துணை இராணுவக்குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்து

அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையே இன்று மட்டக்களப்பில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது கருத்துரைத்த அமெரிக்க தூதுவர், கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும் அதற்கு ஏதுவாக கிழக்கு மாகாணத்தின் புறச் சூழ்நிலைகள் மாற்றமடைய வேண்டும் எனவும், ஆட்கடத்தல்கள் கொலைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் துணை ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை - கனடாவின் நசனல் போஸ்ற்

யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை என நெசனல் போஸ்ட் என்ற கனேடிய செய்திதாளின் செய்தியாளர் ஸ்டுவட் பெல் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாண நகரம் சைக்கிள்களால் நிரம்பிக் காணப்படுகிறது. முச்சக்கர வண்டிகளும் குடைபிடித்த பெண்களும் கொழுத்தும் வெயிலில் தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு பெருமளவான படையினர், தன்னியக்க துப்பாக்கிகளுடன் நடமாடுகின்றனர். பேரூந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

கொழும்பை அடுத்து இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சன்னங்களால் துளையிடப்பட்ட பல வீடுகள் ஆட்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. அவை உள்நாட்டு யுத்தத்தின் தாக்கத்தை காட்டுகின்றன.

யாருமே அடையாள அட்டைகள் இன்றி பாதையில் நடமாடுவதைத் தவிர்த்தே வருகின்றனர். பொதுமக்கள் படையினரின் அனுமதியின்றி எங்கும் பயணிக்கமுடியாது. பொதுமக்கள் கைது செய்யப்பட்டு சில வேளைகளில் இரவோடிரவாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.யாழ்ப்பாணம் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துவருகிறது.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தாம் யாழ்ப்பாணத்திற்கு சென்று பணியாற்ற முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தாம் யாழ்ப்பாணத்திற்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினால் கூட அது ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கிறார். ஆட்கடத்தல்கள், குண்டுத்தாக்குதல்கள், சித்திரவதைகள், கைதுகள் என்பன தொடர்கின்றன. கைது செய்யப்படுகின்றவர்கள் கூட சிலவேளைகளில் காணாமல் போகின்றனர். கொழும்பிலும் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. எனினும் யாழ்ப்பாணத்திலேயே அது மோசமாகியுள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவிக்கிறார்;.

இதேவேளை கனேடிய செய்தியாளருடன் பேசிய இளைஞர் ஒருவர் தாமும் நண்பர்களும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பேசிக்கொண்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுமார் 750 பேர் உள்ள சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தாம் தடுத்து வைக்கப்பட்ட இடத்தில் பலர் கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் தாம் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இராணுவத்தின் யாழ்ப்பாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கம்மம்பில சந்திரஸ்ரீ, யாழ்ப்பாணத்தில் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச, கைதுகளும் தடுத்துவைத்தல்களும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்படுவதாகக் கனேடிய செய்தியாளர் ஸ்டுவர்ட் பெல் லிடம் தெரிவித்துள்ளார்.

யால வனப்பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல்

பாதுகாக்கப்பட்ட யால வனப்பகுதியின் இரண்டாம் பிராந்தியத்தில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இன்று காலை முதல் வனப் பிராந்தியத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனின் நினைவுகள் பற்றி தலைவர்...

எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. அர்ப்பணிப்புக்களைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீரசாதனைகள் ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டக்களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடுஇணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான்.
அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டி எழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனியவைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியை சீண்டிவிட்ட நிகழ்ச்சி.
திலீபன் யாருக்காக இறந்தான்? எதற்காக இறந்தான்? அவனது இறப்பின் அர்த்தமென்ன? அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்ச்சியாக மக்கள் எல்லோரையுமே எழுச்சி கொள்ளச் செய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது திலீபன் உங்களுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக உங்கள் சுதந்திரத்துக்காக உங்கள் கௌரவத்திற்காக இறந்தான்.

தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கிறான். ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னத மானது எமது உரிமை. எமது கௌரவம். நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடிதுடித்துச் செத்துக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப்பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக்கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். அதில் நான் பெருமை கொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சக் கட்டமாக திலீபன் தன்னை அழித்துக்கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை. காலத்தால் சாகாத வரலாற்றுப் புருசனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது அர்த்தமற்ற சாவு என இந்தியத் தூதர் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். எமது உரிமைகள் வழங்கப்படும், எமது மக்களுக்கும் எமது மண்ணுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும், தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தாயகப் பூமியில் தம்மைத்தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும், இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களினதும் மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

அதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எமது மக்களாகிய உங்களுக்குத் தெரியும். தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாது முகாங்களுக்குள் முடங்கிக் கிடக்க சிங்களக் குடியேற்றம் துரிதகதியில் தமிழ் மண்ணைக் கபளீகரம் செய்தது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ்ப்பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

அவசரஅவசரமாக சிங்கள இனவாத அரசியந்திரம் தமிழ்ப்பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் சமாதானப்படையின் அனுசரணையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலைகொள்ள முயன்றது. இந்த பேராபத்தை உணர்ந்து கொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி காணத் திட சங்கற்பம் கொண்டான்.

சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம்தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது. பாரதம்தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்தது. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது ஆயுதப்போராட்டத்தை நிறுத்திவைத்தது. ஆகவே பாரத அரசிடந்தான் நாம் உரிமை கோரிப் போரிட வேண்டும். எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன். அத்தோடு பாரதத்தின் ஆன்மிக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக்கொண்டான்.

மக்களின் ஒன்று திரண்ட சக்தி மூலமே மக்களின் ஒருமுகப்பட்ட எழுச்சி மூலமே நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். திலீபனின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் பங்களிப்பு இதுதான்."
தலைவரின் உரைகளின் கோப்பிலிருந்து..

ஐ.நா முன்றலில் நாளை 2 மணிக்கு மறியல்

தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள் - ஏறாவூரில் மீனவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

whait_van.jpgமட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் குடும்பஸ்த்தர் ஒருவர் வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான கே.கணேசமூர்த்திஎன்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மீன்பிடித்துவிட்டு கடற்கரையில் தனது வலைகளை உலர்த்திக்கொண்டிருந்தபோது வெள்ளைவான் ஆயுததாரிகளில் இவரை வலுக்கட்டாயமாக இழுத்து கடத்திச்சென்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை தளவாய் பிரதேச பிள்ளையான்குழு பொறுப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்தே இந்த கடத்தல் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு யுவதிகள் சுட்டுக்கொலை

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் யுவதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரவு 8.45மணியளவில் வைரவபுளியங்குளம்,வைரவர் கோவில் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்திலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த, இவர்களில் ஒருவர் வவுனியா வங்கி ஒன்றில் கடமையாற்றிவந்ததாகவும் மற்றவர் தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றிவந்ததாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.

இவர்கள் தங்கியுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுததாரிகள் இவர்களை அழைத்து சரமாரியான துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் சடலம் இரண்டும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

பொத்துவிலில் இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை.

sri_army_paval.jpgஅம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்வோதயபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் தமிழ் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணியளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிராதன வீதியின் அறுகம்பையில் இருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சர்வோதயபுரம் தமிழ் கிராமத்திலேயே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இருவரும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் என தெரிவித்த பொத்துவில் பொலிஸார் இவர்களிடம் இருந்து கைக்குண்டுகள் இரண்டும்,சயனைட் வில்லைகள் இரண்டும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஒன்றும் மீட்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதியில் பதுங்கியிருந்த விசேட அதிரடிப்படையினர் இவர்களை சுட்டுக்கொன்றதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.சுரவீர தெரிவித்தார்.

இது வரை சடலம் அடையாளங்காணப்படவில்லையென தெரிவித்த பொத்துவில் பொலிஸார் அடையாளங்காண்பதற்காக பொத்துவில் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேபோல்

கொழும்பு கொட்டாஞ்சேனை குணானந்த மாவத்தையில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞனொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனி காலை 8.10 மணியளவில் இந்த இளைஞன் அந்த வீதியில் கராஜ் ஒன்றுக்குச் சமீபமாக நின்ற போது அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த கஜன் கோனேந்திரன் (22 வயது) என்ற இந்த இளைஞன் குணானந்தா மாவத்தையிலேயே தங்கியிருந்தார்.

மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையமொன்றில் கடமையாற்றி வந்த இவரது கொலைக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

இவரது சடலம் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஒரு பகுதி மக்களைப் பிரித்துப் பார்ப்பது அநியாயம்: மேலக மக்கள் முன்னணி


ஐந்து வருடங்களுக்குள் கொழும்புக்கு வந்து தமிழர்களை மட்டும், விசேட பொலிஸ் பதிவுக்கு ஆளாக்கியிருக்கின்றமை இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது எனவும், குறித்த ஒரு பகுதி மக்களை மாத்திரம் பிரித்துப் பார்ப்பது நியாயமான செயற்பாடில்லையெனவும் மேலக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அடாவடித்தனமான ஆட்சியை நடத்தும் எந்தவொரு அரசாங்கமும் நிலைத்து நின்ற சரித்திரம் இல்லையென மேலக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசன் கூறினார். பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையங்களுக்குச் சென்ற மேலக மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் பதிவுகளை மேற்கொள்ளச் சென்ற பொதுமக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

மனித நேயத்திற்கு அப்பாற்பட்டு ஒருசிலரை மாத்திரம் வேறுபடுத்திக்காட்டும் இந்த நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருப்பதாக மனோ கணேசன் கூறியுள்ளார். வெறுமனே கண்டனம் தெரிவித்துவிட்டு மௌனியாக இருக்கப் போவதில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாவுதான் என்றால்.....!

சிங்கள இனாவத அரசு தமிழ் மக்கள் மீது பாரிய இனஅழிப்பு நடவடிக்கையை தீவிரமாக முனைப்புப்படுத்தியுள்ளது. இது இன்று கூறித்தான் எவரும் புரிந்த கொள்ள வேண்டியதொரு விடயம் அல்ல. சர்வதேச சமூகம் புரிந்து கொண்டதானதொரு விடயம் தான் சர்வதேச சமூகம் இதனை வெளிப்படுத்தாமை அதன் அரசியல் சார்ந்த விடயமே தவிர புரிதல் சார்ந்த விடயம் அல்ல.

இதேவேளை, சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ் மக்கள் மிகவும் தீவிரமிக்கதான போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் உலகம் அறிந்த விடயம் ஆகும். தமிழ் மக்கள் இப்போராட்டத்தை நடத்தாது போனால் இலங்கையில் தமிழ் இனத்தின் அடையாளம் இல்லாது போயிருப்பினும் கூட ஆச்சரியத்திற்குரிய தொன்றல்ல. இப்போராட்டத்தில் இன்று வன்னிப் பகுதியில் உள்ள குடும்பங்கள் யாவும் தமது பங்களிப்பை ஆற்றி வருகின்றன. குறைந்த பட்சம் வீட்டிற்கொருவர் என்ற ரீதியில் அவர்களின் பங்களிப்பானது காணப்படுகின்றது.

இதற்கும் மேலாக ஒரே குடும்பத்தில் ஒன்றிற்கும் மேற்பட்டோரும் போராளிகளாக உள்ளனர். இன்று சிங்களப் பேரினவாதம் மேற்கொள்ள முனையும் தீவிர இன அழிப்பு நடவடிக்கை இதன் காரணமாகவே மட்டுப்படுத்தப்பட்டதாகவுள்ளது. தியாகமும், அர்ப்பணிப்பும் மிக்கதான தமிழ் மக்களின் போராட்டப் பங்களிப்பு என்பது இனத்தைக் காப்பதில் பெரும் பங்காற்றுவதாகவுள்ளது. சிங்கள இன வாதஅரசு தனது நோக்கத்தை விரைந்து நடத்த முடியாததானதொரு சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் இருப்பினும் சிங்கள இனவாத அரசு மேற்கொள்ளும் தீவிர இனஅழிப்பு முயற்சிகள் குறித்து பெரும் அச்சம் கொள்பவர்களாகவும் ஒரு தரப்பினரும் உள்ளனர். இவர்களில் பலர் அழிந்து போகவேண்டியதுதான் ஒரே வழி என்னும் வகையில் பெரும் விரக்தியிலும் உள்ளனர். இவர்கள் ஏன் இவ்வாறு எண்ணுகிறார்கள்.? அச்சப்படுகின்றார்கள்.? அவர்கள் ஒரு மர்ற்றுவழி குறித்துச் சிந்திக்க ஏன் மறுக்கின்றார்கள்.? காலத்தைச் சரியாக மதிப்பீடு செய்ய ஏன் முடியாது உள்ளனர்.?

அதாவது வீரம் மிகுந்ததானதொரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் இவர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்? சரி வீழ்ந்து போக வேண்டிதானதொரு சூழ்நிலை தான் உருவாகியுள்ளதெனில் ஏன் போராடி வீழ்ந்து போவதை விடுத்து கோழைகள் போல் தமது அழிவைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்.? எந்தவொரு உயிருக்கும் தனக்கு ஆபத்து நெருங்கும் போது தனது சீற்றத்தினையும் தனது எதிர்ப்புணர்வையும் காட்டாமல் அழிந்து போய்விடுவதில்லை. மனிதர்களில் மட்டும் தான் சாகும் தருணம் நெருங்கி வருகின்றதென்ற நிலை வரும்போது கூடப் பயந்து ஒடுங்குவோர் உள்ளனர்.

ஆனால் சாவுதான் உறுதி என நம்புபவர்கள் இறுதியிலாவது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின் அவர்கள் எதிரிக்கு அழிவை உண்டாக்கலாம். அதேசமயம் தம்மைப்பாதுகாக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர் அல்லது விடினும் கூட தனது இனத்திற்கான பங்களிப்பையாவது ஆற்றுவதாக இருக்கும். இதேசமயம் சிலர் வன்னிக்கு வெளியில் சென்றால் வாழ்விற்கு உத்தரவாதம் கிட்டிவிடும் என நம்புகின்றனர். வன்னியில் இன்று சிறிலங்கா இராணுவத்தின் மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்படுவோரை விட இலங்கையில் ஏனைய பகுதிகளில் சிங்களப்படைகளினாலும் ஒட்டுக்குழுக்களாலும் கொல்லப்படுவோர் அதிகமாகும். அங்கு முற்றிலுமாகவே தமிழரின் வாழ்விற்கு உத்தரவாதம் கிடையாது. இங்கிருப்பின் எதிர்ப்பையாவது காட்டுவதற்கு வாய்ப்புண்டு.

ஆகையினால் முதலில் அச்சம் தவிர்த்தல் வேண்டும் உயிர் அச்சம் என்பது அர்த்தமற்ற சாவையும் பயனற்ற சாவையுமே எமக்கு அளிக்கத்தக்கது. சாவுதான் எமக்கு எனக்கருதின் ஏன் போராடிச்சாக முற்படுதல் கூடாது? போராடத்துணிந்து விட்டால் சாவே எம்மைக் கண்டு ஒதுங்கிக் கொள்ளக்கூடும். ஆகையினால் தமிழ் மக்கள் இன்று அச்சம் என்பதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

போராட்டமே வாழ்க்கை என்று ஆகி விட்ட நிலையில் அதிலிருந்து விலகிப் போதல் என்பது வாழ்வைத்தரப்போவதில்லை. சிங்கள இனவாத அரசினைத் தோற்கடிப்பதே தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்யத்தக்கதாகும்.

நன்றி: உலகத்தமிழர்

வெளி நபர்களும், வெளி சக்திகளும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது - நோர்வே


இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமுல்படுத்தப்படும் போது, சிறந்த பொருளாதார முகாமைத்துவம் அதற்கான வசதிகளை ஏற்படுத்தும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் டோரி ஹட்ரீம் தெரிவித்துள்ளார்.

எந்தத் தீர்வு திட்டமானாலும் அதற்கு அனைத்து இனகுழுக்களினதும் ஆதரவு கிடைக்க வேண்டும். இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளை விட அரசியல் பிரச்சினையே மிகவும் முக்கியாமான பிரச்சினை எனவும் நோர்வே தூதுவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் நோர்வே தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்கும். வெளி நபர்களும், வெளி சக்திகளும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே நோர்வே தூதுவர் இந்த கருத்துக்களை தெரிவிததுள்ளார்.

செப்30 இல்சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி இந்திய மத்திய அரசை வலியுறுத்தி, எதிர்வரும் செப்டம்பர் 30ல் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று ஊடகவியவியலாளர்களிடம் அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக 1985ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் கருணாநிதி பேசிய பேச்சு ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'தமிழர்களுக்கு ஒரு நாடு, அது தமிழீழ நாடு' என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

இந்த பிரச்சனை தொடர்பாக 5 உறுதிமொழிகளையும் அவர் அளித்துள்ளார். தமிழீழம் மலர ஆதரவு, தமிழர்களுக்கு நிலையான உரிமை, நிரந்தர பாதுகாப்பு, ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவற மாட்டோம், தமிழினத்தை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயார் என்பதே கருணாநிதி அளித்த 5 உறுதிமொழிகள்.

ஆனால் இப்போது ஈழத்தமிழர் பிரச்சனையில் கருணாநிதி மவுனம் சாதிக்கிறார். இந்த நிலையில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசை வலியுறுத்தி, எதிர்வரும் 30ம் திகதி சென்னையில் இலங்கை தூதரகம் முன்னால் தனது
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் பொய்ப்பிரச்சாரத்திற்கு கண்டனம் - வத்திக்கான்


வத்திகானின் மக்கள் யாத்திரை கேந்திர நிலையத்தின் தலைவர் பிரான்சிஸ் அரின்சஸ் கர்தினால் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது, மடு தேவாலயம் குறித்தோ, அல்லது வேறு அரசியல் தலைப்புகளிலோ எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை என இலங்கையில் உள்ள வத்திகான் அபோஸ்தலர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மடுதேவாலயத்தை இராணுவம் கைப்பற்றியமையை வத்திகான் பாராட்டியுள்ளது என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

வத்திகான் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்த போது மடு தேவாலயம் பற்றியோ, அரசியல் விடயங்கள் குறித்தோ எதுவும் பேசாத நிலையில் அரச ஊடகங்களின் ஊடாக ராஜபக்ஸ அரசாங்கம் அரசியல் லாபம் பெறும் நோக்கில் மத தலைவர்களை இணைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுவது குறித்து ஐக்கிய தேசிய கட்சி தனது எதிர்ப்பையும் அருவருப்பையும் தெரிவித்து கொள்வதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கத்தோலிக்க தலைவரான வத்திகான் கர்தினால், கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு செய்த அவதூறு எனவும் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டார்.

சிறிலங்கா, ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அடிப்படை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்


சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்காது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான கொள்கைப்பிரிவு ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பெனிற்றா பெரியோ வல்ட்னர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுவது அர்த்தமற்றது.

இலங்கையில் அமைதியான வழிகளில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருகின்றது.

அனைத்துத்தரப்பினரும் வன்முறைகளை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என நாம் பல தடவை வலியுறுத்தி வந்துள்ளோம். சிறிலங்கா அரசு மீது நாம் எதனையும் திணிக்கப்போவதில்லை.

சிறிலங்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளதாக சிறிலங்கா ஊடகங்களில் வெளிவந்த பத்திகள் தொடர்பாக நாம் கவலை கொண்டுள்ளோம். அது அடிப்படை தவறானது.

சிறிலங்கா அரசு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழப்பதை நாம் விரும்பவில்லை.

எனினும் அதனைப்பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அடிப்படை விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். சிறிலங்கா அரசு அதனை பின்பற்றும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார் அவர்.