போரின் மூலம் பொருளாதாரத்தை சிதைக்கும் திட்டமிட்ட சதி முயற்சியை முறியடிப்போம்


சிங்களப் பேரினவாத அரசு தமிழர் தாயகத்தின் மீதான போரை திணித்தவாறு தமிழர்களின் பொருளாதார வளங்களை சிதைத்து வருகிறது.

போர் காரணமாக இடம்பெயரும் மக்களிற்கான உணவு, உடை, கூடாரம் போன்ற அத்தியவசியமான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்குக் கூட தொண்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகின்றது. அல்லது தடுக்கிறது.

கடற்றொழில், விவசாயம் உட்பட தமிழர்களின் முதன்மையான தொழில் செய்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. தன்னிறைவுடன் வாழ்ந்த தமிழ் இனம் நிவாரணத்திற்காக கையேந்த நிற்பந்திக்கப்பட்டுள்ளது. சுயபொருளாதாரத்துடன் தன்னிறைவுடன் இருந்த மக்கள் சிறீலங்கா அரசின் போர் காரணமாக பின்தள்ளப்பட்டு வருகின்றனர். தமிழீழத்தின் பொருளாதார வளங்களில் விவசாயமும் பிரதானமானது.

கிழக்கில் அம்பாறை மாவட்டமும் வடக்கில் மன்னார் மாவட்டமும் தமிழர்களின் நெற்களஞ்சியம் என்று கூறுவதற்கு பதிலாக முழுநாடும் தமக்கே சொந்தம் என்ற இறுமாப்பில் சிங்களப் பேரினவாத அரசு தங்களது நெற்களஞ்சியம் என்பது போல கூறுகின்றது. இவ்வாறு கூறுவதன் ஊடாக அரசியல் ரீதியாக தமிழர் தாயகப் பகுதியை சொந்தம் கொண்டாடினாலும் சிறீலங்காவை விட விவசாய உற்பத்தியில் தமிழர் தாயகப் பகுதி வளமானது.

இங்கு தான் பொருளாதார வளம் கூடுதலாக உள்ளது என்ற யதார்த்த உண்மையை மறைமுகமாக ஒத்துக் கொண்டு வருகிறது என்று கூறலாம்.தமிழர் தாயகப் பகுதியில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களும் நெல் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளன. போரற்ற ஒரு காலகட்டத்தில் தாயகப்பகுதிகளின் விவசாயம் மிகவும் சிறப்பானதாக வளர்ச்சி கண்டு வந்தது. படையினரால் வன்பறிப்புச் செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தில் நெல்விளையும் முக்கிய பகுதிகளான தனங்கிளப்பு, மறவன்புலவு, கோயிலாக்கண்டிப் பகுதிகளில் நெல் உற்பத்தியில் ஈடுபடுவதற்கான அனுமதி படைத்தரப்பால் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடமராட்சிக் கிழக்கில் அம்பன், நாகர்கோவில் மற்றும் தீவகம், வலிகாமம் போன்ற பகுதிகளில் படையினர் உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவி நெல் உற்பத்தி உட்பட அனைத்து விவசாய உற்பத்திகளையும் தடை செய்துள்ளனர். இதைவிட கிழக்கு மாகாணத்திலும் விவசாய உற்பத்தியில் ஈடுபட படையினரால் பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தன்னிறைவுடன் தமது உணவுத் தேவைக்கு மேலதிகமாக தமது உற்பத்தியில் ஈடுபட்டு ஏற்றுமதியில் ஈடுபட்ட எமது மக்கள் படையினரது நில ஆக்கிரமிப்பு காரணமாக படைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அன்றாட உணவிற்கு நிவாரணத்திற்காக கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தை தற்போது பார்க்கின்ற போது அங்கு தேவைக்கு மேலதிகமான உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட போதும் படையினரது ஆக்கிரமிப்பு யுத்தம் காரணமாக உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளே பயன் அடைய முடியாத அளவிற்கு மன்னார் மாவட்டத்தின் நிலமை சென்றுள்ளது, அங்குள்ள விளை நிலங்களில் உற்பத்தியாகிய நெல்லினை படையினர் அறுவடை செய்து தென்பகுதிக்கு ஏற்றி வருகின்றனர். இவ்வாறு 10,800 மெற்றிக் தொன் நெல் இதுவரை தென்பகுதிக்கு இராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக மன்னார்த் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தைப் பார்க்கின்ற போது கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருப்பதால் அங்கு உற்பத்தியில் ஈடுபடுவதற்கான தடைகள் இல்லை என்றே சொல்லலாம். எனினும் பூநகரி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் படையினரது எறிகணைத் தாக்குதல்களிற்கு அடிக்கடி இலக்காவதால் அங்கு உற்பத்தியில் ஈடுபடமுடியாத நிலைமை உள்ள போதும் கணிசமான மக்கள் அங்கும் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். படையினரது எரிபொருள்த்தடை, உள்ளீடுகளிற்கான தடை, உரவகைகளிற்கான தடை என்பன தொடர்கின்ற போதும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களிற்கான உணவுத் தேவைக்காக தென்னிலங்கையில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உருவாகவில்லை என உலக உணவுத்திட்ட நிறுவனம் தென்னிலங்கையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

அந்த அளவிற்கு எமது உற்பத்தி நிலைமை உள்ளது. தற்போது கோதுமை மாவின் விலை சடுதியாக உயர்வடைந்து செல்வதால் மாற்றீடான உணவு உற்பத்தியில் எமது மக்கள் நாட்டம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் எமது மக்களிடம் பெரியளவிலான மூலதன வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என்பன இல்லாமையால் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எங்களுடைய உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் மாற்றீடான உற்பத்திகளை நவீன முறைகளில் மேற்கொள்வதன் மூலம், எதிரியின் பொருளாதாரத் தடையை உடைத்தெறிந்து சுயமாக எமது தேவைகள் அனைத்தையும் நாமே பூர்த்தி செய்ய முடியும். வன்னி மக்கள் மீதான போர் முனைப்புக்களை தீவிரப்படுத்தியவாறு மக்கள் மீதான பொருளாதாரத் தடையையும் சிங்கள அரசு இறுக்கி வருகிறது.

குறிப்பாக இடம்பெயரும் மக்களிற்கான நிவாரணப் பணிகளையே மறுதலித்துவரும் சிங்கள அரசின் உள்நோக்கத்தை சரியாக அளவிட்டு, தமிழ் மக்கள் அனைவரும் சுயபொருளாதாரத்தை வளர்க்கும் அதேவேளை எமது தாயக நிலங்களை முழுமையாக மீட்டு நிறைவான தமிழ் ஈழத்தை அமைப்பது ஒன்றே வழி.

- வே.தவச்செல்வம்

No comments: