மனித உரிமை மீறல்களை தடுப்பதில் அரச தலைவருக்கு அக்கறையில்லை: ஆசிய மனித உரிமைகள் சபை


இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு அரச தலைவருக்கோ அல்லது அரசுக்கோ அக்கறையில்லை என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை மேற்கொள்பவர்கள் கொல்லப்படும் போது அரச ஊடகங்கள் அமைதியாக இருக்கின்றன. அரசாங்கம் ஊடகங்களைத் தனக்குச் சார்பாகக் கையாள்வதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர்.

காவல்துறையினருக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை மேற்கொண்ட சுகத் நிசந்த பெர்ணான்டோ செப்ரம்பர் மாதம் 20 ஆம் நாள் கொல்லப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே மாதிரியான முறைப்பாட்டை மேற்கொண்ட காரணத்திற்காக ஜெராட் பெரேரா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

தற்போதைய சம்பவம் தொடர்பாக தனியார் ஊடகங்கள் அதிக தகவல்களை வெளியிட்டிருந்தன. ஆனால் அரச தலைவரோ, பிரதமரோ, மனித உரிமை அமைச்சரோ அல்லது அரசைச் சார்ந்த பேச்சாளர்களோ இந்த படுகொலையைக் கண்டிக்கவில்லை என்பதுடன் அது தொடர்பான விசாரணைகளுக்கும் முன்வரவில்லை.

அரசுக்கு எதிரான இந்தகைய குற்றச்சாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும் என்றால் அரசு படுகொலைகள் தொடர்பான விசாரணைகளையாவது மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: