வன்னிக்கு செல்லும் உணவு லொறிகளை நிறுத்துவதற்கு காரணம்தேடும் அரசு - உணவு லொறியில் வெடிமருந்து கண்டுபிடிப்பு என பாதுகாப்பு அமைச்சு சொல்கிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லவிருந்த லொறிகளில் ஒன்றுக்குள் இருந்து 2.5 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த வெடிபொருள்கள் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு மீட்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று இரவு அறிவித்தது.வவுனியா செயலகத்தால் வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 லொறிகளில் ஒன்றிலிருந்தே வெடி பொருள்கள் மீட்கப்பட்டன.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சு பின்வருமாறு விவரித்துள்ளது. ஓமந்தைச் சோதனை நிலையத்தில் படையினர் லொறிகளை சோதனை செய்தபோது குறிப்பிட்ட ஒரு லொறியிலிருந்து வெடிபொருள் மீட்கப்பட்டது. அதனையடுத்து மேலதிக விசாரணைக்காக லொறியின் சாரதியை படையினர் தடுத்துவைத்துள்ளனர். லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை வன்னிக்குச் செல்லவுள்ள வாகன அணியில் அரச அதிபரின் 30 லொறிகளும் உலக உணவுத் திட்டத்தின் 30 லொறிகளும் செல்லவிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது

சாவகச்சேரியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரரின் சடலம் மீட்பு


சாவகச்சேரி தனங்கிளப்பு இராணுவ முகாமில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாவகச்சேரிப் பொலிஸாரால் சாவகச்சேரி நீதி மன்றத்தில் தனங்கிழப்பு இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரரின் சடலம் காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி பதில் நீதவான் அலெக்ஸ்ராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வி.பி.ஜி.எம். நிசாந்த சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கை பங்குச் சந்தைக்கு நேற்று 100 பில்லியன் ரூபா நட்டம்


இலங்கை பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் நேற்று மட்டும் நடைபெற்ற பங்குப் பரிவர்த்தனையின் மூலம் சுமார் 14 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக இந்த வருடத்தில் 104.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 938 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட மூலதனவர்க்கம் தற்போது 240 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது.

நிறுவனங்களின் வருமானம் சடுதியாக வீழ்ச்சியடைந்தமையே இந்த பங்குச் சந்தை நெருக்கடிக்குப் பிரதான காரணியென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவத்தினர் முன்னெடுக்கும் இராணுவ முன்நகர்வுகளின் காரணமாக முதலீட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஸ்ரீலங்கா ரெலிகொம், ஜோன் கீல்ஸ், டயலொக் டெலிகொம் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குப் பெறுமதி வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமை மீறல்களை தடுப்பதில் அரச தலைவருக்கு அக்கறையில்லை: ஆசிய மனித உரிமைகள் சபை


இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு அரச தலைவருக்கோ அல்லது அரசுக்கோ அக்கறையில்லை என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை மேற்கொள்பவர்கள் கொல்லப்படும் போது அரச ஊடகங்கள் அமைதியாக இருக்கின்றன. அரசாங்கம் ஊடகங்களைத் தனக்குச் சார்பாகக் கையாள்வதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர்.

காவல்துறையினருக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை மேற்கொண்ட சுகத் நிசந்த பெர்ணான்டோ செப்ரம்பர் மாதம் 20 ஆம் நாள் கொல்லப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே மாதிரியான முறைப்பாட்டை மேற்கொண்ட காரணத்திற்காக ஜெராட் பெரேரா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

தற்போதைய சம்பவம் தொடர்பாக தனியார் ஊடகங்கள் அதிக தகவல்களை வெளியிட்டிருந்தன. ஆனால் அரச தலைவரோ, பிரதமரோ, மனித உரிமை அமைச்சரோ அல்லது அரசைச் சார்ந்த பேச்சாளர்களோ இந்த படுகொலையைக் கண்டிக்கவில்லை என்பதுடன் அது தொடர்பான விசாரணைகளுக்கும் முன்வரவில்லை.

அரசுக்கு எதிரான இந்தகைய குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் அரசு படுகொலைகள் தொடர்பான விசாரணைகளையாவது மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை விளக்க திமுக 6 ஆம் திகதி கூட்டம்


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்கள் நிலையினை விளககவும், மத்திய அரசு தலையீட்டைக் கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் பொதுக்கூட்டம் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுக தலைமையிலான கூட்டணியைவிட்டு வெளியேறிய இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியில் நாளை மறுநாள் நடைபெறும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அழைக்கப்படவில்லை.

அதுகுறித்து தனது மனவருத்தத்தினை மறைமுகமாகத் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, 1991 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இருந்த காரணத்தால்தான் தனது ஆட்சி கலைக்கப்பட்டது,

அதற்கு முன்னர் திமுக உறுப்பினர்கள் இலங்கைத் தமிழருக்கு இழைககப்படும் இன்னல்களைக் கண்டித்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள், தவிரவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக, தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பதையெல்லாம் நினைவு கூர்ந்திருககிறார்.

ஆனால் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காதவர்களுக்கெல்லாம் உண்ணாவிரதத்தில் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டிருககிறது என்று மேலும் குறைகூறியிருக்கிறார் தமிழக முதல்வர்.

ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், திராவிடர் கழகமும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றன.

அக்டோபர் 2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருக்கும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் அஇஅதிமுக உட்பட பல கட்சிகளும் பங்குபெறுகின்றன.

பா ம க ஆர்ப்பாட்டம்

சென்னையில் பாட்டாளி மககள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராமதாஸ், உண்மைநிலை கண்டறிய வவுனியாவுக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழு செல்லவேண்டும், இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடவேண்டும் என வற்புறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படவேண்டும், அவ்வாறு செய்யப்படாவிட்டால் சட்டமன்ற வளாகத்திலேயே பாமகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் அக்டோபர் 10ஆம் நாள் இலங்கைத் தமிழர்மீது நடைபெறும் தாககுதல்களுக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக சென்னையில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறது.

போரின் மூலம் பொருளாதாரத்தை சிதைக்கும் திட்டமிட்ட சதி முயற்சியை முறியடிப்போம்


சிங்களப் பேரினவாத அரசு தமிழர் தாயகத்தின் மீதான போரை திணித்தவாறு தமிழர்களின் பொருளாதார வளங்களை சிதைத்து வருகிறது.

போர் காரணமாக இடம்பெயரும் மக்களிற்கான உணவு, உடை, கூடாரம் போன்ற அத்தியவசியமான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்குக் கூட தொண்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றது. அல்லது தடுக்கிறது.

கடற்றொழில், விவசாயம் உட்பட தமிழர்களின் முதன்மையான தொழில் செய்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. தன்னிறைவுடன் வாழ்ந்த தமிழ் இனம் நிவாரணத்திற்காக கையேந்த நிற்பந்திக்கப்பட்டுள்ளது. சுயபொருளாதாரத்துடன் தன்னிறைவுடன் இருந்த மக்கள் சிறீலங்கா அரசின் போர் காரணமாக பின்தள்ளப்பட்டு வருகின்றனர். தமிழீழத்தின் பொருளாதார வளங்களில் விவசாயமும் பிரதானமானது.

கிழக்கில் அம்பாறை மாவட்டமும் வடக்கில் மன்னார் மாவட்டமும் தமிழர்களின் நெற்களஞ்சியம் என்று கூறுவதற்கு பதிலாக முழுநாடும் தமக்கே சொந்தம் என்ற இறுமாப்பில் சிங்களப் பேரினவாத அரசு தங்களது நெற்களஞ்சியம் என்பது போல கூறுகின்றது. இவ்வாறு கூறுவதன் ஊடாக அரசியல் ரீதியாக தமிழர் தாயகப் பகுதியை சொந்தம் கொண்டாடினாலும் சிறீலங்காவை விட விவசாய உற்பத்தியில் தமிழர் தாயகப் பகுதி வளமானது.

இங்கு தான் பொருளாதார வளம் கூடுதலாக உள்ளது என்ற யதார்த்த உண்மையை மறைமுகமாக ஒத்துக் கொண்டு வருகிறது என்று கூறலாம்.தமிழர் தாயகப் பகுதியில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களும் நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளன. போரற்ற ஒரு காலகட்டத்தில் தாயகப்பகுதிகளின் விவசாயம் மிகவும் சிறப்பானதாக வளர்ச்சி கண்டு வந்தது. படையினரால் வன்பறிப்புச் செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தில் நெல்விளையும் முக்கிய பகுதிகளான தனங்கிளப்பு, மறவன்புலவு, கோயிலாக்கண்டிப் பகுதிகளில் நெல் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான அனுமதி படைத்தரப்பால் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடமராட்சிக் கிழக்கில் அம்பன், நாகர்கோவில் மற்றும் தீவகம், வலிகாமம் போன்ற பகுதிகளில் படையினர் உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவி நெல் உற்பத்தி உட்பட அனைத்து விவசாய உற்பத்திகளையும் தடை செய்துள்ளனர். இதைவிட கிழக்கு மாகாணத்திலும் விவசாய உற்பத்தியில் ஈடுபட படையினரால் பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தன்னிறைவுடன் தமது உணவுத் தேவைக்கு மேலதிகமாக தமது உற்பத்தியில் ஈடுபட்டு ஏற்றுமதியில் ஈடுபட்ட எமது மக்கள் படையினரது நில ஆக்கிரமிப்பு காரணமாக படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அன்றாட உணவிற்கு நிவாரணத்திற்காக கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தை தற்போது பார்க்கின்ற போது அங்கு தேவைக்கு மேலதிகமான உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட போதும் படையினரது ஆக்கிரமிப்பு யுத்தம் காரணமாக உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளே பயன் அடைய முடியாத அளவிற்கு மன்னார் மாவட்டத்தின் நிலமை சென்றுள்ளது, அங்குள்ள விளை நிலங்களில் உற்பத்தியாகிய நெல்லினை படையினர் அறுவடை செய்து தென்பகுதிக்கு ஏற்றி வருகின்றனர். இவ்வாறு 10,800 மெற்றிக் தொன் நெல் இதுவரை தென்பகுதிக்கு இராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக மன்னார்த் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தைப் பார்க்கின்ற போது கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருப்பதால் அங்கு உற்பத்தியில் ஈடுபடுவதற்கான தடைகள் இல்லை என்றே சொல்லலாம். எனினும் பூநகரி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் படையினரது எறிகணைத் தாக்குதல்களிற்கு அடிக்கடி இலக்காவதால் அங்கு உற்பத்தியில் ஈடுபடமுடியாத நிலைமை உள்ள போதும் கணிசமான மக்கள் அங்கும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். படையினரது எரிபொருள்த்தடை, உள்ளீடுகளிற்கான தடை, உரவகைகளிற்கான தடை என்பன தொடர்கின்ற போதும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களிற்கான உணவுத் தேவைக்காக தென்னிலங்கையில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உருவாகவில்லை என உலக உணவுத்திட்ட நிறுவனம் தென்னிலங்கையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

அந்த அளவிற்கு எமது உற்பத்தி நிலைமை உள்ளது. தற்போது கோதுமை மாவின் விலை சடுதியாக உயர்வடைந்து செல்வதால் மாற்றீடான உணவு உற்பத்தியில் எமது மக்கள் நாட்டம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் எமது மக்களிடம் பெரியளவிலான மூலதன வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என்பன இல்லாமையால் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எங்களுடைய உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் மாற்றீடான உற்பத்திகளை நவீன முறைகளில் மேற்கொள்வதன் மூலம், எதிரியின் பொருளாதாரத் தடையை உடைத்தெறிந்து சுயமாக எமது தேவைகள் அனைத்தையும் நாமே பூர்த்தி செய்ய முடியும். வன்னி மக்கள் மீதான போர் முனைப்புக்களை தீவிரப்படுத்தியவாறு மக்கள் மீதான பொருளாதாரத் தடையையும் சிங்கள அரசு இறுக்கி வருகிறது.

குறிப்பாக இடம்பெயரும் மக்களிற்கான நிவாரணப் பணிகளையே மறுதலித்துவரும் சிங்கள அரசின் உள்நோக்கத்தை சரியாக அளவிட்டு, தமிழ் மக்கள் அனைவரும் சுயபொருளாதாரத்தை வளர்க்கும் அதேவேளை எமது தாயக நிலங்களை முழுமையாக மீட்டு நிறைவான தமிழ் ஈழத்தை அமைப்பது ஒன்றே வழி.

- வே.தவச்செல்வம்

அரசின் திட்டங்களை உடைத்துவிட்ட வவுனியாத் தாக்குதல்


உயிர்வாழ வேண்டுமானால் சிறீலங்கா அரசு தொடுத்துள்ள போரை எதிர் கொண்டாக வேண்டும். போரை எதிர்கொள்ள வேண்டுமானால் ஆயுதந் தூக்க வேண்டும்.

அத்தேர்வையே அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருக்கிறது. அதுவே யதார்த்த நிலையாகும். அவ்வாறான சூழ்நிலையில் பழையதை மறந்து புதியவர்களை நாடும் இழிநிலை தமிழர்களுக்கு ஏற்படப் போவதில்லை.

இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எப்போது தமக்கு விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்களே ஒழிய இராணுவத்தினருடன் சேர்ந்திருக்க விரும்புபவர்களாக இல்லை. சிறீலங்கா அரசாங்கங்களின் தலைவர்கள் அனைவருமே இனஒதுக்கல் கொள்கையையே கடைப்பிடித்தனர். கல்வி, வேலைவாய்ப்பு, பங்கீடு, நிலம் எனப் பல வழிகளிலும் தமிழருக்குப்பாகுபாடு காட்டினர். சிங்களவருக்கு ஒரு நீதியும், தமிழருக்கு ஒரு நீதியுமாக இனவெறி ஆட்சியை அவர்கள் நடத்தினர்.

தமிழரும் - சிங்களவரும் சேர்ந்து வாழ்வது எப்போதும் இயலாது என்ற நிலையை அரசாங்கம் உருவாக்கியிருந்தது. எதிர்காலத்தில் போரின் முடிவு இரண்டு நாடு என்ற நிலைக்கு வந்து விடும். எந்தவொரு நிலையிலும் இணைந்து கொல்ல முடியாதவாறு அரசு இனவெறிக் கோட்பாட்டை முன்நிறுத்தி தடை போட்டு விட்டது. எனவே அடுத்த கட்டத்தைப் போரே முடிவு செய்யப் போகிறது. போர் இப்போது தீவிரம் பெற்று விட்டது. போரின் இறுதி வெற்றி தமக்கே என இரு தரப்பும் கூறுகின்றன.

இதில் அரசு புலிகளின் பொறிக்குள் வீழ்ந்து விட்டதால், இனிவரும் காலங்கள் புலிகளுக்குச் சாதகமானதாகவே மாறப் போகிறது என்பது தெரிகிறது. இதனை நிரூபிப்பது போல அண்மையில் ஏற்பட்ட அக்கராயன் குளம், வன்னேரிக்குளச் சண்டைகள், எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் மீது சூழ்ச்சிகரமான திட்டங்களை சிறீலங்கா அரசு முன்வைத்துள்ளது. இதனை நிச்சயமாக தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் தமது தேர்வை உறுதியுடன் எடுத்து விட்டனர். வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் உள்ள மக்களை வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு சிறீலங்கா அரசு அழைப்பு விடுத்து சுமார் இருவாரங்கள் கடந்து விட்டன.

இருப்பினும் எவரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இதுவரை செல்லவில்லை. இது தமிழ் மக்களின் உறுதிப்பாட்டை தெளிவாக்கியிருக்கிறது. தமிழ் மக்களை தமது பிடிக்குள் விழுத்தி அவர்களை இறைமையற்ற இனமாக மாற்றியமைக்கவே மகிந்த ராஐபக்ச விரும்புகிறார். அதுவே அவரது தேர்வாகவுள்ளது. அதன் வெளிப்பாடே இப்போதுள்ள இராணுவ வலிந்த தாக்குதல்களாகும். பல வழிகளிலும் வன்னியைச் சூழ்ந்து நிற்கும் அரச படைகள் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணை வீச்சுக்களை ஏவுகிறது. இதன் மூலம் மக்கள் வெளியேறி தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவார்கள் என இராணுவமும் அரசும் எதிர்பார்க்கிறது.

தமது உயிரை இழந்தாலும், உடமைகள் அழிந்தாலும் மானமுள்ள எந்தத் தமிழனும் தனது வாழ்விடத்தை விட்டு வெளியேற மாட்டான் என்பது போல, அந்த மக்கள் வெளியேறாது சிங்களத்தின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்கப் பதுங்குகுழிகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சிறீலங்கா அரசாங்கத்திற்கு சொல்லப்பட்ட செய்தியாகும். அரசாங்கம் தனது முழுவளங்களையும் போருக்குள் சொலுத்தி தமிழ் மக்களை அழிக்கும் வழிவகைகளை செய்து கொண்டிருக்கிறது. தனது நாடு அனைத்து இனங்களையும் சரிசமனாகப் பாவித்து உதவுகிறது எனக் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். மகிந்த ராஐபக்சவின் இரண்டே முக்கால் ஆண்டுகால ஆட்சி தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மேலும் பலம் பெறச் செய்திருக்கிறது.

போர் நிறுத்தத்தில் இருந்து விலகி, போரைத் தமிழர் மீது பிரகடனப்படுத்தி அவர்களை அகதிகளாக்கி அலைய விட்டிருப்பதிலே அவர் வெற்றி கண்டுள்ளார். இந்த இரண்டே முக்கால் ஆண்டு தமிழர்களைப் பொறுத்தவரை மனிதவதையாகவே உள்ளது. இக்காலங்களில் ஆட்கடத்தல், கைது, சித்திரவதை, கொலை, அச்சுறுத்தல் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் தமிழரை அடையாளப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.இதுபற்றிய விழிப்புணர்வு சர்வதேச மட்டத்தில் ஏற்பட்ட பின்னரும் கூட, இதனை நிறுத்த மகிந்த முன்வரவில்லை. மகிந்தவின் ஆட்சியில் ஆண்டுதோறும் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேல் பலவந்தமாகக் கடத்தப்படுகின்றனர். அதே அளவிலானவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

நாளாந்தம் ஐந்து பேர் கடத்தப்படுகின்றனர். மேலும் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர். இவையாவும் இராணுவக் கட்டுப்பாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும் நிலை. அந்த மக்கள் எப்போதும் அச்சமும் பீதியுமுடையவராக வாழும் அவல நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் இந்த மக்களை அடிமைகள் போல் நடத்துகின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் தமிழர் தமது அரசியல் வாழ்வுரிமைகளை இழந்து படைகளுக்கு அஞ்சி, நடுங்கி, அடிமை வாழ்வைத் தொடர்கின்றனர். பொதுவாக கிழக்கு மாகாணத்தில் இன்னமும் அவர்களால் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.

அங்கெல்லாம் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வன்னியில் சுதந்திரமாக வாழும் மக்களை வவுனியாவிற்கு இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பது நகைப்பிற்கிடமானது.நாளாந்தம் 250 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடப்பெயர்வுக்கு ஆளாகி வருகின்றன என முல்லை அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் முப்பது சதவீதமான குடும்பங்கள் மீள இடம் பெயரத் தொடங்கியிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே முல்லைத்தீவு மேற்குப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களுமாக கிளிநொச்சி மையப் பகுதியில் செறிவான மக்கள் தொகை காணப்படுகிறது. இந்நிலையில் சிறிலங்கா வான்தாக்குதல்களையும் எறிகணை வீச்சையும் தீவிரப்படுத்தியிருப்பது மக்களின் அன்றாட வாழ்விற்கு பாதிப்பையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே வன்னிப்பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வருவதற்கு ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் தடையும், இன்னொருபுறம் கெடுபிடியும் படையினரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

எனவே, வன்னி வாழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து சர்வதேச நாடுகள் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது. இந்நிலையில் தான் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊர்திகள் வன்னி வருகை தர அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. இது ஒரு பொறுப்பற்ற செயல் இதனை உலகம் கண்டிக்க வேண்டும். வன்னியில் அவலப்படும் மக்களிற்கு பணியாற்ற உலக அமைப்பினருக்கு வழிதிறந்திருக்க வேண்டும். உள்நாட்டு வெளிநாட்டுத் தெண்டர் நிறுவனங்களின் ஊர்திகள் வன்னி வருவதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பதன் மூலம் அரசாங்கம் வன்னிப் பகுதியில் பாரிய இராணுவ நடவடிக்கைகளினூடாக பாரிய அழிவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது தெளிவாகிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா ஊர்திகள் தவிர வேறெந்த ஊர்திகளுக்கும் அனுமதியில்லை என அரசாங்கம் அறிவித்திருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் அவலம் வெளிக்கொணர்வது தடுக்கப்படும் என அரசு நம்புகிறது. இப்போது சகல அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் வன்னியிலிருந்து வெளியேற வேண்டும் என சிறீலங்கா அரசினால் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் வவுனியா வராவிட்டால் அவர்களை எவ்வாறு வரவழைப்பது என தங்களுக்குத் தெரியும் என கூறும் அரசு அதன் முதற்கட்டமாக தீவிர வான் தாக்குதல் நடத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. சிறீலங்கா அரசுப்படைகளின் கொடூரமான தாக்குதலை தமிழ் மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். எனவே ஒரு போதும் தமது வாழ்விடங்களைவிட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பில்லை.

இது அரசிற்கும் தெரியும் படை தரப்பிற்கும் தெரியும். எனவே, இந்த மக்களை எப்படியாவது இராணுவப் பகுதிக்குள் இழுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக நிற்கிறது. அரசு அது சாத்தியமல்லாத சூழ்நிலை உருவாகுமானால் அந்த மக்கள் மீது வான்தாக்குதல் மற்றும் எறிகணை வீச்சுக்களை நடத்தி அந்த மக்களிற்கு அச்சத்தை ஏற்படுத்தி தங்கள் பொறிக்குள் உள்வாங்கவே அரசுப் படைகள் முயல்கின்றது. ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. இவ்வாண்டுக்குள் கிளிநொச்சி கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுமென சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஐபக்ச சொல்லியிருக்கிறார். நாச்சிக்குடா, வன்னேரிக்குளம், அக்கராயன் பகுதிகளில் முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட நிலைக்குப் பின்னரே இவ்விதமான கருத்தைக் கோத்தபாய சொல்லியுள்ளார்.

வீறாப்புப் பேசும் கோத்தபாய அக்கராயன் பகுதியில் சண்டையில் ஈடுபட்ட சிங்கள அதிரடிப்படையை ஏன் களத்தை விட்டு எடுத்தார் என்பதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தனது இராணுவம் மேலும் முன்னேற முடியாது திணறுவது ஏன் என்பதற்கும் அவரால் பதிலளிக்க முடியாது. ஏனெனில் கடந்த இருமாதமாக படைக்கு ஏற்பட்ட இழப்பு எதிர்பார்த்ததைவிட அதிகமானது. இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சியை இவ்வருட இறுதிக்குள் கைப்பற்றி விட முடியுமென கோத்தபாய எதிர்பார்ப்பது மக்களின் வாழ்விடங்களைத் தாக்கி அவர்களை கிளிநொச்சியில் இருந்து தங்களது பகுதிக்குள் உள்வாங்கி தாம் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கும் நாசகாரச் சூழ்ச்சித் திட்டமே.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை தாக்கி அவர்களது வாழ்விடங்களை ஆக்கிரமித்து அம்மக்களிற்கு அவல வாழ்வை ஏற்படுத்தியவர்களால் எவ்வாறு அம்மக்களிற்கு சுதந்திரமானவாழ்வை தரமுடியும் எனவே, சிறீலங்கா வவுனியாவிற்குள் மக்களை அழைப்பது ஏதோ ஒரு நாசகாரச் சதித்திட்டம் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அடுத்த கட்டமாக இந்தப் போரை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி விட்டனர் என்பதுவே இன்றைய நிலை. இதனைச் சரிவரப் புரிந்து கொண்ட சிறீலங்கா அரசு வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள மக்களை பழிவாங்கத் தயாராகி விட்டது என்றே கருத முடிகிறது.

இதேவேளை, விடுதலைப் புலிகளை இராணுவத்தால் ஒரு போதும் வெல்ல முடியாது என்ற பல ஆய்வாளர்களின் கருத்தை கடந்த வாரம் வவுனியாவில் நடைபெற்ற தாக்குதல் மெய்ப்பித்துள்ளது. அரசு இராணுவ நடவடிக்கையை விட்டு தமிழர்கள் கோருவதை நிறைவேற்றி அரசியல் வழிக்கு வருவதே இப்போது செய்யப்பட வேண்டியது.

- கலியுகன்

தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி – வை.கோ


இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி என குற்றம்சாற்றியுள்ள வைகோ, இந்திய அரசு செய்து வரும் ராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி எதிர்வரும் அக்டோபர் 10ஆம் திகதி சென்னையில் தனது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறிலங்காத் தீவில் சிங்கள இனவாத அரசு, கடந்த 50 ஆண்டுகாலமாக கொடிய அடக்குமுறைக்கு ஆளாகி வந்துள்ள ஈழத் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு தனது முப்படைகளையும் ஏவி இனப்படுகொலை நடத்தி வருகிறது. ஈழத் தமிழர்கள் ஜனநாயக அறவழியில் நீதி கேட்டுப் போராடிய ஒவ்வொரு கட்டத்திலும் நயவஞ்சகமாக ஏமாற்று ஒப்பந்தங்களை அறிவித்து ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்ததோடு சொல்லில் வடிக்க இயலாத கொடுந் துயரத்துக்கும் அவர்களை ஆளாக்கி வந்துள்ளது.இந்த நிலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்மக்கள் உண்ண உணவும், வசிப்பதற்கு இடமும் இன்றி வன்னிக் காடுகளில் பசியாலும் நோயாலும் மடியும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இலங்கை அரசுக்கு இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு ராணுவ உதவியும், தளவாடங்களும், ரேடார்களும் கொடுத்து வந்ததோடு, இந்திய ராணுவ பொறியாளர்களையும், நிபுணர்களையும் சிறிலங்கா ராணுவத் தாக்குதலுக்கு உதவி செய்ய நேரடியாக அனுப்பி வைத்தது.

செப்டம்பர் 9ஆம் திகதி வன்னியில் நடைபெற்ற தாக்குதலில் இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. சிறிலங்காத் தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி என குற்றம் சாட்டுவதோடு தமிழ் இனத்துக்கு இந்திய அரசு செய்யும் இந்த மன்னிக்க முடியாத துரோகத்துக்கு கண்டனம் தெரிவிக்கவும் இந்திய அரசு செய்து வரும் ராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அக்டோபர் 10ஆம் திகதி காலை 11 மணியளவில் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்டுச் சென்று உத்தமர் காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) அமைந்துள்ள மத்திய அரசின் அலுவலகமான வருமானவரித் துறை அலுவலகத்திற்கு எதிரில் மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

மறியல் போராட்டத்தைக் கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பன் ஆரம்பித்து வைக்க உள்ளார். பொருளாளர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சி.இ.சத்யா, துரை.பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்திற்கு முன்னிலை வகிக்கின்றனர். கட்சியின் முன்னணியினரும், தோழர்களும் பங்கேற்க இருக்கும் இந்த அறப்போருக்குத் தமிழ்ப் பெருமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

பத்து நாட்களுக்குள் மௌனம் கலைக்காவிட்டால்..... ! கருணாநிதிக்கு மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை

இலங்கை இனச்சிக்கலில் தமிழக முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வரும் மௌனத்தை பத்து நாட்களுக்குள் கலைக்காவிட்டால் தான் மேற்கொள்ளப் போகும் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

ஈழத் தமிழர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துக!

தமிழகத் தமிழனே தூங்காதே!

ஈழத் தமிழனைக் காக்கப் புலியெனப் புறப்படு!

சிறிலங்கா அரசுக்கு இந்தியாவே! ஆயுத உதவி வழங்காதே!

ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.





ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆற்றிய உரை:

தமிழீழத்தில் தமிழன் கொல்லப்படுகிறான். தாய்த் தமிழகத்தில் தமிழன் தூங்குகிறான். தாய்த் தமிழகத்துக்குத் தலைமையேற்கிற முதல்வர் கலைஞரோ அமைதி காக்கிறார்.

ஈழத்தில் குண்டுகள் வெடிப்பது கலைஞரின் காதுகளுக்குக் கேட்கவில்லையா?

ஈழத்தில் உள்ள தாய்மார்கள் கண்ணீர் வடிப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?

இன்னும் ஏன் அமைதி காக்கிறீர்கள்?

ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகத்தான் அமைதி காக்கிறீர்களா?

உங்களுக்கென்ன ஆட்சி பெரிதா?

நீங்கள் பார்க்காத ஆட்சியா?





இப்போதும் 5 ஆம் முறையாக ஆள்கிறீர்கள். 6 ஆம் முறையாகக் கூட நீங்கள் ஆட்சிக்கு வர ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இலங்கை இனச்சிக்கலில் உறுதியான முடிவெடுங்கள்.

உங்களை வாழ்த்த 8 கோடித் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.

நான் முதலில் உங்களை வந்து வாழ்த்துவேன்.

இந்திய அரசையே நீங்கள்தானே வழிநடத்துகிறீர்கள். அவர்கள் எப்படி உங்கள் ஆட்சியைக் கலைப்பார்கள்?

அப்படியேக் கலைத்தாலும் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா?





இலங்கை சிக்கலை ஆராய தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைக்கலாம். குழு அனுப்பப்படும் நாளில் இருந்து சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அக்குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கட்டும்.

தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி ஈழத் தமிழர்களை ராஜபக்ச அரசு படுகொலை செய்வதைக் கண்டித்தும்-

தனித் தமிழீழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்- அதை நடுவண் அரசு ஏற்றுக் கொள்ளும்.

இலங்கை இனச்சிக்கலில் பத்து நாட்களுக்குள் கலைஞர் முடிவெடுக்காவிட்டால் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டை வீரர்கள் தீவுத் திடலில் கூடி ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கிறோம் என்று அறிவிப்பார்கள்.

அதன் பிறகும் மெளனம் கலையவில்லையென்றால்- பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலேயே உண்ணாநிலை மேற்கொள்வார்கள்.

அவர்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்-

இளைஞர்கள்-

மகளிர்

என அனைத்துத் தரப்பினரும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வார்கள்.

பாகிஸ்தான் - சீனா ஆகிய நாடுகளிடமிருந்து சிறிலங்கா ஆயுதம் வாங்குவதாலும் புதுவை காந்த அலைத் தொலை அளவி- ராடர் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படுகின்றன.

தமிழர்கள் துரத்தி துரத்திக் கொல்லப்படுகிறார்கள்.

இனியும் முதல்வர் கலைஞர் அமைதி காக்கக்கூடாது.

இங்குள்ள தமிழர்கள் கலைஞர் தலைமையில் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைந்தார் பகைவர்கள் என்ற செய்தி வர வேண்டும். அவ்வாறு வந்தால் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்றார் அவர்.

பா.ம.க. தலைவர் கோ.க.மணி, திரைப்பட இயக்குநர் சீமான், இந்திய நாடாளுமன்ற பா.ம.க. உறுப்பினர் மூர்த்தி, வேல்முருகன் உள்ளிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் பா.ம.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கருஞ்சட்டையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்-திரளும் புதுக் கூட்டணி!


ஈழத் தமிழர்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பையும்,

பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் என்னென்ன கூட்டணிகள், எப்படி எப்படி உருவாகப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் மக்களால் இது குறித்தே பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விஜயகாந்த்துடன் யார் சேருவார்கள், பாமக என்ன ஆகும், கம்யூனிஸ்டுகளை யார் சேர்த்துக் கொள்வார்கள், ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார், கருணாநிதி மேற்கொள்ளப் போகும் அதிரடி நடவடிக்கை என்ன என்ற ரீதியில் பலப்பல விவாதங்கள் தமிழக மக்களிடையே நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சத்தமில்லாமல் ஒரு நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம். இலங்கை ராணுவம் விமானம் மூலமாகவும், தரை வழியாகவும் போர் தொடுத்து, அங்கு வாழும் தமிழ் மக்களை படுகொலை செய்து வருகிறது. லட்சக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் உடமைகளை இழந்து அடிப்படை வசதி ஏதுமின்றி, அங்குள்ள காடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பிரச்சனையில் இந்திய அரசு தலையிட்டு, தமிழர்களுக்கு எதிரான போரை முடிவுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும், அங்குள்ள தமிழ் அகதிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி காந்தி பிறந்த நாளன்று சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் தமிழ்நாட்லுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர்களுக்கான அமைப்புகளும் பங்கேற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் திரையுலகத்தினர் பலரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அதிமுக சார்பாக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன். முன்னாள் அமைச்சர்கள் முத்துச்சாமி, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனனர். அதே நாளில் மாவட்டத் தலைநகர்களில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அந்த அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அதிமுகவினர் கலந்து கொள்வார்கள் என அதிமுக அறிவித்துள்ளது.

தேமுதிக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் கலந்து கொள்ளவுள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை முதன் முதலாக உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தவர் இவர்தான். அப்போது 1984ல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் எடுத்த முயற்சியின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக பண்ரூட்டி ராமச்சந்திரன் பேசி உலகின் பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பியவர். ஆதனால் பண்ருட்டியாரின் பங்கேற்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதவிர, பாமக, மதிமுக, மற்றும் இடது சாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளும், பழ. நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட இலங்கை பிரச்சனையின் தீர்வுக்கு பாடுபடும் அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு இலங்கைப் பிரச்சனையின் தீர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என உரையாற்ற உள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்துமே கலந்து கொள்கின்றன. அதிலும் எதிரும் புதிருமாக உள்ள பாமக, அதிமுக, தேமுதிக ஆகியவை ஒரே மேடையில் உண்ணாவிரதம் இருக்கவுள்ளன - அதேசமயம், திமுகவும், காங்கிரஸும் மாத்திரமே இதில் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கட்சிகளை கம்யூனிஸ்டுகள் அழைக்கவில்லை என கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்காக நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் உள்ளனர்.

(நன்றி தட்ஸ் தமிழ்)

மணலாற்றில் ஆறு முனை மோதல் – படையினர் 6 பேர் பலி, 20 பேர் காயம்

மணலாற்று களமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். லோ உட்பட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மணலாறு களமுனையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளனவில் பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் ஆறுமுனைகளில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

இம்முன்னகர்வுகளுக்கு எதிராக செறிவான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர்.

இம்முறியடிப்புத் தாக்குதல்களையடுத்து இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கினர்.

இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

படையினரிடமிருந்து டாங்கி எதிர்ப்பு படைக்கலமான லோ-01 உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பில் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் - மஹிந்தவின் வீழ்ச்சிக்கான ஆரம்பமா?-GTN செய்தி ஆய்வு

மனித உரிமை சட்டத்தரணி வெலியமுனவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரை ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து மீண்டும் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு திரும்பினர். சுமார் 500 சட்டத்தரணிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

சட்டத்தரணி வெலியமுன வீட்டின் மீதான தாக்குதலை தாம் கண்டிப்பதாகவும் தனது தொழிலை மேற்கொள்ளும் ஒரு சட்டத்தரணிக்கு எதிரான இந்த நடவடிக்கை வருந்தத்;தக்கது எனவும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சட்டத்தரணியும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சியின் தலைவருமான வாசுதேவநாணயக்கார சட்டத்தரணி ஒருவருக்கு தனது தொழில் நிமித்தம் ஏற்படும் இவ்வாறான இடயூறுகளுக்கு எதிராக பொறுப்பு கூறவேண்டியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அண்மைக்காலமாக இலங்கையின் நீதித்துறையின் மீது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் பாதுகாப்பு படைகள் ஏற்படுத்தி வரும் அழுத்தங்கள், பயமுறுத்தல்கள், நீதித்துறையின் தீர்ப்புக்களை உதாசீனப்படுத்தல் போன்ற விடயங்கள் உண்மையிலேயே நீதித் துறைக்கு சற்று ஆத்திரத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளதனை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக உயர் நீதிமன்றம் அண்மைய நாட்களில் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கும் எதிராக வழங்கிவரும் தீர்ப்புக்கள் நீதி நிர்வாகத் துறைகளிடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளதனை காண முடிகின்றது.

பாகிஸ்த்தானிலும் அதிஉயர் அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி பேர்வைஸ் முஸராவ் சட்டவாக்கத் துறையான பாராளுமன்றம், மற்றும் நீதித்துறைகளைக் கணக்கில் எடுக்காமல் எதேட்சதிகார ஆட்சியை மேற்கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதியரசர் மீதும், நீதித் துறையின் மீதும், சட்டதரணிகள் மீதும் நேரடி மறைமுகத் தாக்குதல்களைத் தொடுத்து வந்தார். அதற்கெதிராக அந்த நாட்டின் நீதித் துறை கிளர்ந்தெழ ஆரம்பித்த பின்பே முஸராவ் ஆட்டம் காணத் தொடங்கினார். இறுதியில் அவரது ஆட்சி தூக்கி எறியப்பட்டது.

அது போன்றே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நீதித்துறை படிப்படியாக கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளது. இது மஹிந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறுகிறதா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தமிழர்களை அழிப்பதற்காக 177 பில்லியன் ரூபா.. 2009 க்கான பாதுகாப்புச்செலவுக்காக ஒதுக்கீடு.


2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்காக 177 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டின் அரசாங்கத்தின் முழு செலவினம் ஆயிரத்து 700 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வருமானம் 870 பில்லியன் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தின் முழு செலவினம் ஆயிரத்து 519 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொiயை நிரப்ப அரசாங்கம் 84 ஆயிரத்து, 901 கோடி, 40 லட்சத்து 28 ஆயிரம் ரூபாவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து கடனா பெறவேண்டும். 98 கோடி 44 லட்சத்து 60 ஆயிரம் ரூபா அரசாங்கள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்ளுக்கு செலவிடுவது என திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு செலவினமாக 177 பில்லியன் ருபா ஒதுக்கப்பட்ட உள்ளது. கடந்த வரவுசெலவு திட்டத்தில் 166 பில்லியன் ரூபா பாதுகாப்பு செலவினங்களுக்கா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை 11 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 50 வீதம் படையினர், காவற்துறையினர், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் ஊதிய கொடுப்பனவுகளுக்காக செலவிடப்படுவதாக நிதியமைச்சு கூறியுள்ளது.