வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது மோதல்களை முடிவுக்கு கொண்டுவராது; சமாதானத்துக்கும் இழுக்கு: அமெரிக்கா


வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது
வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர்நிறுத்தம் ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் தப்பிச் செல்லக்கூடிய வகையில் உடனடியாக மோதல் நிறுத்தமொன்றிற்கு செல்லவேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவென ஏற்படுத்தப்பட்ட வலயங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்றும் அத்துடன் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை சென்று பார்வையிட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாது உதவி அமைப்புகள் முகாம்களுக்குச் சென்று செயற்படுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகால பிரச்சினைக்கு முடிவொன்றை வைக்கும் வாயப்பொன்று இலற்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்றும் றொபேர்ட் வூட் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது ரத்து: டைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு


விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட டைரக்டர் சீமான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் விடுதலை ஆகிறார்.
சினிமா டைரக்டர் சீமான் பெப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். அவர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

17-2-09 அன்று நெல்லையில் நடந்த கூட்டத்திலும், இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசினார். இதில் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டார்.

நெல்லை கலெக்டர் பரிந்துரையின்பேரில், சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர் 1 வருடம் ஜெயிலில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

இதை எதிர்த்து டைரக்டர் சீமானின் தம்பி பீட்டர் ஜேம்ஸ் சென்னை உயர்நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட முகாந்திரம் இல்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே தேசிய பாதுகாப்பு வாரியத்திடமும் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி சீமான் கைது செய்யப்பட்டதற்காக, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தர்மராவ், செல்வம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

என்றாலும், புதுச்சேரி பொலிஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலை ஆவதில் சிக்கல் உள்ளது.

புதுச்சேரியில் சீமான் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற முடியும். எனவே ஒன்றிரண்டு நாட்களில் அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா?:ஈழத்தமிழருக்காக நடிகர் சத்யராஜ் ஆவேசம்


கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. நடிகர் சத்யராஜ், இவ்விழாவிற்கு வந்ததுமே அனைவரின் கவனமும் அவர் மீது தான் இருந்தது. அதற்கு காரணம், அவர் அணிந்திருந்த கருப்பு டீ-சர்ட்டில் ‘ஈழத்திற்காக குரல் கொடுப்போம்’ என்று ஆங்கில வாசகம் அச்சிடப்பட்டிருந்ததுதான்.

சத்யராஜ் பேசும் போதும் அனைவரின் கவனமும் அவர் மீதுதான் இருந்தது.

‘’நான் இந்த மேடையை ஒரு நல்ல விசயத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறேன். ஈழ விசயத்திற்காகத்தான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

தேர்தலுக்காக யார் வேண்டுமானாலும் யாருடனாவது கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். ஆனால், ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஒன்றுபடட்டும். ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுகிறேன்.

வெளிநாடுகளில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ அத்துனை தமிழர்களும் ஈழ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

ஆனால் தாய் தமிழகத்தில் எத்துனை தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள். இதுதான் வேதனை. ஈழத்தமிழர்களுக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவில்லை.

பக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிருக்கலாமா? நம் சொந்தங்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்கக் கூட யோசித்துக்கொண்டிருக்கலாமா?’’ என்று ஆவேசப்பட்டார்.

என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது:ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம்



கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

வைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது.



உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை.

உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன் என்று தம்பட்டம் அடிக்கக்கூடாது என்று அமெரிக்கா’’ என்று ஆவேசப்பட்டார்

இலங்கை தமிழர்களுக்காக நடிகர், நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு



இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகத்தினர் ஏற்கனவே ஊர்வலம், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினர். தற்போது இன்னொரு போராட்டம் நடத்தவும் முயற்சிகள் நடக்கிறது.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் “ஞாபகங்கள்” படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:-

ஈழத்தில் தொடர் படுகொலைகள் நடக்கின்றன. விஜயன் என்ற சிங்கள மன்னன்தான் அங்கு முதலில் குடியேறினான், அதற்கு முன்பே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தனர்.

தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நாடாகவே இருந்தன. இலங்கை மண்ணுக்கு உரிமையானவர்கள் தமிழர்கள்தான். மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களை பின்னாளில் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து கொண்டு போய் விட்டனர்.

ஈழத்தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அவதிப்படுகின்றனர். அவர்களுக்காக அத்தனை தமிழர்களும் சேர்ந்து போராட வேண்டும். எல்லா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் 2 இலட்சம் தமிழர்கள் குழந்தை குட்டிகளோடு போராடியுள்ளனர். அவர்கள் நம்மை விட 10 மடங்கு வசதி படைத்தவர்கள். கனடா, சுவீடன் என எல்லா நாடுகளிலும் தமிழன் போராடுகிறான். நாம் அதை விட அதிகமாக போராட வேண்டும்.

திரையுலகை சேர்ந்தவர்கள் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும். தலைவர்கள் கலந்து பேசி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் 8 கோடி தமிழர்கள் உள்ளனர். நம்மால் 3 இலட்சம் தமிழர்களை காப்பாற்ற முடியாவிட்டால் தலை குனிவு ஏற்பட்டு விடும்.

எனக்கு நாட்டுப்பற்று அதிகமாகி விட்டது. வெல்க ஈழம். வெல்க ஈழம். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.