வன்னிப் பகுதியில் தொடர்ந்தும் நிலைமை பதற்றமாகவே உள்ளது - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது


வன்னிப் பகுதியில் தொடர்ந்தும் நிலைமை பதற்றமாகவே இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இரண்டு கிழமைகளில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் 80 சடலங்களைப் பரிமாற்றியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பிரதித் தலைவர் அன்டனி டல்செல் கூறினார்.

வன்னியில் தொடர்ந்தும் பதற்றத்துடன் கூடிய சூழ்நிலை இருப்பதால் இரண்டு தரப்பிலிருந்தும் நாளாந்தம் பாதுகாப்பு உத்தரவாதம் கோரியே தமது பணிகளை முன்னெடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். வன்னியிலிருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் முற்றாக வெளியேறியுள்ள நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாத்திரம் அங்கிருந்து செயற்பட்டு வருகிறது.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இரண்டு தரப்பிலிருந்தும் கூடுதலான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

“இலங்கையில் ஆயுத மோதல்கள் தொடர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச மனித உரிமைகள் சட்டம் அவர்களுக்கான அச்சுறுத்தலைக் குறைத்துள்ளது” என டல்செல் கூறியுள்ளார்.

“மோதல்களால் பாதிப்புக்குள்ளாகும் இடங்களிலுள்ள மக்களின் மனிதநேயத் தேவைகள் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அவதானித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அதிகரித்திருக்கும் வன்முறைகளால் பாதுகாப்புக் குறித்துக் கவனம்செலுத்தவேண்டியுள்ளது. எனினும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இரண்டு தரப்பினருடனும் நாளாந்தம் தொடர்புகளை ஏற்படுத்திவருகிறது. இதன் மூலம் இரண்டு தரப்பிலிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு அமைய களநடவடிக்கைகள் அமைந்திருக்கும்” என்றார் அவர்.

வன்னியில் மனிதநேய நிலைமைகள் குறித்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் கண்காணிக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பிரதித் தலைவர் அன்டனி டல்செல் கூறினார்.

No comments: