இலங்கைச் செய்திகள் சுடர் ஒளியில் வெளியான புகைப்படம் குறித்த ராணுவப் பேச்சாளரின் கடிதத்திற்கு சுதந்திர ஊடக அமைப்பு அதிருப்தி

சுடர் ஒளி பத்திரிக்கையில் வெளியான புகைப்படம் குறித்து ராணுவப் பேச்சாளர் அந்த பத்திரிகையினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தினை சுதந்திர ஊடக அமைப்பு நிராகரிப்பதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி சுடர்ஒளிப் பத்திரிகையில் வெளியான புகைப்படம் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணக்கார இராணுவ தiமையகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக இந்தக் கடித்தை அனுப்பியிருந்தார்.
வன்னிப் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் பதுங்குகுழியில் இருந்தவாறு வானத்தை நோக்கி பார்ப்பது போல் இருக்கும் புகைப்படம் ஒன்றை சுடரொளி வெளியிட்டிருந்தமை தொடர்பாகவே இராணுவ பேச்சாளர் இந்த கடித்தை அனுப்பியுள்ளார். இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியிலும் படையினர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு பத்திரிகையில் எந்தப் புகைப்படம், எந்த செய்தி , வெளியிட வேண்டும், கூடாது என்பது இராணுவ பேச்சாளரால் தீர்மானிக்கக் கூடிய விடயமல்ல என தெரிவித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு, அது ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை குறித்த புகைப்படம் சுடரொளியில் வெளியிடப்படுவதற்கு முன்னர், பீ.பீ.சீ. சிங்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தத்தில் ஈடுபடும் படையினர் தரை, வான் வழியாக எதிரிகளின் இலக்கு மீது தாக்குதல் நடத்துவது வழமையானது, இதன் போது மக்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுகின்றன.
எனினும் இராணுவம் மக்களை குறிவைத்து தாக்குவதில்லை. இந்த நிலையில் சுடர்ஒளிப் பத்திரிகைக்கு போர் பற்றிய செய்திகளையும் படங்களையும் வெளியிட உரிமை இருக்கிறது எனவும் அந்;த உரிமை தற்போதுள்ளமை போலவே எப்போதுமே இருப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு திணிக்க முயற்சிக்க கூடாது எனவும் ஊடக சுதந்திரத்திற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் சுதந்திர ஊடக அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சுடர் ஒளியில் வெளியிடப்பட்ட புகைப்படத்திற்கு கீழே கடவுளே எங்களுக்கு மேல் குண்டுகளை போட்டு விடாதே என சிறுவர்கள் இருவர் வானத்தை நோக்கி பார்த்து கூறுவது போல் எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் விமானப்படையினர் தவறான இலக்குகளை தாக்குகின்றனர், இதனால் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : உலக தமிழ்ச்செய்திகள்.

No comments: