கொழும்பில் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் - மஹிந்தவின் வீழ்ச்சிக்கான ஆரம்பமா?-GTN செய்தி ஆய்வு

மனித உரிமை சட்டத்தரணி வெலியமுனவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரை ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து மீண்டும் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு திரும்பினர். சுமார் 500 சட்டத்தரணிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

சட்டத்தரணி வெலியமுன வீட்டின் மீதான தாக்குதலை தாம் கண்டிப்பதாகவும் தனது தொழிலை மேற்கொள்ளும் ஒரு சட்டத்தரணிக்கு எதிரான இந்த நடவடிக்கை வருந்தத்;தக்கது எனவும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சட்டத்தரணியும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சியின் தலைவருமான வாசுதேவநாணயக்கார சட்டத்தரணி ஒருவருக்கு தனது தொழில் நிமித்தம் ஏற்படும் இவ்வாறான இடயூறுகளுக்கு எதிராக பொறுப்பு கூறவேண்டியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அண்மைக்காலமாக இலங்கையின் நீதித்துறையின் மீது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் பாதுகாப்பு படைகள் ஏற்படுத்தி வரும் அழுத்தங்கள், பயமுறுத்தல்கள், நீதித்துறையின் தீர்ப்புக்களை உதாசீனப்படுத்தல் போன்ற விடயங்கள் உண்மையிலேயே நீதித் துறைக்கு சற்று ஆத்திரத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளதனை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக உயர் நீதிமன்றம் அண்மைய நாட்களில் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கும் எதிராக வழங்கிவரும் தீர்ப்புக்கள் நீதி நிர்வாகத் துறைகளிடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளதனை காண முடிகின்றது.

பாகிஸ்த்தானிலும் அதிஉயர் அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி பேர்வைஸ் முஸராவ் சட்டவாக்கத் துறையான பாராளுமன்றம், மற்றும் நீதித்துறைகளைக் கணக்கில் எடுக்காமல் எதேட்சதிகார ஆட்சியை மேற்கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதியரசர் மீதும், நீதித் துறையின் மீதும், சட்டதரணிகள் மீதும் நேரடி மறைமுகத் தாக்குதல்களைத் தொடுத்து வந்தார். அதற்கெதிராக அந்த நாட்டின் நீதித் துறை கிளர்ந்தெழ ஆரம்பித்த பின்பே முஸராவ் ஆட்டம் காணத் தொடங்கினார். இறுதியில் அவரது ஆட்சி தூக்கி எறியப்பட்டது.

அது போன்றே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நீதித்துறை படிப்படியாக கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளது. இது மஹிந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு கட்டியம் கூறுகிறதா? பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

No comments: