இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண டிசம்பரில் உலகத் தமிழர் மாநாடு

* 52 நாடுகளிலுள்ள தமிழர்கள் பங்கேற்பர்

இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண டிசம்பரில் உலகத் தமிழர்களின் மாநாடு நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக சென்னையில் வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து அவர் பேசியதாவது;

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அங்கு பசியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவும், மருந்தும் வழங்க வேண்டும். தமிழர்களைப் படுகொலை செய்யும் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண வரும் டிசம்பரில் உலகத் தமிழர் மாநாடு நடைபெறும். அதில் உலகின் 52 நாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்பார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்பாராத அளவுக்கு பெருமளவில் மக்கள் பங்கேற்றுள்ளனர். பட்டினியால் வாடும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசே உணவையும், மருந்தையும் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் தானும் உதவி செய்யாமல் உதவி செய்யும் மற்றவர்களையும் தடுக்கிறது.

இந்த உண்ணாவிரதம் அடுத்த தேர்தலுக்கான ஒத்திகை என்று குளிரூட்டி அறையில் அதிகாரிகள் புடைசூழ அமர்ந்துகொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். மதுரையில் மதுரை ஆதினம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துள்ளார். இங்கு திரைப்பட கலைஞர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் பேசினார்கள். இவர்கள் எல்லாம் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போகிறவர்களா?

நேரு, இந்திரா, சாஸ்திரி போன்ற பிரதமர்கள் இந்தியாவின் கௌரவத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்தியாவின் கௌரவம், மக்கள் முக்கியமல்ல, அதனால்தான் தமிழர்களைக் கொல்ல ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறார். தமிழ் மக்கள் சிந்தும் இரத்தத்தில் இந்திய அரசுக்கும் பங்கு உண்டு.

எதற்கெல்லாமோ மத்திய அரசை நிர்ப்பந்தித்த தமிழக முதல்வர், இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படும் விஷயத்தில் வற்புறுத்தாதது ஏன்?

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடைபெறும் போராட்டம் இது. பக்கத்து வீடு பற்றி எரியும் போது உடனடியாக ஓடிச்சென்று உதவ வேண்டுமே தவிர அழைப்பு வரவில்லை என்று கூறுவது கடமை தவறும் செயல்.

மத்திய அரசு அனுமதித்தால் இலங்கைத் தமிழர்களுக்கு உணவும், மருந்தும் திரட்டி அனுப்புவோம். இல்லையெனில் எப்படி அனுப்புவது என்பது பற்றி முடிவெடுப்போம் என்றார் தா.பாண்டியன் - தினக்குரல்

No comments: