பாதுகாப்பு வலயம் மீது படையினரின் தாக்குதலில் இன்று (வெள்ளி) 102 பொதுமக்கள் படுகொலை; 156 க்கு மேற்பட்டோர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.

இத்தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்படி பகுதிகளில் உள்ள மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்களில் காயமடைந்த மக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகின்றது. அத்துடன், திலீபன் மருத்துவ சேவைப்பிரிவினரும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதி இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீதும் சிறிலங்கா படையினர் இன்று செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

அதேவேளையில் மாத்தளன் பகுதி மீதும் சிறிலங்கா படையினர் செறிவான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களையும் நடத்தினர். இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை பாதுகாப்பு வலயப் பகுதிகளில் காயமடைந்த பொதுமக்களில் ஒரு தொகுதி நோயாளர்களையும், அவர்களின் பராமரிப்பாளர்களையும் ஏற்றிக்கொண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கப்பலான கிறீன் ஓசன் கப்பல் புல்மோட்டைக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ புதினம் ]

இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவை பொறுப்புடன் செயற்பட வேண்டும்

இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தனது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென பொறுப்புக்களை பாதுகாக்கும் சர்வதேச மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து இறுதி கட்ட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

யுத்த சூனிய பிரதேசம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் என்ற பாகுபாடு இன்றி அரசாங்க இராணுவம் விமான மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவாதாக சுட்டிக்காட்டியுள்ளது.

2005ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது பாதுகாப்புப் பேரவையின் தலையாய பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தைப் போன்றே தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களை யுத்த சூனிய பிரதேசத்திலிருந்து வெளியேற விடாது தடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யும் உரிமை உலக நாடுகளுக்கு இருப்பதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கெரத் ஏவன்ஸ், முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதி செயலாளர் ஜேன் என்கெலன்ட், ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் ஜொவான் மென்டாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையில் போர்நிறுத்தம் கோரி 21ம் தேதி திரையுலகம் உண்ணாவிரதம்: பாரதிராஜா

இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு இழவு வீட்டில் வந்து அவர் வாக்கு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார்.

அப்போது பாரதிராஜா பேசுகையில்,

இங்கே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், 20ஆம் தேதி சென்னைக்கு வரும் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வரும் சோனியா காந்தி, இலங்கையில் போரை நிறுத்தி விட்டேன் என்று சொல்லிவிட்டுதான் சென்னையில் காலடி வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இழவு வீட்டிற்கு வந்து வாக்குக் கேட்கக் கூடாது.

போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

உண்ணாவிரதத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.

சத்யராஜ் கூறுகையில்,

கடந்த 5 நாட்களாக ஈழத்தமிழர்களுக்காக 100 பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. அவர்களை பேட்டி காணுங்கள். அவர்கள் சொல்லுவதை ஊடகங்களில் போடுங்கள்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சியினர், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள். இலங்கை தமிழர் பிரச்சனையில் எல்லோரும் ஓரணியில் நின்று போராடுவோம் என்றார் உருக்கமாக.

தமிழர்களை கொன்று குவிப்பதனை உடனடியாக தடுத்து நிறுத்தவும்: மலேசிய அமெரிக்கத் தூதரகத்திடம் மனு

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து அமெரிக்கா உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அமெரிக்கத் தூதரகம் ஊடாக அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கான மனு கையளிக்கப்பட்டது.
உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மா.மனோகரன், சார்ள்ஸ் சந்தியாகு, சிவராசா இராசையா, மாணிக்கவாசகம், சைல்டு நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் ஐங்கரன், 'மலேசியா இன்று' இணைய இதழின் ஆசிரியர் காத்தையா உட்பட எழுவர் அடங்கிய குழுவினர் இங்குள்ள அமெரிக்க தூதரகத்திடம் மனுவினை கையளித்தனர்.

இலங்கையில் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்' என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இராணுவத்தினரின் கண்முடித்தனமான குண்டுவீச்சினால் மக்கள் உயிர்ச் சேதம் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்குக்கொண்டு வருவதுடன், தமிழ் மக்களின் உரிமைப்பூர்வமான கோரிக்கைகள் நிறைவேறவும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்திடம் கையளிக்கப்பட்ட மனுவின் விபரம் பின்வருமாறு:

மலேசியத் தமிழர்களாகிய நாங்கள், சிறிலங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இனப்படுகொலை குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அரச தலைவர் ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவாத அரசு தனது சொந்த மக்களை இனப்படுகொலை செய்து வருவதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றோம்.

ராஜபக்சவும் அவரது இராணுவத்தினரும் இதுவரையில் குழந்தைகள் உட்பட 77,000 தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் சிறிலங்கா ஆயுதப் படையினரால் 4,100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 8,800-க்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

அரச தலைவர் அவர்களே!

குறைந்தது 190,000-க்கும் அதிகமான பொதுமக்கள் 20 மைல் சதுர பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதியில் இருக்கின்றனர்.

இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக துடைத்தொழிப்போம் என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் உறுதி எடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

கோத்தபாய ராஜபக்ச, இப்போது தொடங்கி முல்லைத்தீவு பகுதியில் சிக்கும் தமிழ்ப்பெண்கள் இராணுவத்தினருக்கு விருந்தாகட்டும். ஆண்களாக இருந்தால் அவர்களின் இரத்தத்தால் இந்திய சமுத்திரம் சிவக்கட்டும்," என முழக்கமிட்டிருக்கிறார்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடோல்ப் ஹிட்லரைப் போன்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரசியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஐக்கிய நாட்டு சபையில் உள்ள வீட்டோ அதிகாரத்தின் ஆசியுடன் செயற்பட்டு வருகின்றார் என்று கூறலாம். ஹிட்லருக்கு எதிரான நின்ற இந்த நாடுகள் அனைத்துமே நின்று ராஜபக்சவுக்கு ஆதரவாக நிற்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா தனது ஏவுகணையைப் பாய்ச்ச முற்பட்டபோது மீண்டும் வீட்டோ அதிகாரம் பயன்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மண்ணில் அமைதியாகவும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற உரிமைக்காக போராடும் தமிழ் மக்களுக்கு இந்த நாடுகளிடம் இருந்து எந்தவகையிலும் ஆதரவான பதில் கிடைக்கவில்லை.

மலேசிய தமிழர்களாகிய நாங்கள், இன்றுவரையில் அமெரிக்கா, இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையைக் களைவதில் தோல்வியடைந்து விட்டது என்றே கருதுகின்றோம்.

உங்கள் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் தமிழர்களைக் காப்பாற்ற போவதில்லை.

அரச தலைவர் அவர்களே!,

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிக்கிக் கொண்டுள்ள 190,000 தமிழர்களைக் இனப் படுகொலையில் இருந்து காக்க உடனே தலையிட்டு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், அரச தலைவர் அவர்களே!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தோடு இணைந்து உடனடியாக இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தத்தைக்கொண்டு வரவும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையை அங்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மாண்புமிகு அரச தலைவர் அவர்களே!

உங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டு நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக தலையிட்டு இச்சிக்கலில் தீர்வு காண்பீர்கள் என பெரிதும் எதிர்பார்க்கின்றோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- புதினம் -

வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது மோதல்களை முடிவுக்கு கொண்டுவராது; சமாதானத்துக்கும் இழுக்கு: அமெரிக்கா


வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது
வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர்நிறுத்தம் ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் தப்பிச் செல்லக்கூடிய வகையில் உடனடியாக மோதல் நிறுத்தமொன்றிற்கு செல்லவேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவென ஏற்படுத்தப்பட்ட வலயங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்றும் அத்துடன் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை சென்று பார்வையிட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாது உதவி அமைப்புகள் முகாம்களுக்குச் சென்று செயற்படுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகால பிரச்சினைக்கு முடிவொன்றை வைக்கும் வாயப்பொன்று இலற்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்றும் றொபேர்ட் வூட் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது ரத்து: டைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு


விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட டைரக்டர் சீமான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் விடுதலை ஆகிறார்.
சினிமா டைரக்டர் சீமான் பெப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். அவர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

17-2-09 அன்று நெல்லையில் நடந்த கூட்டத்திலும், இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசினார். இதில் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டார்.

நெல்லை கலெக்டர் பரிந்துரையின்பேரில், சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர் 1 வருடம் ஜெயிலில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

இதை எதிர்த்து டைரக்டர் சீமானின் தம்பி பீட்டர் ஜேம்ஸ் சென்னை உயர்நீதிமன்றில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட முகாந்திரம் இல்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே தேசிய பாதுகாப்பு வாரியத்திடமும் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி சீமான் கைது செய்யப்பட்டதற்காக, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யக்கோரி அவரது தம்பி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தர்மராவ், செல்வம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

என்றாலும், புதுச்சேரி பொலிஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் சீமான் விடுதலை ஆவதில் சிக்கல் உள்ளது.

புதுச்சேரியில் சீமான் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற முடியும். எனவே ஒன்றிரண்டு நாட்களில் அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.