலிருந்து கொள்வனவு செய்த சிறிலங்கா விமானப்படையின் நவீன குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப் படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலங்களாக சிறிலங்கா விமானப்படையானது தமிழப் பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களுக்கு, நவீன குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது.

இத்தாக்குதல்களில் தினந்தோறும் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதும், அவர்களின் வாழ்வாதாரங்கள் அனைத்துமே இல்லாதொழிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேன் நாட்டிலிருந்து சிறிலங்காவானது அண்மையில் கொள்வனவு செய்த ‘MIG27, MIG29′ போன்ற நவீன தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானங்களை செலுத்தக்கூடிய விமானிகள் சிறிலங்காவிடம் இல்லை என்பதும், குறுகிய காலத்தில் அவற்றை செலுத்துவதற்கு ஏற்ற பயிற்சிகள் பெறுவதென்பது சாத்தியப்படாத ஒன்றாகும்.

இந்நிலையில் சிறிலங்கா விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள இக்குண்டுவீச்சு விமானங்களைச் செலுத்துவதற்கு விமானிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்திய அரசு சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. இந்திய விமானப்படையில் ரஷ்ய தயாரிப்புகளான ‘MIG27, MIG29′ குண்டுவீச்சு விமானங்களே அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளது.

அண்மைக்காலங்களாக சிறிலங்கா அரசால் கொள்வனவு செய்யப்படும் ஆயுத தளபாடங்கள் அனைத்தும் இந்திய படைத்துறை வல்லுனர்களின் ஆலோசனைகளின் பேரில்தான் கொள்வனவு செய்யய்யடுகிறது.

அண்மையில் வவுனியாவில் தாக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் வன்னி கூட்டுப்படைத்தள தலைமயகத்தில் சில இந்தியப் படையினர் காயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலை கொண்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அ.தி.மு.க., ம.தி.மு.க. புறக்கணிப்பு

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஒக்டோபர் 14இல் கூட்டவிருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் அறிவித்துள்ளது.

அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு கண்துடைப்பு முயற்சி என்று விமர்சித்திருக்கும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா,

கருணாநிதிக்கு உண்மையில் ஈழத் தமிழர்கள் குறித்து அக்கறை இருந்தால் மத்திய கூட்டணி அரசாங்கத்திலிருந்து தி.மு.க. விலகவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக நேற்றையதினம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்த ஜெயலலிதா, தற்போது அந்த விவகாரம் குறித்த கலைஞர் கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தாத கருணாநிதி ஈழத்தமிழர்கள் தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு தகுதியற்றவர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாகவே தமிழக அரசியலில் ஈழத் தமிழர் விவகாரம் பிரதான இடம் பிடித்துள்ளபோதும், ஒவ்வொரு கட்சிகளும் தமது ஆதரவை ஒவ்வொரு கோணத்திலிருந்தே வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்--ராமதாஸ்

இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து, பா.ம.க. சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி எம்.பி., பொன்னுச்சாமி எம்.பி., பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குனர் சீமான், ஓவியர் வீரசந்தானம் உள்பட பா.ம.க. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு, மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது. தமிழன் தூங்குகிறான். அங்கு போடப்படும் குண்டுகளின் சத்தம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் காதில் விழவில்லையா?.

நீங்கள் 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளீர்கள். 6-வது முறையாகவும் நீங்கள் ஆளுவதற்கு நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், ஈழ தமிழகம் மலரும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்.

விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் அன்று மத்திய அரசு ஆட்சியை கலைத்துவிட்டதாக கூறினீர்கள். இப்போது, மத்தியிலும் உங்களது தயவில்தானே ஆட்சி நடக்கிறது. இப்போது அந்த பிரச்சினை குறித்து பேசவேண்டியது தானே?. அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா என்ன?. நீங்கள் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் பேசுவதை உலக தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் வாய் சொல்தான் அருமருந்து. உடனே, இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிடுங்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களே 10 நாட்களுக்குள் நல்ல முடிவு எடுங்கள்.

தி.மு.க. எம்.பி.க்கள், மற்றும் பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் அடங்கிய 10 பேர் குழுவை இலங்கையில் உள்ள வவுனியாவுக்கு அனுப்புங்கள். அவர்கள் அங்குள்ள உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு சொல்லட்டும்.

தற்போது சீனாவிடம் இருந்து இலங்கை வாங்கியுள்ள ரேடார் கருவி முப்பரிமானம் கொண்டது. இது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை மட்டும் அல்லாமல், தென் இந்தியாவையும் காட்டிக் கொடுக்கும். அது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், உளவுப் பிரிவுக்கும் தெரியாதா?.

இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்காவிட்டால் கருஞ்சட்டை படைகள் 1,000 பேர் ஒன்றிணைந்து சென்னை தீவுத்திடலில் தீப்பந்தம் ஏந்தி, ஈழ தமிழர்களுக்காகவும், தமிழ் ஈழம் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம்.

மேலும், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்களை நீங்கள் உடனே கைது செய்து சிறையில் அடையுங்கள். விட்டு விடாதீர்கள். அடுத்து எங்கள் கட்சி எம்.பி.க்கள், இளைஞர் படையினர், மாணவர்கள் படையினர், மகளிர் படையினர் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் சிறையில் அடையுங்கள். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து, இலங்கை அரசை கண்டித்தும், தமிழ் ஈழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் இந்திய அரசு ஒப்புதல் தரும்.

உடனே, ஈழ தமிழர் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவெடுங்கள். தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.