யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை - கனடாவின் நசனல் போஸ்ற்

யாழ்ப்பாணத்தில் எவ்வித சுதந்திரமும் இல்லை என நெசனல் போஸ்ட் என்ற கனேடிய செய்திதாளின் செய்தியாளர் ஸ்டுவட் பெல் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாண நகரம் சைக்கிள்களால் நிரம்பிக் காணப்படுகிறது. முச்சக்கர வண்டிகளும் குடைபிடித்த பெண்களும் கொழுத்தும் வெயிலில் தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு பெருமளவான படையினர், தன்னியக்க துப்பாக்கிகளுடன் நடமாடுகின்றனர். பேரூந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

கொழும்பை அடுத்து இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சன்னங்களால் துளையிடப்பட்ட பல வீடுகள் ஆட்கள் அற்ற நிலையில் காணப்படுகின்றன. அவை உள்நாட்டு யுத்தத்தின் தாக்கத்தை காட்டுகின்றன.

யாருமே அடையாள அட்டைகள் இன்றி பாதையில் நடமாடுவதைத் தவிர்த்தே வருகின்றனர். பொதுமக்கள் படையினரின் அனுமதியின்றி எங்கும் பயணிக்கமுடியாது. பொதுமக்கள் கைது செய்யப்பட்டு சில வேளைகளில் இரவோடிரவாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.யாழ்ப்பாணம் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துவருகிறது.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தாம் யாழ்ப்பாணத்திற்கு சென்று பணியாற்ற முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தாம் யாழ்ப்பாணத்திற்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினால் கூட அது ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கிறார். ஆட்கடத்தல்கள், குண்டுத்தாக்குதல்கள், சித்திரவதைகள், கைதுகள் என்பன தொடர்கின்றன. கைது செய்யப்படுகின்றவர்கள் கூட சிலவேளைகளில் காணாமல் போகின்றனர். கொழும்பிலும் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. எனினும் யாழ்ப்பாணத்திலேயே அது மோசமாகியுள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவிக்கிறார்;.

இதேவேளை கனேடிய செய்தியாளருடன் பேசிய இளைஞர் ஒருவர் தாமும் நண்பர்களும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பேசிக்கொண்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுமார் 750 பேர் உள்ள சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தாம் தடுத்து வைக்கப்பட்ட இடத்தில் பலர் கஞ்சா பாவனையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் தாம் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இராணுவத்தின் யாழ்ப்பாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கம்மம்பில சந்திரஸ்ரீ, யாழ்ப்பாணத்தில் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச, கைதுகளும் தடுத்துவைத்தல்களும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே மேற்கொள்ளப்படுவதாகக் கனேடிய செய்தியாளர் ஸ்டுவர்ட் பெல் லிடம் தெரிவித்துள்ளார்.

No comments: