இப்போதைய சூழ்நிலையில் கூட்டுக் கடற்படை ரோந்து தேவை இல்லை –கருணாநிதி

இப்போதைய சூழ்நிலையில் கூட்டு கடற் படை ரோந்து தேவை இல்லை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்தியா-இலங்கை கூட்டு கடற்படை கண்காணிப்பு தேவை இல்லை என தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் அண்மையில் சந்தித்துப் பேசியபோது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதை தடுக்கவும் இந்தியா-இலங்கை கூட்டுக் கடற்படை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாயின. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,இதே கருத்தினை வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையினருக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளதாகவும் கூட்டு கடற்படை ரோந்து என்பது ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று எனவும் கருணாநிதி கூறியுள்ளார். அந்தக் காரணங்கள் பற்றி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அப்போதைய தலைமை செயலாளரும் மாநில அரசு அதிகாரிகளும் விரிவான ஆலோசனைகள் நடத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தன்னைச் சந்தித்த போது இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்கு நவீன கருவிகள், மற்றும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.உடனடியாக இதனை செய்து கொடுத்தால் தான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டது போல் இப்போதைய சூழ்நிலையில் கூட்டு கடற் படை ரோந்து தேவை இல்லை. இலங்கை அரசு தெரிவித்து இருக்கும் கூட்டு கடற்படை திட்டம் பற்றி பரிசீலிக்க வேண்டிய அவசிய மும் இல்லை என அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : உலகத்தமிழ்ச்செய்திகள்

No comments: