தமிழில் பேச முயல்வதை விட தமிழரோடு பேச முயன்றிருக்கலாம் - உதயனின் ஆசிரியர் தலையங்கம்

கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது பொது அமர்வில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை முக்கிய பல செய்திகளை அவரது அரசின் தீவிர நிலைப்பாட்டுப் போக்கு உட்பட்ட பல விடயங்களை வெளிப்படையாகவே எடுத்தியம்பி நிற்கின்றது.
உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நாவில் போய் நின்றுகொண்டு புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துத் தங்களின் போர் வலிமையைக் கைவிட்டு, ஜனநாயக வழிக்குத் திரும்பினால் மட்டுமே புலிகளுடன் பேச்சு, இல்லையேல் யுத்தம்தான் ஒரே மார்க்கம் என்று அவர் அங்கு முழங்கியிருக்கின்றார்.
இது, அமைதி வழித் தீர்வு இனிச் சாத்தியமே இல்லையென்ற போர்ப்பிரகடனமாகக் கருதப்படவேண்டிய அறிவிப்பாகும்.
இந்தத் திட்டவட்டமான அறிவிப்பின் மூலம், அமைதி முயற்சிக்கான கதவை இறுகச் சாத்தி, வலிமையான போர்ப்பூட்டை அதற்குப் போட்டுப் பூட்டி, தீர்வு என்ற அதன் திறப்பை மீண்டும் கைக்கு எட்டவேமுடியாத பாதாளத்திற்குத் தூக்கி வீசிவிட்டார் இலங்கைத் தீவின் ஜனாதிபதி என்றே கருத நேர்ந்திருக்கின்றது.
கடந்த இரண்டரை தசாப்தகால இலங்கை அரசின் போக்கை குறிப்பாக விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை உற்றுநோக்குபவர்கள் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும்.
அது ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் நியாயமான ஒரு தீர்வு எட்டப்பட்டு அது முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படும்வரை தங்களுடைய உரிமைப் போருக்கான ஆயுத பலத்தை எந்த அழுத்தம் கருதியும் விடுதலைப் புலிகள் கைவிடவே மாட்டார்கள் என்ற யதார்த்தம்தான். அந்தக் கொள்கைப் பிடிப்பில் புலிகள் எவ்வளவு பற்றுறுதியும் திடசங்கற்பமும் கொண்டவர்கள் என்பது யாவருக்கும் புரிந்த விடயமே.
ஆகவே, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தமது போர்த்திறன்களைத் துறந்தால் மட்டுமே இனி அமைதிப் பேச்சு என்று அறிவிப்பதும்
இனிப் பேச்சே இல்லை, இனிப் போர்தான் என்று பிரகடனப்படுத்துவதும் ஒன்றுதான்.
ஐ.நா. சபையின் கடந்த வருடப் பொது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அங்கு நடந்துகொண்ட தமது செயற்பாடுகள் மூலம் தென்னிலங்கைச் சிங்களத்தை மெய்சிலிர்க்க வைத்தார்.
இலங்கையின் இதற்கு முந்தைய தலைவர்கள் ஐ.நா. பொதுச்சபை அமர்வு போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில், உலக சமூகத் தலைவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலமொழியிலேயே உரை நிகழ்த்துவது வழமையாக இருந்து வந்தது.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ கடந்த வருட ஐ.நா. பொதுச்சபை அமர்வில் முற்றுமுழுதாக சிங்களத்தில் தமக்கு நன்கு பரிச்சயமான மொழியில் முழங்கி, சிங்கள மக்களைப் பேருவகையில் ஆழ்த்தினார்.
ஐ.நா. மன்றத்திலேயே தனிச்சிங்களத்தில் முழங்கி நம் மொழிக்குப் பெருமையை உலக மன்றத்தில் சேர்த்தார் நாட்டின் தலைவர் என்று தென்னிலங்கையின் பௌத்த சிங்கள மேலாதிக்கம் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. சிங்களத்தில் பேசிய தமது அந்தப் பாவனை நடிப்பில் தென்னிலங்கையை அதிகம் மயக்கி வெற்றிகண்ட ஜனாதிபதி மஹிந்தர், அதே தந்திரோபாயத்தைத் தமிழர் மீதும் பிரயோகிக்கத் தீர்மானித்தார் போலும்!
இந்தத் தடவை ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் தமிழிலும் சில வார்த்தைகள் பேசினால் கடந்த வருடம் தென்னிலங்கைப் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை மயக்கியமை போல வடக்குக் கிழக்குத் தமிழர்களையும் மயக்கிவிடமுடியும் என்று ஆட்சித் தலைவர் பகற்கனவு கண்டிருக்கின்றார் போலும்.
அதனாலேயே சில கருத்துகளை தமிழில் எழுதி, வாசித்துப் பாடமாக்கிச் சென்று அவற்றைத் தமது நீண்ட சிங்கள உரையின் மத்தியில் தமிழில் ஒப்புவித்திருக்கின்றார் அவர்.
ஆனால் படித்த புத்திசாலிகளை அதிகம் கொண்ட ஈழத்தமிழர் சமூகம், இந்த நடிப்புக் காய்ச்சல் தந்திரோபாயத்திற்கு நசிந்து கொடுக்கவில்லை. அந்த முயற்சிக்கு எடுபடவுமில்லை.
தமிழே தெரியாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில தமிழ் வாசகங்களைச் சிங்களத்தில் எழுதிப் பாடமாக்கித் தமது நியூயோர்க் உரையில் அவற்றைப் பிரயோகித்ததும், அதற்கு அப்படியே அடிமைப்பட்டு, பரவசப்பட்டு நிற்பதற்குத் தமிழர்கள் தரப்பு ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஐ.நா. உரையில் தமிழில் பேச முயற்சித்திருப்பதை விட, தமிழர் தரப்போடு தாம் பேசுவது குறித்து ஆக்கபூர்வமான பயனுள்ள வகையில் ஒரு கருத்தைக் கூறியிருப்பாராகில் அது இலங்கைப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வைக் காண்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கும்.
ஆனால், அமைதி வழியில் அல்ல, இராணுவ வழியிலேயே தீர்வு என்று விடாப்பிடியாக பிடிவாதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதால், இத்தகைய தமிழ்ப் பேச்சு தந்திரோபாய எத்தனம்தான் அவரிடமிருந்து வெளிப்படமுடியும்.
சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?

கிளிநொச்சியில் பட்டினி அபாயம் அரச உணவுக் களஞ்சியங்கள் காலி! 3 வாரமாக நிவாரண உணவு இல்லை!! வவுனியாவிலிருந்து எடுத்து வருவதற்கு முயற்சி

போர் தீவிரமடைந்திருக்கும் வன்னியின் பிரதான மாவட்டமான கேந்திரப் பிரதேசமான கிளிநொச்சியில் உள்ள அரசாங்க உணவுக் களஞ்சியங்கள் எல்லாமே, வெறிதாகிவிட்டன காலியாகிவிட்டன. அதனால் நில புலங்களையும் வீடு வாசல்களையும் விட்டு வெளியேறி, பல தடவைகள், பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக நிவாரண உணவுப் பொருள் எதுவும் வழங்கப்படவில்லை!!
வவுனியாவில் உலக உணவுத் திட்டத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள உணவுப் பொருள்கள் எடுத்துவரப்படாவிட்டால் பலர் பட்டினியால் மாளும் மிக அபாயகரமான நிலை ஒன்று உருவாகி உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டு, உயிரைக் கையில் பிடித்துகொண்டு, மாறி மாறிப் பல இடங்களுக்குச் சென்ற மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களையும் ஏனைய உடனடித் தேவைகளையும் வழங்கி வந்த மனிதநேய சர்வதேச மற்றும் அரச சார்பற்ற தொண்டு அமைப்புக்கள் வன்னியை விட்டு வெளியேறியதன் உடனடித் தாக்கம் இதுவென்று அவதானிகள் கருத்து வெளியிட்டனர்.
ஐ.நா. சார்பு தொண்டு நிறுவனங்கள் உட்பட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அவற்றின் பாதுகாப்புக் கருதி, வன்னியை விட்டு வெளியேறவேண்டும் என்று அரசாங்கம் இம்மாதம் எட்டாம் திகதி அறிவித்திருந்தது. மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் 15 ஆம் திகதி வரை அவகாசம் விதித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், வன்னி மக்கள் தொண்டு நிறுவனங்களை வெளியேற வேண்டாம் என்று முற்றுகைப் போராட்டம் நடத்திய போதிலும் ஐ.நா.தொண்டர் அமைப்புகள் ஆகக் கடைசியாக இம்மாதம் 16 ஆம் திகதி வெளியேறின.அதன் உட னடித் தாக்கமாக நிவாரணப் பொருள்கள் கூட கிடைக்காத மிகவும் ஆபத்தான பட்டினிச் சாவு நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
மிகவும் ஆபத்தான மனிதாபிமானப் பிரச்சினை உருவெடுத்துள்ள இன்றைய நிலை குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கொழும்பு வந்திருந்த சமயம் நேற்று அவருடன் தொடர்பு கொண்டு கேட்டோம்.
அவர் நிலைமையைப் பின்வருமாறு விளக்கினார்:
கிளிநொச்சி மாவட்டத்தில் அறுபது சத வீதமான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். மொத்தம் 1,42,000 பேர் தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று தங்கி உள்ளனர்.
அரச களஞ்சியங்களில் கையிருப்பில் இருந்த அத்தியாவசிய உணவுப் பொருள்கள் முற்றாகத் தீர்ந்துவிட்டன. அதனால் நிவாரண விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் செப்ரெம்பரின் முதல் வாரத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நிவாரணம் வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.
இது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். உணவுப் பொருள்களை அனுப்ப அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரச நிவாரணம் வந்து சேர்ந்ததும் இடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க உடன் ஏற்பாடு செய்யப்படும்.
இதற்குப் புறம்பாக உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருள்கள் வவுனியா களஞ்சியத்தில் உள்ள உணவுப்பொருள்களை கிளிநொச்சிக்கு எடுத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பொருள்கள் வந்து சேரும் பட்சத்தில் மக்களின் உணவுப் பிரச்சினைகள் ஓரளவு நீங்கும்.
கிளிநொச்சிச் செயலகம், கிளிநொச்சி ஆஸ்பத்திரி உட்பட முக்கிய அரசாங்கத் திணைக்களகங்கள் தொடர்ந்தும் கிளிநொச்சியிலேயே இயங்குகின்றன. பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பல பாடசாலைகளில் இருந்து அவர்கள் வெளியேறியதால் அவை இயங்க ஆரம்பித்துள்ளன என்றார் அரச அதிபர்.

அவசர நோயாளர்களை வவுனியா அனுப்ப முடியவில்லை: கிளிநொச்சி சுகாதார பணிப்பாளர்


மாங்குளத்திற்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏ-9 நெடுஞ்சாலையில் நிலவுகின்ற போர் பதற்றமான சூழ்நிலை காரணமாக கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு அவசர நோயாளர்களை அனுப்பி வைப்பது சிக்கல் நிறைந்த பணியாக மாறியிருப்பதாக கிளிநொச்சிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கையில், நேற்றைய விமானக் குண்டு வீச்சில் காயமடைந்த இருவரை மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவிற்கு அனுப்பிவைக்க முடியாமல் போயிருப்பதாக குறிப்பிட்டார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் அனுப்பி வைக்க முயற்சித்தோம். எனினும் அவர்கள் வழித்துணை வழங்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வரும் வாரங்கள், நாட்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் உச்சக்கட்டமாக இருக்கும் - இக்பால் அத்தாஸ்


தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடமாகிய வன்னியின் கதவடியில் தற்போது இலங்கைப் படையினர் இருப்பதாகவும் அவர்கள் இந்த வாரம் கிளிநொச்சியை நோக்கி தாக்குதல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியின் 85 வீதமான மக்கள் தற்போது தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வன்னிக்கான உணவுகளை கொண்டு சுமார் 60 பாரஊர்திகள் தற்போது அங்கு செல்வதற்கு தயராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த உணவு வாகனத் தொடரணி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அதனைக் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு அச்சம் இருப்பதை உணரமுடிகிறது. எனவே ஏ 9 வீதியில் செல்லவுள்ள இந்த வாகனத் தொடரணி பின்னர், கிழக்குப்புறமாக தமது பாதையை மாற்றிச் செல்லவே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அடுத்துவரும் வாரத்தில் வன்னியில் பாரிய மோதல்கள் இடம்பெறப்போவதை உணரமுடிகிறது. மணலாற்றிலிருந்து முன்னேறும் படையினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் மோதல்கள் ஏற்படும் போது அதற்கு மாற்றாக கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்துவர் என்ற நிலை காணப்படுகிறது எனினும் இதனைத் தான் சமாளிக்கமுடியும் என படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கிழக்கில் தற்போது கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் படையினருக்கு உதவி வருகின்றனர்.

இதேவேளை வருகின்ற நாட்கள், வருகின்ற வாரங்கள் நான்காவது கட்டஈழப்போரில் பாரிய மோதல்கள் ஆரம்பமாகப் போவதையே இன்றைய களநிலவரங்கள் எடுத்துக்காட்டுவதாக இக்பால் அத்தாஸ் எதிர்வு கூறியுள்ளார்.

மட்டக்களப்பு சித்தாண்டி திகிலிவெட்டைப் பகுதியில் கருணா அணியின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்


மட்டக்களப்பு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கருணா குழுவின் முகாமொன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவருகியது.

இந்தத் தாக்குதலில் கருணா குழுவின் ஒர் உறுப்பினர் கொல்லப்பட்டதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொல்லப்பட்டவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயம் அடைந்தவர்களும் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இராணுவம் கிழக்கை கைப்பற்றிய பின்னர் கருணா குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதலாக இது கருதப்படுகின்றது.

அப்பகுதிக்கு வந்த குழுவொன்று மேற்படி அலுவலகம்மீது மேற்கொண்ட திடீர் தாக்குதல் காரணமாக அலுவலகத்தில் இருந்தக ருணா குழுவின் உறுப்பினரான கதிரொளி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மேற்படி அலுவலகத்தில் இருந்த மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதலை நடாத்தியோர் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கருணா, பிள்ளையான் அணிகளிடையேயான மோதல்கள் கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகி உள்ள நிலையில் பிள்ளையானை கருணா குழுவின் பிரதித்தலைவர் பதவியிலிருந்து கருணா நீக்கியிருப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் மினி முகாம் அமைத்திருந்தனர்.

இம்முகாம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். முகாமை தமது கட்டுப்பாட்டில் 15 நிமிடம் வரை வைத்திருந்து அங்கிருந்தவற்றினை முழுமையாக தாக்கியழித்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர்.

இதில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ரி-56 ரக துப்பாக்கிகள் - 05

பிகே எல்எம்ஜி - 01

பிகே எல்எம்ஜி ரவைகள் - 100

ஏகே ரவைகள் - 200

ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைக் குண்டுதாரி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

வவுனியா பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் எனக் கருதப்படும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 9 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 3 பெண் காவற்துறைச் சிப்பாய்கள் உள்ளிட்ட 4 காவற்துறையினரும் 3 இராணுவச் சிப்பாய்களும் காயம் அடைந்ததாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் வாகனமொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் குடாநாட்டில் படையினரின் கெடுபிடிகளினால் அல்லலுறும் அப்பாவி தமிழ் மக்கள் - கஜேந்திரன் பொன்னம்பலம் எம்.பி


யாழ்ப்பாண குடாநாட்டில் பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாக அப்பாவி தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக யாழ் நகர வீதிகளில் செல்லும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் நகரம் காணப்பட்ட போதிலும் மக்கள் எவ்வித சுதந்திரத்தையும் அனுபவிக்கவில்லை எனவும், மக்கள் பெரும் கெடுபிடிகளை எதிர்நோக்குவதாகவும் சண்டே லீடர் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும் எண்ணிக்கையிலான படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திடீரென மக்கள் குழுக்களாக பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே செல்ல வேண்டுமானால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒரு நாள் படகில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் யாழ்ப்பாண மக்கள் ஓர் திறந்வெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரால் மரண அச்சுறுத்தல் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்புக்கள் நகரீகமற்ற முறையில் ஒட்டுக் கேட்கப்படுவதாவ அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு ஆனந்த சங்கரிக்கு?


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் இடத்துக்கு மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மனைவி சுதர்சினி அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி நியமிக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.


வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார்.

தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வசந்த சமரசிங்கவை நியமிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்த்pரக் கூட்டமைப்பிடம் கோரியிருந்தது. அவ்வாறானதொரு கோரிக்கை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட போதும் அக்கட்சி பகிரங்கமாகவே அறிக்கை விட்டு அரசிலிருந்து வெளியேறியுள்ளதால் வெளியேறிய கட்சிக்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட மாட்டாதென கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கடந்த வாரம் கூடிய போது வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை தெரிவித்திருந்தார்.

இவ்வெற்றிடத்துக்கு மறைந்த முன்னாள அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயி;ன் மனைவி சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயின் பெயரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே இதுவரை அரசியலுக்கு வருவதற்கான விருப்பத்தைத் தெரிவிக்காததால்

ஆனந்தசங்கரிக்கே அந்த வாய்ப்பு செல்ல இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஆளும் அரசாங்கத்தின் வெற்றிடம் ஒன்றை ஆனந்தசங்கரி பொறுப்பேற்க மாட்டார் என என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.:

காத்தான் குடிக்கு ஆடுவிக்கச் சென்று காணாமல் போனவர் உருக்குலைந்த சடலமாக மீட்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு ஆடுவிற்கச் சென்று காணாமல் போன இரு இளைஞர்களி;ல் ஒருவர் சடலமாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை அம்பாறை நிந்தவூர்க் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் இவர்களில் ஒருவருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி ஆரையம்பகுதி பகுதியிலிருந்து கே.துஷாந்தன் (25) லோகநாதன் சுரேஷ் (16) ஆகிய இரண்டு இளைஞர்களும் ஆடு விற்பதற்காகக் காத்தான்குடிக்குச் சென்ற போது காணாமல் போயினர்.


இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியதால் இவர்களை விடுவிக்கக் கோரி ஆரையம்பதியிலும் பின்னர் மட்டக்களப்பிலும் கடையடைப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. இவர்களை ஆயுதக்குழுவொன்றே கடத்தியதாக ஆரையம்பதி மக்கள் கூறிவந்த நிலையில் காணாமல் போன இருவரில் ஒருவரது சடலம் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிந்தவூர் வைத்தியசாலைவீதிக் கடற்கரைப்பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் கரையொதுங்கியது.


சடலம் பழுதடைந்திருந்த போதிலும் துஷாந்தனின் மைத்துனர் சடலத்தை துஷாந்தனுடையது தான் என அடையாளம் காட்டினார். காத்தான்குடிப் பகுதியில் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றையவரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

கொழும்புக்கு அண்மையாக கடற்படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்

கடற்படை ரோந்துப்படகை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு மாலுமிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இலங்கை நேரப்படி இரவு எட்டு மணியளவில் கொழும்புக்கு அண்மையாக உள்ள வத்தளை கடற்பரப்பில் இடம் பெற்றுள்ளது என அறியப்படுகிறது.

இச் செய்தி எமக்குக் கிடைத்த பின்னர் இதனை உறுதிப்படுத்த முயன்றபோதும், சிறிலங்காவில் ஊடகச் செய்திகளுக்கான கட்டுப்பாட்டின் காரணமாக, இதுவரையில் அது சாத்தியமாகவில்லை. அதே சமயம் விடுதலைப்புலிகள் தரப்பிலும் இதுவரை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.

நேற்று முன்தினம் பூநகரியிலுள்ள விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் ஒன்று கூடும் முகாமை சிறிலங்கா விமானப் படையினர் தாக்கியழித்தாகத் சிறிலங்கா அரசு தெரிவித்திருந்த பின்னரே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Protests in Tamil Nadu gain momentum, Jayalalithaa extends support

In a significant move amid the building momentum in Tamil Nadu where Tamil leaders are voicing their support to the Eezham Tamils as the Sri Lankan forces intensified their attacks on Vanni, the former Chief Minister of Tamil Nadu and the Leader of All India Anna Dravida Munnetra Kazhagam, J. Jayalalithaa, Saturday extended her support to a fasting campaign being organised by the Communist Party of India (CPI). In a letter to D. Pandyan, the general secretary of the CPI in Tamil Nadu, Ms. Jayalalithaa said her party extended wholehearted support to the success of the campaign, which highlights the problems and urges to safeguard the lives, properties and the rights of the Tamils in Sri Lanka.

Ms. J. Jayalalithaa The CPI organised fasting campaign is to take place in all the district capitals of Tamil Nadu state on 02 October that falls on the date of Mahatma Gandhi's birthday.

The CPI has urged the Centre in India to pressurise the Sri Lankan government to immediately halt the killings and to return to the path of negotiations, stating that the war being waged by the Sri Lankan government is against Tamil speaking population in general and that it was not viewed as a war against a militant movement.

The leftist parties in Tamil Nadu, which aim to form a third front in the coming elections, have extended their support to Eelam Tamilas Tamil Writers Association also voiced for the rights of Eezham Tamils.

In the meantime, Dr. S. Ramadoss, the founder-leader of Pattali Makkal Katchi (PMK) in Tamil Nadu has also announced a protest on 30 September.

The president of the movement Dravidar Kazhagam (DK) K. Veeramani and Thol. Thirumavalavan, the leader of the political party Viduthalai Chiruthaigal Kadchchi (VCK), courted arrest last Tuesday along with five hundred of their cadres while attempting a rail blockade in Chennai, the capital city of Tamil Nadu, to protest against Indian aid to the Sri Lankan state.

The reports of the engagement of Indian military radar operators in the wake of an attack by the Tigers on Sri Lankan Forces Vanni Headquarters (SF-HQ) in Vavuniyaa, in which at least two Indian personnel were wounded, have fuelled the protests in Tamil Nadu against Indian military aid to Colombo against Tamils.

Jayalalithaa's letter to CPI leader D. Pandyan

நன்றி : தமிழ்நெற்.

இலங்கைத் தீவில் வாழும் மொத்த தமிழ்இனத்தின் எதிர்கால இருப்புக்கான அச்சுறுத்தல்:நிலவரம்

இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அங்கு வாழும் மக்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல் அல்ல. இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்குமான அச்சுறுத்தல்

என சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை 26.09.08 ல் தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சிறி லங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இன்று வன்னி மண்ணிலே தோற்றுவிக்கப் பட்டுள்ள மனித அவலம் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே ஒரு வகை ஆவேசத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயருமாறு நிர்ப்பந்திக்கப் பட்டமை அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்காமை, மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகளை மறுத்து வருகின்றமை, உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதைத் தடுத்து அவற்றை அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியமை, விமானக் குண்டுவீச்சுக்குளையும் இடைவிடாத எறிகணை வீச்சுக்களையும் பொதுமக்களின் குடியிருப்புக்குளை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டிருக்கின்றமை என்பன ஈழத் தமிழர்கள் மனங்களில் இத்தகைய உணர்வுகள் தோன்றக் காரணமாயின.

சிறி லங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இன்று வன்னி மண்ணிலே தோற்றுவிக்கப் பட்டுள்ள மனித அவலம் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே ஒரு வகை ஆவேசத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இரண்டு
இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயருமாறு நிர்ப்பந்திக்கப் பட்டமை அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்காமை, மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகளை மறுத்து வருகின்றமை, உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதைத் தடுத்து அவற்றை அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியமை, விமானக் குண்டுவீச்சுக்குளையும் இடைவிடாத எறிகணை வீச்சுக்களையும் பொதுமக்களின் குடியிருப்புக்குளை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டிருக்கின்றமை என்பன ஈழத் தமிழர்கள் மனங்களில் இத்தகைய உணர்வுகள் தோன்றக் காரணமாயின.

ஐ.நா. நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு சிறி லங்கா அரசு உத்தரவிட்ட போது சர்வதேசம் சீற்றம் கொள்ளும், தம்மை இனப்
படுகொலையில் இருந்து பாதுகாக்க காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம் போன்று வெற்று அறிக்கைகளை வெளியிடுவதோடு அவை தம் பணியைச் சுருக்கிக் கொண்டன.

சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் செல்வாக்கு மிக்க நாடுகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை தத்தமெக்கென தனியான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதனால் தான் உலக அரங்கில் ஒரே மாதிரியான சூழ்நிலை நிலவும் பிரதேசங்களில் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளை, செயன்முறைகளைக் கடைப்பிடிக்க அவற்றால் முடிகின்றது.

இதற்கு அண்மைய உதாரணம் தெற்கு ஒஸ்ஸற்றிய விவகாரம். ஜோர்ஜியாவே தொடக்கி வைத்த இந்த மோதலில் உயிர் மற்றும் சொத்தழிவுகளைச் சந்தித்து பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்தது தெற்கு ஒஸ்ஸற்றிய பகுதியிலேயே. ஆனால், மேற்குலகும் அது சார்ந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வரிந்து கட்டிக் கொண்டு உதவியது ஜோர்ஜிய பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களுக்கே. இங்கே வாழ்ந்த மக்கள் சந்தித்தது ஒரு சில நாட்கள் இடம்பெயர்வை மாத்திரமே. அதுவும் கூட தேவையற்ற ஒரு இடப்பெயர்வு.
ஆனால், விவகாரத்தில் அமெரிக்காவின் பரம வைரியான ரஸ்யா தலையிட்டிருந்தமை யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக இருந்தது.

மற்றுமொரு அண்மைய உதாரணம் மியன்மார். இங்கே இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே உதவுவதாகவும் வெளிநாட்டு உதவிகள் அவசியமில்லை எனவும் மியன்மார் ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தார்கள். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தாங்கள் நேரடியாகச் சென்று உதவிகளை வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தாம் பலாத்காரத்தைப் பிரயோகிக்கப் போவதாகவும் எச்சரித்திருந்தது. இது தவிர சீற்றமடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் நேரடியாக மியான்மார் சென்று ஆட்சியாளர்களுடன் பேசி இருந்தார்.
இத்தனைக்கும் மியன்மார் ஆட்சியாளர்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ அவற்றை வெளியேறுமாறு அறிவிக்கவோ இல்லை.

ஆனால், வன்னியைப் பொறுத்தவரை சிறி லங்கா உதவிகளை வழங்க மறுப்பது மட்டுமன்றி உதவி வழங்கும் நிறுவனங்களையும் அச்சுறுத்தி அப்பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றி
இருக்கின்றது. மோசமான அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள கிளிநொச்சிப் பகுதிக்கு உணவு உட்பட நிவாரணப் பொருட்கள் எடுத்துவரப் படவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ள அதேவேளை, வன்னிப் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள ஒரேயொரு சர்வதேச நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவைக் குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இப்பகுதிக்கு அனுமதிக்கப்படும் ஒன்றிரெண்டு வாகனங்களும் கூட சிறி லங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதல்களுக்கு இலக்காக வருகின்றன. இத்தகைய வாகனங்களுக்கு செஞ்சிலுவைக் குழுவின் வழித்துணை கோரப்பட்ட போதிலும் அதுவும் கிட்டவில்லை.

இத்தகைய நிலையில் வன்னியில் உள்ள மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர். சிறி லங்கா அரசு அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவது மட்டுமன்றி உணவை ஆயுதமாகப் பயன்படுத்துதல் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி
இடம்பெயரச் செய்தல், திட்டமிட்ட முறையில் இனச் சுத்திகரிப்புப் பாணியில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தல் என பல்வேறு போர்க்குற்றங்களையும் புரிந்து வருகின்றது. இவற்றைத் தட்டிக் கேட்க வேண்டிய சர்வதேச சமூகமோ வெறும் பேச்சுடன் திருப்திப்பட்டுக் கொள்ள முனைகின்றது.

இந்நிலையில் நாம் சும்மா இருந்து விடலாமா? இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அங்கு வாழும் மக்களுக்கு மட்டுமான அச்சுறுத்தல் அல்ல. இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்குமான அச்சுறுத்தல். எனவே என்ன விலை தந்தாவது அது தடுக்கப்பட வேண்டும். அந்தச் செயன்முறையில் புலம்பெயர் தமிழ் மக்களும் ஒருமுகமாக இணைந்து கொள்ள வேண்டும்.

கிளிநொச்சி மீதான தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் மக்கள் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் - மன்னார் ஆயர்

கிளிநொச்சி மீதான தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் மக்கள் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதற்காக மக்கள் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட மறை ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ராயப்பு ஜோசப் ஆண்டகை கோ?க்கை விடுத்துள்ளார்.

அளித்த செவ்வியின் போதே அவர் இவ்வாறு கோரினார்.

அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய நாடுகளினதும் ஏனைய தொண்டு நிறுவனங்களினதும் பாது காப்பைக் காரணங்காட்டி கிளிநொச்சியில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றியது. ஆனால் வன்னியில் வாழும் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

அவர்கள் இன்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வதா சாவதா என்ற மனநிலையில் அந்தரித்து நிற்கின்றனர்.

போரை நடத்தி வெற்றி பெறலாம், அரசியலை நடத்தலாம், ஆனால் அதை அனுபவிக்க மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதற்காக மக்களை பாதுகாத்தே ஆக வேண்டும்.

உணவு விடயத்தை அரசாங்கமோ புலிகளோ ஓர் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. வன்னிக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் தடை விதிக்கக் கூடாது.

மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்களால் பொதுமக்கள் அநியாயமாக பலியாகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்ற பேதமில்லாமல் கொல்லப்படுகின்றனர்.

உயிருக்குஉலை வைக்கும் இந்த மிருகத்தனமான செயலை உலக மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயல்களை தொடர அனுமதிப்பது ஆபத்தாகவே முடியும். சமாதானத்தை விரும்பும் மனித இதயம் உள்ளவர்கள் இதற்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

வன்னியில் பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்கள் கிளைமோர் தாக்குதல் நடத்தப்படுகின்றது. இதனால் சொந்த மக்களே படுகொலை செய்யப்படுகின்றனர். வவுனியா வடக்கு மாந்தைமேற்கு மடு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்துள்ளனர். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்களுமாக சுமார் மூன் றரை இலட்சம் மக்கள் வன்னியில் இருக்கின்றனர்.

அகதிகளாக வன்னிக்கு சென்ற மக்கள் இன்று மர நிழல்களிலும் குடில்களிலும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் பரிதாபகரமான நிலையிலே வாழ்ந்து வருகிறார்கள். பலமுறை இடம்பெயர்ந்த அவர்களை விமானங்களில் துரத்தி துரத்தி அடிப்பது எந்த வகையில் நியாயமாகும். இடம்பெயர்ந்த ஆண்கள் மெலிந்த உடலுடன் கைகளில் பைகளை வைத்துக் கொண்டு உணவுக்காக அலைவது மிகவும் பரிதாபகரமான நிலைமை ஆகும்.

விமானங்களைக் கண்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை தம் உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலையே இன்று வன்னியில் காணப்படுகிறது. இதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்ட மன நோயாளிகள் போலவே நடமாடி திரிகின்றனர்.

இலங்கையில் தமிழ் மாநிலம் வேண்டும் - மனோகணேசன் எம்.பி

PDF

இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து தாராளமாக ஆயுதங்களை வழங்குகின்றன;

இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அந்நாடுகள் மறைமுகமாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்று இலங்கை தமிழ் எம்.பி. மனோ கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:

இலங்கை இனப் பிரச்னை என்பது தமிழ்பேசும் மக்களின் வாழ்வுரிமை பிரச்னையாக மட்டுமே கருதப்பட வேண்டும். ஆனால், இப் பிரச்னையை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று கருதுவது துரதிர்ஷ்டமானது ஆகும்.

இலங்கையில் தமிழ் மொழி, தமிழ் மக்களுக்கு எவ்வித அந்தஸ்தும் வழங்கப்படவில்லை.

இலங்கையில் அரசுப் படையினரின் மனித உரிமை மீறல்களால், இதுவரை 75 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரில் 20 ஆயிரம் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர்.

தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்களை அரசு கட்டாயமாக தொடர்ந்து குடியேற்றம் செய்து வருகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு, சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து ஆயுதங்களையும், ராணுவ உதவிகளையும் தாராளமாக வழங்கி வருகின்றன.

இலங்கையில் தங்களது நிலைகளை வலுப்படுத்தவே இவ்விரு நாடுகளும் விரும்புகின்றன. இலங்கையில் போர் ஓய்வதையோ அல்லது அமைதி ஏற்படுவதையோ இந்நாடுகள் விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்தை இந்த நாடுகள் தொடர்ந்து நடத்துகின்றன.

எனவே, பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியா ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கக் கூடாது.

அதிகாரப் பகிர்வு திட்டம் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

தனி ஈழம் என்பது புலிகள் உள்ளிட்டோரது கோரிக்கையாக இருக்கலாம். இதை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்பட நாங்கள் ஆதரிக்கவில்லை.

இலங்கையில் தமிழ் மாநிலம் வேண்டும்:

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனில், தமிழ்நாட்டைப் போல மொழிவாரி மாநிலத்தை அமைக்க இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், இலங்கை பிளவுபடுவதை யாராலும் தடுக்க இயலாது.

இலங்கை அதிபர் ராஜபக்சய, ஐ.நா. சபையில் தமிழில் பேசினால் மட்டும் போதாது. தமிழ் மக்கள் மீதான தாக்குதலை விடுத்து அவர்களின் மனங்களை வெல்ல வேண்டும்.

தமிழர்களை இனப்படுகொலை செய்வதன் மூலம் தமிழர் பிரச்னைக்கு ராணுவத் தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. இது ஒருபோதும் வெற்றி பெறாது. இருந்தாலும், தமிழர் பிரச்சினைக்கு, தருமத்தின் அடிப்படையில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,

தமிழக மீனவர்கள் மீது புலிகள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை. இலங்கை கடற்படையினர் தான் தாக்குகின்றனர்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அடையாள அட்டை வழங்குவது சரியானது அல்ல. கச்சத் தீவை மீட்பது குறித்து தமிழகத் தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தால், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழி தமிழர்களின் பலம் நாடாளுமன்றத்தில் குறைந்துவிட்டது.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசு உதவ வேண்டும் என்றார் மனோ கணேசன்.

விமான மற்றும் தரைவழியில் - கண்மூடித்தனமான தாக்குதல்கள் - தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் திட்டமா? சம்பந்தன்


அரச படையினர் விமானம் மூலமும்இ தரையில் இருந்தும் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் எந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வாராந்த சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மக்கள் நாளுக்கு நாள்இ இடத்திற்கும் இடம் நகர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். படையினரின் தாக்குதல்களால் மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியவில்லை.

உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த மக்கள வீடுகளில் இருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் அகதிகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உறைவிடம். உணவு. குடிநீர், போன்ற அடிப்படை தேவைகளை இழந்துள்ளனர் எனவும் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல வழியின்றி இருக்கின்றனர் எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வுத் திட்டம் இல்லை. தமிழ் மக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்களை நடத்தும் திட்டமே அரசாங்கத்திடம் உள்ளதாகவும் இது தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் திட்டமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், நாட்டில் அனைத்து இடங்களிலும் இந்த நிலைமையைக் காணமுடிவதாகவும், அரசாங்கத்திடம் தீர்வுத் திட்டம் ஒன்று இல்லை என்பதுடன் அரசாங்கத்திற்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் அவசியம் இல்லை எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்வு யோனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிரானவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கின்றனா.; அதேபோல் போரை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களும் உள்ளனர். நாட்டின் இறையாண்மையின் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் அறியவில்லை.

நாட்டின் இறையாண்மையைப் போலே மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் கூறியுள்ளார். விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துகின்றனர் எனக் கூறப்படுவதை நம்பமுடியுமா என சம்பந்தனிடம் கேட்ட போது அதற்கு பதிலளித்துள்ள அவர், விடுதலைப்புலிகள் தமிழ் மக்களையும் அவர்களின் தாயகத்தையும் பாதுகாத்துக் கொடுக்கவே முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அதற்காகவே அவர்கள் தமது உயிரை துச்சமென மதித்து செயற்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மக்களை கேடயங்களாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர் என்பதை நம்பமுடியாது, இது அரசாங்கம் புனைந்த கதை எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

வன்னியில் மக்கள் கஷ்டப்படுகின்றனர், அவர்களுக்கு உண்ணவும் குடிக்கவும் எதுவும் இல்லை, கர்ப்பிணித் தாய்மாருக்கு சிகிச்சையளிக்கப்படுவதில்லை, அங்கு வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை, அவர்கள் மரண அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தாம் எப்போதும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்கப் போவதாகவும், அரசாங்கம் செய்யும் அநீதி குறித்து சர்வதேச சமூகத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.