இலங்கை தமிழர் பிரச்சனை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி இராஜினாமாக் கடிதத்தை கையளித்தார் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் கருணாநிதி மகள் கனிமொழி, இன்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக எமது தமிழக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

27 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இனப் படுகொலையை நிறுத்த இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்,
இலங்கையில் 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இந்தநிலையில்,திமுக நாடாளுமன்ற ராஜினாமா முடிவை வெளிப்படுத்தும் அடையாளமாக, அக்கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பின் திகதியிட்டு, அதாவது இந்திய மத்திய அரசுக்கு கொடுத்துள்ள இரண்டு வார காலக்கெடுவுக்கு பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கட்சித் தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காக மதிமுகவும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனக்கொலையைத் தடுக்கவும், அனைத்து தியாகங்களையும் செய்ய தயாராக உள்ள மதிமுகவுக்கு, அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டே அல்ல என வைகோ கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் நடைபெறும் போரை 2 வாரத்துக்குள் நிறுத்த, இந்திய மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வார்கள் என தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (ஒக்14) மாலை நடைபெற்றது. 27 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கையில் நடைபெற்று வரும் போரால், ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர். போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவி வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய மத்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் இனப் படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, அந்த வகையான உதவிகளை இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இலங்கையில் இரண்டு வாரத்துக்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்.

போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம் பெயர்ந்து வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். உணவு, உறைவிடம், மருந்து போன்றவற்றையும் வழங்கவேண்டும். மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.

மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல் பாதிக்கப்பட்டோருக்கு சென்றடைய செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் உதவியை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்'' என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகத் தமிழர்களின் பேரன்பிற்கும் மதிப்புக்குமுரிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்கட்கு

ஐயா!

இலங்கை மண்ணில், கேட்பாரற்ற நிலையில் தினம்தோறும் சிங்களப் பேரினவாத கடும்போக்காளர் - அதிகாரிகள் - இராணுவத்தினரால் இனப்படுகொலை செய்யப்படும் எம் ஈழத்தமிழ் உறவுகள் இனியும் களப்பலியாகி மாண்டு மடியக்கூடாது.

அவர்களை காப்பாற்றியாக வேண்டுமென, எம் தாய்த் தமிழ் இனத்தின் தலைமைகளின் தலைவரான தங்களின் தலைமையிலேகூடி எடுத்த தீர்மானமும், இனிவரும் காலங்களில் தாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளும் அனைத்துத் தமிழ் மக்களுக்குமான நம்பிக்கை ஒளியைத் தருகின்றது.

ஐயா, எங்கள் ஈழத் தமிழினமும் சுயமரியதையுடன் - சுயநிர்ணயத்துடன் வாழ தாங்கள் பணியாற்ற வேண்டுமென... உலகத் தமிழர்கள் சார்பாகவும்,டென்மார்க் வாழ் தமிழர்கள் சார்பாகவும் இத்தால் டென்மார்க் தமிழ் இலக்கிய மன்றம் தங்களை வேண்டி நிற்கின்றோம்.

தங்கள் பணி தொடர நாம் தங்களையும், அனைத்துக்கட்சி தலைவர்களையும் சிரம் தாழ்தி வாழ்துவதுடன் எங்கள் மனமார்ந்த அன்பையும் தெரிவித்து கொள்கின்றோம்!

நன்றிகளுடன்
த.தர்மகுலசிங்கம்
தலைவர்.
டெ.த.இ.ம.

இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் தேவை : இராமதாஸ்

சிறீலங்காவுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்த வேண்டுமென, உநிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியும், இலங்கை தமிழர் பிரச்சினையும் என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றபோது இதில் பேசிய இராமதாஸ் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ் காந்தி முயற்சித்த போதிலும், அவருக்கு சரியான ஆலோசனை கூறப்படவில்லை என்வும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.இந்தியாவின் ஏனைய மாநிலத்தினர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் வெகுண்டுழுந்து விடுவார்கள் எனவும், ஆனால் ஒரு இனமே இலங்கையில் பாதிக்கப்படும்போது தமிழ்நாட்டு தமிழர்கள் தூங்கிக்கொண்டு இருப்பதாகவும் மருத்துவர் இராமதாஸ் கூறினார்.
ஈழத் தமிழனுக்கும், நமக்கும் இருப்பது தொப்புள்கொடி உறவு எனவும், அதனால் இந்த பிரச்சினையை வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.

மருத்துவர் இராமதாஸ் மேலும் பேசியவை:

முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதை அதிமுக, மதிமுக, பாஜக போன்ற கட்சிகள் புறக்கணித்து உள்ளார்கள். அவர்களும் கூட்டத்திற்கு சென்றிருக்க வேண்டும். அங்கு போய் குறைகளைக் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.ஈழத் தமிழர் பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்ட முடிவை பாமக ஆதரிக்கிறது. இனியாவது ஒன்றாக குரல் கொடுப்போம். இலங்கை பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்னும் ஒரு மாதத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இலங்கையில் என்ன அரசியல் தீர்வு எடுக்கப்பட்டது என கேட்க வேண்டும்.இலங்கையுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்றார்.

தமிழீழம் அமைவதே இந்தியாவிற்குப் பாதுகாப்பு : பா.நடேசன்

இலங்கையில் தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது என, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வாரமிருமுறை வெளியாகும் ஜுனியர் விகடன் ஏட்டுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள தேசத்துக்கு உதவுவதைவிட தமிழர் தேசத்துக்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலம் எனவும்,
எதிர்காலத்திலாவது உண்மையான நேச சக்திகளுக்கு இந்தியா உதவ முன்வர வேண்டும் என்றும் நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் செவ்வி கீழே:

"இலங்கையில் தற்போது என்னதான் நடக்கிறது. சிங்கள இராணுவத்தின் கை ஓங்கியிருப்பது போல செய்திகள் வருகிறதே?"
"இலங்கைத் தீவில் சிங்கள அரச படையினர், தமிழர் தாயகத்தின் மீது கொடுமையான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். முப்படைகளின் உதவியோடு தமிழினத்தை அழித்தொழிக்க பெரியதொரு இன அழிப்புப் போரை கண்மூடித்தனமாக மேற்கொண்டு வருகின்றது சிங்கள அரசு. இந்த இன அழிப்புப்போருக்கு வெளிநாட்டு இராணுவ உதவிகளையும் பெற்று வருகின்றது.
சிங்கள அரச படைகளுக்கு இராணுவ உதவிகள் செய்துவரும் நாடுகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியுமென நினைக்கின்றேன். இராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்ல... பாரிய பொருளாதாரத் தடையையும் தமிழர் தாயகத்தின் மீது ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ்மக்கள் தினமும் லட்சக்கணக்கில் தம்முடைய வாழ்விடங்களை விட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது வானூர்தி குண்டுவீச்சுக்களையும் செல் வீச்சுக்களையும் சிங்கள அரச படைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கண்மூடித்தனமான இந்தத் தாக்குதல்களினால் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பது மிகவும் அரிதாகும். நாகரிக உலகில் கொடுமையானதொரு இன அழிப்புப்போரை ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்."

"சிறிலங்கா ஆளும் கட்சியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக கருணா நியமிக்கப்பட்டிருக்கிறாரே?"
"கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து எப்போது விலக்கப்பட்டாரோ, அன்றிலிருந்தே தமிழ் மக்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளார். கடுமையான இன அழிப்புப்போரை மேற்கொண்டு வரும் சிங்கள அரசு, வெளிநாடுகளை ஏமாற்றி இராணுவ உதவிகளைப் பெறுவதற்காக கருணா போன்ற துரோகிகளைக் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றது. இவ்வாறானவர்கள், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக அரசினால் நியமிக்கப்பட்டாலும் மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்."

"கருணாவின் உதவியோடுதான் இப்போது சிறிலங்கா அரசாங்கம் தேடித் தேடி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறதா?"
"சிறிலங்கா அரசானது கடந்த முப்பது வருடங்களாகவே தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்புப் போரை மேற்கொண்டு வருகின்றது. எம்முடைய மக்களுக்கெதிரான யுத்தத்தில் கருணா போன்ற துரோகக் குழுக்களை பயன்படுத்தி வருவது, சிங்கள அரசின் தமிழர் விரோத இராணுவ வியூகங்களில் ஒன்றாகும். அந்த வகையில் இப்போது கருணாவையும் சிங்கள அரசு பயன்படுத்தி வருகின்றது."

"இப்போது நடக்கும் போர் புலிகளின் மீதான தாக்குதலா? இல்லை தமிழர்களை அழிக்கும் செயலா? தமிழர்கள் கொல்லப்பட்டால் அதுபற்றி செய்திகள் பெரிதாக வெளிவருவதில்லையே?"
"சிங்கள அரசின் இன அழிப்பு நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்துக்கு தெரியவராமல் இருப்பதற்காகவே ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தமிழர் தாயகப் பிரதேசத்துக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய விடயங்கள் அரசின் இன அழிப்பு யுத்த செய்திகள் வெளியே வராமல் தடுப்பதற்கேயாகும். கொழும்பு போன்ற நகரங்களில் உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும், காணாமற் போவதும், கொலை செய்யப்படுவதும் சாதாரண விடயமாக மாறியுள்ளது."

"சிங்கள படைக்கு இந்தியாவில் இந்திய அரசின் உதவியோடு இராணுவ பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது என்று செய்திகள் வருவது எந்த வகையில் உண்மை?"
"அண்மைக்காலமாக சிங்கள அரசுப் படைகளுக்கு இந்தியாவில் இராணுவப்பயிற்சி வழங்குவது பற்றி ஊடகங்களினூடாக அறியமுடிகின்றது. இது எங்களுக்கு மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கின்றது."

"சிங்கள படைக்கு இந்திய இராணுவ பொறியாளர்கள் உதவுவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில், சமீபத்தில் இலங்கையில் நடந்த தாக்குதலில் இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
"அண்மையில் சிங்கள வானூர்தி படையின் வவுனியாத்தளத்தில் ராடர் கருவியை இயக்குவதற்கும் பயிற்சி கொடுப்பதற்கும் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் செயற்பட்டுவந்தமை முழு உலகிற்கும் தெரியவந்துள்ளது. இவ்வாறான பயிற்சிகளும் உதவிகளும் வெளிநாடுகள் எந்த நோக்கத்துக்காக வழங்கினாலும் சிறிலங்கா அரச படைகள் அதைத் தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றமையே யதார்த்தமாகும்."

"சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகள் செய்ய தயாராக இருக்கிறது. அதனால், இந்தியாவுக்கு ஆபத்து என்பதால் உதவுகிறோம் என்று இந்தியா தரப்பில் சொல்லப்படுவது பற்றி..?"
"எம்முடைய மனச்சாட்சி இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. வரலாற்று ரீதியாக இந்திய அரசு சிறிலங்காவிற்கு எவ்வாறான உதவிகளை வழங்கினாலும் அல்லது அழுத்தங்களை பிரயோகித்தாலும் இந்தியாவின் பூகோள நலனுக்கெதிராக சிறிலங்கா அரசு செயற்பட்டு வருகின்றது. தொடர்ந்தும், அவ்வாறே செயற்படுவார்கள் என்பதனை எம்மால் உறுதியாகக் கூறமுடியும்.
இந்திய அரசுக்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் சிறிலங்கா அரசு இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே கூட்டுச் சேர்ந்ததுதான் கடந்தகால வரலாறாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களே இந்தியாவின் நலனிற்காக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வந்துள்ளமை வரலாற்று உண்மையாகும். இதை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எம்முடைய அவாவாகும். சிங்கள தேசத்திற்கு இந்திய அரசு உதவுவதைவிட தமிழர் தேசத்திற்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பலமாகும். எதிர்காலத்திலாவது உண்மையான நேச சக்திகளுக்கு உதவ முன்வரவேண்டும்."

"ஈழப் பிரச்சினைக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?"
"தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான 'தமிழீழ விடுதலைப் புலிகள்' மீதான தடையினை நீக்கி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்."

"புலிகள் இயக்கத்தை மிக உக்கிரமாக எதிர்த்து வந்த காரணத்தால் ஈழத் தமிழர்களின் பரிதாப நிலை பற்றி குரல் கொடுக்காமல் இருந்த ஜெயலலிதா கூட இப்போது குரல் கொடுத்திருக்கிறாரே..?"
"தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவருமே இன உணர்வு மிக்கவர்கள். அவர்கள் தமிழீழ மக்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் குரல் கொடுப்பதற்கு பின்னிற்க மாட்டார்கள். 'தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்' என்பது போல அவர்கள் எல்லோரும் தற்போது அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் குரல் கொடுத்திருக்கின்றார்கள்."

"இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சிறிலங்காவுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளார் என்று சொல்லப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன..?"
"'இது நாராயணன் அவர்களிடமே கேட்கப்பட வேண்டிய விடயமாகும்."

''இலங்கை பிரச்னைக்காக எங்கள் ஆட்சியையும் இழக்க தயார்' என்று கருணாநிதி பேசி இருக்கிறார். மத்திய அரசுக்கு தந்திகள் அனுப்பச் சொல்லியிருக்கிறாரே..?"
"தமிழ் இன உணர்வோடு எம்முடைய மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்திருக்கிறார். வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் நெருக்கடியினை எதிர்கொண்ட காலங்களில் எல்லாம் எம்முடைய மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு தமிழக முதல்வர் அவர்கள் ஒருபோதும் தவறுவதில்லை. கடல் கடந்திருந்தாலும் அவர்கள் எல்லோரும் எம்முடைய உடன்பிறப்புக்களே. ஈழத்தில் தமிழ் மக்கள் துன்பப்படும்போது அவர்களால் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பது யதார்த்தமாகும்."

"'சிறிலங்கா வானூர்தி படை தாக்குதல் காரணமாக பதுங்கு குழிகளில் மறைந்தபடி பிரபாகரன் நீண்ட காலம் உயிர் வாழ முடியாது' என்று சிறிலங்கா இராணுவ தளபதி பொன்சேகா சொல்லி இருக்கிறாரே..?"
"இது அவருடைய பகற்கனவாகும்."

"புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியை சிறிலங்கா இராணுவம் சுற்றி வளைத்துவிட்டது என்று செய்திகள் வருவது பற்றி?"
"புலிகள் எவ்வாறான சுற்றி வளைப்புக்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்."

"பொருளாதார தடைகள் இப்போதும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறதா..? அத்தியாவசிய பொருட்கள் விலை, வாங்கும் அளவுக்கு இல்லை என்பது உண்மையா?"
"பொருளாதாரத் தடைகள் தொடர்ச்சியாக நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன."

"புலிகள் செயற்பட முடியாத அளவுக்கு முடங்கி விட்டதாக சிறிலங்கா கொக்கரிக்கின்றதே?"
"உலகத் தமிழ் மக்களின் ஆதரவு எமக்கிருக்கும் வரை சிங்கள தேசம் எம்மை வெற்றிகொள்ள முடியாது."

இரந்து பெறும் பிச்சை வேறு இணக்கப் பேச்சுத் தீர்வு வேறு

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் என்று மீண்டும் வெளியுலகுக்குப் பம்மாத்துக் காட்டுவது போல அறிவிப்பு விடுத்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வெழுச்சி தமிழகத்தில் மீண்டும் பீறிட்டுக் கிளம்பியுள்ள பின்னணியில் - அதன் காரணமாகப் புதுடில்லி அரசிடமிருந்து வந்திருக்கும் புதிய அழுத்தத்தைச் சமாளிக்கும் நோக்கில் - இதுவரை காலமும் செயற்றிறன் இன்றித் தூங்கிக் கிடந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை, மீண்டும்தட்டி எழுப்பி,
சர்வதேசத்துக்குக் கண்கட்டுவித்தை நாடகம் ஒன்றை திரும்பவும் நடத்திக் காட்டுவதற்காக ஒருதடவை கூட்டி முடித்திருக்கிறார் அவர்.
அந்தக் கூட்டத்திலேயே இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் என்று - ‘சாத்தான் வேதம் ஓதுவது போல’ - நியாயம் பிளந்திருக்கின்றார் அவர். அதற்காகவே சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகின்றது என்று விளக்கம் வேறு அவர் அளித்திருக்கின்றார்.தமிழரின் உரிமைக்காகப் புலிகள் நடத்தும் போராட்டத்தை, வழமையான ஏனைய சிங்களத் தலைவர்களைப்போல ‘பயங்கரவாதம்’ என்று சித்திரித்துள்ள அவர், அதனை இராணுவ நடவடிக்கை மூலம் அடக்கி, பேச்சு மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போகிறார் எனவும் சூளுரைத்திருக்கின்றார்.வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தயவிலும், தாட்சண்யத்திலும் அவரது அரசில் ஒட்டிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்திவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்றவற்றைக் கூட்டி வைத்துக்கொண்டு பேச்சு நடத்துவாராம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர்களின் இணக்கத்துடன் ஈழத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் அரசியல் தீர்வை அவர் பெற்றுத்தருவாராம். அதை ஈழத் தமிழ் மக்களும், புலம் பெயர்வாழ் தமிழர்களும், சர்வதேசமும் நம்ப வேண்டுமாம்.- இவைதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது வெளியிட்டு வரும் கருத்துகளில் தொக்கி நிற்கும் அர்த்தங்களாகும்.நாடாளுமன்றில் ஈழத் தமிழர்களைப் பெருமளவில் - ஏன் 95 வீதம் என்று கூறலாம் - பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பே இல்லை.கலந்துகொண்ட ஈ. பி. டி. பிக்கோ, கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கோ அரசின் தயவில் தங்கி நிற்பதைத் தவிர மாற்று மார்க்கமே இல்லை. அரசுத் தரப்பு எடுக்கும் தீர்மானங்களுக்கு ‘ஜால்ரா’ போடுவதை விட, அதற்கு அப்பால் ஈழத் தமிழருக்கு நியாயம் வேண்டிப் பேரம் பேசும் ஆற்றல் எதுவுமே அவற்றுக்கு இல்லை என்பது வெளிப்படையான அம்சம்ஆயுதப் பலம் கொண்ட வகையிலும், மக்கள் ஆதரவுப் பலம் மிக்க வகையிலும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிப் பேரம் பேசும் வலு விடுதலைப் புலிகளிடம்தான் உள்ளது. அத்தகைய புலிகளை அழித்து, ஒழித்து, அடக்கிவிட்டுத்தான் மறுவேலை என்று கர்ஜித்து, போர் வெறிகொண்டு தீவிரம் பிடித்து அலைகின்றன இலங்கைப் படைகள். மறுபக்கத்தில், ஈழத் தமிழ் மக்களின் பேராதரவு பெற்ற - நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கொண்ட - தமிழ்க் கூட்டமைப்பைப் புறக்கணித்துவிட்டு சமாதானத் தீர்வு நாடகம் ஆடுகிறது கொழும்பு.ஆக, புலிகளை ஒழித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒதுக்கி, தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவை சிதைத்து விட்டு -அரசின் காலடியில் விழுந்து கிடக்கும் ஈ.பி.டி.பி., கருணா குழு, சங்கரி அணி, சித்தர் கட்சி போன்றவற்றோடு பேசி, இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காணப் போகின்றதாம் மஹிந்தரின் அரசுத் தலைமை.ஈழத் தமிழர்களுக்காகப் பேச வேண்டிய உண்மையான - அதிகாரபூர்வமான - மக்கள் ஆதரவு பெற்ற தரப்புகளையும், கட்சிகளையும் ஒழித்து அல்லது ஒதுக்கித் தள்ளிவிட்டு - வேறு மார்க்கம் ஏதுமின்றித் தன் காலில் சரணாகதி அடைந்து விழுந்துகிடக்கும் ஒட்டுக் குழுக்கள், கூட்டுக் கட்சிகளை முன்னிறுத்தி -‘அமைதிப் பேச்சு’, ‘சமாதானத் தீர்வு’ என்றெல்லாம் கபட வேடம் போடுகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.காலில் விழுந்து கிடப்போருடன் பேசுவது இணக்கத்துக்கான கலந்துரையாடல் அல்ல. அது அதிகார பீடம் போடும் பிச்சையை யாசகமாகப் பெறும் - இரந்துண்ணும் - கேவலம்தான்.அதைத்தான் அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சி என்று காட்டப்பார்க்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.சிங்கள அதிகார வர்க்கத்திடம் வெறும் நாடாளுமன்றக் கதிரை களின் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு சுமார் மூன்றரை தசாப்த காலம் பேச்சு நடத்தி, நம்பி ஏமாந்து, மோசம் போன பின்னர்தானே, பேச்சுக்கான பேரம் பேசும் வலுவையும் பெற்றுக்கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து, ஆயுதம் தூக்கினார்கள் தமிழர்கள்.......!அதை மறந்து - மறைத்து - இப்போது கதை விடுகிறது சிங்களத் தலைமை. அதற்குத் துணை போய் - வழமைபோல - துரோகமிழைக்கின்றன சில தமிழர் தரப்புகள்.

மஹசீன் சிறைச்சாலையில் இராணுவத்தினர் திடீர் பிரவேசம் சோதனை என்ற போரர்வையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர்

மஹசீன் சிறைச்சாலையில் இன்று இலங்கை நேரம் 12 அணியளவில் உட்புகுந்த 20 இராணுவத்தினர் தமிழ்க் கைதிகளை இம்சைப்படுத்தியதாக தமிழ்ச் செய்திகளுக்கு உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதனை உறுதிப்படுத்தினார்.இன்று நன்பகல் அங்கு சென்ற இராணுவத்தினர் தமிழ்க் கைதிகள் 60 பேரின் சிறைக் கூடங்கள் மற்றும் அவர்களின் உடமைகளைச் சோதனையிட்டுள்ளனர். வழமைக்கு மாறான இந்த நடவடிக்கை குறித்து தமிழ்க் கைதிகள் எதிர்ப்பு வெளியிட்ட போது அவர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும் தூக்கி வீசப்பட்டு பல்வேறு அசௌகரியங்களைப் படையினர் ஏற்படுத்தியதாக தனக்கு முறையிட்டுள்ளதாக அரிய நேத்திரன் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி நீதி அமைச்சர் புத்திரசிகாமணியிடம் தான் முறையிட்டதாகவும் அவர் குறித்த அதிகாரிகளுடன் பேசியதை அடுத்து மகசீன் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளிடம் மன்னிப்புக் கோரியதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறமாட்டாது என அவ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் கைதிகள் தெரிவித்தனர்.

உரும்பிராயில் ஒருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்டவர் சிவகுல வீதி உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைச் சேர்ந்த மார்க்கண்டு சுதன்ராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை கிராமசேவரிடம் சென்றுகொண்டிருந்தபோதே அவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடபாகத்தில் ஏறத்தாழ 220000 பேர் மீளவும் இடம்பெயர்ந்துள்ளனர் --BBC

இலங்கையின் வடபாகத்தில் ஏறத்தாழ 220000 பேர் மீளவும் இடம்பெயர்ந்துள்ளதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் போஸ்டர் அங்கு நடந்த விவாதமொன்றின் போது தெரிவித்துள்ளார்.இலங்கையில் தற்போது நிலவும் சூழல் குறித்து பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற தனிப்பட்ட விவாதம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து இது பற்றிக் குறிப்பிடுகையில் ஆகக் குறைந்தது 30000பேர் ஐந்து தடவைகளாவது இடம் பெயர்ந்துள்ளனர் என்றும், இந்தப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காணப்பட முடியாதென்றும் தெரிவித்தார். இலங்கையின் மனித நேய நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசினார். இவ்விவாதம் ஆளும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளின் பேரிலேயே நடாத்தப்பட்டது.இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சிறிலங்கா சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற கூற்றை கேள்வியெழுப்பியும் விமர்சித்தும் பேசினார் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பரி கார்டினர்.மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் தொழிற்பட சிறிலங்கா அரசு உறுதுணை புரிய வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கையின் நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்த போஸ்டர் ஐ.நாவின் உணவு உதவியை வடக்கிற்கு உடனடியாக வழங்க அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் சகிப்புத்தன்மையோ கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமோ இல்லை எனத் தெரிவித்த அவர் புலிகள் சமாதானத்தின் பங்காளர்களாவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். எவரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதற்காக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு சிறுவர்களைப் படையில் இணைத்துக் கொள்வதையும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.அதேபோல தெற்கிலும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கட்டுப்பாடுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பேணப்பட வேண்டும். அதற்காக கொல்வது தண்டிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தச் சில வருடங்களுக்குள்ளேயே ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுமுள்ளனர் எனத் தெரிவித்தார்.