இந்திய அரசுக்கு இது பொன்னான சந்தர்ப்பம் பயன்படுத்துமா?



நடக்கப் போகும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் காட்சிக்கு ஜாக் பொட் அடிக்கும் சான்ஸ் கிடைத்து இருக்கிறது. அதனைக் காங்கிரஸ் கட்சி பயன் படுத்துமா என்பதே இப்போது உள்ள கேள்வி ? இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கை எல்லை மீறிப் போய் உலக நாடுகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் நிலைக்கு வந்து விட்டது. இலங்கை இராணுவ வன்னிப் படைக் கட்டளைத் தளத்தின் மீது புலிகள் நடத்திய ஈரூடகத் தாக்குதலில் இரண்டு இந்திய ராடார் பொறியியலாளர் காயம் அடைந்ததால் தமிழகம் கொதிப் படைந்திருக்கிறது.

தமிழின ஆர்வலர்களும் தமிழிக கட்சிகளும் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ந் திகதி தமிழகத்தில் நடத்திய உண்ணா நோன்பும் எழுச்சி உரைகளும் தமிழகத் தமிழினம் விழித்துக் கொண்டு விட்டதா இல்லையா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும். ஆனால் இது இந்தியாவைச் சரியான பாதைக்குத் திருப்பிவிடச் சிறந்த காலமாக உள்ளது. இந்த வரலாற்றுநச் சந்தர்ப்பம் தமிழகத் தமிழரிடமே உள்ளது. இன்று எல்லா நாடுகளாலும் ஏற்கப்பட முடியாத திசையில் இலங்கை அரசு செல்கிறது. அதனைத் திருத்தும் ஆற்றல் எந்த நாட்டுக்குமே கிடையாது என அடிக்கடி அதன் தலைவரும் அமைச்சர்களும் இராணுவத் தளபதிகளும் பௌத்த பிக்குகளும் விடுக்கும் அறிக்கைகளே போதிய சான்றுகளாகும். இத்தகைய அரசிடம் எக்காரணம் கொண்டும் இந்திய அரசு அதுவும் தமிழகத் தமிழரின் ஆதரவுடன் இயங்கும் அரசு ஒட்டும் உறவும் வைக்க வேண்டுமா?

இன்று தமிழகத்தினது வாக்குப் பலமும் 40 பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்கையும் காங்கிரஸ் கட்சியினால் உதாசீனப் படுத்துவது ஆபத்தானதாகவே முடியும். ஆசனங்களை எந்தக் கட்சி பெற்றாலும் மத்தியில் கூட்டணி ஆட்சிதானே எனப் பாராமுகமாக இருந்தாலும் உதிரிக் கட்சிகளுடன் குதிரை பேரம் பேசும் போது குட்டி இலங்கையில் நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் இருப்பது போன்று கட்சிக்கு ஒரு மந்திரி என்ற வகையில் பதவிகள் வழங்கப் பட வேண்டும். இந்நிலை கூட்டணிக் கட்சியில் ஒரு உறுதியற்ற நிலையை நிரந்தரமாக்கி விடும். இது இந்திய நாட்டுக்கும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உகந்தது அல்ல என்ற கடந்த கால கூட்டணி அரசுகள் பட்ட பாடுகளை அறிந்தவருக்குப் புரியும்.

உலக அரங்கில் நாடுகளின் சிந்தனை ஒழுங்கு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது கொசோவா மக்களின் விடுதலைக் கோரிக்கை அதன் அங்கீகாரமும். நீண்டகாலமாக இருந்த அரசியல் பிரச்சனைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு காணாது தனது மத வெறிக் கொள்கையை இராணுவ நடவடிக்கைகளால் முன்னெடுத்தது சேர்பிய அரசு. தேசிய ஒருமைப்பாடு தன்னாட்சி இறைமை என்ற காரணங்களைக் காட்டி பகுத்தறிவைக் கட்டிப் போட்டு மனித நேயமற்ற வன்முறை அரசியலை நடத்தியது. அதற்குப் பலியாக இஸ்லாமிய கோசோவோ இன மக்கள் பட்ட பாடு கண்டு கத்தோலிக்க மதமக்களின் மனத்தையும் மனச் சாட்சியையும் தட்டி விட்டதால் மதங் கடந்த மனித நேயம் வென்றது.
அதன் பிரதி பலிப்பாக ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் கத்தோலிக்க மதத்தவராக இருந்தாலும் கத்தோலிக்க சேர்பியர் இஸ்லாமிய கொசோவோ மக்களுக்கு இழைத்த போர்க் குற்றங்களுக்காக கத்தோலிக்க சேர்பியரை நீதிக் கூண்டில் நிறுத்தியுள்ளது. அங்கே மனித நேயமும் சட்டம் ஒழுங்கு நீதியும் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனால் அறத்துக்கும் தர்மத்துக்கும் புகழ் பெற்ற பாரதம் அப்பாவித் தமிழ் மக்களின் நிலப் பறிப்பையும் உயிர் உடமைப் பறிப்பையும் செய்யும் சிங்கள இனவெறி அரசுக்கு துணை நிற்கும் அநியாயம் அகில உலகமும் அறியும். ஆனால் உலகம் எதுவும் அறியாது என நினைத்துக் கண்ணை மூடிப் பால் குடிக்கும் பூனை போன்ற பாரதத்தின் கொள்கை இனியாவது இந்தப் பூனை கண் திறந்து உலக நடப்பை கண்டறிந்து தன்னைத் திருத்திக் கொள்ளுமா ?
ஈழத் தமிழரின் சோகக் கதை முடிவின்றித் தொடராக வளரக் காரணமாயிருப்பது இந்திய அரசின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான காழ்ப்பு உணர்ச்சியே அடிப்படைக் காரணியாகத் தெரிகிறது. இதற்கு இலங்கை அரசின் தமிழின அழிப்புக்குத் துணையாக்கப் போட்டு வரும் தூபம் ,மற்றும் வர்த்தக பிராந்திய உறவுகள் ,பாகிஸ்தான், சீனாவின் பக்கம் இலங்கை போய்விடக் கூடாது என்ற ஆதங்கம் இந்திய அரசின் நிலைப் பாட்டுக்கு நியாயம் காண முற்படுவது பிரச்சனைக்குச் சரியான தீர்வு காணும் அணுகு முறையாகாது.

ஆய்வு: முரசத்திற்காக ஈழப்பிரியன்

உலகம் அறியச் செய்யப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் போர் நிறுத்த உடன் படிக்கையும் இலங்கையால் கையாளப் பட்ட முறை இந்தியாவும் அறியும். பேச்சு வார்த்தையின் ஒவ்வொரு கட்ட முடிவிலும் விலாவாரியாக நோர்வே தூதுவர் மற்றும் இலங்கை அரசுத் தலைவர்களால் இந்தியாவுக்குத் தெரிவிக்கப் பட்ட இப் பேச்சு யாரால் முறிவு கண்டது என்பது இந்தியாவுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. பேச்சுவார்த்ததை மேசையில் எடுக்கப் பட்ட முடிவுகளை இலங்கை அரசு எந்த அளவுக்கு மீறியது என்பதை உலகமே அறியும். புலிகள் தமது அரசியல் கூட்டங்களில் ஏற்றிய புலிக் கொடிகளைக் கூட போர் நிறுத்த மீறல் எனப் பட்டியலிட்டு அதிக அளவு மீறல்கள் புலிகளதே என்று பிரச்சாரப் படுத்தியதும் உலகம் அறியும்.
தன்னிச்சையாகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட்டதும் முன்னர் கிழக்கிலும் இப்போ வன்னியிலும் கொடூரப் போர் வெறியாட்டம் ஆடுகிறது இலங்கை அரசு. கடந்த 9 மாதங்களாக மன்னார் வன்னிப் பிரதேசங்களில் தினசரி விமானக் குண்டு வீச்சுக்களைச் செய்கிறது. நிமிடத்துக்கு 100க்கு மேற்பட்ட எறிகணைகளை செலுத்தும் பல் குழல் பீரங்கித் தாக்குதல்களால் மக்களை இடம் பெயரச் செய்கிறது. உணவு மருந்துத் தடைகளால் உயிருடன் சித்திரவதை செய்யப் படுவதை வெளி உலகம் அறியாவாறு ஊடகத் தடையும் செய்துள்ளது. இப்போது ஐ.நா. அமைப்புகள் உட்பட அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களையும் வெளி யேற்றி அப்பாவி மக்களின் அவலத்தை உலகின் கண்களில் இருந்து மறைக்கிறது. இவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டும் எவரும் இலங்கையின் கண்டனத்திலிருந்து தப்ப முடியாது.
இலங்கையரசின் அடாவடித்தனங்கள் எல்லை மீறிவிட்டன. தமிழரின் அரசியல் பிரச்சனைக்கு அரசுகள் கடந்த 60 வருடங்களாக அமைதிவழி அரசியல் தீர்வுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் எக்காலத்திலும் அரசியல் தீர்வைக் காணும் மனநிலை கொண்டிருக்கவில்லை. இன்றும் இனியும் அரசு இராணுவ அடக்கு முறைக்கு அப்பால் சிந்திக்க மறுத்து 2500 ஆண்டுகளுக்கு முந்தைய போர் நாகரிகத்தில் சிக்கிக் கிடக்கிறது. இத்தகைய காட்டு மிராண்டி அரசுக்கு இன்றைய நாகரிக உலகம் கைகொடுப்பது மிக மிகக் கேவலமானது. இதில் இந்திய அரசு பங்காளியாக இருக்க வேண்டுமா என மீளாய்வு செய்ய வேண்டும்.
இதில் இன்னும் ஒரு பரிதாபம் என்ன வென்றால் தமிழகத் தமிழரின் அரசியல் கட்சிகளான தி.மு.க:,ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்த கூட்டணி ஆட்சி இந்தியாவில் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியிலும் பெருமளவு தமிழகத் தமிழர் உள்ளனர். இவர்களுக்கு இந்த அளவுக்கு ஈழத் தமிழ் மககள் மீதான அக்கரையும் அனுதாபமும் மத்திய அரசால் உதாசீனப் படுத்தப் படுவது மிகப் பெரும் அநியாயம். இதனை உதாசீனம் எனவும் கூறமுடியாது. ஈழத் தமிழினத்தின் சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை செய்த படியே அரசியல் தீர்வுதான் இந்தியாவின் நிலை என வாய்க்கு வாய் அறிக்கை விட்டபடியே போரில் முக்கிய பங்காளி போன்று நடந்து கொண்டது மன்னிக்க முடியாத துரோகம்.

இன்று உலக அரங்கில் மத மொழி கடந்த மனிதநேயமும் ஐனநாயக விழுமியங்களுமே நாடுகளின் பிரச்சினைகளின் தீர்வுக்கு ஆதாரமாக அமைவதை கொசோவோ, தெற்கு ஒசெற்றியா, அப்காசிய நாடுகளின் தனியரசுப் பிரகடனங்கள் காட்டுகின்றன. இந்தியாவும் இந்நடை முறைக்குச் செல்வதே நியாயமான எதிர்பார்ப்பாகும். இதனை முடிக்கும் ஆற்றல் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை இந்திய மத்திய அரசும் தமிழகத் தமிழ்க் கட்கிகளும் முதலில் நம்பவேண்டும்.
மத அடிப்படையில் பார்த்தாலும் ஐரோப்பிய நாடுகளில் கத்தோலிக்க மதமே பெரும் பான்மையாக உள்ளது. இன்று இஸ்லாம் என்றாலே உலகப் பயங்கரவாதிகள் எனப் பார்க்கப் படும் வேளையில் இஸ்லாமிய மக்களைக் கொண்ட கோசோவா எப்படி விடுதலை விடியலைக் காண முடிந்தது ? அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் எப்படி உதவ முன்வந்தன ?
ஈழத் தமிழனம் சந்தித்து வரும் அழிவுகள் உயிர் உடமை இழப்புக்கள் முடிவு இன்றித் தொடருகின்றன. இரவு பகல் அப்பாவத் தமிழ்ப் பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கற்பழிப்பு, கடத்தல், கப்பம் என அவர்கள் இலங்கையில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தப்ப முடியாத அவல வாழ்வு. ஆயினும் அருகில் உள்ள இந்தியா இவை அனைத்துக்கும் துணை போவதுதான் தமிழ் மக்களால் மன்னிக்க முடியாத வரலாற்றுக் குற்றமாக உள்ளது. இதற்கு காங்கிரஸ் தி.மு.க. கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் பதில் சொல்லும் நிலையில் உள்ளன.
இன்று உலக உதவி நிறுவனங்களையும் ஐ.நா.அமைப்புகளையும் கட்டாயமாக வெளியேற்றி மனித வேட்டைகளைச் செய்ய முற்படுகிறது சிங்கள அரசு. 2008 ஜனவரி முதல் இன்று செம்டெம்பரிலும் தினம் பல தடவைகள் விமானக் குண்டு வீச்சுகள் எறிகணைகள் கொண்டு இன அழிப்பைச் செய்து வரும் இலங்கை அரசின் அரக்கப் பிடியிலிருந்து 50 வருடங்களுக்கு மேலாகத் தவிக்கும் ஈழத் தமிழினத்துக்கு மட்டும் என் இன்னும் விடியல் வரவில்லை ? இதில் 100ல் ஒரு பங்கு கூட கொசோவோ மக்கள் அனுபவிக்கவில்லை. ஒரு சில நூறு இஸ்லாமிய மக்களின் கொலைக்கு இன்று உலக நீதி மன்றில் வழக்குகள் ! இவை ஏன் எமக்கு மட்டும் இல்லாமல் போகின்றன ? இந்த அவலத்துக்கு தமிழக மற்றும் இந்திய அரசுகள் பங்களிப்பு எத்தகையன என்பதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கி நீதி காணும் முயற்சியாக வரும் பொதுத் தேர்தல் அமையப் போவது உறுதி.
இலங்கை அரசு வெளிநாடுகளையும் அவற்றின் எந்தவித புத்தி மதிகளையும் ஏற்காமலும் காட்டு மிராண்டித் தனமான கண்டன அறிக்கைகளை விடுத்தும் மனித உரிமை மீறல்களை தமிழ் மக்கள் தொடர்பாக கட்டவிழ்த்து விடும் நிலையிலும் ஏன் கிழக்குத் தீமோர், கொசோவா போன்ற ஒரு அணுகு முறையைக் கடைப்பிடிக்காது தமிழின அழிப்பைப் பார்த்துச் சும்மா இருக்கின்றன ? இந்த அவல நிலைக்கு இந்தியாவின் தும்பைப் பிடிக்காது வாலைப் பிடித்து சிக்கலில் தானும் மாட்டி தமிழ் மக்களையும் வதைக்கும் வெளியுறவுக் கொள்கை எனவே தெரிகிறது. சர்வதேச சமூகமும் தமிழ் மக்களும் ஏற்கக் கூடிய அமைதி வழியான அரசியல் தீர்வை இனவெறி ஆட்சி செய்யும் சிங்களம் ஏற்கவோ முன் வைக்கவோ முடியாத மனநிலையில் உள்ளது.
அதே வேளை சிங்கள அரசுகள் நடத்தும் ஆட்சிமுறையில் அணுவளவும் ஜனநாயகமோ மனிதாபிமானமோ இல்லாதும் உள்ளமை வெளிப்படை. ஆனால் இந்த உண்மையை அறிய முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளருக்குப் புரியாது உள்ளது. இலங்கை பற்றிப் பல தவறான பிரச்சாரங்களையும் கொள்கைப் பிரகடனங்களையும் வெளியிட்டும் சிக்களில் தமிழக முதல்வர் மாநில ,மத்திய அரச அதிகாரிகள் வெளியுறவுச் செயலர் ஆலோசகர் பிரதமர் என அனைவருமே மாட்டிக் கொண்டு திருட்டு முழி முழித்த நிகழ்வுகள் மிக அதிகம். கொசோவோ செய்த புண்ணியம் அவர்களுக்கு இந்தியா போன்ற ஒரு அயல் நாடு இல்லாமல் போனது தானா? இதற்கான விடையைத் தமிழகத் தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டால் தமிழகத் தேர்தலின் முடிவு பெரும் மாற்றம் காணும்.
இன்று இலங்கை அரசு ஐ.நா. முதல் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடும் விமர்சனத்துக்கும் தமிழ் மக்களின் நிலை பெரும் விசனத்துக்கும் உள்ளான நிலையில் நிற்கிறது. இந்நிலையில் சொந்த புத்தியும் இல்லாது சொல் புத்தியும் கேளாது நடந்து கொள்ளும் இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்து என்ன நன்மை காணப் போகிறது? இந்தியாவின் கண் முன்னாலேயே அதன் பகை நாடுகளான பாக்கிஸ்தான் சீனாவுடன் நெருங்கிய உறுவுகள் வைத்தும் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வரும் இலங்கை அரசுடன் கட்டி அழுது என்ன நன்மையைப் பெறப் போகிறது. மூழ்கும் கப்பலில் இருந்து வெளியேறும் எலிகளின் புத்தி கூடவா இந்திய அரசுக்கு இல்லாமல் இருக்கிறது ?
இந்தியா வெறுமனே தமிழீழத் தாயக அரசு நோக்கிய ஈழத் தமிழீழ அரசை அங்கீகரித்தாலே போதும். அத்துடன் உலக அரங்கில் இந்தியாவும், தமிழகத் தமிழ்த் தலைவர்களும் உலகத் தமிழர் வரலாற்றில் அழியா இடம் பெற்று விடுவர். இதுவரை தமிழீழத் தமிழ் இன அழிப்புப் போருக்குத் துணை போன பாவமும் கழுவப் பட்டுவிடும். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் தமிழரின் அமோக ஆதரவும் தடையின்றிக் ஆளும் அரசுக்கு கிடைத்து விடும். இப்படியான பொன்னான சந்தர்ப்பம் வரலாற்றில் கிடைப்பதே அரிது. அத்தகைய ஒரு சந்தர்ப்பம் இப்போ கிடைத்துள்ளது. இந்திய மத்திய மாநில அரசுகள் பயனபடுத்தித் தமிழீழத் தமிழினத்துக்கு உயிர்ப் பிச்சை கொடுக்குமா ?

நன்றி - முரசம்

1 comment:

Thamizhan said...

சோனியா அம்மையாருக்குக் கடிதங்களும்,இணையத் தபால்களும் குவியட்டும்.

உலகெங்கும் உள்ள ஆதரவாளர்களின் உடன் செய்ய வேண்டிய,செய்யக் கூடிய நடவடிக்கை இது.
தொடங்கட்டும் உடனே.