இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண டிசம்பரில் உலகத் தமிழர் மாநாடு

* 52 நாடுகளிலுள்ள தமிழர்கள் பங்கேற்பர்

இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண டிசம்பரில் உலகத் தமிழர்களின் மாநாடு நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சென்னையில் வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து அவர் பேசியதாவது;

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அங்கு பசியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவும், மருந்தும் வழங்க வேண்டும். தமிழர்களைப் படுகொலை செய்யும் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண வரும் டிசம்பரில் உலகத் தமிழர் மாநாடு நடைபெறும். அதில் உலகின் 52 நாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்பார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்பாராத அளவுக்கு பெருமளவில் மக்கள் பங்கேற்றுள்ளனர். பட்டினியால் வாடும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசே உணவையும், மருந்தையும் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் தானும் உதவி செய்யாமல் உதவி செய்யும் மற்றவர்களையும் தடுக்கிறது.

இந்த உண்ணாவிரதம் அடுத்த தேர்தலுக்கான ஒத்திகை என்று குளிரூட்டி அறையில் அதிகாரிகள் புடைசூழ அமர்ந்துகொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். மதுரையில் மதுரை ஆதினம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துள்ளார். இங்கு திரைப்பட கலைஞர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் பேசினார்கள். இவர்கள் எல்லாம் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போகிறவர்களா?

நேரு, இந்திரா, சாஸ்திரி போன்ற பிரதமர்கள் இந்தியாவின் கௌரவத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்தியாவின் கௌரவம், மக்கள் முக்கியமல்ல, அதனால்தான் தமிழர்களைக் கொல்ல ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறார். தமிழ் மக்கள் சிந்தும் இரத்தத்தில் இந்திய அரசுக்கும் பங்கு உண்டு.

எதற்கெல்லாமோ மத்திய அரசை நிர்ப்பந்தித்த தமிழக முதல்வர், இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படும் விஷயத்தில் வற்புறுத்தாதது ஏன்?

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடைபெறும் போராட்டம் இது. பக்கத்து வீடு பற்றி எரியும் போது உடனடியாக ஓடிச்சென்று உதவ வேண்டுமே தவிர அழைப்பு வரவில்லை என்று கூறுவது கடமை தவறும் செயல்.

மத்திய அரசு அனுமதித்தால் இலங்கைத் தமிழர்களுக்கு உணவும், மருந்தும் திரட்டி அனுப்புவோம். இல்லையெனில் எப்படி அனுப்புவது என்பது பற்றி முடிவெடுப்போம் என்றார் தா.பாண்டியன் - தினக்குரல்

இலங்கைச் செய்திகள் சுடர் ஒளியில் வெளியான புகைப்படம் குறித்த ராணுவப் பேச்சாளரின் கடிதத்திற்கு சுதந்திர ஊடக அமைப்பு அதிருப்தி

சுடர் ஒளி பத்திரிக்கையில் வெளியான புகைப்படம் குறித்து ராணுவப் பேச்சாளர் அந்த பத்திரிகையினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தினை சுதந்திர ஊடக அமைப்பு நிராகரிப்பதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி சுடர்ஒளிப் பத்திரிகையில் வெளியான புகைப்படம் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணக்கார இராணுவ தiமையகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக இந்தக் கடித்தை அனுப்பியிருந்தார்.
வன்னிப் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் பதுங்குகுழியில் இருந்தவாறு வானத்தை நோக்கி பார்ப்பது போல் இருக்கும் புகைப்படம் ஒன்றை சுடரொளி வெளியிட்டிருந்தமை தொடர்பாகவே இராணுவ பேச்சாளர் இந்த கடித்தை அனுப்பியுள்ளார். இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியிலும் படையினர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு பத்திரிகையில் எந்தப் புகைப்படம், எந்த செய்தி , வெளியிட வேண்டும், கூடாது என்பது இராணுவ பேச்சாளரால் தீர்மானிக்கக் கூடிய விடயமல்ல என தெரிவித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு, அது ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை குறித்த புகைப்படம் சுடரொளியில் வெளியிடப்படுவதற்கு முன்னர், பீ.பீ.சீ. சிங்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தத்தில் ஈடுபடும் படையினர் தரை, வான் வழியாக எதிரிகளின் இலக்கு மீது தாக்குதல் நடத்துவது வழமையானது, இதன் போது மக்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுகின்றன.
எனினும் இராணுவம் மக்களை குறிவைத்து தாக்குவதில்லை. இந்த நிலையில் சுடர்ஒளிப் பத்திரிகைக்கு போர் பற்றிய செய்திகளையும் படங்களையும் வெளியிட உரிமை இருக்கிறது எனவும் அந்;த உரிமை தற்போதுள்ளமை போலவே எப்போதுமே இருப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு திணிக்க முயற்சிக்க கூடாது எனவும் ஊடக சுதந்திரத்திற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் சுதந்திர ஊடக அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சுடர் ஒளியில் வெளியிடப்பட்ட புகைப்படத்திற்கு கீழே கடவுளே எங்களுக்கு மேல் குண்டுகளை போட்டு விடாதே என சிறுவர்கள் இருவர் வானத்தை நோக்கி பார்த்து கூறுவது போல் எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் விமானப்படையினர் தவறான இலக்குகளை தாக்குகின்றனர், இதனால் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : உலக தமிழ்ச்செய்திகள்.

இப்போதைய சூழ்நிலையில் கூட்டுக் கடற்படை ரோந்து தேவை இல்லை –கருணாநிதி

இப்போதைய சூழ்நிலையில் கூட்டு கடற் படை ரோந்து தேவை இல்லை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை கண்காணிப்பு தேவை இல்லை என தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் அண்மையில் சந்தித்துப் பேசியபோது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதை தடுக்கவும் இந்தியா-இலங்கை கூட்டுக் கடற்படை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாயின. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,இதே கருத்தினை வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையினருக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளதாகவும் கூட்டு கடற்படை ரோந்து என்பது ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று எனவும் கருணாநிதி கூறியுள்ளார். அந்தக் காரணங்கள் பற்றி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அப்போதைய தலைமை செயலாளரும் மாநில அரசு அதிகாரிகளும் விரிவான ஆலோசனைகள் நடத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தன்னைச் சந்தித்த போது இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்கு நவீன கருவிகள், மற்றும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.உடனடியாக இதனை செய்து கொடுத்தால் தான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டது போல் இப்போதைய சூழ்நிலையில் கூட்டு கடற் படை ரோந்து தேவை இல்லை. இலங்கை அரசு தெரிவித்து இருக்கும் கூட்டு கடற்படை திட்டம் பற்றி பரிசீலிக்க வேண்டிய அவசிய மும் இல்லை என அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : உலகத்தமிழ்ச்செய்திகள்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல் - முரண்பட்ட அரசியலாக உருவெடுப்பு

நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல்கள் கடும் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும் இந்த நிலைமையில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் இருந்து வருவதாகவும் சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காலி வீதியின் தடைகளை அகற்றுமாறு கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு திகதி குறிப்பிட்டு, வழங்கப்பட்ட தீர்ப்பு, முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளின் விதம், இந்தமோதல் உக்கிரமடைய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தவிர தற்போது உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் சில வழக்கு விசாரணைகளிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச சேவை மற்றும் நீதிச்சேவை ஆகியவற்றில் ஒய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் மற்றும் அரசாங்கத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் இடையிலான கொள்கைளில் முரண்பாடுகள் எழுந்தன. அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு வருவதால், அரசியல் பிரச்சினை ஒன்று உருவாகி வருகிறது.

எதிர்வரும் காலங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்று அதிகாரம் கவனத்தில் கொள்ளாது செயற்படும் நிலை தோன்றும் என அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அரசாங்கம் பிரதம நீதியரசருக்கு எதிராக , அரச மற்றும் தனியார் ஊடகங்களைப் பயன்படுத்தி, பாரிய எதிர்நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்க அமைச்சர்கள் சிலர், பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவது குறித்த யோசனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : உலகத்தமிழ்ச்செய்திகள்

சிங்கள அரசுகள் ஓர் வட்டத்திலிருந்து தமிழர் பிரச்சினையை நோக்குகின்றன – றோவின் முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா

இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் அனைத்துமே ஒர் வட்டத்திற்குள் இருந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் இந்திய றோ அமைப்பின் தலைவர் ஏ.கே.வர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டங்களை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு ஒருபோதும் வழியமைக்காதென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆளுங்கட்சி மாவட்ட ரீதியான அதிகாரப் பரவலாக்களை முன்னிலைப்படுத்தி தீர்வுத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும், இதனை முழுக்க முழுக்க வெற்றிகரமான முயற்சியாக கருத முடிடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் கூர்ந்து அவதானித்து தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சர்வதேச மனித உரிமைகள் சட்டத் திட்டங்களின் அடிப்படையில் பயங்கரவாதிகளை கொன்று குவிக்கும் அதிகாரம் எந்தவொரு அரசாங்கத்திற்கும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட ரீதியான முறையில் தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர பயங்கரவாதிகளை படுகொலை செய்வதற்கு எந்தவொரு நாட்டிற்கும் உரிமையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாதாரண குற்றவாளிகளைப் போன்றே பயங்கரவாதிகளும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பரவலாக்களின் மூலம் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்தியா இலங்கை தமிழர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கியதாகவும், எனினும் இலங்கைத் தமிழர்கள் சர்வதேச ரீதியான வலையமைப்பொன்றை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னணி அங்கில இணையதளமொன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியொன்றின் போது அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளின் மூலம் நிலப்பரப்புக்கள் கைப்பற்ற போதிலும் இனரீதியான கிளர்ச்சி மீண்டும் வெடிக்காதென்பதற்கு உத்தரவாதமளிக்க முடியாதென ஏ.கே.வர்மா தெரிவித்துள்ளார்.

நன்றி : உலகத்தமிழ்ச்செய்திகள்.