நோர்வே அமைச்சர் எரிக்சொல்கெய்மை இலங்கை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே சமாதான பிரதிநிதி யோன் ஹான்சன் பவர் ஆகியோரை நேற்று முன்தினம் நியூயோர்க்கில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹோன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலங்கையின் தற்போதைய யுத்தம், மற்றும் பொருளாதார நிலவரங்கள், எதிர்கால சமாதான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பும் வடக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சொல்ஹெய்ம் அழுத்தம் கொடுத்ததாகவும், இறுதியில் இரண்டு பேரும் இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி – எரிக் சொல்ஹெய்மிற்கிடையில் நடைபெற்ற இந்த திடீர் சந்திப்பை அடுத்து, வடக்கில் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையும் ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (24) நியூயோர்கில் கலந்துரையாடுவது என தீர்மானித்துள்ளனர்.

இதன் போது கிளிநொச்சியில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு உடனடியாக தெரியப்படுத்துவது எனவும் இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளதாக தூதரக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அதிகரித்து வரும் யுத்த நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இணைத்தலைமை நாடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) தீர்மானித்தன. இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.

No comments: