தமிழ் ஈழம் மலர துணை நிற்போம்: திரை உலகம் ஆவேசம்

இந்தியா மீது ஈடில்லா அன்பு வைத்துள்ளார் பிரபாகரன்;சீமானின் உருக்கமான பேட்டி: தமிழன் எக்ஸ்பிரஸ்

"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது.
ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:-
ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?
விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காகத்தான் நாங்க இவ்வளவு காலமும் உழைச்சோம். எல்லோருக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே சமதளத்தில் இயங்கணும்னு. அது இப்போ நடந்திருக்கு. அதை எதற்கு விமர்சிக்கணும்? அது மகிழ்ச்சி தானே!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழர் பிரச்சினையில் ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"தமிழ் ஈழம் தவிர, தனிநாடு தவிர வேறு தீர்வு இல்லை' என்கிற நிலைப்பாட்டை எடுக்கிற அரசியல் கட்சிகள் உண்மையிலேயே அந்த மக்கள் குறித்து சிந்திக்கின்றன என்று அர்த்தம். "ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை, ஒரு மாநிலப் பகிர்வு, ஒரு அதிகாரப் பகிர்வு' என்று பேசுபவர்கள் எல்லாம் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதே என் கருத்து. ஏனென்றால் மாநில சுயாட்சி என்பது எல்லாம் இறையாண்மை மிக்க நாடாகக் கருதப்படுகின்ற இந்தியாவுக்குள்தான் சாத்தியமான விஷயம். இலங்கை போன்ற ஒரு மதத் தீவிர நாட்டில் இறையாண்மையே இல்லை; அப்புறம் எப்படி மாநில சுயாட்சி சாத்தியம்? தமிழர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு என்ன? தமிழ் ஈழம் ஒன்றைத் தவிர எங்களுக்கு வேறு தீர்வு கிடையாது என்பதைச் சொல்லி வருகிறோம். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிஞ்சு போனபோது அதை யாரும் பிரிவினையாகக் கருதலை. அதே பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிஞ்சுபோனபோது அதையும் இவங்க பிரிவினையா கருதலை. ஸ்ரீலங்காவில் மொழி, இனம், மதம், பண்பாடு கலாசாரம், வாழ்வியல் அமைப்புகள் என்று எல்லா வழிகளிலும் தமிழர்கள் அங்கே மாறுபடுகிறோம். அதனால நாங்க தனியா ஒரு நாடு கேட்கிறதுல ஒரு பிரச்சினையும் இல்லை. 10 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கொசாவா இன்னைக்கு விடுதலை அடையும்போது நாங்க ஏன் விடுதலை அடையக்கூடாது? இதை நீங்க தமிழீழத்தில் வாழும் மக்களின் விடுதலையாகக் கருதக்கூடாது. உலகமெங்கும் பரவி வாழக்கூடிய 12 கோடி மக்களின் தேசிய இன விடுதலையாகத்தான் பார்க்கணும். உலகத்தில் எல்லா நாட்டு விடுதலைகளையும், புரட்சிகளையும் ஆதரித்த தேசங்களும், இயக்கங்களும், மனிதநேயமிக்க அமைப்புகளும் எங்கள் விடுதலையை மட்டும் தீவிரவாதமாகப் பார்க்கும் காரணம்தான் என்ன என்பது எங்களுக்கு இதுவரைக்கும் புரியவில்லை.
சர்வதேச நாடுகளை "கன்வின்ஸ்' பண்ண நீங்கள் முயற்சி எடுத்தீர்களா?
நாங்க சர்வதேச நாடுகளில் எல்லாம் போய் பேசறோம். அந்தப் பேச்சின் வடிவத்தை அந்தந்த நாட்டின் மொழிகளில் மொழிபெயர்த்து ஏடுகளில் போடச் சொல்கிறோம். அப்படித்தான் நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பி உலகத்தாரின் கவனத்தை, எங்கள் பக்கம் திருப்புகிறோம். இப்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிற இந்த இன எழுச்சி, சர்வதேசக் கதவைத் தட்டும்னு நினைக்கிறோம். உலக சமுதாயம் ஈழத்தமிழர் பற்றி ஒருமுறை மெளனமாகச் சிந்திக்கட்டும்னு நினைக்கிறோம். இந்த நெருப்பை அணையவிடாம ஏந்தி நாங்கள் எடுத்துச் செல்வோம்.
இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆயுத உதவிகள் செய்கிறதா?
இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வந்தாலும் நாங்கள் அவர்களோடு சண்டையிட்டுக் கொள்கிறோம். தமிழீழத்தில் வாழும் எல்லா மக்களும் இந்தியாவைத் தங்கள் தந்தையர் நாடென்றே கருதுகிறார்கள். தன் ஆறரைக் கோடி சொந்த உறவுகளை வைத்திருக்கிற ஒரு நாடாகவே அவர்கள் இந்தியாவை மதிக்கிறார்கள். அதனால் இந்தியா பகை நாடாக மாறுவதை தமிழர்கள் விரும்பவில்லை. இப்போது பாகிஸ்தான்காரன் ஒரு நாளைக்கு ரெண்டு கப்பல் ஆயுதங்கள் அனுப்பறான். அதை இறக்காதேன்னு சொல்லணும். விடுதலைப் புலிகளையோ அதன் தலைமையையோ அழிச்சி ஒழிச்சிட்ட பிறகு, அந்தக் கருவிகளை வைத்து சிங்களவன் என்ன செய்வான்? அங்கிருக்கிற பாகிஸ்தானியை, அமெரிக்க துருப்புகளை வச்சிக்கிட்டு என்ன செய்வான்? அந்த ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தமாட்டான்னு நீங்க எப்படி நம்புறீங்க? 70 குண்டுகளை ஒரே நேரத்தில் வீசுகின்ற ஒரு பல்குழல் பீரங்கியை பாகிஸ்தான் கொடுத்திருக்குது. அங்கே மன்னாரிலிருந்து அடிச்சா, அது மதுரையில் வந்து விழும். இது இந்தியாவுக்குத் தெரியுமா? தெரியாதா? அதனாலதான் ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றோம்.
ஆனால் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் பிரபாகரன் இருக்கிறார் என்கிறார்களே?
அது தவறு. பிரபாகரனும், ஈழ மக்களும் இந்தியாவின் மீது எத்தகைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லி மாளாது. ஆனால் இந்திய தேசத்து மீனவர்கள் 306 பேரை இதுவரை சிங்கள இராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அச்சுறுத்தல் இல்லையா? பிரதமர் சொல்லியிருக்கிறார். இனிமேல் செய்யவில்லை என்கிறார்கள். பாதுகாப்புச் செயலர் நாராயணன் முதல்வரிடம் உத்தரவாதம் தருகிறார், இனிமே நடக்காதென்று. அவர் டெல்லி போய் இறங்கவில்லை... சுட்டு வீழ்த்தி விட்டார்கள். கச்சதீவு எங்கள் சொத்து. அதில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவனை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து சுடுகிறான் என்றால், அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் இல்லையா? இதை ஏன் இந்தியா கண்டிக்கலை? உண்மையில் யார் அச்சுறுத்துவது? உன் தேசத்து மக்களை தினம் சுட்டு வீழ்த்திகிட்டிருக்கிறது இலங்கை இராணுவமா? இல்லை விடுதலைப் புலிகளா?
ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்றது விடுதலைப் புலிகள் தானே?
இந்தியா, தமிழீழம் மலர்வதை விரும்பாத ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டதால் அதற்கு எதிராக என்னென்ன செய்யலாம் என்று யோசிக்கிறது. அதற்கு ஒரு முகமூடி இருக்கிறது. அது ராஜீவ்காந்தியின் மரணம். அப்படியென்றால் ராஜீவ்காந்தியின் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்குகிறீர்களா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்; நாங்கள் அனைவரும் செத்து ஒழியத் தயார். இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். ராஜீவ்காந்தியின் மரணத்தைப் பேசுகின்ற பெருமக்களுக்கு தேசப்பிதா காந்தியின் மரணத்தைப் பற்றிப் பேச தைரியம் இருக்கா? அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குறை கூற தைரியம் இருக்கா? ராஜீவ்காந்தியின் அம்மா இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்திய சீக்கியர் பற்றி அந்த அம்மையாரின் நினைவு தினத்திலேயோ, பிறந்த நாளிலேயோ பேசுவதற்கு ஒரு காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவருக்காவது தைரியம் இருக்குதா?
காங்கிரஸ் தலைமையிலான அரசில் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கின்ற பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிப்பது இரட்டை வேடம்தானே?
இந்த மண்ணுக்கான அரசியல் வேறு; தமிழீழத்துக்கான அரசியல் வேறு. இந்த மண்ணுக்கான அரசியலை செய்து, வென்று செல்வாக்கில் இருந்தால்தான் நீங்கள் அந்த மண்ணுக்கான அரசியலைச் செய்ய இயலும். இப்போ திருமாவளவன்ற மிகப் பெரிய போராளியை நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அந்தக் கட்சியை, ஒரு சின்னம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்க்கப் போராடுகிற போராட்டமே அவருக்குச் சரியாக இருக்கு. கொள்கை அளவிலயோ, உழைப்பிலேயோ, தியாகத்திலேயோ நோக்கத்திலேயோ அவரை நீங்க யாரோடும் குறைச்சு மதிப்பிட முடியாது. ஆனா ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் அவர் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் பொதுப்பிரச்சினை என்று வரும்போது ஒன்றாகிறார்களா? ஒருமித்து வருகிறார்களா என்பதுதான் நமக்குத் தேவை.
நடிகர், நடிகைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிவித்திருக்கும் போராட்டம் பற்றி?
அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நான்தான் அதைச் செய்ய விரும்பி சரத்குமார் ஸார், பாரதிராஜா அப்பா உட்பட எல்லார்கிட்டேயும் பேசினேன். அடிப்படையில் அவங்களும் உணர்வுள்ள தமிழர்கள். அதனால் இது குறித்து நல்ல ஒரு புரிதல் இருந்தது. இது கடமை. தமிழன் காசில், உழைப்பில் தான் நாம வாழறோம். அவன் பணம் வேண்டும்; ஆனால் அவன் உயிர் வேண்டாமா என்கிற கேள்வி எழுது. சக தமிழனா இல்லைன்னாலும், சக மனுஷனா அவனது படுகொலைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது நம் கடமை.
நெய்வேலி காவிரிப் போராட்டம், ஒகேனக்கல் உண்ணாவிரதம் போன்று இதையும் சிலர் அரசியலாக்கிவிட்டால்..?
இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை, உயிர்ப் பிரச்சினை என்பதால அப்படிச் செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
சந்திப்பு: நரேந்திரா கமல்ராஜ்

சிறீலங்காவிற்கு வன்னியில் பேரழிவு - கொல்லப்பட்ட, காயம்பட்ட படையினரால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

கிளிநொச்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் வன்னியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட ஆறு முனைகள் ஊடான முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது சிறீலங்காப் படை தரப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடும் இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக சிறீலங்கா படை தரப்பை ஆதராம்காட்டி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை தமது தரப்பில் 33 படையினர் கொல்லப்பட்டதோடு, 48 பேர் காயமடைந்ததாக படைதரப்பு கூறியுள்ளது. எனினும் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக அதிகம் என மருத்துவமனைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
மன்னார் மற்றும் வவுனியா மருத்துவமனைகளில் தற்போது கொல்லப்பட்டும், காயம்பட்டும் கொண்டு வரப்பட்டுள்ள படையினரால் நிரம்பி வழிவதாகவும், இவ்வாறு நூற்றுக்கணக்கான படையினர் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது காயம்பட்ட படையினர் தரம்பிரிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஏனைய மருத்தவமனைகளுக்கு அனுப்பிவைக்க அவசர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இந்த இழப்பானது கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட மிக அதிகமான இழப்பு என சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்று வர்ணித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னேரிக்குளம் முதல் நாச்சிக்குடா பகுதி வரை, ஆறு முனைகளில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும் இழப்புக்களுக்கும் இடையில் இன்று திங்கள் வரை படையினர் வல்வளைப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுடிருக்கின்றனர் என களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில நாட்களில் கிளிநொச்சியைப் பிடித்துவிடுவோம், 48 மணி நேரத்தில் இலக்கை அடைந்துவிடுவோம் என சிறீலங்கா தரப்பு அறிவித்தக்கொண்டிருக்கும் நிலையில், கிளிநொச்சியை நெருக்க முடியாதளவிற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக ளமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய சண்டையில் தமது முழுமையான ஒட்டுமொத்த பலத்தையும் சிறீலங்கா தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கிபிர், மிக்-27 மிகையொலி தாக்குதல் விமானங்களின் குண்டு வீச்சு, எம்.ஜ 24 தாக்குதல் உலங்குவானூர்தியின் தாக்குதல்கள், பல்குழல் எறிகணைகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல், கனரக வாகனங்களின் சூட்டாதரவுடன் படையினர் பல முனைகளில் முன்னகர்வுகளை நான்கு நாட்களாக மேற்கொண்டுள்ளனர்.
சிறீலங்காப் படையினர் தனது முழுமையான சுடுதிறனைப் பிரயோகித்து, நிலங்களை ஆக்கிரமிக்கத் திட்டமிட்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. இந்த முறியடிப்புச் சமரில் 12 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட மிதிவெடி மற்றும் பொறிவெடி கொலை வலையத்தினுள் சிக்குண்டு பலர் படையினர் உயிரிழந்ததோடு, தமது உறுப்புக்களை இழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைப் படைதரப்பும் ஒத்துக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவிக்கும் அதேவேளை, தமது தரப்பில் இழப்புக்கள் அதிகம் என்றும் தெரிவித்திருந்தது. இந்தச் சண்டையில் 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நக்கீரனின் விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

ஈழத்தில் நிகழ்ந்து வரும் நெருக்கடியான நிலை குறித்து, பல்வேறு கேள்விகளை அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுக்கு ஈ-மெயிலில் அனுப்பி வைத்தோம்.
நடேசனும் நமது கேள்விகளுக்கான பதில்களை பிரபாகரனோடு ஆலோசித்து பதில்களாக்கி நக்கீரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரபாகரனின் மனம் திறந்த பதில்கள் அடங்கிய பேட்டியிலிருந்து...

1980 களுக்குப் பின்னர் தமிழகத்தில் எற்பட்டுள்ள ஈழத் தமிழருக்கு அதரவான தற்போதைய எழுச்சியான சூழல் குறித்து?
இலங்கைத் தீவில் 1983 காலப்பகுதியில் சிங்கள அரசபடைகளாலும் பேரினவாத அரசியல் தலைமைகளினாலும் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு பெரியதொரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு புலம் பெயர்ந்து அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கும் அளவிற்கு... இனப்படுகொலையின் தாக்கம் இருந்தது. அந்த கொடூரங்கள் இன்னும் மறக்க முடியாதவை. இதனைக் கண்டு தமிழகமக்களும் அரசியல் தலைமைகளும் அரசியல் வேறுபாடுகளுக்கும் அப்பால் கொதித்தெழுந்தனர். அதுபோலவே, இன்றும் சிங்கள அரச படைகள் தனது தரைப்படை, கடற்படை, விமானப் படை அகிய முப்படைகளையும் பயன்படுத்தி பாரிய அளவில் இனப்படுகொலைகளை நடத்தி வருகிறது. தினமும் மக்கள் கொல்லப்பட்டும், வாழ் விடங்களை விட்டு அகதிகளாக்கப்பட்டும் தவியாய் தவிக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு சொல்லொணா இன்னல்கள், ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் ஏற்படுகிற போதெல்லாம் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள். அவ்வாறான ஒரு சூழலே தற்போது தாய்த் தமிழகத்தில் எற்பட்டுள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம். அந்த எழுச்சியான சூழல் உங்களுக்கு பலம் சேர்க்கும். சமீபத்தில் தி.மு.க. நடத்திய சென்னை பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார் தமிழக முதல்வர் கலைஞர். அதனை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, "இலங்கையில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசின் யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு இருவார காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக நாடாளுமன்ற எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்' என்கிற நிலையை எடுத்துள்ளார் கலைஞர்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க., இத்தகைய ஆதரவான நிலையில் இருப்பது பற்றி?
தமிழக முதல்வர் கலைஞர் தமிழ் உணர்வுமிக்கவர். ஈழத் தமிழர்கள் மீது ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் கொண்டிருப்பவர். அதனை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். தமிழீழத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிய போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒங்கிக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயலிலும் காட்டி வருபவர். தற்போது, ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணா துயரம் கண்டு அத்தகைய ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது எம்மையெல்லாம் பூரிப்படைய வைத்துள்ளது. அந்த ஆதரவை நாங்கள் என்றென்றும் எதிர்பார்க்கிறோம். உங்கள் இயக்கத்தை கடுமையாக எதிர்ப்பவரும் இயக்கத்துக்கு தடைவிதிக்க காரணமாக இருந்தவரு மான ஜெயலலிதா, இருவாரங்களுக்கு முன்பு இழப் பிரச்சினையில் அதரவான நிலையை எடுத்தார். தற்போது அதை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் மனநிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தற்போது ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையின் தாக்கம், முழுத்தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்தலைவர்கள் அனைவரும் எமக்கான ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவும் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், தற்போது அதனை மாற்றிக் கொண்டிருக்கிறாரெனில்... அதுபற்றி நாங்கள் என்ன சொல்ல? உங்களின் தற்போதைய தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே. இலங்கையின் உண்மையான போர்க்கள நிலைமை என்ன?
இலங்கை அரசு, பல்வேறு வெளிநாடுகளிடமிருந்து ஏராளமான இராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. இராணுவ தளபாடங்களை வாங்கிக் குவிக்கிறது. அதனைக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எமது தாயகத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்குள் நுழைந்து கிளிநொச்சி நகருக்கு அண்மையில் சிங்கள அரச படைகள் நிலை கொண்டுள்ளன. எமது விடுதலைப் போராளிகளும் சிங்கள அரச படைகளை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த தாக்குதலில், இராணுவத்தினர் பாரிய அளவில் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஆதனால், இலங்கை இராணுவத்தினர் விமானங்கள் மூலம் தமிழர்களின் குடியிருப்புகள் மீது கண் மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்துகின்றனர். அதில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் உள்ளூரிலேயே தமது வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி அகதிகளாக நகர்ந்த வண்ணம் உள்ளனர். ஆனால், கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்பது ராஜபக்சேவின் பகற்கனவு.
இலங்கை இராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்துவரும் நிலையில், எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாத உங்களால் வெற்றி பெற்றுவிட முடியுமா?
உலகத் தமிழ் மக்களின் ஆதரவு எம்பக்கம் உள்ளது. எமது மக்கள் முற்று முழுதாக எம்மோடு இணைந்து நிற்கிறார்கள். ஒரு இனத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் மக்களின் ஆதரவும் பலமுமே முதன்மையானது. அதுதான் விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கு வழி வகுப்பதாகும். அந்த வகையில், உலக தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கிடைத்து வருவதால்... இறுதி வெற்றி எங்களுக்குத்தான். அந்த வெற்றி... தமிழர்களின் வெற்றியாக இருக்கும். போராளிகளின் எண்ணிக்கையை 3 ஆயிரமாக குறைத்து புலிகளை பலவீனப்படுத்தி விட்டோம் என்கிறதே இலங்கை இராணுவம்? எங்கள் மீது இராணுவம் நடத்தும் தாக்குதலில், சிங்கள இராணுவத்தினர் தான் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர். இந்த உண்மைகளை சிங்கள அரசு திட்டமிட்டே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் சார்பு ஊடகங்களும் அதனைத்தான் செய்து வருகின்றன. அத்தகைய அரசு சார்பு ஊடகங்கள் வழியாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டே செய்து வருகிறார் அதிபர் ராஜபக்சே. எங்களுக்கு எதிரான ஒரு கருத்தோட்டத்தை உருவாக்கும் முயற்சிதான் அதிபர் ராஜபக்சேவின் பொய்ப் பிரச்சாரம். எங்களின் இராணுவ வலிமை முன்னெப்போதும்போல் பலமாகவே இருக்கிறது. விமான குண்டுகள் மூலம் உங்களின் மறைவிடங்கள், புலிகளின் விமான ஓடுபாதை, சந்திக்கும் இரகசிய இடங்கள் ஆகியவற்றை அழித்துவிட்டதாகவும் சிங்கள இராணுவம் கூறி வருகிறதே? எங்களின் மறைவிடங்கள், விமான ஒடுபாதை எதையும் சிங்கள இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட முடியாது. இராணுவத்தினரின் கண்மூடித்தனமான விமான குண்டுவீச்சில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், மருத்துவ மனைகள், கல்விச்சாலைகள், ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. வளமான செழிப்பான காடுகள் மீது குண்டுகளை வீசி இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது இராணுவம். தமிழீழத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்காகவே, மக்களின் வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் அழித்துவிட்டு... எங்களின் மறைவிடங்களை அழித்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறது இராணுவம்.
சமீபத்தில்கூட எங்கள் அரசியல்துறை தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதே? அப்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா?
தாக்குதல் நடந்தது. ஆனால், எந்த சேதமும் எற்படவில்லை. தாக்குதல் நடந்தபோது அங்கு இருக்கவில்லை.
வடக்குப் பிரதேசத்தில் நீங்கள் பதில் தாக்குதல் எதையும் நடத்த முடியாததற்கும் உங்களின் பலவீனத்திற்கும் கருணா இல்லாததுதான் காரணம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே?
இயக்கத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணா. அவரது துரோகத்தால் இயக்கத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவர். புலிகள் இயக்கம் எப்போது அவரை நிராகரித்ததோ... அப்போதிலிருந்தே தமிழ் மக்களிடமிருந்தும் நிராகரிக்கப்பட்டவர். இயக்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இழைத்த துரோகத்தால், சிங்கள அரச படைகளின் ஒட்டுக்குழுவாக இயங்கி வருபவர். எமது மக்கள் முற்றுமுழுதாக அவரை நிராகரித்துவிட்ட நிலையிலும், எமது மக்களின் முழுபலமும் எம்மோடு இருக்கின்ற நிலையிலும்... இந்தக் கேள்வியை முழுதாக மறுக்கின்றேன்.
கருணாவை இலங்கை எம்.பி.யாக மகிந்த ராஜபக்சே நியமித்திருப்பது பற்றி?
தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப்போரை நடத்திவரும் சிங்கள அரசு, உலக நாடுகளை ஏமாற்றி இராணுவ உதவிகளைப் பெறுவதற்காகவே கருணாவை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. அதற்காக, துரோகி கருணாவிற்கு பதவி தந்துள்ளார் ராஜபக்சே. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்ததற்காக, அடக்குமுறை அரசின் தலைவர் ராஜபக்சேவால் வழங்கப் பட்ட ஒரு "கைக்கூலியாகவே அதனைப் பார்க்கின்றோம்.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவி அளித்து வருவதாக நீங்கள் குற்றம்சாட்டி வருகிறீர்கள்? அந்த அடிப்படையில் அதனை முன்வைக்கிறீர்கள்?
இலங்கை இராணுவத்தினருக்கு ஆயுதத் தளபாடங்களை இந்தியா வழங்கி வருவதாகவும் பயிற்சி அளிப்பதாகவும் பல்வேறு செய்தி ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. வவுனியா தளத்தில் ராடார் கருவியை இயக்குவதற்கான பயிற்சியை சிங்கள இராணுவத்தினருக்குக் கொடுக்க இந்திய தொழில்நுட்பவியல் வல்லுநர்கள் செயல்பட்டு வந்தனர் என்பதும் ஊடகங்கள் மூலம் உலகிற்கு அண்மையில் தெரியப்படுத்தப்பட்டது. அது எங்களுக்கு கவலையளிக்கிறது.
இலங்கை அரசு மேற்கொண்டு வரும் யுத்தம் நீடிக்குமா? அல்லது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழல் உள்ளது என கருதுகிறீர்களா?
சிறீலங்கா அரசின் அரசியல், இராணுவ நிலைப்பாடுகளைப் பொறுத்தே அவ்வாறான சூழலை எதிர்பார்க்கலாம். ஆனால், கடந்த காலத்தில் நிலைநிறுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அவர்களே தாமாக விலகியது மட்டுமல்லாமல் இராணுவத் தீர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.
இலங்கை இனப்பிரச்சினையில் எந்த மாதிரியான பங்களிப்பை இந்தியா செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எமக்கு ஆதரவு நல்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
சமீபத்தில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் துணை தளபதி ஜானக பெரேராவை உங்கள் இயக்கத்தின் தற்கொலைப்படை கொன்றுள்ளதே?
அவ்வாறான சம்பவங்களின்போதெல்லாம் எமது இயக்கத்தின் மீது குற்றம்சாட்டுவதையே வழமையான நட வடிக்கையாக வைத்திருக்கிறது சிங்கள இராணுவம். சிங்கள இராணுவத்தினருக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் அளவிற்கு முரண்பாடுகள் உள்ளன. "தற்கொலைப்படைத் தாக்குதலையும் அப்பாவி சிங்களவர்களையும் அழிக்கும் புலிகளை ஒடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கிறது' என்று இந்தியாவிடம் இலங்கை அரசு கூறிவருகிறது. அந்தநிலையில், தமிழர்களுக்குச் சாதகமான ஒரு பங்களிப்பை இந்தியாவிடம் புலிகள் எப்படி எதிர்பார்க்கலாம்? என்று இந்திய அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்களே? நாங்கள் ஒருபோதும் அப்பாவி சிங்களவர் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகிற ஒர் விடுதலை இயக்கம் எங்களுடையது. எந்தவொரு சாதாரண மக்களையும் கொல்வதால் பிரச்சினைக்கு தீர்வு எற்பட்டுவிடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பவர்கள். இந்திய அரசியல் நோக்கர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றோம். ""புலிகளின் தலைவர் பிரபாகரன் நீண்டகாலம் பதுங்கு குழியில் வாழ்ந்துவிட முடியாது என்றும் அவர் சரணடைந்துவிட வேண்டுமென்றும்'' இலங்கை இராணுவம் எச்சரித்து வருகிறதே?
பதுங்கு குழிகளில் வாழவில்லை. மக்களுடனேயே வாழ்ந்து, மக்களுக்காகப் போராடி எமது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தி வருகிறோம். கடந்த 30 வருடங்களாக சிங்கள இராணுவம் அவ்வாறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து வருவது வழமையான ஒன்று. தற்போதைய நெருக்கடியான களச்சூழலில் என்ன மனநிலையில் உள்ளீர்கள்? உறுதி தளராத நம்பிக்கையுடன் எமது விடுதலை போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் மனோவல்லமையுடன் இருக்கிறோம். கடந்த 30 வருட விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து அவ்வாறான சந்தர்ப்பங்களை யெல்லாம் எமக்கு சாதகமாக மாற்றியுள்ளோம். எங்களது உறுதி தளராத மனநிலையைப் பற்றியும் தலைமைத்துவம் பற்றியும் இந்திய அமைதிப்படையின் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்களே பாராட்டி எழுதியுள்ளனர். எந்த நெருக்கடிகளிலும் உறுதி தளராத மனோதிடம் பெற்றுள்ளோம். பிரபாகரன் வெளிநாட்டிற்கு அகதியாக தப்பிச் செல்ல முயற்சிப்பதாக இலங்கை இராணுவம் கூறி வருவது பற்றி? வழமையான பொய்ப் பிரச்சாரத்தைத் தவிர வேறில்லை.
பிரபாகரன் சரணடைந்தால் உயிரோடு இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்கிறாரே ராஜபக்சே?
ராஜபக்சேவின் பல கனவுகளில் இதுவும் ஒன்று. முப்பது வருடமாக நீடித்துவரும் இனப் பிரச்சினையில் தமிழகத்தின் பங்களிப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? எமது மக்களுக்கான விடுதலை கிடைக்கும்வரை தொடர்ச்சியான வளமையான ஆதரவை நல்கி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு செயல்பட வேண்டுமென்பது எங்களின் எதிர்பார்ப்பு.
சர்வதேச நாடுகளுடனான புலிகளின் தொடர்புகள் நீடிக்கின்றனவா? சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எங்களின் வழமையான தொடர்புகள் இருந்து வருகின்றன. இப்போதும் நீங்கள் தமிழீழக் கோரிக்கையைத் தான் ஒரு தீர்வாக முன்வைக்கிறீர்களா? அல்லது ஒரு குறைந்தபட்ச சுயாட்சிகொண்ட நிர்வாக அமைப்பாவது தீர்வாக இருக்கட்டும் என நினைக்கிறீர்களா?
1977 ம் ஆண்டு காலத்திலிருந்தே எமது மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் என்னவென்பதை ஒவ்வொரு தேர்தல்போதும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அதுதான் இனச்சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
நக்கீரன்.