சந்தேகத்தில் கைது செய்யப்படும் போது உறவினர்களுக்கு ரசீது வழங்க பொலிசாருக்கு உத்தரவு - பிரதம நீதியரசர்


வட பகுதியிலிருந்து கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐந்து வருட காலத்திற்குள் கொழும்பு உட்பட மேல்மாகாணத்துக்கு வருகை தந்த மக்களை மீண்டும் பதிவு செய்தமையானது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக பிரஜைகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதினால் அதில் தவறேதும் இல்லை. அது சரியான நடவடிக்கை என்று உயர் நீதிமன்றம் நேற்று(22) அறிவித்தது.

இந்தப் பதிவு நடவடிக்கையால் ஒரு கணக்கெடுப்புக்காகவே மேற்கொள்ளப்பட்டதால் இதன் மூலம் பொது மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் குழு சுட்டிக்காட்டியது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தமிழ் மக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கையானது, சட்டமா அதிபரின் அனுமதியுடனேயே இடம்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தமை தொடர்பாக, குறித்து மனுக்களின் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான சுமேந்திரன், பிரதம நீதியரசரிடம் சுட்டிக்காட்டினார். எனினும் சட்டமா அதிபருடன் தொடர்புகொண்டபோது அவர் இதற்கு அனுமதி வழங்கவில்லை என சுமேந்திரன் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் வரம்புக்கு மீறிய செயற்பாட்டை பிரதம நீதியரசர் கண்டித்தார்.

மேலும் வடமாகாணத்தில் இருந்து கொழும்புப் பகுதிகளில் தங்கியிருக்கும் தமிழ்மக்கள் மீண்டும், அவர்களது பிரதேசங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என உயர் நீதிமன்றத்தில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் இன்று உறுதியளித்துள்ளார்.

வட மாகாண மக்களை கொழும்பிலிருந்து மீண்டும் அவர்களது இடங்களுக்குத் திருப்பியனுப்பும் திட்டமொன்று இருப்பதாகக் கூறி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். வடமாகாண தமிழ் மக்களைத் திருப்பியனுப்புவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்தபோதே இந்த உறுதிமொழியை பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இதேவேளை சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்கின்ற போது அது குறித்து அவரின் உறவினர்களுக்கு எழுத்து மூலமாக ரசீது வழங்க வேண்டும். அல்லது பிரதேச பொலிஸார் மூலமாக குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழு பொலிஸாருக்கு உத்தரவிட்டது

No comments: