ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு


ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சிறிலங்கா இராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியைப்பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தொழில்நுட்ப ரீதியாகவும், போர்க்கள ஆற்றலிலும் வல்லமை பெற்றிருப்பதால், இந்திய இராணுவம் இத்தகைய பயிற்சியை சிறிலங்கா இராணுவத்திற்கு அளித்திருப்பதும், இந்திய அரசின் முழு ஆதரவோடும், ஒப்புதலோடும் இந்தப் பயிற்சி நடைபெற்றிருப்பதும் தெளிவாகின்றது.

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்குகிறது என்றும், மிக நவீன இராணுவ ராடர் கருவிகளை வழங்கி, இந்திய இராணுவம் அந்த ராடர் கருவிகளை தந்தது என்றும் அண்மையில் பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய செய்திகளை இந்திய அரசு மறுக்கவில்லை.

பிரதமரின் மூத்த உதவியாளர்கள் சிலரும், இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் சிறிலங்காவுக்குச் சென்று வந்தனர் என்ற செய்தியையும் பத்திரிகைகள் வெளியிட்டன. அதையும் இந்திய அரசு மறுக்கவில்லை.

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட செய்தியையும் ஊடகங்கள் திறம்பட கண்டுபிடித்து மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளன.

ஒரு நாட்டு இராணுவம் மற்றொரு நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பது எங்குமே நடைபெறக் கூடியது தான். ஆனால், யாருக்கு எதிராக செயற்பட சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்பது தான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் இராணுவச் செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகத்தான் அமைந்துள்ளன என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது மட்டும் தான் தாக்குதல் நடத்துகின்றோம் என்று சிறிலங்கா அரசு பறை சாற்றலாம்.

ஆனால், ஒவ்வொரு நாளும் தமிழர் பகுதிகளில் மடிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களைப் பற்றி வரும் செய்திகள், சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழப்போர் விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல, அப்பாவி தமிழ் மக்களும் தான் என்ற உண்மையை உலகுக்குச் சொல்லுகின்றனவே!

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஆயுதங்களும், பயிற்சியும் பயன்படுத்தப்படுகின்றன என்பது தான் இந்தச் செய்திகள் அனைத்திலும் பொதிந்திருக்கும் உண்மை.

இந்தக் கொடுமை போதாது என்று சிறிலங்கா இராணுவம் தமிழக மீனவர்களையும் சுட்டுக்கொல்கின்றது. இந்திய அரசால் சிறிலங்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு பகுதியிலேயே இந்திய மீனவர் ஒருவரை சிறிலங்கா அரசு சுட்டுக்கொன்றது என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.

இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாக இந்திய அரசு எப்போதும் தெரிவிக்கின்றதே தவிர, உருப்படியான நடவடிக்கை எதையும் இந்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இந்த வேதனையான உண்மையை என்னவென்று சொல்வது?

இத்தனைப் படுகொலைகளையும் இந்திய அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. அனைத்திற்கும் புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டும் அல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது. ஆயுதங்களையும், ராடர் கருவிகளையும், பயிற்சியையும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கியதன் மூலம், இந்த கோரச் சம்பவங்களின் முழு பங்குதாரராக இந்திய அரசு செயற்பட்டிருக்கின்றது.

மத்திய அமைச்சர்கள் என தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் 10 பேரைக் கொண்ட இந்திய அரசு தான் இத்தகைய பழி பாவத்தில் பங்குபெற்றிருக்கின்றது. தி.மு.க-வை மிக இன்றியமையாத உறுப்பினராகக் கொண்ட மத்திய கூட்டணி அரசு தான் இந்தக் கொடுமைகளில் கூட்டாளியாகி இருக்கின்றது.

கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று தி.மு.க. அறிவித்தால் மத்திய ஆட்சியே கவிழ்ந்து விடும். ஆனால், "தமிழினத் தலைவர்'' என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பேச்சு, மூச்சற்றுப் போவார் வாய்மூடிக் கிடப்பார்.

தங்களைப் பற்றிய அக்கறை கருணாநிதிக்கு இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். வரலாறு கண்டிராத விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த அவர் எதையும் செய்ய வில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கருணாநிதி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் தாசானு தாசராக உருமாறியுள்ள டொக்டர் மன்மோகன்சிங், தன் எஜமானிய நாட்டின் அதிபரிடம் இருந்து ஏதும் கற்றதாகத் தெரியவில்லை. நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுர கட்டடங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய ஒரு தாக்குதல் காரணமாக, ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடே அமெரிக்காவால் சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அமெரிக்க தேசத்திடம் இருந்து மன்மோகன்சிங் பாடம் எதையும் படித்ததாகத் தெரியவில்லை. சிறிலங்கா மீது படையெடுத்துச் செல்லுங்கள் என்று நாம் கூறவில்லை. சிறிலங்கா பிரதமரை அழைத்து தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தையாவது தெரிவிக்கலாமே?

சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தம் தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையின் மையப்புள்ளியாகிவிட்டது. இந்தியாவை பாதிக்கும் எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு மன்மோகன்சிங் கண்ட ஒரே மருந்து அணுசக்தி ஒப்பந்தம் தான்.

பயங்கரவாத தொடர் குண்டு வெடிப்புக்கள், விண்ணைமுட்டும் விலைவாசி, பங்குச் சந்தை வீழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும், அதற்கு அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றே தீர்வு என நினைக்கின்ற மனிதரைப் பற்றி என்ன சொல்ல இப்படி ஒரு கனவு உலகில் வாழும் மனிதர் கண்ணீரில் மிதக்கும் தமிழ் மக்களுக்காக கடமையாற்றுவார் என நினைப்பது முட்டாள்த்தனம்.

இந்த முகமூடி மனிதர்களின் உண்மை நிலை அறிந்து மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது. தங்களின் வாக்குகளால் பதவி சுகத்தை அனுபவிக்கும் இந்தப் போலி மனிதர்களை கீழிறக்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும்.

மக்கள் சக்தி என்னும் மகத்தான ஆற்றல் மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. மத்திய அரசை அகற்றும் முயற்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அயராது பாடுபடும். என் நேரம், நினைவு அனைத்தையும் இந்த முயற்சிக்கே அர்ப் பணிக்கின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்

தமிழகத் தலைவர்கள் நாக்கை பிடுங்கி விட்டு சாகலாம் - இந்திய மத்திய அரசின் ஆதரவு இருக்கும்வரை தமிழகத்தின் சலசலப்புக்கு அஞ்சோம்: இலங்கை ஊடக அமைச்சர்


இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவு நன்றாகவே உள்ளது. மத்திய அரசின் ஆதரவு இருக்கும்வரை எதற்கும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.தமிழ் நாட்டின் சலசலப்புக்கு இலங்கை அரசு ஒருபோதும் அஞ்சாது.இவ்வாறு இலங்கை ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கு எதிராகவும், அரசின் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தமிழ் நாட்டில் அரசியல்கட்சிகளால் நடத்தப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி இலங்கைக்குக் கவலையில்லை. என்றும் அவர் கூறினார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

இலங்கை அரசுமீது பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தமிழ் நாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.இந்தப் போராட்டங்கள் பற்றி இந்திய அரசு எமக்கு அறிவிக்கவில்லை. இவை இலங்கை இந்திய உறவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்தியாவில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்திய அரசு ஒருபோதும் புலிகளுக்கு ஆதரவு வழங்கமாட்டாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு குறியாயிருக்கின்றது.
எமக்கும் இந்திய அரசுக்குமிடையில் நல்லதோர் உறவு உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா எமக்குப் பல உதவிகளைச் செய்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் நாம் யுத்தம் செய்கிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. ஆனால், நாம் தமிழ் மக்களை அழிக்கின்றோம் என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை.
எனவே, தமிழ் நாட்டில் ஏற்படும் இவ்வாறான சிறுசிறு சலசலப்புகள் பற்றி நாம் ஒருபோதும் கவலைப்படமாட்டோம்.

இந்திய அரசுக்கு இது பொன்னான சந்தர்ப்பம் பயன்படுத்துமா?



நடக்கப் போகும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் காட்சிக்கு ஜாக் பொட் அடிக்கும் சான்ஸ் கிடைத்து இருக்கிறது. அதனைக் காங்கிரஸ் கட்சி பயன் படுத்துமா என்பதே இப்போது உள்ள கேள்வி ? இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கை எல்லை மீறிப் போய் உலக நாடுகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் நிலைக்கு வந்து விட்டது. இலங்கை இராணுவ வன்னிப் படைக் கட்டளைத் தளத்தின் மீது புலிகள் நடத்திய ஈரூடகத் தாக்குதலில் இரண்டு இந்திய ராடார் பொறியியலாளர் காயம் அடைந்ததால் தமிழகம் கொதிப் படைந்திருக்கிறது.

தமிழின ஆர்வலர்களும் தமிழிக கட்சிகளும் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ந் திகதி தமிழகத்தில் நடத்திய உண்ணா நோன்பும் எழுச்சி உரைகளும் தமிழகத் தமிழினம் விழித்துக் கொண்டு விட்டதா இல்லையா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும். ஆனால் இது இந்தியாவைச் சரியான பாதைக்குத் திருப்பிவிடச் சிறந்த காலமாக உள்ளது. இந்த வரலாற்றுநச் சந்தர்ப்பம் தமிழகத் தமிழரிடமே உள்ளது. இன்று எல்லா நாடுகளாலும் ஏற்கப்பட முடியாத திசையில் இலங்கை அரசு செல்கிறது. அதனைத் திருத்தும் ஆற்றல் எந்த நாட்டுக்குமே கிடையாது என அடிக்கடி அதன் தலைவரும் அமைச்சர்களும் இராணுவத் தளபதிகளும் பௌத்த பிக்குகளும் விடுக்கும் அறிக்கைகளே போதிய சான்றுகளாகும். இத்தகைய அரசிடம் எக்காரணம் கொண்டும் இந்திய அரசு அதுவும் தமிழகத் தமிழரின் ஆதரவுடன் இயங்கும் அரசு ஒட்டும் உறவும் வைக்க வேண்டுமா?

இன்று தமிழகத்தினது வாக்குப் பலமும் 40 பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்கையும் காங்கிரஸ் கட்சியினால் உதாசீனப் படுத்துவது ஆபத்தானதாகவே முடியும். ஆசனங்களை எந்தக் கட்சி பெற்றாலும் மத்தியில் கூட்டணி ஆட்சிதானே எனப் பாராமுகமாக இருந்தாலும் உதிரிக் கட்சிகளுடன் குதிரை பேரம் பேசும் போது குட்டி இலங்கையில் நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் இருப்பது போன்று கட்சிக்கு ஒரு மந்திரி என்ற வகையில் பதவிகள் வழங்கப் பட வேண்டும். இந்நிலை கூட்டணிக் கட்சியில் ஒரு உறுதியற்ற நிலையை நிரந்தரமாக்கி விடும். இது இந்திய நாட்டுக்கும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உகந்தது அல்ல என்ற கடந்த கால கூட்டணி அரசுகள் பட்ட பாடுகளை அறிந்தவருக்குப் புரியும்.

உலக அரங்கில் நாடுகளின் சிந்தனை ஒழுங்கு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது கொசோவா மக்களின் விடுதலைக் கோரிக்கை அதன் அங்கீகாரமும். நீண்டகாலமாக இருந்த அரசியல் பிரச்சனைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணாது தனது மத வெறிக் கொள்கையை இராணுவ நடவடிக்கைகளால் முன்னெடுத்தது சேர்பிய அரசு. தேசிய ஒருமைப்பாடு தன்னாட்சி இறைமை என்ற காரணங்களைக் காட்டி பகுத்தறிவைக் கட்டிப் போட்டு மனித நேயமற்ற வன்முறை அரசியலை நடத்தியது. அதற்குப் பலியாக இஸ்லாமிய கோசோவோ இன மக்கள் பட்ட பாடு கண்டு கத்தோலிக்க மதமக்களின் மனத்தையும் மனச் சாட்சியையும் தட்டி விட்டதால் மதங் கடந்த மனித நேயம் வென்றது.
அதன் பிரதி பலிப்பாக ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் கத்தோலிக்க மதத்தவராக இருந்தாலும் கத்தோலிக்க சேர்பியர் இஸ்லாமிய கொசோவோ மக்களுக்கு இழைத்த போர்க் குற்றங்களுக்காக கத்தோலிக்க சேர்பியரை நீதிக் கூண்டில் நிறுத்தியுள்ளது. அங்கே மனித நேயமும் சட்டம் ஒழுங்கு நீதியும் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனால் அறத்துக்கும் தர்மத்துக்கும் புகழ் பெற்ற பாரதம் அப்பாவித் தமிழ் மக்களின் நிலப் பறிப்பையும் உயிர் உடமைப் பறிப்பையும் செய்யும் சிங்கள இனவெறி அரசுக்கு துணை நிற்கும் அநியாயம் அகில உலகமும் அறியும். ஆனால் உலகம் எதுவும் அறியாது என நினைத்துக் கண்ணை மூடிப் பால் குடிக்கும் பூனை போன்ற பாரதத்தின் கொள்கை இனியாவது இந்தப் பூனை கண் திறந்து உலக நடப்பை கண்டறிந்து தன்னைத் திருத்திக் கொள்ளுமா ?
ஈழத் தமிழரின் சோகக் கதை முடிவின்றித் தொடராக வளரக் காரணமாயிருப்பது இந்திய அரசின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான காழ்ப்பு உணர்ச்சியே அடிப்படைக் காரணியாகத் தெரிகிறது. இதற்கு இலங்கை அரசின் தமிழின அழிப்புக்குத் துணையாக்கப் போட்டு வரும் தூபம் ,மற்றும் வர்த்தக பிராந்திய உறவுகள் ,பாகிஸ்தான், சீனாவின் பக்கம் இலங்கை போய்விடக் கூடாது என்ற ஆதங்கம் இந்திய அரசின் நிலைப் பாட்டுக்கு நியாயம் காண முற்படுவது பிரச்சனைக்குச் சரியான தீர்வு காணும் அணுகு முறையாகாது.

ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன்

உலகம் அறியச் செய்யப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் போர் நிறுத்த உடன் படிக்கையும் இலங்கையால் கையாளப் பட்ட முறை இந்தியாவும் அறியும். பேச்சு வார்த்தையின் ஒவ்வொரு கட்ட முடிவிலும் விலாவாரியாக நோர்வே தூதுவர் மற்றும் இலங்கை அரசுத் தலைவர்களால் இந்தியாவுக்குத் தெரிவிக்கப் பட்ட இப் பேச்சு யாரால் முறிவு கண்டது என்பது இந்தியாவுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. பேச்சுவார்த்ததை மேசையில் எடுக்கப் பட்ட முடிவுகளை இலங்கை அரசு எந்த அளவுக்கு மீறியது என்பதை உலகமே அறியும். புலிகள் தமது அரசியல் கூட்டங்களில் ஏற்றிய புலிக் கொடிகளைக் கூட போர் நிறுத்த மீறல் எனப் பட்டியலிட்டு அதிக அளவு மீறல்கள் புலிகளதே என்று பிரச்சாரப் படுத்தியதும் உலகம் அறியும்.
தன்னிச்சையாகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட்டதும் முன்னர் கிழக்கிலும் இப்போ வன்னியிலும் கொடூரப் போர் வெறியாட்டம் ஆடுகிறது இலங்கை அரசு. கடந்த 9 மாதங்களாக மன்னார் வன்னிப் பிரதேசங்களில் தினசரி விமானக் குண்டு வீச்சுக்களைச் செய்கிறது. நிமிடத்துக்கு 100க்கு மேற்பட்ட எறிகணைகளை செலுத்தும் பல் குழல் பீரங்கித் தாக்குதல்களால் மக்களை இடம் பெயரச் செய்கிறது. உணவு மருந்துத் தடைகளால் உயிருடன் சித்திரவதை செய்யப் படுவதை வெளி உலகம் அறியாவாறு ஊடகத் தடையும் செய்துள்ளது. இப்போது ஐ.நா. அமைப்புகள் உட்பட அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களையும் வெளி யேற்றி அப்பாவி மக்களின் அவலத்தை உலகின் கண்களில் இருந்து மறைக்கிறது. இவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டும் எவரும் இலங்கையின் கண்டனத்திலிருந்து தப்ப முடியாது.
இலங்கையரசின் அடாவடித்தனங்கள் எல்லை மீறிவிட்டன. தமிழரின் அரசியல் பிரச்சனைக்கு அரசுகள் கடந்த 60 வருடங்களாக அமைதிவழி அரசியல் தீர்வுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் எக்காலத்திலும் அரசியல் தீர்வைக் காணும் மனநிலை கொண்டிருக்கவில்லை. இன்றும் இனியும் அரசு இராணுவ அடக்கு முறைக்கு அப்பால் சிந்திக்க மறுத்து 2500 ஆண்டுகளுக்கு முந்தைய போர் நாகரிகத்தில் சிக்கிக் கிடக்கிறது. இத்தகைய காட்டு மிராண்டி அரசுக்கு இன்றைய நாகரிக உலகம் கைகொடுப்பது மிக மிகக் கேவலமானது. இதில் இந்திய அரசு பங்காளியாக இருக்க வேண்டுமா என மீளாய்வு செய்ய வேண்டும்.
இதில் இன்னும் ஒரு பரிதாபம் என்ன வென்றால் தமிழகத் தமிழரின் அரசியல் கட்சிகளான தி.மு.க:,ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்த கூட்டணி ஆட்சி இந்தியாவில் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியிலும் பெருமளவு தமிழகத் தமிழர் உள்ளனர். இவர்களுக்கு இந்த அளவுக்கு ஈழத் தமிழ் மககள் மீதான அக்கரையும் அனுதாபமும் மத்திய அரசால் உதாசீனப் படுத்தப் படுவது மிகப் பெரும் அநியாயம். இதனை உதாசீனம் எனவும் கூறமுடியாது. ஈழத் தமிழினத்தின் சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை செய்த படியே அரசியல் தீர்வுதான் இந்தியாவின் நிலை என வாய்க்கு வாய் அறிக்கை விட்டபடியே போரில் முக்கிய பங்காளி போன்று நடந்து கொண்டது மன்னிக்க முடியாத துரோகம்.

இன்று உலக அரங்கில் மத மொழி கடந்த மனிதநேயமும் ஐனநாயக விழுமியங்களுமே நாடுகளின் பிரச்சினைகளின் தீர்வுக்கு ஆதாரமாக அமைவதை கொசோவோ, தெற்கு ஒசெற்றியா, அப்காசிய நாடுகளின் தனியரசுப் பிரகடனங்கள் காட்டுகின்றன. இந்தியாவும் இந்நடை முறைக்குச் செல்வதே நியாயமான எதிர்பார்ப்பாகும். இதனை முடிக்கும் ஆற்றல் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை இந்திய மத்திய அரசும் தமிழகத் தமிழ்க் கட்கிகளும் முதலில் நம்பவேண்டும்.
மத அடிப்படையில் பார்த்தாலும் ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக்க மதமே பெரும் பான்மையாக உள்ளது. இன்று இஸ்லாம் என்றாலே உலகப் பயங்கரவாதிகள் எனப் பார்க்கப் படும் வேளையில் இஸ்லாமிய மக்களைக் கொண்ட கோசோவா எப்படி விடுதலை விடியலைக் காண முடிந்தது ? அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் எப்படி உதவ முன்வந்தன ?
ஈழத் தமிழனம் சந்தித்து வரும் அழிவுகள் உயிர் உடமை இழப்புக்கள் முடிவு இன்றித் தொடருகின்றன. இரவு பகல் அப்பாவத் தமிழ்ப் பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கற்பழிப்பு, கடத்தல், கப்பம் என அவர்கள் இலங்கையில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தப்ப முடியாத அவல வாழ்வு. ஆயினும் அருகில் உள்ள இந்தியா இவை அனைத்துக்கும் துணை போவதுதான் தமிழ் மக்களால் மன்னிக்க முடியாத வரலாற்றுக் குற்றமாக உள்ளது. இதற்கு காங்கிரஸ் தி.மு.க. கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் பதில் சொல்லும் நிலையில் உள்ளன.
இன்று உலக உதவி நிறுவனங்களையும் ஐ.நா.அமைப்புகளையும் கட்டாயமாக வெளியேற்றி மனித வேட்டைகளைச் செய்ய முற்படுகிறது சிங்கள அரசு. 2008 ஜனவரி முதல் இன்று செம்டெம்பரிலும் தினம் பல தடவைகள் விமானக் குண்டு வீச்சுகள் எறிகணைகள் கொண்டு இன அழிப்பைச் செய்து வரும் இலங்கை அரசின் அரக்கப் பிடியிலிருந்து 50 வருடங்களுக்கு மேலாகத் தவிக்கும் ஈழத் தமிழினத்துக்கு மட்டும் என் இன்னும் விடியல் வரவில்லை ? இதில் 100ல் ஒரு பங்கு கூட கொசோவோ மக்கள் அனுபவிக்கவில்லை. ஒரு சில நூறு இஸ்லாமிய மக்களின் கொலைக்கு இன்று உலக நீதி மன்றில் வழக்குகள் ! இவை ஏன் எமக்கு மட்டும் இல்லாமல் போகின்றன ? இந்த அவலத்துக்கு தமிழக மற்றும் இந்திய அரசுகள் பங்களிப்பு எத்தகையன என்பதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கி நீதி காணும் முயற்சியாக வரும் பொதுத் தேர்தல் அமையப் போவது உறுதி.
இலங்கை அரசு வெளிநாடுகளையும் அவற்றின் எந்தவித புத்தி மதிகளையும் ஏற்காமலும் காட்டு மிராண்டித் தனமான கண்டன அறிக்கைகளை விடுத்தும் மனித உரிமை மீறல்களை தமிழ் மக்கள் தொடர்பாக கட்டவிழ்த்து விடும் நிலையிலும் ஏன் கிழக்குத் தீமோர், கொசோவா போன்ற ஒரு அணுகு முறையைக் கடைப்பிடிக்காது தமிழின அழிப்பைப் பார்த்துச் சும்மா இருக்கின்றன ? இந்த அவல நிலைக்கு இந்தியாவின் தும்பைப் பிடிக்காது வாலைப் பிடித்து சிக்கலில் தானும் மாட்டி தமிழ் மக்களையும் வதைக்கும் வெளியுறவுக் கொள்கை எனவே தெரிகிறது. சர்வதேச சமூகமும் தமிழ் மக்களும் ஏற்கக் கூடிய அமைதி வழியான அரசியல் தீர்வை இனவெறி ஆட்சி செய்யும் சிங்களம் ஏற்கவோ முன் வைக்கவோ முடியாத மனநிலையில் உள்ளது.
அதே வேளை சிங்கள அரசுகள் நடத்தும் ஆட்சிமுறையில் அணுவளவும் ஜனநாயகமோ மனிதாபிமானமோ இல்லாதும் உள்ளமை வெளிப்படை. ஆனால் இந்த உண்மையை அறிய முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளருக்குப் புரியாது உள்ளது. இலங்கை பற்றிப் பல தவறான பிரச்சாரங்களையும் கொள்கைப் பிரகடனங்களையும் வெளியிட்டும் சிக்களில் தமிழக முதல்வர் மாநில ,மத்திய அரச அதிகாரிகள் வெளியுறவுச் செயலர் ஆலோசகர் பிரதமர் என அனைவருமே மாட்டிக் கொண்டு திருட்டு முழி முழித்த நிகழ்வுகள் மிக அதிகம். கொசோவோ செய்த புண்ணியம் அவர்களுக்கு இந்தியா போன்ற ஒரு அயல் நாடு இல்லாமல் போனது தானா? இதற்கான விடையைத் தமிழகத் தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டால் தமிழகத் தேர்தலின் முடிவு பெரும் மாற்றம் காணும்.
இன்று இலங்கை அரசு ஐ.நா. முதல் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடும் விமர்சனத்துக்கும் தமிழ் மக்களின் நிலை பெரும் விசனத்துக்கும் உள்ளான நிலையில் நிற்கிறது. இந்நிலையில் சொந்த புத்தியும் இல்லாது சொல் புத்தியும் கேளாது நடந்து கொள்ளும் இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்து என்ன நன்மை காணப் போகிறது? இந்தியாவின் கண் முன்னாலேயே அதன் பகை நாடுகளான பாக்கிஸ்தான் சீனாவுடன் நெருங்கிய உறுவுகள் வைத்தும் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வரும் இலங்கை அரசுடன் கட்டி அழுது என்ன நன்மையைப் பெறப் போகிறது. மூழ்கும் கப்பலில் இருந்து வெளியேறும் எலிகளின் புத்தி கூடவா இந்திய அரசுக்கு இல்லாமல் இருக்கிறது ?
இந்தியா வெறுமனே தமிழீழத் தாயக அரசு நோக்கிய ஈழத் தமிழீழ அரசை அங்கீகரித்தாலே போதும். அத்துடன் உலக அரங்கில் இந்தியாவும், தமிழகத் தமிழ்த் தலைவர்களும் உலகத் தமிழர் வரலாற்றில் அழியா இடம் பெற்று விடுவர். இதுவரை தமிழீழத் தமிழ் இன அழிப்புப் போருக்குத் துணை போன பாவமும் கழுவப் பட்டுவிடும். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் தமிழரின் அமோக ஆதரவும் தடையின்றிக் ஆளும் அரசுக்கு கிடைத்து விடும். இப்படியான பொன்னான சந்தர்ப்பம் வரலாற்றில் கிடைப்பதே அரிது. அத்தகைய ஒரு சந்தர்ப்பம் இப்போ கிடைத்துள்ளது. இந்திய மத்திய மாநில அரசுகள் பயனபடுத்தித் தமிழீழத் தமிழினத்துக்கு உயிர்ப் பிச்சை கொடுக்குமா ?

நன்றி - முரசம்

வன்னிவிளாங்குளத்தில் இலங்கை இராணுவத்தினரின் முன்நகர்வு முறியடிப்பு: 5 பேர் பலி, 10 பேர் காயம்


வன்னிவிளாங்குளத்தில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் இலங்கைப் படையினர் முன்னகர்வுத் தாக்குதலை நடத்தினர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நேற்று மாலை 6:30 மணிவரை நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்துப் பின்வாங்கச் செய்தனர்.

இதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாட்சி வராததால் ஊடகவியலாளர் சிவராம் படுகொலை வழக்கு விசாரணை டிசம்பர் 15ம் திகதிக்கு ஒத்தி வைப்பு


பிரபல ஊடகவியலாளர் சிவராம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படுகொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

மேலும், இந்த வழக்கு விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த சிங்கள மொழி பேசும் ஜூரிசபையை நீதிமன்றம் அண்மையில் கலைத்திருந்தது.

பிரதான சாட்சியாகக் கருதப்படும் பிரசன்ன புபுது ரத்நாயக்க தற்போது வெளிநாடொன்றுக்கு சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி பிரபல ஊடகவியலாளர் சிவராம் தர்மரட்னம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலைச் சம்பவத்துடன் நேரடித் தொடர்பு இருப்பதாக ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜா என்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழகக் கட்சிகளின் இந்த எழுச்சி எமது இன விடுதலை வரை தொடர வேண்டும்: சுவிஸ் தமிழர் பேரவை


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று உருவாகியிருக்கும் மீள் எழுச்சி, ஈழத் தமிழர்கள் தமது விடுதலையை எட்டும்வரை தொடரவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ள சுவிஸ் தமிழர் பேரவை, இந்த தொடர்ச்சியான- ஒன்றிணைந்த செயற்பாடுகள் தாயக மக்களின் துயரைத் துடைப்பதுடன் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த உதவ வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது.

''எங்கள் எதிரிகள் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!" என்ற தலைப்பில் சுவிஸ் தமிழர் பேரவையின் சார்பில் தம்பிப்பிள்ளை நமசிவாயம், தமிழக அரசியல் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி" எனப் பெருமை பெற்ற உலகின் புராதன இனங்களுள் ஒன்றான தமிழினம் இன்று உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்ற போதிலும் அது தனக்கென ஒரு சொந்த நாட்டைக் கொண்டிராத இனமாக வாழ்ந்து வருகின்றது.

"கங்கை முதல் கடாரம் வரை வென்ற தமிழன்" இன்று குந்தியிருக்க ஒரு இடமில்லாதவனாக வாழும் நிலை. இந்தப் பின்னணியில் ஈழத் தமிழர்களால் தமெக்கென ஒரு நாட்டை உருவாக்க, தமது அடிமைத் தளையில் இருந்து விடுபட மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் அனைத்துலக சதிவலையில் சிக்கிச் சீரழியும் நிலை உருவாகியுள்ளது.

மனித உரிமை பற்றி உரக்கப் பேசும் மேற்குலகு, ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் சிங்களக் கொடுங்கோலர்களால் அப்பட்டமாக மீறப்படும் வேளைகளில் எல்லாம் மௌனித்துப் போவதைக் காண முடிகின்றது. தமிழனுக்கு உதவ வந்த தொண்டு நிறுவனங்கள் கூட விரட்டியடிக்கப்படுகின்றன.

இந்நிலையில் உலகமே எங்களைக் கைவிட்டு விட்டதோ என நினைத்து ஈழத் தமிழர்கள் மனமுடைந்து இருக்கையிலேதான், "தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்" என்பதை நிரூபிப்பது போன்று தாய்த் தமிழகத்தில் இருந்து நீங்கள் முன்னெடுத்து வரும் ஈழ ஆதரவுச் செயற்பாடுகள் எம்மைத் தைரியப்படுத்துவதுடன் நெகிழ்ச்சியடையவும் செய்து வருகின்றன.

தொடர்ச்சியான போராட்டங்கள், பேரணிகள், கவன ஈர்ப்பு நிகழ்வுகள், அறிக்கைகள், ஒன்றுகூடல்கள், பத்திரிகைச் செய்திகள் என இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு தாய்த் தமிழகம் திரும்பி விட்டதோ என்று நினைக்குமளவிற்கு உற்சாகம் தரும் செய்திகள் எங்களை வந்தடைகின்றன.

இன்று வன்னியில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டு, சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றார்கள். அவர்களை அந்த நிலையில் இருந்து விடுவிக்க, அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட புலம்பெயர் தமிழர்களாகிய நாம் துடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், முடியவில்லை.

எம்மால் முடிந்ததெல்லாம் அவர்களுக்காக இரக்கப்படுவதும், உதவி செய்யுமாறு அனைத்துலக சமூகத்திடம் வேண்டுகோள் விடுப்பதுமே. "அத்தகைய முயற்சியில் நீங்கள் மாத்திரம் தனியாக இல்லை. உங்கள் தொப்புள்கொடி உறவுகளான நாங்களும் இருக்கிறோம்" என்பதை நினைவுபடுத்துவது போன்று தங்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

தங்களுடைய இந்த மீள் எழுச்சி அணைந்து போக இடம் தராதீர்கள். இன்று ஏற்பட்டுள்ள சூழல் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் நாட்டின் விடுதலையை எட்டும் வரை தொடர வேண்டும். தங்களின் தொடர்ச்சியான, ஒன்றிணைந்த செயற்பாடுகள் எமது தாயக மக்களின் துயரைத் துடைப்பதுடன் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த உதவ வேண்டும்.

ஈழத் தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்காக, அவர்களின் இலட்சியம் வெற்றி பெறுவதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பான சுவிஸ் தமிழர் பேரவை தங்களின் பெறுமதியான, காலப்பொருத்தமான சேவைக்காக தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

சகோதரர் மத்தியில் நன்றி தெரிவிக்கும் மரபு இல்லையாயினும், எங்கள் புளகாங்கிதத்தை, தங்கள் நடவடிக்கையால் நாங்கள் பெற்றுள்ள உத்வேகத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். எனவே, எங்கள் நன்றியை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி உணவு விநியோகத்தை குழப்பினால் ஐ.நா. சகித்துக்கொள்ளாது: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை


இலங்கையின் வட பகுதியில் மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு விநியோகம் மேற்கொள்வதைக் குழப்பும் நடவடிக்கைகளை சகித்துக்கொள்ளப் போவதில்லையென ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டம் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான இயக்குநர் டொனி பன்பரி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மோதல் நடைபெறும் வடபகுதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு விநியோகம் மேற்கொள்வதை யாராவது குழப்புவதையோ அல்லது மனிதாபிமானப் பணியாளர்களுக்கான அச்சுறுத் தல் விடுப்பதையோ சகித்துக்கொள்ளப் போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பை மிக முக்கியமாகக் கருதுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க வன்னி மக்களுக்கான உணவு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என வலியுறுத்தியுள்ள உலக உணவுத் திட்டம், வாரம் ஒருமுறை ஒரு உணவுத் தொடரணியை அங்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நன்றி : உதயன்

தமிழர்களை மட்டும் இலக்கு வைத்து பொலிஸ் பதிவுகள் நடைபெறக்கூடாது - மனோ கணேசன்


மேல்மாகாணத்தில் தற்காலிகமாக வசிக்கும் தமிழர் மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பொலிஸ் பதிவுகளில் தமக்கு உடன்பாடில்லை என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து கொழும்பிலே தற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களை நாளை பதிவு செய்துக்கொள்ளும்படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்கள். இதேபோல் அண்மையில் வடமாகாணத்திலிருந்து கொழும்பு வந்த தமிழர்கள் பொலிஸ் பதிவுக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர்.

எதிர்வரும் நாட்களில் ஊவா மாகாண தமிழ் பேசும் மக்களையும் மேல் மாகாண பொலிஸார் பதிவு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பொலிஸ் பதிவு நடவடிக்கை எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்படக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். தனியாக தமிழ் மக்களை மட்டும் பொலிஸ் பதிவுக்கு உட்படுத்தப்படுவதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிஸார்; இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதனை கட்சி ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தப் பதிவு நடவடிக்களை ஏனைய அனைத்து இன சமூகங்களுக்கும் பொதுவான அமைய வேண்டும் என்பதே தமது முதன்மையான கோரிக்கை என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறின்றி தனித்து தமிழ் மக்கள் மட்டும் பதிவு செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய நடைமுறையல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை எனவும், சில சிங்கள இனத்தவர்கள் அதுவும் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பாதுகாப்பு கருதியே தமிழர்கள் பதிவுக்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படும் நியாயங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். நோயாளிகள், குழந்தைகள், குழந்தைகள் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் இவ்வாறு ஒரு நாள் முழுவதும் பதிவுக்கு உட்படுத்தப்படுவதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் பலி


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சபாரட்ணம் சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வர்த்தகரது சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்மையில், கொக்குவில் பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மக்களுக்கு வைத்த பொறியில் யாரும் மாட்டவில்லையாம் - வன்னியிலிருந்து வவுனியாவிற்கு மக்களை வரவழைக்கும் திட்டம் பலனளிக்கவில்லை: அரசாங்கம்


வன்னியிலுள்ள மக்களை வவுனியாவுக்கு வரவழைப்பதற்கான திட்டம் எதிர்பார்த்தளவு பலனளிக்கவில்லையென அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

கொழும்பிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டன.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண இது பற்றி தெரிவிக்கையில்;

வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை வவுனியாவுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எதிர்பார்த்தளவுக்கு நிறைவேறவில்லை. சில நேரம் புலிகள் அம்மக்களை தடுத்து நிறுத்தி வைத்திருக்கலாம். இல்லாவிட்டால் வவுனியா வருவதை விட வன்னியிலிருப்பதே உகந்ததென மக்கள் நினைத்திருக்கலாம்.

எப்படியிருப்பினும் அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அரசினால் விநியோகிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன என்றார்.

இதையடுத்துப் பேசிய மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்கையில்.

வன்னியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறி வவுனியா வருவதற்கென அரசாங்கத்தால் கொள்கை ரீதியாக அறிவிக்கப்பட்ட "மனிதாபிமான வழி' குறித்த திட்டம் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மனிதாபிமான வழி தொடர்பான விபரங்கள் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் அவர்கள் ஏதேனும் முடிவெடுக்கக் கூடும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யாரையும் எதற்கும் பலவந்தப்படுத்த முடியாது.

வாகரையில் மக்களை புலிகள் பலவந்தமாகத் தடுத்து வைத்திருந்த போது ஒரு கட்டத்தில் மக்கள் அந்த தடையையும் உடைத்தெறிந்து வெளியில் வந்தனர். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பம் எப்போதும் ஏற்படலாம்.
எப்படியிருப்பினும் மக்கள் வவுனியா வந்தாலும் சரி, வன்னியில் இருந்தாலும் சரி அவர்களுக்குரிய பொருட்கள் அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும். அதற்கமையவே தற்போது வன்னியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதேநேரம், பிரதேசங்கள் மீட்கப்பட்ட பின்னரே மனிதாபிமான வழியை ஏற்படுத்த முடியும் என்றார்.

நன்றி : தினக்குரல்

ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக காட்ட முனையும் தமிழக அரசு - அப்துல்கலாமின் வருகையை முன்னிட்டு தமிழக இலங்கைத் தமிழர் முகாம்களில் விசேட பாதுகாப்பு


இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழகத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தை முன்னிட்டு தமிழக மண்டபம் அகதி முகாம்களில் இருந்து இலங்கை அகதிகள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அப்துல் கலாம் அந்தப் பகுதிக்கு செல்லவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக இலங்கை அகதி முகாம்களில் தங்கியிருப்போர் வெளியே செல்லக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கருணாநிதி


இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து மத்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் கருணாநிதி இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தில் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டுக்கு கருணாநிதி பதில்


இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நேற்று தமிழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு முதல்வர் கருணாநிதி இன்று பதிலளித்துள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வருமாறு:-

கேள்வி:- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரத மேடையில் இலங்கைத் தமிழர்களுக்கு முன்பு ஆதரவளித்தேன் என்று பழைய பஞ்சாங்கத்தை முதல்வர் கருணாநிதி சொல்வது, போன மாதம் வரை கற்போடு இருந்தேன்' என்று சொல்வதைப் போல இருக்கிறது' என்று வைகோ பேசியிருக்கிறாரே?

பதில்:- அவர் அதை பேசியிருப்பதை விட, `ஜனசக்தி' பத்திரிகையில் அதை வெளியிட்டிருக்கிறார்களே, அதற்காக பெரியவர் நல்லகண்ணு, இளையவர் பாண்டியனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்வி:- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று தோழர் நல்லகண்ணு பேசியிருக்கிறாரே?

பதில்:- தோழர் நல்லகண்ணு இப்படி பேசியிருப்பது தான் ஆச்சரியத்தைத் தருகிறது. அவருமா இப்படி என்று கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக மத்திய அரசினை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சினையிலும் தமிழக அரசு இது வரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது.

இன்னும் சொல்லப் போனால் 23.4.2008 அன்று பேரவையில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானத்தை நான் முன்மொழிந்த போது, இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்கள் சார்பில் யாரும் சட்டமன்றத்தில் பேசவே இல்லை என்பதற்காக அவர்கள் தூங்கிவிட்டதாகச் சொல்ல முடியுமா?

கேள்வி:- இலங்கைத் தமிழர்களுக்கென்று உண்ணா நோன்பு அறிவிக்கப்பட்டு நடைபெற்ற மேடையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை கருணாநிதி கொச்சைப்படுத்துவதா என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கிப் பேசியிருக்கிறாரே?

பதில்:- இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஐ.நா.மன்றம் வரையில் போய் கொச்சைப்படுத்திப் பேசியவரே பண்ருட்டி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அந்தப் பேச்சு என்ன தெரியுமா?

நாங்கள் அகதிகள் விஷயம் வரைக்கும் நிறுத்திக் கொண்டோம். நாங்கள் இலங்கை அரசின் கொள்கைகளையோ, அல்லது இலங்கை அரசின் நடவடிக்கைகளையோ விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான் தெளிவுபடுத்த விரும்புவது இலங்கையின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடுமாறு சொல்லவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை என்பது தான். இந்தியா எந்தப் பிரிவினை இயக்கத்தையும் ஆதரிக்க வில்லை. இப்படிப் பேசியவர்தான் இலங்கை பிரச்சினையை நாம் கொச்சைப்படுத்தியதாக கூறுகிறார்.