தமிழகக் கட்சிகளின் இந்த எழுச்சி எமது இன விடுதலை வரை தொடர வேண்டும்: சுவிஸ் தமிழர் பேரவை


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று உருவாகியிருக்கும் மீள் எழுச்சி, ஈழத் தமிழர்கள் தமது விடுதலையை எட்டும்வரை தொடரவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ள சுவிஸ் தமிழர் பேரவை, இந்த தொடர்ச்சியான- ஒன்றிணைந்த செயற்பாடுகள் தாயக மக்களின் துயரைத் துடைப்பதுடன் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த உதவ வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது.

''எங்கள் எதிரிகள் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!" என்ற தலைப்பில் சுவிஸ் தமிழர் பேரவையின் சார்பில் தம்பிப்பிள்ளை நமசிவாயம், தமிழக அரசியல் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி" எனப் பெருமை பெற்ற உலகின் புராதன இனங்களுள் ஒன்றான தமிழினம் இன்று உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்ற போதிலும் அது தனக்கென ஒரு சொந்த நாட்டைக் கொண்டிராத இனமாக வாழ்ந்து வருகின்றது.

"கங்கை முதல் கடாரம் வரை வென்ற தமிழன்" இன்று குந்தியிருக்க ஒரு இடமில்லாதவனாக வாழும் நிலை. இந்தப் பின்னணியில் ஈழத் தமிழர்களால் தமெக்கென ஒரு நாட்டை உருவாக்க, தமது அடிமைத் தளையில் இருந்து விடுபட மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் அனைத்துலக சதிவலையில் சிக்கிச் சீரழியும் நிலை உருவாகியுள்ளது.

மனித உரிமை பற்றி உரக்கப் பேசும் மேற்குலகு, ஈழத் தமிழர்களின் மனித உரிமைகள் சிங்களக் கொடுங்கோலர்களால் அப்பட்டமாக மீறப்படும் வேளைகளில் எல்லாம் மௌனித்துப் போவதைக் காண முடிகின்றது. தமிழனுக்கு உதவ வந்த தொண்டு நிறுவனங்கள் கூட விரட்டியடிக்கப்படுகின்றன.

இந்நிலையில் உலகமே எங்களைக் கைவிட்டு விட்டதோ என நினைத்து ஈழத் தமிழர்கள் மனமுடைந்து இருக்கையிலேதான், "தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்" என்பதை நிரூபிப்பது போன்று தாய்த் தமிழகத்தில் இருந்து நீங்கள் முன்னெடுத்து வரும் ஈழ ஆதரவுச் செயற்பாடுகள் எம்மைத் தைரியப்படுத்துவதுடன் நெகிழ்ச்சியடையவும் செய்து வருகின்றன.

தொடர்ச்சியான போராட்டங்கள், பேரணிகள், கவன ஈர்ப்பு நிகழ்வுகள், அறிக்கைகள், ஒன்றுகூடல்கள், பத்திரிகைச் செய்திகள் என இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு தாய்த் தமிழகம் திரும்பி விட்டதோ என்று நினைக்குமளவிற்கு உற்சாகம் தரும் செய்திகள் எங்களை வந்தடைகின்றன.

இன்று வன்னியில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டு, சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றார்கள். அவர்களை அந்த நிலையில் இருந்து விடுவிக்க, அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட புலம்பெயர் தமிழர்களாகிய நாம் துடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், முடியவில்லை.

எம்மால் முடிந்ததெல்லாம் அவர்களுக்காக இரக்கப்படுவதும், உதவி செய்யுமாறு அனைத்துலக சமூகத்திடம் வேண்டுகோள் விடுப்பதுமே. "அத்தகைய முயற்சியில் நீங்கள் மாத்திரம் தனியாக இல்லை. உங்கள் தொப்புள்கொடி உறவுகளான நாங்களும் இருக்கிறோம்" என்பதை நினைவுபடுத்துவது போன்று தங்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

தங்களுடைய இந்த மீள் எழுச்சி அணைந்து போக இடம் தராதீர்கள். இன்று ஏற்பட்டுள்ள சூழல் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் நாட்டின் விடுதலையை எட்டும் வரை தொடர வேண்டும். தங்களின் தொடர்ச்சியான, ஒன்றிணைந்த செயற்பாடுகள் எமது தாயக மக்களின் துயரைத் துடைப்பதுடன் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த உதவ வேண்டும்.

ஈழத் தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்காக, அவர்களின் இலட்சியம் வெற்றி பெறுவதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பான சுவிஸ் தமிழர் பேரவை தங்களின் பெறுமதியான, காலப்பொருத்தமான சேவைக்காக தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

சகோதரர் மத்தியில் நன்றி தெரிவிக்கும் மரபு இல்லையாயினும், எங்கள் புளகாங்கிதத்தை, தங்கள் நடவடிக்கையால் நாங்கள் பெற்றுள்ள உத்வேகத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். எனவே, எங்கள் நன்றியை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: