வன்னிக்குச் சென்ற உணவு லொறிகள் ஓமந்தையில் தடுத்து நிறுத்தப்பட்டன

omanthai.jpgகிளிநொச்சி மாவட்டத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உணவுப் பொருட்களுடன் சென்ற 20 லொறிகளும் ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 11 ஆம் திகதியே கிளிநொச்சிக்கான வாகனத் தொடரணி கடைசியாகச் சென்றது. அதன் பின் இரு தடவைகள் உணவு வாகனத் தொடரணி ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்திற்குச் சென்ற போதும் அவை வழிமறிக்கப்பட்டு வவுனியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்துக்கான உணவுப் பொருட்கள் விநியோகம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வவுனியா மாவட்ட செயலகத்திற்கும் கிளிநொச்சி அரச அதிபருக்கும் அறிவித்திருந்தது.

இதனால் கடந்த 12 நாட்களாக உணவுப் பொருட்களுடன் வாகனத் தொடரணிகள் ஏதுமே செல்லாததால் அங்கு உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்ட போதும் பாதுகாப்பு அமைச்சு தடையைத் தளர்த்தவில்லை.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 20 லொறிகள் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்குச் சென்ற போதும் ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்தில் அவை தடுத்து நிறுத்தப்பட்டதுடன் வவுனியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

படை அதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே தாங்கள் இந்த லொறிகளை திருப்பியனுப்பியதாக ஓமந்தை சோதனை நிலையப் படையினர் கூறினர்.

இதனால் காலை முதல் மாலை வரை 20 லொறிகளும் அங்கு காத்திருந்துவிட்டு பின்னர் வவுனியாவுக்குத் திரும்பின.

தற்போது கிளிநொச்சியில் பெரும் போர் நடைபெற்று வருகையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலும் உணவுப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

யாழில் இளம் வர்த்தகர் சுட்டுக் கொலை

gun_ak_-47.jpgயாழ் தென்மராட்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருவர் இனந்தெரியாத ஆயுத பாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நாவற்குழி கைதடி செல்வ நகரைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பொன்னையா குணசேகரம் பாஸ்கரன் (வயது 43) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வர்த்தகரான இவர் நேற்றுப் பிற்பகல் 2.15 மணியளவில் கைதடிக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு வியாபாரநிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே ஆயுதபணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி நீதிபதி அ.பிரேம்சங்கர் மரணவிசாரணைகளை மேற்கொண்டபின் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்தச் சடலம் சாவகச்சேரிப் பொலிஸாரால் யாழ்.வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இன்று நடைபெறும் பிரேத பரிசோதனைகளையடுத்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஈழத்தமிழர் வாழ்வுரிமையை காக்க சென்னையில் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு சென்னையில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10.00மணி தொடக்கம் மாலை 5:00 மணி வரை நடந்த இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பல கலைஞர்கள் எழுச்சியோடு கலந்து சிறப்பித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் பா.செயப்பிரகாம் தலைமையேற்று நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கான பணிகளை ஒருங்கிணைத்து வரும் பழ.நெடுமாறன் உட்பட கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, நடிகர் சத்தியராஜ், இயக்குநர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.





தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில்

கவிஞர் பொன். செல்வகணபதி

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

தமிழறிஞர்களான கி.த.பச்சியப்பன், நா. அரணமுறுவல், முனைவர் தமிழப்பன், பேராசிரியர் யோகீஸ்வரன், நாடக ஆசிரியர் ந.முத்துசாமி, பேராசிரியர் மே.து.இரா.சுகுமார், பேராசிரியை சரஸ்வதி இராசேந்திரன், தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது

உலகத் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் இரா.ஜனார்த்தனம்

ம.தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா

சிறிலங்காவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இரண்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட படைப்பாளிகளின் கையெழுத்து பெறப்பட்டது.

தீர்மானங்கள் வருமாறு:

01. ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசிற்கு இந்திய அரசு இராணுவ உதவிகள் செய்து வருவதையும், படைப்பயிற்சி அளித்து வருவதையும் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அரசு நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே அனுப்பியுள்ள பயிற்சியாளர்களை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் ஒருமனதாக கேட்டுக்கொள்கின்றோம்.

02. சிறிலங்கா அரச இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் ஈழத்தமிழ் மக்களுக்கும், அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் மக்களிற்கும் டில்லி மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வழங்கி அந்த மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்ப் படைப்பாளிகள் ஒருமனதோடு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இரண்டு தீர்மானங்களும் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.





தமிழ்நாட்டில் தொடருந்து மறியல் போராட்டம்: முன்னணி தலைவர்கள் உட்பட திராவிடர் கழகத்தினர் கைது



தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த தொடருந்து மறியல் போராட்டம் தமிழ்நாடு காவல்துறையால் தடைசெய்யப்பட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அணிதிரண்டோர் அனைவரும் கைது செய்யப்பட்டதால் இன்று சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி இன்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடருந்து மறியல் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திராவிடர் கழகத்தினர் சென்னை - வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் குவிந்தனர்.

இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் போன்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வந்திருந்தனர்.



பெரியார் திடலிலிருந்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் போராட்டத்தில் பங்கேற்க வந்தோர் அணிவகுத்து, ஈ.வெ.கி.சம்பத் வீதி வழியாக உரிமை முழக்கமிட்டுச் சென்றனர். அவர்களை வழிமறித்த காவல்துறையினர் கைது செய்தனர்.

கி.வீரமணி, தொல். திருமாவளவன், பாவலர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்பு தென்னரசன், பேராசிரியர் தெய்வநாயகம், வா.மு. சேதுராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன் தொடர்ந்து அணி அணியாக போராட்டத்தில் ஈடுபட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்ட்டோரில் திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, செயலவைத் தலைவர் இராஜகிரி கோ.தங்கராசு, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்களான துரை. சந்திரசேகரன், இரா. குணசேகரன், டொக்டர் பிறைநுதல் செல்வி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாநில மாணவர் அணி அமைப்பாளர்கள் கா.எழிலரசன், றஞ்சித்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் க.திருமகள், மாநில மகளிர் அணி அமைப்பாளர் தஞ்சை கலைச்செல்வி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் கலைவாணி ஆகியோரும் அடங்குவர்.



காவல்துறை கொண்டு வந்த வாகனங்கள் போதாமையால் திருப்பித் திருப்பி வாகனங்களைக் கொண்டு வந்து ஏற்றிச் செல்லப்பட்டவர்கள் கண்ணப்பர் திடலில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மண்டபம் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டோர் நிரம்பி வழிந்தனர்.

போராட்டம் தொடங்குவதற்கு முன்னர் பெரியார் திடலுக்கு வெளியே அமைக்கப்பட்ட பந்தலில் சிறைக்குச் செல்லக் கூடியிருந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? என்பதை விளக்கித் தலைவர்கள் உரையாற்றினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங்கையில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து அங்குள்ள தமிழர்களை அழிக்கின்றனர். அவர்களின் வாழ்வுரிமையை அழிக்கின்றனர்.

பொதுமக்கள் என்று சொல்லக்கூடிய அப்பாவி மக்கள் காடுகளில் ஓடி ஒளிந்தாலும் அங்கும் சிங்கள இராணுவப் படை குண்டுவீசி அழிக்கின்றது. இலங்கையில் நடைபெறுகின்ற இதுபோன்ற இனப் படுகொலை உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்காது.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகின்றது. உலக சமாதான நாள், உலக ஒற்றுமை நாள் என்று பேசுகின்றார்களே தவிர, உலக அரங்கில் அதற்கு அர்த்தமற்ற சூழ்நிலைதான் விளங்குகின்றது.

சற்று நேரத்திற்கு முன்புகூட இலங்கையிலிருந்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், என்னைச் சந்தித்து இலங்கையில் எத்தகைய இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் கூறினார்.



இரண்டாவதாக, தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்கின்ற தமிழக கடற்றொழிலாளர்களை சிங்கள கடற்படையினர் காக்கை, குருவியை சுட்டுத் தள்ளுவதைப்போல சுடுகின்றனர். இது அன்றாடம் நடந்து வருகின்ற ஒரு தொடர்கதை போன்ற செய்தியாகி விட்டது.

மூன்றாவதாக, ஒரிசா-கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரிசாவில் தொழு நோய் சிகிச்சை செய்ய வந்த அவுஸ்திரேலிய பாதிரியார் ஸ்டூ வர்ட்ஸ் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் உள்பட பஜ்ரங் தளத்தினரால் ஜீப்பில் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

மதச்சார்பற்ற அரசாக நடந்துகொள்ள வேண்டிய அரசு மதச்சார்பற்ற தன்மையைப் புரிந்துகொள்ளாமல், இன்னமும் மதக் கலவரத்தை நடத்திக்கொண்டு வரும் பஜ்ரங் தள் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

மத்திய அரசு - வன்முறையைத் தடுத்து நிறுத்த வேண்டும். வன்முறையை செய்பவர்களை தண்டிக்க வேண்டும். உடுக்கை இழந்தவன் கை போல உதவக் கூடியவர்கள் நாங்கள். தமிழர்களுக்கு ஒரு துன்பம் என்றால் சிறுபான்மையினருக்கு ஒரு துன்பம் என்றால், உடுக்கை இழந்தவன் கைபோல உதவக் கூடியவர்கள் நாங்கள்.

மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிலங்கா அரசுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும்.

வாய்மூடி மெளனியாக இருக்கக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்வதற்காகத்தான் இந்த தொடருந்து மறியல் போராட்டம். இது முதல் கட்டப் போராட்டம். இது தொடக்கம்தான்.

இந்த தொடருந்து மறியல் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கின்றது. எனவே, கட்டுப்பாட்டுடன் நடந்து சிறைக்குச் செல்ல வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

நாம், நம்முடைய திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் அவர்களை வாழ்த்தி வழி அனுப்ப இங்கு வரவில்லை. அவரைப் பின்பற்றி அவர் வழி நடக்க இங்கு வந்திருக்கின்றோம். ஆசிரியர் அய்யா அவர்களோடு கைகோத்து களம் இறங்கி சிறை செல்ல வந்திருக்கின்றோம்.



பாவலர் அறிவுமதி

உலகத் தமிழர்களுக்கு ஒத்தடம் கொடுக்கக்கூடிய ஒரு அறப்போராட்டத்தை ஈழத் தமிழர்களுக்காகவும், இங்குள்ள தமிழர்களுக்காகவும் திராவிடர் கழகம் நடத்துகின்றது.

உலகத் தமிழர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தமிழர்களுக்கு விடுதலை எப்போது என்பதுதான். உலகத் தமிழர்களுக்கு ஆறுதலாக நடக்கக் கூடிய இந்த தொடருந்து மறியல் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து பங்கேற்க வந்திருக்கின்றனர்.

தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர் என்பதை நம்முடைய ஆசிரியர் ஐயா இந்தப் போராட்டத்தின் மூலம் எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

இயக்குநர் சீமான்

இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி. மான உணர்வு உள்ளவர்கள் திரண்டிருக்கின்றனர். ஆசியாவிலேயே மனித உரிமை மீறல்கள் இலங்கையில்தான் அதிகம் என்று ஆசிய மனித உரிமை அமைப்பு தெரிவித்திருக்கின்றது.

இரண்டு லட்சம் பேர் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். மக்கள் பட்டினியால் சாகின்றனர். ஏ-9 என்ற நெடுஞ்சாலை வழிதடத்தையும் சிங்கள அரசு மூடிவிட்டது. தமிழர்களுக்குப் பொருட்கள் கிடைத்தபாடில்லை.

இதுவரை 6 ஆயிரம் முறை சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கியிருக்கின்றது. ஒரு குண்டு எடை ஆயிரம் கிலோ. ஒரு குண்டு வீசப்பட்டால் அது பூமியை பிளந்து தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் என்றால் நம் தமிழர்கள் தலையில் விழுந்தால் என்னாவது? இதுவரை தமிழ்நாட்டைச் சார்ந்த 305 கடற்றொழிலாளர்கள் சிங்கள கடற்படையினர் கொன்றிருக்கின்றனர்.

பேராயர் எஸ்றா சற்குணம்

திராவிடர் கழகம் தொடருந்து மறியல் போராட்டம் நடத்துகின்றது என்றால், நாங்கள் வழியனுப்பி வைக்காமல் வேறு யார் வழியனுப்பி வைப்பர்? இது வெள்ளைச்சட்டை மட்டுமல்ல, உள்ளே கறப்புச் சட்டையும் இருக்கின்றது.

ஒரிசா, இராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் 100 பேருக்கு மேல் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80 ஆயிரம் பேர் ஒரிசாவில் நாட்டைவிட்டு காடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் எல்லாம் அகதிகளாக வாழ்கின்றனர்.

பஜ்ரங்தளம் போன்ற அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல ஈழத் தமிழர்களும் கொல்லப்படுகின்றனர். இதற்கெல்லாம் முடிவு காண வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில செயலாளர் எஸ்.ஏ. சையத் சத்தார்

சிறுபான்மையினர் மீது இந்துத்துவாவாதிகள் குறிவைத்துத் தாக்குகின்றனர். தமிழர்களை குறிவைத்து இனப்படுகொலை செய்கின்றனர். நாங்கள் உறங்குகின்றோம் அமைதியாக இருக்கின்றோம். எங்களை தட்டி எழுப்பி ஜனநாயகத்தை கெடுத்துவிடாதீர்கள்.

திராவிட ஆன்மீக பேரவையின் நெறியாளர் டொக்டர் தெய்வநாயகம்

இலங்கையில் நடப்பது இரண்டு இனங்களுக்கு இடையே நடைபெறுகின்ற இனப் போராட்டம். ஸ்மார்த்தர் என்ற பார்ப்பனர்களும் திராவிடர்களுக்கும் இடையே இனப் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒரு இனப்படுகொலையை நடத்தி வருகின்றார். ஒட்டுமொத்த தமிழர்களையும் அழித்து விடலாம் என்று இராணுவத்தை ஏவியுள்ளார்.

சமீபத்தில் ஒரு கொடுமை தொடங்கியுள்ளது. தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் நச்சுப் புகையை வீசிக் கொல்ல காரியங்கள் நடைபெறுகின்றது.

சிறிலங்கா இராணுவத்தினர் முகமூடி அணிந்து நச்சுப் புகையை வீசுகின்றனர். கம்பள விரிப்புபோல நாள்தோறும் சிங்கள வான்படை தமிழ் மக்கள் மீது குண்டு வீசி அழித்து வருகின்றது.

தமிழீழம் மலர்வதை யாராலும் தடுத்து விடமுடியாது. திராவிடர் கழகத் தலைவர் நடத்துகின்ற இந்தப் போராட்டம் எங்களுக்கு மன உறுதியை அளித்திருக்கிறது. மனத் தெம்பை அளித்திருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள், உலக மக்கள் உங்களைப் பார்க்கின்றனர். உங்களைப் பாராட்டுகின்றனர். அனைத்துலக நாட்டிலும் தமிழீழக் கொடி பறந்தே தீரும் என்றார்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

எமது திராவிடர் கழக தலைவர் இங்கு வைத்துள்ள மூன்று கோரிக்கைகளும் முக்கியமானவை தமிழர்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதைப் பார்த்து மத்திய அரசு ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றார்.

இறுதியாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றுகையில், "முதல் அத்தியாயம் தான் தற்போது தொடக்கப்பட்டிருக்கின்றது. தமிழர்களை பிரித்து ஆளலாம் என்று யாரும் தப்புக்கணக்கு போடாதீர்கள். தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பதை இந்த தொடருந்து மறியல் போராட்டம் அறிவித்துள்ளது. முடிவுரை இன்னும் எழுதப்படவில்லை என்றார்.

"நளினி மனுவை மறுபரிசீலனை செய்க' - தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவு.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கில் சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டு மனுவை மீண்டும் மறு பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவிட்டார்.நளினியை விடுதலை செய்ய முடியாது என்ற தமிழக அரசின் முந்தைய உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.

.
1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூருக்கு வந்தார். மனித வெடிகுண்டில் அவர் பலியானார். இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்தார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளை அரசு முன்கூட்டியே விடுதலை செய்து வருகிறது என்றும், ஆனால் 16 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் என்னை மட்டும் விடுதலை செய்யவில்லை என்றும் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் நளினி கூறியிருந்தார்.

நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும் ஆலோசனை கமிட்டி அதை பரிசீலிக்காமலேயே என்னை விடுதலை செய்ய மறுத்துவிட்டது என்று மனுவில் கூறியிருந்தார். இதேபோல, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். கடுமையான குற்றங்கள் செய்த ஆயுள் தண்டனை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. வக்கீல்கள் விவாதம் முடிந்ததால் வழக்கின் தீர்ப்பை கடந்த 19ந் தேதி நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்த வழக்கில் இன்று நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பின் விவரம் வருமுõறு:
நளினி முன்கூட்டியே விடுதலைக் கோரி தாக்கல் செய்த மனுவை ஆலோசனை கமிட்டி சிறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கவில்லை.

இந்த வழக்கில் நன்னடத்தை அதிகாரியானவர் நளினியை முன்வட்டியே விடுதலை செய்யலாம் என்று கூறியிருந்தும் ஆலோசனை கமிட்டி அதனை நிராகரித்ததற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.

அதனை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு நளினியை விடுதலை செய்ய முடியாது என்று உத்தரவிட்டது சரியானது அல்ல. எனவே அரசின் உத்தரவை ரத்து செய்கிறேன்.
ஆலோசனை கமிட்டி சிறை விதிகளுக்குட்பட்டு மீண்டும் ஒன்று கூடி நளினியின் கோரிக்கை மனு மீது முடிவு எடுக்க வேண்டும். அப்போது அனைத்து அம்சங்களும் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

பிறகு ஆலோசனை கமிட்டியின் பரிந்துரையின்பேரில் அரசு சட்டவிதிகளுக்குட்பட்டு நளினியை விடுதலை செய்வது குறித்தோ அல்லது மறுத்தோ முடிவெடுக்கலாம். மீண்டும் தண்டனை குறைப்பு செய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவின்படி கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.

இந்த நளினியின் கோரிக்கை மீது முடிவெடுக்க மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது. இவ்விஷயத்தில் அரசும் கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

வன்னிப் பகுதியில் தொடர்ந்தும் நிலைமை பதற்றமாகவே உள்ளது - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது


வன்னிப் பகுதியில் தொடர்ந்தும் நிலைமை பதற்றமாகவே இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இரண்டு கிழமைகளில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் 80 சடலங்களைப் பரிமாற்றியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பிரதித் தலைவர் அன்டனி டல்செல் கூறினார்.

வன்னியில் தொடர்ந்தும் பதற்றத்துடன் கூடிய சூழ்நிலை இருப்பதால் இரண்டு தரப்பிலிருந்தும் நாளாந்தம் பாதுகாப்பு உத்தரவாதம் கோரியே தமது பணிகளை முன்னெடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். வன்னியிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் முற்றாக வெளியேறியுள்ள நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாத்திரம் அங்கிருந்து செயற்பட்டு வருகிறது.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இரண்டு தரப்பிலிருந்தும் கூடுதலான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

“இலங்கையில் ஆயுத மோதல்கள் தொடர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச மனித உரிமைகள் சட்டம் அவர்களுக்கான அச்சுறுத்தலைக் குறைத்துள்ளது” என டல்செல் கூறியுள்ளார்.

“மோதல்களால் பாதிப்புக்குள்ளாகும் இடங்களிலுள்ள மக்களின் மனிதநேயத் தேவைகள் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அவதானித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அதிகரித்திருக்கும் வன்முறைகளால் பாதுகாப்புக் குறித்துக் கவனம்செலுத்தவேண்டியுள்ளது. எனினும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இரண்டு தரப்பினருடனும் நாளாந்தம் தொடர்புகளை ஏற்படுத்திவருகிறது. இதன் மூலம் இரண்டு தரப்பிலிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு அமைய களநடவடிக்கைகள் அமைந்திருக்கும்” என்றார் அவர்.

வன்னியில் மனிதநேய நிலைமைகள் குறித்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் கண்காணிக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பிரதித் தலைவர் அன்டனி டல்செல் கூறினார்.

பசில்ராஜபக்சவும் ஜேவிபி உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்காவும் பாராளுமன்றத்தில் குத்துச்சண்டை

தேசத்தைக் கட்டியெழுப்பவதற்கான அமைச்சர் பசில் ராஜபக்சவும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசநாயக்காவும் பாராளுமன்றத்தில் கோப் தொடர்பான கூட்டத்தின் போது கட்டிப் புரண்டு மோதிக் கொண்டனர். கண்கண்ட சாட்சியங்களின்படி, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து குத்துச் சண்டை வீரர்கள் போல மோதிக் கொண்டனர்.

எனினும் அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பிடித்து பிரித்து விட்டுள்ளனர். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அநுர குமார திசநாயக்காவுக்கு ஆதரவளித்தனர்.

எனினும் இந்தச் சச்சரவின் போது ஆச்சரியத்தக்க விதத்தில் பசில் ராஜபக்சவுக்கு அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவளிக்காமல் அமைதி காத்து இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதியின் சகோதரர் என்பதும் நிழல் ஜனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமலையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல்: 2 பேர் பலி; 2 பேர் காயம்

திருகோணமலை மாவட்டம் திமிலக்கடவை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

திமிலக்கடவையில் உள்ள பத்ரகம பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் வாகனத் தொடரணி சென்று கொண்டிருந்தது.

இந்த வாகனத் தொடரணி மீது நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணியளவில் விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் இராணுவத்தினரின் பிக்கப் ஊர்தி கிளைமோரில் சிக்கியது.

இதில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

வன்னி மக்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள்? எங்களிடம் தாருங்கள் வழங்குகின்றோம்! நோர்வேயிடம் ஜனாதிபதி இப்படித் தெரிவிப்பு

வன்னியில் இராணுவ நடவடிக்கையில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை அரசினூடாக முன்னெடுக்குமாறு நோர்வேயை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்த வேளையே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வன்னி மக்களுக்கு உதவுவதற்காக அரசு உறுதியான திட்டமொன்றை வகுத்துள்ளதால் அந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளை அரசினூடாக முன்னெடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியிலுள்ள மக்களுக்கு எதாவது உதவிகளைச் செய்வதற்கு நோர்வே விரும்பினால் அந்த உதவிகளை இலங்கை அரசிடம் கொடுக்கலாம். நாங்கள் அதனை அவர்களுக்கு வழங்குவோம் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்தார் ஜனாதிபதி.
இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதியின் அணுகுமுறை குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் கிழக்கில் அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் அதன் கொள்கைகளைப் புலப்படுத்துகின்றன என்றும் ஜனாதிபதி நேர்வே முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அவர்கள் தொடர்ந்தும் பொதுமக்களைப் பணயக்கைதிகளாகத் தடுத்துவைத்துள்ளனர் எனவும் ஜனாதிபதி நோர்வேயின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார் என்று அவரது அதிகாரிகள் தெரிவித்தனர்

தமிழர் சுயநிர்ணய உரிமை, தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரித்தானிய தொழில்கட்சி மாநாட்டில் உரை


பிரித்தானிய தொழில்கட்சியின் தமிழர்களின் தலைவர் சென்.கந்தையா அவர்கள் திங்கட்கிழமை பிரித்தானிய தொழில்கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையில் தொழில்கட்சி, சிறீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளும் அதிகரித்த மனித உரிமை மீறல்களையும்

மற்றும் சிறீலங்காவின் அரசியல் கொள்கைகளில் வெற்றிபெற்று அரசமைக்கும் அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் யாப்புமுறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றி இருப்பதுவுமே சிறீலங்கா இனமுரண்பாடுட்டுக்கு முக்கிய காரணமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ் மாநாட்டில் சுமார் 10 000 ற்கு மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தமையும் இவ்மாநாடு பி.பிசி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டுட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

அவரது உரையில் குறிப்பிட்ட விடயங்களாவன:
வடக்கில் சிறீலங்கா அரசாங்கம் இனப்படுகொலைகளை புரிவதாகவும் இதனால் பொதுமக்கள் பெருமளவு இன்னலுறுகின்றார்கள் உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ளார்கள் உணவு, மருந்து, பாதுகாப்பான உறைவிடம் இன்றி அல்லலுறுகிறார்கள்.

உலகத்தின் கண்கள் அதைபார்க்காமல் இருக்கின்றன ஒருதர் கூட அவர்களின் கதைகளை கூறவில்லை.

சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவ அடிப்படையிலேயே தீர்வு காணமுனைகிறது. உண்மையில் அங்கு நடைபெறுவது அரசியல் பிரச்சனையா? எமது தமிழர்கள் நீதிக்காகவும் சமஉரிமைக்காகவும் அமைதீயான முறைகளில் போராடினார்கள் எமக்கு வழங்க வேண்டிய நீதிக்கு பதிலாக எமது நீதிக்கான குரல்கள் அவை ஆயுதமுனையில் அடக்கப்பட்டன இதனையடுத்தே தமிழர் தாயகத்துக்கான குரல்கள் மேலும் மேலும் வலுப்பெறத்தொடங்கின. ஆயுதமுனையில் அடக்கமுற்பட்ட எமது நீதிக்கான குரல்களுக்கு வேறுமார்கமின்றியே ஆயுதமேந்தி போராடவேண்டிய நிர்ப்பந்தமேட்டது. கடந்த 30 வருடங்களில் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் தமது உயிர்களை இழந்துள்ளார்கள்.

ஆகவே நான் உங்களை கேட்பது நாட்டின் வடக்கு கிழக்கில் சிறீலங்கா அரசால் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுக்கு ஆதரவு வழங்குங்கள் எனவும் சிறீலங்காவின் அரசியல் கொள்கைகளில் வெற்றிபெற்று அரசமைக்கும் அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் யாப்புமுறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றி இருப்பதுவுமே சிறீலங்கா இனமுரண்பாடுட்டுக்கு இதுவே முக்கிய காரணமாகும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை பேணுவது தேவையானதும் அவசியமானதுவும் எனவும் அதனை பாதுகாப்பதற்கு சிறீலங்காவில் தமிழர் தேசம் அமையவேண்டும் என்பதையும் பிரித்தானிய தொழில்கட்சி உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டில் பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மில்பாண்ட், பிரித்தானிய சர்வதேச அபிவிருத்திநடவடிக்கைகளின் செயலர் டக்லஸ் அலெக்ஸ்சாந்தர், ஐரோப்பிய வர்த்தக ஆணையாளர் ஹொன் பீற்றர் மண்டெல்சன் மற்றும் மூத்த தொழில்கட்சி பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகபிரமுகர்கள், முன்னார் அமைச்சர்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

நோர்வே அமைச்சர் எரிக்சொல்கெய்மை இலங்கை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே சமாதான பிரதிநிதி யோன் ஹான்சன் பவர் ஆகியோரை நேற்று முன்தினம் நியூயோர்க்கில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹோன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலங்கையின் தற்போதைய யுத்தம், மற்றும் பொருளாதார நிலவரங்கள், எதிர்கால சமாதான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பும் வடக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சொல்ஹெய்ம் அழுத்தம் கொடுத்ததாகவும், இறுதியில் இரண்டு பேரும் இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி – எரிக் சொல்ஹெய்மிற்கிடையில் நடைபெற்ற இந்த திடீர் சந்திப்பை அடுத்து, வடக்கில் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையும் ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (24) நியூயோர்கில் கலந்துரையாடுவது என தீர்மானித்துள்ளனர்.

இதன் போது கிளிநொச்சியில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு உடனடியாக தெரியப்படுத்துவது எனவும் இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளதாக தூதரக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அதிகரித்து வரும் யுத்த நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இணைத்தலைமை நாடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) தீர்மானித்தன. இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.

தற்கொலைத்தாக்குதல்கள் - வெடிகுண்டுக்குப் பின்னால் உள்ள பெண்மணி


International Herald Tribune இல் வெளியான தற்கொலைத்தாக்குதல்கள்-வெடிகுண்டுக்குப் பின்னால் உள்ள பெண்மணி' என்னும் கட்டுரையின் தமிழ் வடிவம் இது.
இதனை எழுதியவர் Lindsey O'Rourke

இவர் அரசியல் விஞ்ஞானத்தில் கலா நிதிப்பட்டம் பெறுவதற்காக சிக்காகொ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இக்கட்டுரை தொட்டுச்செல்கிற மிக முக்கியமான சில விடயங்கள் கருதி இதனை மொழிபெயர்க்க விரும்பினேன்.

தற்கொலைப்போராளிகள் பற்றி இக்கட்டுரை ஆழமான பார்வையை கொண்டிராத போதும் அமெரிக்க நலனில் இருந்து பிரச்சனையை அணுகுகின்ற போதும் பெண் தற்கொலைப் போராளிகளின் விளைதளங்களான இரண்டு அம்சங்களை சுட்டுகிறது.


1. அந்தந்த நாடுகளில் நிலவும் பெண் ஒடுக்குமுறைகள்.
2.அன்னிய ஆக்கிரமிப்பு

கட்டுரையில் சில பகுதிகளை தடிப்பாக்கி நிறமுட்டியிருக்கிறேன்
அழுத்தம் தருவதற்காக.

மொழி பெயர்ப்பும் குறிப்பும்
தேவ அபிரா
21.09.2008


தற்கொலைத்தாக்குதல்கள் - வெடிகுண்டுக்குப் பின்னால் உள்ள பெண்மணி:

இந்தக் கிழமை மேலும் நான்கு ஈராக்கிய பெண்கள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இந்த வருடத்தில் பெண் தற்கொலையாளிகள் மேற்கொண்ட 27வது தாக்குதல் இதுவாகும்.
பத்திரிகைகளை அல்லது தொலைக்காட்சிகளை அவதானிப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் இப் பெண்களின் தற்கொலைப்பயங்கரவாதத்தின் வேர்களைப்பற்றித் தெளிவற்ற கருத்தை அல்லது தவறான அபிப்பிராயத்தையே கொள்ளும்படி வழிநடத்தப்படுவது புலனாகிறது.

இந்தப் பெண்கள் விரக்தியினால், மனநோயினால், சமய அடிப்படையில் உண்டான ஆணாதிக்கக் கருத்துக்களின் ஆதிக்கத்திற்குட்பட்டதால், பால்ரீதியிலான சமமின்மையால் உண்டான விரக்தியினால், மேலும் பெண் என்பதால் இருக்கக் கூடிய சிறப்பான ஒடுக்குமுறைக்காரணிகளால் பயங்கரவாதிகளாக மாறியதாகக் கூறப்பட்டிருக்கிறோம்.

உண்மைதான்! இங்கு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரே கருத்து என்னவெனில் ஆணையும் பெண்ணையும் தற்கொலைக்கொலையாளிகளாக மாற்றுகின்ற உந்துணர்வு அடிப்படையில் வேறுபட்டதாகும். ஆயினும் இங்கு முக்கியமான பிரச்சினை என்னவெனில் பெண்களைத் தற்கொலையாளிகளாக மாற்றுகிற குறிப்பான பெண்ணியக் காரணிகள் இவை எனச் சுட்டிக்குறிப்பிடுவதற்கு ஆதாரங்கள் மிகக்குறைவு அல்லது இல்லை எனலாம்.

1981 ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த தற்கொலைத் தாக்குதல்களை நான் அவதானித்து வந்துள்ளேன்.ஆப்கானித்தான், இஸ்ரேல், இந்தியா, லெபனான், பாகிஸ்தான், ரஸ்சியா, சோமாலியா, இலங்கை, துருக்கி மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களையே குறிப்பிடுகிறேன். இங்கே குறிப்பிட்ட நாடுகளில் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட அப் பெண்களின் நோக்கங்களை அறிவதற்காக மேற்குறித்த தாக்குதல்கள் பற்றிய தரவுகளை, தற்கொலைப் பயங்கரவாதம் தொடர்பான சிக்காகோ ஆய்வுத்திட்டத்தின் தரவுக்கோவையில் உள்ளடக்கப்பட்டிருந்த, அதுவரை அறியப்பட்டிருந்த பெண் தற்கொலைத் தாக்குதல் பற்றிய விபரங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தேன். இந்த ஆராட்சி என்னை தெளிவான ஒரு முடிவுக்கு இட்டுச் சென்றது.

தற்கொலைத் தாக்குதலுக்கு பெண்ணைத் தூண்டுகிற பிரதான உந்துணர்வுகளும் சூழ்நிலைகளும் ஆண்களை அதே வகையான (தற்கொலைத் தாக்குதலுக்கு) தாக்குதலுக்கு தூண்டுகிற காரணிகளில் இருந்து பெருமளவில் வேறுபட்டதாக இருக்கவில்லை. ஆயினும் பெண் தாக்குதலாளர்களை ஆட்சி செய்யும் பரிமாணங்களைப் புலனாய்வு செய்வது இவ்வகையான தாக்குதல்கள் பற்றிய தவறான கருதுகோள்களைத் திருத்திக் கொள்ள உதவுவதுடன் பொதுவில் தற்கொலைப் பயங்கரவாதத்தின் முக்கியமான பண்புகளை இனம் கண்டுகொள்ளவும் உதவும்.

இது தொடர்பாக ஆரம்பிப்பதற்கு எளிமையான- இது பெண் தாக்குதல்காரர்களினது எனப் பொதுமைப்படுத்தப்படக்கூடிய அவர்களது எண்ணிக்கை, வயது இயல்புகள் குணாதிசியங்கள், நோக்கங்கள், சமூகநிலை போன்ற அம்சங்கள் ( Demographic profile) அவர்களிடையே இல்லை.

1980 களில் லெபனானில் இருந்து இஸ்ரேலை வெளியேற்றுவதற்காக தற்கொலைத் தாக்குதல்களை ஆரம்பித்து வைத்த திருமணமாகாத இடதுசாரிகளில் இருந்து, தங்களது கணவர்மார்களைப் போர்களில் இழந்த செச்சென்யாவின் கறுப்பு விதவைகள் என அழைக்கப்பட்ட பெண் தற்கொலைத் தாக்குதலாளிகளில் இருந்து, இலங்கையின் பிரிவினவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் நீண்டநாள் அதிதீவிர விசுவாசிகளான பெண் தற்கொலை போராளிகள் வரை எல்லாருமே கருத்தியலிலும் தனிமனித அனுபவங்களிலும் மிக வேறுபட்ட வாழ்க்கை வரலாற்றுக்குறிப்புகளையே வெளிப்படுத்தி நிற்கிறார்கள்.


செய்திகளை சுவாரசியமாக்குவதற்கும் வாசகர்களை ஆர்வப்படுத்துவதற்கும் (மேலும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தினை கோடிட்டுக் காட்டுவதற்காகவும் தாக்குதல்களில் ஈடுபடும் இவ்விளம் பெண்களை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் எனவும் இத்தாக்குதல்களை மேற்கொள்ளும்படி பலவந்தப்படுத்தப்பட்டவர்களாகவும் கதைகளிலும் செய்திகளிலும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆனால் இவ்வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகச்சிலவே! உதாரணமாக தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் பெண்கள் தங்களது நடு இருபது வயதுகளைக் கடந்தவர்களாகவும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடும் ஆண்களை விடவும் வயது கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் பெண்கள் பலவந்தப்படுத்தப்பட்டே தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற கூற்றும் மிகையானதாகவே இருக்கிறது. உதாரணமாக பக்தாத் பொம்மைச் சந்தையில் பலரைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொன்ற இரு பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என நன்கு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் பிற்பாடு அது அவ்வாறில்லை என அறியப்பட்டது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை இது தொடர்பில் குற்றம் சொல்வதும் சூழ்நிலைகளுக்குப் பொருந்தாத வாதமாகும்.


1981ம் ஆண்டில் இருந்து தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட பெண் போராளிகளுள் 85 வீதமானவர்கள் மதசார்பற்ற நிறுவனங்களின் சார்பிலேயே தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்பது மட்டுமல்ல இவர்கள் கிறிஸ்தவ மற்றும் இந்துக் குடும்பங்களிலேயே பிறந்து வளர்ந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
மேலும் இஸ்லாமியக் குழுக்கள் பொதுவில் பெண்கள் தற்கொலைப் போராளிகளாக உருவாகுவதை ஊக்குவிக்கவில்லை என்பதுடன் மிகத் தவிர்ப்பான சூழ்நிலைகளில் மிகக் கோபமும் தாக்கவேண்டும் என முனைப்பும் உறுதியும் கொண்டிருந்த சிலரையே தற்கொலைத்தாக்குதலாளிகளாக அனுமதித்தனர்.


2000 ம் ஆண்டு இரண்டாவது இன்ரிபாடா (Intifada) வின் ஆரம்பத்தில் கமாஸ் இயக்கத்தின் ஆரம்ப ஸ்தாபகரான சேக் அகமட் யாசின் பின்வருமாறு கூறினார்: 'பெண் தற்கொலைப் போராளி என்னும் கருத்து இஸ்லாமிய சமூகத்திற்குப் பிரச்சினை தரும் விடயம். பெண்னை இத்தகைய தாக்குதல்களுக்கு சேர்த்துக் கொள்பவர்கள் இஸ்லாமியச் சட்டங்களை மீறுகிறார்கள்.


2002ம் ஆண்டு சமய சார்பற்ற அமைப்பான அக்ஸ் தற்கொலைப் படை (Aqsa Martyrs Brigade) ) சார்பில் குண்டுத் தாக்குதலை நடாத்திய இரண்டாவது பலஸ்தீனப் பெண் போராளியான தாரின் சுபு எய்சேக் (Dari abu Eisheh) இனை கமாஸ் நிராகரித்திருந்தது.
ஆக பெண் தற்கொலைப் போராளிகளை தூண்டுவது எது?.


ஆச்சரியப்படத்தக்க வகையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஆண்களை ஈடுபடத் தூண்டுகிற அதே விடயங்களே பெண்களையும் ஈடுபடத் தூண்டுகின்றன.
95 வீதமான தற்தொலைத் தாக்குதல்கள் அந்நிய ஆக்கிரமிப்புப் படைகளுக்தெதிரான இராணுவத் தாக்குதல்களின் நிமித்தமே செய்யப்பட்டுள்ளன. இதனை நான் மேலெழுந்தவாரியான ரீதியில் சொன்னாலும் இத்தாக்குதல்களின் தந்திரோபாய ரீதியான தர்க்கவியல் தங்களது இன ரீதியான பிரதேச இறையாண்மையை உருவாக்குதல் அல்லது தக்கவைத்தல் என்பதாகவே இருக்கிறது. இத்துடன் தொடர்புடையதாக ஆண் மற்றும் பெண் தற்கொலைப் போராளிகளின் முதன்மையான தனிமனித உந்துணர்வாக இருப்பது அவர்களின் சமூகம் மீதான ஆழமான பற்றுறுதியும் எதிரிப்படைகளின் மீது கொண்டுள்ள பல்வேறு தனிப்பட்ட வெறுப்பணர்வுகளும் ஆகும்.


பயங்கரவாத இயக்கங்கள் ஆண்களினதும் பெண்களினதும் தனிப்பட்ட இத்தகைய உந்துணர்வுகளை நன்கு அறிந்து வைத்துள்ளன. இதனடிப்படையில் அமைந்த ஆட்சேர்ப்புத் தந்திரோபாயங்கள் பெண்களை முதன்நிலைப்படுத்தி நிற்கின்றன. இந்த ஆட்சேர்ப்புத் தந்திரங்கள் பல வாதங்களை- இன்னும் ஒன்றுடன் ஒன்று முரண்படுகிற வாதங்களை முன்வைக்கின்றன. சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெண்கள் அதற்கெதிரான ஒரு பெறுமதியான மதிப்புமிக்க பங்களிப்பைத் தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் செய்வதாகக் கூறப்படுகிறது. தேசியத்தில், சமயத்தில், சமூகத்தில் பெண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தை மீறுவதன் மூலம் ( தற்கொலைத் தாக்குதல் மூலம்) பழிவாங்குவதன் மூலம் பெண்களுக்கு மதிப்பளிக்கப்படுதிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. எதுவாயினும் தந்திரோபாய ரீதியான மூல நோக்கம் அந்நியப்படைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தலென்பதாகும் எனவே மூலவுபாயத்துடன் முரண்படாத எந்தவொரு உந்துணர்வும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

எல்லா மதசார்பற்ற இயக்கங்களும் ஆரம்பத்திலேயே அடிக்கடி தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பெண் போராளிகளைப் பயன்படுத்தி இருந்தனர். உதாரணமாக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் 76 சதவீதமான தற்கொலைப்போராளிகள் பெண்கள். இதேபோல செஸ்னியாவின் பிரிவினவாத குழுக்களின் 66 வீதமான தற்கொலைப் போராளிகள் பெண்கள். சிரியாவின் தேசிய சோசலிச கட்சியின் 45 வீதமான தற்கொலைத் தாக்குதலாளிகள் பெண்கள். விடுதலைப் புலிகளினது சதவீதம் 25 ஆகும்.


சமய ரீதியான குழுக்கள், சமய ரீதியற்ற குழுக்களின் பெண் தற்கொலைத் தாக்குதலாளர்களின் வெற்றிகளை அவதானித்த பின்னரே தற்கொலைத் தாக்குதல்களில் பெண்களை ஈடுபடுத்துவதில் உள்ள தந்திரோபாய முக்கியத்துவத்தை உணர்ந்தன.
உதாரணமாக 'உம் ஒசாமா' ((Um Osama) எனத் தன்னை அழைத்துக் கொண்ட அல்கைடாவின் பெண் பிரதிநிதி ஒருவர் சவுதி அரேபியாவின் பத்திரிகை ஒன்றுக்கு 2003ம் ஆண்டு வழங்கிய பேட்டியொன்றில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் பலஸ்தீன இளம் பெண் போராளிகள் நடாத்திய தாக்குதல்களினால் கிடைத்த வெற்றிகளில் இருந்தே பெண் தற்கொலைக்கொலையாளிகள் பற்றிய கருத்தாக்கம் எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஏன் பெண்களை உபயோகிக்க வேண்டும்?

இந்த தாக்குதல்கள் நிகழ்கிற இடங்களில் உள்ள சமூகங்களில் பெண்ணின் நடத்தைகள் தொடர்பான விதிகள் அல்லது ஒழுங்குகள் இருக்கின்றன. உண்மையிலும் அவ்வாறு தோன்றாவிடினும் இவ் விதிகள் அல்லது ஒழுங்குகள்தான் பெண் தாக்குதலாளர்களை உருவாக்கும் தந்திரோபாய மூலமாக இருக்கிறது.


அனேகமான இந்நாடுகளில் பெண்கள் இரண்டாம் தரப்பிரசைகளாகவே இருக்கின்றனர். பெண்கள் இராணுவக் கண்ணோட்டத்தில் குறைந்தளவு சந்தேகப்பார்வைக்குள்ளாகின்றனர். மேலும் பெண்களால் வெடிபொருட்களை இலகுவாக மறைத்துக் கொள்ளவும் முடிகிறது. 'பெண் தாக்குதலாளர்கள் என்பது இன்னும் அதிர்ச்சிக்குரிய விடயமாக இருப்பதுடன் பெண் தாக்குதலாளர்கள் செய்தி ஊடகங்களின் குறிப்பான கவனத்தை ஈர்ப்பவர்களாகவும் அமைகின்றனர். இதன் மூலம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களையும் ஈர்க்க முடிகிறது.


இவ் எண்ண ஓட்டத்தில் எனது ஆராட்சியில் இன்னுமொன்றும் புலனாகியது. தனியொரு இலக்கை அல்லது ஒருவரைத் தாக்கி அழிப்பதற்கு ஆணைவிடப் பெண் தற்கொலைத் தாக்குதலாளரைப் பயன்படுத்தும் உத்தியே அது. இதற்கு உதாரணமாக மிகப்பிரபலமான தற்கொலைத்தாக்குதலான 1991ம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியான ராஜுவ் காந்தி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலைக் குறிப்பிடலாம். இது விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளியான தேன்மொழி ராசரத்தினம் என்பவரால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

ஆக ஈராக்கில் பெருகி வரும் பெண் தற்கொலைத் தாக்குதல்காரர்களிடம் இருந்து எப்படி பாதுகாப்பை பலப்படுத்துவது?


தர்க்க ரீதியாகப் பார்த்தால் பாதுகாப்பு முனைகளில் பெண்களை மிகக்கவனமாகச் சோதிப்பது முதற்படியாக இருக்கும். இதற்கு இணையாக அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் 'ஈராக்கின் புதல்விகள்' என்னும் திட்டத்தையும் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் ஈராக்கில் பெண்களுக்கு பெண்களைச் சோதனையிடுவதற்கு பயிற்சி வழங்கும் முயற்சியில் உள்ளனர். இதன்மூலம் பெண் தாக்குதலாளர்களை இலகுவாக அடையாளம் காணமுடியும் என்பது நோக்கமாகும்.


ஏவ்வாறெனினும் இத்திட்டம் திட்டவட்டமான விளைவுகளை தருமென்பதற்கு எந்த உறுதியுமில்லை என்பதற்குப் பின்வரும் மூன்று விடயங்களும் ஆதாரமாகும்.
முதலாவது இத்திட்டம் மிகச்சிறியதாகவும் 30 பெண்களே இப்பயிற்சியை முடித்து வெளியேறியும் உள்ளனர். மேலும் இவர்கள் ஒரு மாதத்தில் சில நாட்களே வேலையில் ஈடுபடுகின்றனர்.


இரண்டாவது அந்நியப் படைகளுக்கெதிரான கோப உணர்வே இத்தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூலவேராக இருக்கும் போது ஈராக்கில் பெண்களது தேசாபிமானத்தை மேற்குறித்த திட்டத்தின் மூலம் விலைக்கு வாங்க முற்படுவது இன்னும் ஆத்திரமூட்டும் செயலாகவே இருக்கும்.


மூன்றாவது கடுமையான பாதுகாப்புக் கட்டமைப்புக்கு எதிராக புதிய தந்திரோபாயங்களைத் தேடி வரும் சமய அடிப்படைவாதக் குழுக்கள் பெண்களை தாக்குதலாளர்களாக உள்வாங்காத பழமையான நிலைப்பாட்டில் இருந்து மாறிப் பெண்களைத் தற்கொலைத்தாக்குதலாளர்களாக மாற்றும் நிதர்சனம். ஆக ஈராக்கின் புதல்வியர் போன்ற இத்திட்டங்கள் தற்காலிகமானவையே.


நீண்ட காலத்தில் பெண் தற்கொலைத் தாக்குதல்களைக் குறைப்பது என்பது ஈராக்கில் ஈராக்கிய மக்கள் தங்களது பிரத்தியேகமானது எனக் கருதுகிற சூழ்நிலைகளில் அமெரிக்க படைகளின் பிரசன்னத்தைக் குறைக்கும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டதேயாகும். அதேவேளை எல்லா ஈராக்கியர்களுக்கும் போதுமான உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் எல்லோரினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவவும் வேண்டும்.


ஆக இப்போதைக்கு தந்திரோபாயரீதியாக பெண்தற்கொலைத்தாக்குதலாளர்களுக்குள்ள தேவையைக் கருத்துக்கெடுக்கும் போது அவர்களின் தாக்குதல்கள் பெருகுவதையே காணமுடியும். தங்களது கண்களில் தமது தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் காண்கிற அவர்கள் அதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தங்களையும் தங்களது சக நாட்டாரையும் கொல்கிறார்கள்.

நன்றி
International Herald Tribune.

SUICIDE ATTACKS
The woman behind the bomb
By Lindsey O'Rourke
Published: August 4 - 2008

சந்தேகத்தில் கைது செய்யப்படும் போது உறவினர்களுக்கு ரசீது வழங்க பொலிசாருக்கு உத்தரவு - பிரதம நீதியரசர்


வட பகுதியிலிருந்து கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐந்து வருட காலத்திற்குள் கொழும்பு உட்பட மேல்மாகாணத்துக்கு வருகை தந்த மக்களை மீண்டும் பதிவு செய்தமையானது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக பிரஜைகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதினால் அதில் தவறேதும் இல்லை. அது சரியான நடவடிக்கை என்று உயர் நீதிமன்றம் நேற்று(22) அறிவித்தது.

இந்தப் பதிவு நடவடிக்கையால் ஒரு கணக்கெடுப்புக்காகவே மேற்கொள்ளப்பட்டதால் இதன் மூலம் பொது மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் குழு சுட்டிக்காட்டியது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தமிழ் மக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கையானது, சட்டமா அதிபரின் அனுமதியுடனேயே இடம்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தமை தொடர்பாக, குறித்து மனுக்களின் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான சுமேந்திரன், பிரதம நீதியரசரிடம் சுட்டிக்காட்டினார். எனினும் சட்டமா அதிபருடன் தொடர்புகொண்டபோது அவர் இதற்கு அனுமதி வழங்கவில்லை என சுமேந்திரன் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் வரம்புக்கு மீறிய செயற்பாட்டை பிரதம நீதியரசர் கண்டித்தார்.

மேலும் வடமாகாணத்தில் இருந்து கொழும்புப் பகுதிகளில் தங்கியிருக்கும் தமிழ்மக்கள் மீண்டும், அவர்களது பிரதேசங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என உயர் நீதிமன்றத்தில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் இன்று உறுதியளித்துள்ளார்.

வட மாகாண மக்களை கொழும்பிலிருந்து மீண்டும் அவர்களது இடங்களுக்குத் திருப்பியனுப்பும் திட்டமொன்று இருப்பதாகக் கூறி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். வடமாகாண தமிழ் மக்களைத் திருப்பியனுப்புவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்தபோதே இந்த உறுதிமொழியை பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இதேவேளை சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்கின்ற போது அது குறித்து அவரின் உறவினர்களுக்கு எழுத்து மூலமாக ரசீது வழங்க வேண்டும். அல்லது பிரதேச பொலிஸார் மூலமாக குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழு பொலிஸாருக்கு உத்தரவிட்டது

வவுனியா படைத்தளம் மீதான மும்முனைத் தாக்குதல சிறிலங்கா படைத்துறையின் மூலோபாய நோக்கங்களுக்கு விழுந்த நெத்தியடி


விடுதலைப்புலிகளின் வான்படையினராலும் கரும்புலிகளினாலும், கிட்டு பீரங்கிப்படைப் பிரிவின் ஆட்லறி சூட்டாதரவுடன் மேற் கொள்ளப்பட்ட தரை மற்றும் வான் வழியாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீதான வெற்றிகரமான தாக்குதல்களானது நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கத்தினதும் படைத்துறையினதும் மூலோபாய நோக்கங்களுக்கு விழுந்த பாரிய நெத்தியடியாகும்.

அத்துடன் சிறிலங்காப் படைகளின் எதிர்கால நடவடிக்கைகளிலும் பாரிய தாக்கங்களையும் நெருக்கடிகளையும் புலிகளின் இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் ஏற்படுத்தப்போகின்றது. அதாவது தற்போது வன்னி பிராந்தியத்திலே இடம்பெறுகின்ற சிறிலங்காப் படையினரின் அனைத்து போர் நடவடிக்கைகளுக்குமான கட்டளைபீடமாகவும் தொடர் பாடல் மையமாகவும் மற்றும் வலிந்த தாக்குதல்களுக்கு தேவையான படைகளை ஒருங்கிணைக்கின்ற இடமாகவும் இப்படைத்தளம் விளங்குகின்றது.

அத்துடன் நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுத தளவாடங்களையும் ஏனைய வழங்கல்களை விநியோகின்ற தளமாகவும் இக்கூட்டுப்படைத்தளம் செயற்பட்டு வருகின்றது. இதனோடு இணைந்திருக்கின்ற விமானப்படைத்தளமானது களமுனைகளிலே காயமடைகின்ற படையினரை உலங்குவானூர்திகளில் அவசரமாக ஏற்றிஇறக்குவதற்கு பயன்படுத்தப்படுவதுடன் வான் புலிகளின் விமானங்கள் ஏதாவது நடவடிக்கைக்காகப் புறப்பட்டால் அதனைக் கண்காணிப்பதற்காக ராடர் நிலையம் ஒன்றும் இங்கே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பு-வவுனியா- மன்னார் ஆகிய நகரங்களை இணைக்கின்ற இடத்திலே இப்படைத்தளம் அமைந்திருப்பதும் அதன் முக்கியத்துவத்தினை அதிகரித்துள்ளது. சிறிலங்காப் படையினர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வன்னிப்பகுதியிலே பாரிய படைநடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியதில் இருந்தே இப்படைத்தளத்தின் முக்கியத்துவம் பெரிதாக அதிகரிக்கத் தொடங்கியது. சிறிலங்காப் படையினரின் 59ஆவது படையணியானது மணலாறில் முன் னேற்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்ற அதேவேளை மன்னார்ப் பிராந்தியத்திலே 57ஆவது படையணி, இடுபணி குழு-1, இடுபணி குழு-2 மற்றும் 61ஆவது படையணி என்பவை வன்னி மேற்கு பிராந்தியத்தின் ஊடாகவும் வவுனியா பாலமோட்டை, நவ்வி பகுதி ஊடகவும் முன்னேற்ற முயற்சிகளைப் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

விடுதலைப்புலிகள் படையினரின் இந்த மூன்று பகுதிகளின் ஊடான முன்னேற்ற முயற்சிகளை கடுமையாக எதிர்த்து போராடி வருவதுடன் தமது மூலோபாய தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு அமைவாக சில பிரதேசங்களில் படையினரின் முன்னேற்ற முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதுடன் சில பிரதேசங்களிலே எதிரிக்கு இழப்புக்களை ஏற்படுத்தியவாறு பின்வாங்கியும் செல்கின்றார்கள். இந்த வகையில் மணலாறு பகுதிகளிலும் வவுனியா பாலமோட்டைப் பகுதிகளிலும் விடுதலைப்புலிகள் சிறிலங்காப் படையினர் மீது கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு படையினருக்கு பாரிய இழப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருவதுடன் படையினரை பெரியளவிற்கு முன்னேறவிடாது தடுத்தும் வருகின்றார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகள் சிறிலங்காப் படையினரின் வன்னிக்கான கட்டளைபீடமாக செயற்பட்ட வவுனியா தளத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களானது விடுதலைப்புலிகள் மேலே கூறப்பட்ட பிரதேசங்களை ஏன் மூர்க்கத் தனமாகப் போராடி, சிறிலங்காப் படையினரை முன்னேறவிடாது வெற்றிகரமாகத் தடுத்தார்கள் என்பதை விளங்கப்படுத்துகின்றது. விடுதலைப்புலிகள் சிறிலங்காப் படையினரின் வவுனியா படைத்துறை தலைமையகத்தின் மீது வியப்பூட்டும் வகையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது சிறிலங்கா அரசதரப் பினருக்கும் சிறிலங்காப் படைத்துறை உயர் மட்டத்தினருக்கும் பாரிய அதிர்ச்சிகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதாவது விடுதலைப் புலிகளின் வன்னிப்பிராந்தியத்தினையும் அவர்களது தலைநகரான கிளிநொச்சி யினையும் கைப்பற்றப்போவதாகவும் விடுதலைப்புலிகள் போரில் தோற்றுக் கொண்டிருப்பதாகவும் சிறிலங்காவின் அரச மற்றும் படைத்துறை பேச்சாளர்கள் அறிக்கைகள் தொடர்ச்சியாக விட்டுக் கொண்டிருந்தார்கள். முழுச் சிங்கள தேசமும் இந்தப் பரப்புரையை நம்பியதுடன் மகிந்த அரசின் போர் நடவடிக்கைகளுக்கு சிங்கள மக்கள் தமது முழு ஆதரவினையும் தெரிவித் தார்கள். இது தவிர சிங்கள தேசத்தின் ஆங்கில மற்றும் சிங்கள ஊடகவியலாளர் களும் சிறிலங்காப் படைகள் விரைவில் போரில் வென்றுவிடும் என்ற கருத்துப்பட தமது பத்திகளையும் செய்திகளையும் எழுதி வந்தார்கள். ஆனால் தற்போது சிறிலங்காப் படையினரின் மையப்பகுதியிலேயே விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி முழுப் படைத்துறைச் செயற்பாட்டையும் முட மாக்குகின்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதானது சிறிலங்காப் படைத்துறை தனது எதிர்கால மூலோபாயச் செயற்பாடுகளையே மாற்றியமைக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

அதாவது சிறிலங்காப் படைகளின் வன்னி பிராந்தியம் மீதான படைநடவடிக்கைகளுக்கான உயிர் மையமாகவும் உயிர் நாடியாகவும் செயற்பட்ட வவுனியா படைத்தலைமையகம் மீதான தாக்குதல்கள் உடனடி மற்றும் நீண்டகால நெருக்கடிகளை, படைத்துறைச் செயற்பாட்டிலும் மூலோபாய தந்திரோபாயங்களிலும் ஏற்படுத்தப்போகின்றது. அதாவது சிறிலங்காப் படைத்துறையானது, தற்போது ஒரு பாதுகாப்பான, விடுதலைப்புலிகளினால் பாரிய தாக்குதல்கள் எதுவும் மேற்கொள்ள முடியாதளவிற்கு நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு படைத்துறை கட்டளை மையத்தினை உடன டியாக உருவாக்கவேண்டும்.

அவ்வாறு ஒரு பாதுகாப்பான கட்டளை மையத்தினை செயற்படுத்தவேண்டுமெனில் ஒன்றில் அவ்வாறான கட்டளை மையத்தினை விடுதலைப்புலிகளின் நீண்ட தூர வீச்சுக் கொண்ட ஆட்லெறிகளின் எறிகணை வீச்சிற்கு எட்டாத தூரத்திற்கு நகர்த்த வேண்டும் அல்லது விடுதலைப்புலிகளின் வவுனியா முன்னரங்க நிலைகளை நீண்ட தூரம் பின்னுக்குத் தள்ளவேண்டும்.இந்த இரண்டு தேர்வுகளிலும் சிறிலங்காப் படைத்துறைக்கு நிறையவே சிக்கல்களும் நெருக்கடிகளும் இருக்கின்றன. அதாவது விடுதலைப்புலிகளின் ஓமந்தை தற்காப்பு அரண் நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி ஆட்லெறி எறிகணைகள் எட்டாதளவிற்கு வவுனியா படைத்தளத்தினை பாதுகாக்க வேண்டும் என்றால் 1990களின் கடைசிக் காலப்பகுதியில் மேற்கொண்ட ஜெயசிக்குறு படைநடவடிக்கை போன்ற நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.

தற்போது சிறிலங்காப் படையினர் மன்னார் மேற்கு பகுதியின் ஊடாக மன்னார்-பூநகரி பாதை யினை கைப்பற்றும் நோக்கில் முன்னேறிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இவ்வா றான நடவடிக்கை அவர்களின் முழு மூலோபாய நோக்கங்களையும் திசைதிருப்பி விடுவதுடன் இந் நடவடிக்கைக்கு பெரும் எண்ணிக்கையிலான ஆட்தொகையும் சிறி லங்கா அரசிற்குத் தேவைப்படும். ஏற்கெனவே ஆட்தொகை பற்றாக்குறையாலும், படையில் இருந்து பெரும் எண்ணிக்கையில் படையினர் தப்பிஓடுவதாலும் ஆளணிகளை படை நடவடிக்கைக்கு ஒழுங்குபடுத்துவதில் திணறிக்கொண்டிருக்கும் சிங்கள அரசானது இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற் கொள்வது என்பது பெரிதும் சிரமமான காரியமாகும்.

இரண்டாவது தேர்வான புதிய படைத் துறை தலைமையகத்தினை புலிகளின் நீண்ட தூரவீச்சுக்கொண்ட ஆட்லெறிகள் எட்டாத தொலைவில் அமைப்பது என்பதுவும் எவ்வளவு தூரத்திற்கு பாதுகாப்பானது என்பது கேள்விக்கிடமானது ஆகும். ஏனெனில் விடுதலைப்புலிகளின் வான்படையினரும் கரும்புலிகளும் சிங்களதேசத்தின் எப்பகுதிக் கும் சென்று தாக்குதல்களை துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதில் வல்லவர்கள் என்பதனை பலதடவைகள் நிரூபித்துள்ளதுடன் சர்வதேச ரீதியாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களாலும் பாராட்டப் பட்டுள்ளார்கள்.

எனவே இவ்வாறான ஒரு புதிய படைத்துறை தலைமையகத்தினை விடுதலைப்புலிகள் மீண்டும் வெற்றிகரமாக தாக்கியழிப்பதற்கான வல்லமையையும் இயலுமையையும் கொண்டிருக்கின்றார்கள் என்பது சிறிலங்காப் படைத்துறை உயர்மட்டத்தினருக்கு நன்கு தெரியும்.எனவே தற்போது சிறிலங்கா அரசினதும் படைத்துறையினதும் விடுதலைப்புலிகளை முற்றாக அழிப்பதற்கான தாக்குதல் மூலோ பாயங்களும் வியூகங்களும் பல்வேறு நெருக் கடிகளையும் சிக்கல்களையும் எதிர்கொண் டுள்ளதுடன் அவர்களது முழு மூலோபாயங் களும் தேசியத் தலைவர் அவர்களின் துல்லியமாக திட்டமிடப்பட்ட ஓரிரு வெற்றி கரமான தாக்குதல்களிலேயே முழுமையாக ஆட்டம் கண்டுவருவதை சிங்கள அரசும் அதன் படைத்துறையும் தற்போது உணரத் தொடங்கிவிட்டன.

அதாவது சீனப்போரியல் மேதையான சன் சூ கூறியதை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானது. ‘எதிரியினை எமது தாக்குதல் நடவடிக்கைக்கு ஏற்ப வடிவமைப் பது என்பது போரியல் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானதொன்றாகும். இதற்கான நேரடி மற்றும் மறைமுக நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் ஒரு சிறந்த ஜெனரல் கைக்கொள்வார். அதாவது எதிரிகள் தாம் போரிடும் தரப்பினர் பலவீனமானவர்கள் என்று கருதி வெற்றி மமதையில் தந்திரோபாய தவறுகளை படைநடவடிக்கையில் மேற் கொள்வதற்கு இரையைக் காட்டி தூண்ட வேண்டும்.

அவர்களின் கவனங்களை நன்கு திட்டமிட்டு திசைதிருப்பவேண்டும். அவர் களுக்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுத்தக் கூடியவகையில் தாக்குதல்களை நடத்தி அவர்களை நிலை தடுமாறச்செய்யவேண்டும். இதன்பின் நன்கு ஒழுங்கமைப்பட்ட வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு நாட்டினை எதிரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து விடு விக்கலாம்.'

- எரிமலை

பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருடன் டென்மார்க் சமூக லிபரல் கட்சி முக்கியஸ்தர் தர்மகுலம் சந்தித்து வன்னி நிலமை பற்றி எடுத்துரைப்பு.


டென்மார்க் சமூக லிபரல் கட்சியின் வருடாந்த மகாநாடு நுய்பொ (Nyporg) நகரில் 20.09.2008 ஆம் திகதி காலை 10 க்கு ஆரம்பமானது

இவ் மகாநாட்டில் சிறப்பு அதிதியாக பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் லிபரல் சனநாயக கட்சி குழுத் தலைவருமாகிய கிரகம் வற்ஷன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இவருக்கும் டென்மார்க் சமூக லிபரல் கட்சியின் பிரமுகர் தர்மகுலசிங்கத்திற்கும் இடையே நடந்த சந்திப்பில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றத்தினைத் தொடர்ந்து அழிவின் விளிம்பில் நிற்கதியாகிநிற்கும் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வன்னிமக்களின் அவலத்தினையும் சனநாயக ஸ்திர தன்மையற்ற நிலையினையும் எடுத்துக்கூறிய தர்மகுலசிங்கம் இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு ஆங்கிலப்பதிப்பையும் கையளித்தார்.