இலங்கை தமிழர் பிரச்சினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டுக்கு கருணாநிதி பதில்


இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நேற்று தமிழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு முதல்வர் கருணாநிதி இன்று பதிலளித்துள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வருமாறு:-

கேள்வி:- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரத மேடையில் இலங்கைத் தமிழர்களுக்கு முன்பு ஆதரவளித்தேன் என்று பழைய பஞ்சாங்கத்தை முதல்வர் கருணாநிதி சொல்வது, போன மாதம் வரை கற்போடு இருந்தேன்' என்று சொல்வதைப் போல இருக்கிறது' என்று வைகோ பேசியிருக்கிறாரே?

பதில்:- அவர் அதை பேசியிருப்பதை விட, `ஜனசக்தி' பத்திரிகையில் அதை வெளியிட்டிருக்கிறார்களே, அதற்காக பெரியவர் நல்லகண்ணு, இளையவர் பாண்டியனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கேள்வி:- இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று தோழர் நல்லகண்ணு பேசியிருக்கிறாரே?

பதில்:- தோழர் நல்லகண்ணு இப்படி பேசியிருப்பது தான் ஆச்சரியத்தைத் தருகிறது. அவருமா இப்படி என்று கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக மத்திய அரசினை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சினையிலும் தமிழக அரசு இது வரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது.

இன்னும் சொல்லப் போனால் 23.4.2008 அன்று பேரவையில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானத்தை நான் முன்மொழிந்த போது, இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்கள் சார்பில் யாரும் சட்டமன்றத்தில் பேசவே இல்லை என்பதற்காக அவர்கள் தூங்கிவிட்டதாகச் சொல்ல முடியுமா?

கேள்வி:- இலங்கைத் தமிழர்களுக்கென்று உண்ணா நோன்பு அறிவிக்கப்பட்டு நடைபெற்ற மேடையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை கருணாநிதி கொச்சைப்படுத்துவதா என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கிப் பேசியிருக்கிறாரே?

பதில்:- இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஐ.நா.மன்றம் வரையில் போய் கொச்சைப்படுத்திப் பேசியவரே பண்ருட்டி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அந்தப் பேச்சு என்ன தெரியுமா?

நாங்கள் அகதிகள் விஷயம் வரைக்கும் நிறுத்திக் கொண்டோம். நாங்கள் இலங்கை அரசின் கொள்கைகளையோ, அல்லது இலங்கை அரசின் நடவடிக்கைகளையோ விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான் தெளிவுபடுத்த விரும்புவது இலங்கையின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடுமாறு சொல்லவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை என்பது தான். இந்தியா எந்தப் பிரிவினை இயக்கத்தையும் ஆதரிக்க வில்லை. இப்படிப் பேசியவர்தான் இலங்கை பிரச்சினையை நாம் கொச்சைப்படுத்தியதாக கூறுகிறார்.

No comments: