இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் --இயக்குனர் சீமான் ஆவேசம்


இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் செய்து வரும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சிங்கள அரசுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்றார்.

திரைப்பட இயக்குனர் சீமான் பேசுகையில், இந்திய அரசு நாங்கள் கொடுத்த வரிப்பணத்தில் எங்கள் உறவுகளை சுட்டுக் கொல்கிறது என்றால் நாங்கள் இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் என்றார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு பேசுகையில், சிங்கள அரசுக்கு இந்தியா கொடுத்துள்ள ராணுவத் தளவாடங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலாக முன்வைப்பதாகவும் இக்கோரிக்கையை அனைவரும் உரக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

யார் இந்த எம்.கே.நாராயணன்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.மகேந்திரன் பேசும் போது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் ஒர் மறைமுக கூட்டாளி போல எம்.கே.நாராயணனை அழைத்து பேச வைத்திருக்கிறதே, யார் இந்த எம்.கே.நாராயணன்? இவர் மக்கள் பிரதிநிதியா? ஓர் அதிகாரிக்கு இவ்வளவு உரிமைகளை கொடுத்தது யார்? இவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம் என்றார்.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சோழன் நம்பியார், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், புலவர் புலமைப்பித்தன், ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் ஒவியா, கவிஞர் தாமரை, வழக்கறிஞர்கள் அஜிதா, சேசுபாலன்ராஜா, எழுகதிர் இதழ் ஆசிரியர் அரு.கோபாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு நிமிட யுத்தத்திற்கு அரசு 6,800 ரூபாவைச் செலவிடுகிறது -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா


“நாட்டில் இன்று நடைபெறும் யுத்தத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 6 ஆயிரத்து 800 ரூபா செலவாகின்றது. அரசாங்கம் யுத்தத்தை விரும்பிச் செய்யவில்லை.

ஆனால், யுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்’. இவ்வாறு தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனா கதிர்காமம் ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போது கூறினார்.

300 பயிலுநர் ஆசிரியர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர்; இந்த யுத்தம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படும். பயங்கரவாதம் ஒழிக்கப்படவே இந்த யுத்தம். அரச ஊழியர்கள் தமது கடமைகளை சீராகச் செய்தால் நாட்டின் அபிவிருத்திப்பணிகள் எதுவித தடையும் இன்றி நடைபெறும். ஆனால், அதிகமான அரச ஊழியர்கள் தமது கடமைகளை உரியவாறு செய்வதில்லை. இதனால் பல வேலைகள் முடங்கிக்கிடக்கின்றன.

அரச ஊழியர்கள் 12 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் மற்றும் பல வசதிகள் அரசினால் செய்யப்பட்டுள்ளன. அதைப்பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. நாட்டின் சனத்தொகையில் 12 பேருக்கு ஒருவர் என்று அரச ஊழியர்கள் உள்ளனர். கல்விக்காக அரசு வருடம் தோறும் பல கோடி ரூபாவை செலவிட்டு எமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறையாக உள்ளனர். இலவச சீருடை, இலவச நூல், போக்குவரத்து வசதி, பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் என்றெல்லாம் அரசு செய்துவருகின்றது.
ஆனால் பல்கலைக்கழகத்துக்கு வந்த பின்னர் மாணவர்கள் காடைத்தனங்களில் ஈடுபடுகின்றனர். பல்கலைக்கழக சொத்துக்களை அழிக்கின்றனர். மாணவர்களும் மாணவர்களும் மோதிக்கொள்கின்றனர். இதனால் சில பல்கலைக்கழகங்களை மூடவேண்டியுள்ளது. எனது பிள்ளை பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாவான், பொறியியலாளர், டாக்டராவான் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களை மாணவர்கள் பாழாக்கி வருகின்றனர் என்றார்.

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகள் எச்சரிக்கை


இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசாங்கம் சரியான தீர்வை வழங்காவிடின் இந்திய பாராளுமன்றத்தில் தமிழக கட்சிகள் வகிக்கும் உறுப்பினர்கள் பதவிகளிலிருந்து விலக நேரிடும்

என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கப் பாராளுமன்றத்தில் தமிழகக் கட்சிகள் 40 உறுப்பினர்கள் பதவிகளை வகித்து வருகின்றனர்.
இலங்கைத் தமிழருக்கு உடனடியாக உரிய தீர்வு வழங்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க பின்நிற்கப்போவதில்லை என கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் இனஒடுக்குமுறை குறித்த தமிழக அரசியல் கட்சிகளின் குரல் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆரம்ப உரையில் கலைஞர் கருணாநிதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகள் மற்றும் பிரமுகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கலைஞர் தெரிவித்துள்ளார்.

சிங்கள அதிகாரிகள் மற்றும் சிங்கள இராணுவத்தினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளும் தி.மு.கவின் சிரேஸ்ட உறுப்பினர்கள், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், நடிகர் விஜய டி ராஜேந்தர், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், பல முக்கிய அரசியல் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.


முழுமையான உரை

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து 14.10.2008 அன்று மாலை 4.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைத் தொடங்கி வைத்து மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நான் விடுத்த வேண்டுகோள் அழைப்பிற்கிணங்க வருகை தந்துள்ள கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகக் கூட அல்ல. எல்லோரும் சேர்ந்து எடுக்க இருக்கின்ற, எடுப்பதற்காக முடிவு செய்து அறிவிக்கின்ற ஒரு செயலை எப்படி நிறைவேற்றுவது என்பதைப் பற்றி முடிவெடுப்பதற்காகக் கூட்டப்பட்டுள்ள கூட்டம் என்றே நான் கருதுகின்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட உண்ணா நோன்பில் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை இலங்கையில் நடைபெறுகின்ற இனப்படுகொலையைக் கண்டிக்கின்ற வகையிலே எடுத்துரைத்து, அதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் ஒரு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று,

வேறு பல இயக்கங்களின் சார்பாகவும் அவர்கள் கருதியவாறு பல நிகழ்ச்சிகள் - கண்டனங்கள் - கூட்டங்கள் வாயிலாக அல்லது அமைப்புகள் வாயிலாக, அல்லது அவர்தம் செயற்குழுக்கள் வாயிலாக, பேரணிகள் வாயிலாக நடத்தப்பட்டு, திராவிடர் கழகத்தின் சார்பாகவும் பேரணி ஒன்று நடத்தப்பட்டு, தொடர்ந்து இந்தப் போராட்டத்தை ஒவ்வொரு அமைப்பும் நடத்துகின்ற வகையிலே அமைந்து, தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய இயக்கத்தின் சார்பாக இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைக்கு எதிரான குரலை உயர்த்தினால் மாத்திரம் போதாது.

எல்லோருடைய குரலும் ஒரு குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இது தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் குரல் எழுப்புவது தவறு என்ற கருத்தின் அடிப்படையிலே அல்ல. தனித்தனியாக குரல் எழுப்புகின்றவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் நம்முடைய வலிமையை, நம்முடைய பலத்தினைக் காட்டுகின்ற வகையில், தமிழர்களுடைய இதயம் எல்லாம் பக்கத்திலே வாடிக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய இனத்தின் - தமிழ் இனத்தின் வாழ்வைப் பற்றிய ஒன்றாக இருக்கின்ற காரணத்தால் அதிலே எப்படி வெற்றி காண்பது என்பதைத் தீர்மானிக்க நாம் எந்த முடிவுகளை மேற்கொள்வது என்பதைப் பற்றி கருத்தறிய,

அறிந்த கருத்துக்களை எல்லாம் ஒருமுனைப்படுத்த உதவிடும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம். இதிலே கலந்து கொண்டிருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் இந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இன்று நேற்றல்ல, நீண்ட பல காலமாக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் எல்லாம் இந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே ஈடுபாடு கொண்டு, போராட்டங்களிலே கலந்து கொண்டு சிறை சென்று பல தியாகங்களுக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டு அதற்காகப் போராடியவர்கள் என்பதை நான் நன்கறிவேன்.

அவர்கள் எல்லாம் இங்கே இருக்கின்றீர்கள். எனவே, உங்களுடைய செழுமிய கருத்துக்களை - இலங்கைத் தமிழர்களை மீட்டெடுக்கக்கூடிய, அவர்களுடைய இனத்தை இன்றைக்கு நாசப்படுத்துகின்ற சிங்கள அதிகாரிகள், சிங்கள இராணுவம் இவர்களிடமிருந்து அவர்களை மீட்டெடுக்க என்ன வழிவகை என்பதையும் நாம் எப்படி நம்முடைய எண்ணங்களை செயல்படுத்துவது என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களுடைய அத்தகைய கருத்துக்களை எதிர்பார்த்து இந்த அளவில் என்னுடைய ஆரம்ப உரையை நிறைவு செய்கின்றேன்.

உரையின் 2ம்பகுதி: இங்கே நம்முடைய தம்பி டி. ராஜேந்தர் அவர்கள், வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்திற்கு வராதது குறித்து சற்று வேதனையோடும் வேகமாகவும் தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அவர்கள் இலங்கை பிரச்சினையிலே பின்னடைவு கொண்டு வரவில்லை என்று கருதத் தேவை யில்லை.

என்னுடைய பிரச்சினையிலே அவர்களுக்குள்ள அதிருப்தியின் காரணமாகத் தான் வரவில்லையே தவிர, இலங்கையிலே தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை சிங்கள வெறியர்களுக்கு களப்பலியாக ஆக்கக் கூடாது, அவர்கள் சிங்கள ராணுவத்திற்கு பலியாகி மாண்டு மடியக் கூடாது என்பதில் எல்லோரையும் போலவே ஒத்தக் கருத்து உடையவர்கள் தான் என்றாலுங்கூட, இன்று வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சிங்கள வெறியர்கள் நினைத்து விடக் கூடாது.

இந்தக் கூட்டத்தின் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்ட அந்த மறுப்புக் கருத்துக்கள் அவர்கள் காதுகளிலே விழுமேயானால் - நான் தம்பி ராஜேந்தரை குறை கூற இல்லை - அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார் - ஆனால் இது சிங்கள வெறியர்களுக்கு ஒரு ஊக்கமாக, ஆக்கமாக அமைந்து விடக் கூடாது. அமைய விடவும் மாட்டோம்.

யார் நம்மிடமிருந்து விலகிச் சென்றாலுங் கூட இந்தப் பிரச்சினையிலே அவர்களை யெல்லாம் அழைத்து வைத்து, இழுத்து வைத்து ஓரணியிலே நாம் திரண்டு மத்திய அரசை வலியுறுத்தி நம்முடைய தமிழ் மக்களை இலங்கையிலே காப்பாற்றுகின்ற அந்த முயற்சியிலே வெற்றியடைவோம் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் நமக்கு இடையிடையே ஏற்படுகின்ற சில சங்கடங்களை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். சிலருக்கு இதிலே அபிப்பிராய பேதம் இருக்கலாம். என்னுடைய அருமை நண்பர் பழ. நெடுமாறன் அவர்களுக்கு, வேறு சில நண்பர்களுக்கு அதிலே வேறுபட்ட கருத்துகள் கூட இருக்கலாம்.

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் நான் நீண்ட காலமாக விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டவர்களுக்குள்ளே - அவர்களுக்குள்ளே சகோதர யுத்தம் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறேன். அத்தகைய சகோதர யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளை யெல்லாம் நாம் நன்கறிந்திருக்கின்றோம். திருமதி இந்திரா காந்தி அவர்களால் கிடைத்த உதவிகளைக் கூட நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் அந்தச் சகோதர யுத்தம், நம்முடைய இலக்கினைப் பாழ்படுத்தி விட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் உலகத்தில் உள்ள பல அமைப்புகளின் சார்பாக கண்டனங்களையெல்லாம் கூடப் பொருட்படுத்தாமல், நூறுக்கு மேற்பட்ட முகாம்களை இந்தியாவிலே விடுதலைப் புலிகளுக்கு அமைவதற்கும், அந்தப் போராளிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் அவர்கள் அன்றைக்கு ஆயத்தமாக இருந்தது மாத்திரமல்லாமல், ஆதரவும் அளித்தார்கள்.

அப்படிப் பட்டவர்களுடைய உதவிகளைக் கூடப் பெற்று, அந்தப் போராட்டத்திலே நாம் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம், நம்மிடையே ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் என்பதை மறந்து விடக் கூடாது. ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் . மதுரையிலே டெசோ மாநாடு நடத்தினோம். 4/5/1986இல் நாம் நடத்திய டெசோ மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராமுவாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த சிங், ராச்சையா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அந்த மாநாட்டில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும், நம்முடைய அன்பு நண்பர் நெடுமாறன் அவர்களும் அய்யணன் அம்பலம் அவர்களும், அப்துல் சமத் அவர்களும் முன் நின்று தான் அந்த மாநாட்டை மதுரையிலே நடத்தினோம். மாநில மாநாடு போல மிகவும் எழுச்சியாக நடைபெற்ற மாநாடு. அந்த மாநாட்டில் எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் இருந்தார்.

டி.யு.எல்.எப். சார்பாக பெரியவர் நாவலர் அமிர்தலிங்கம் வந்திருந்தார். டெலோ சார்பாக மதி என்ற நண்பர் கலந்து கொண்டார். புரோடெக் சார்பாக சந்திரகாசன், தந்தை செல்வா அவர்களின் மகன் வந்திருந்தார். ஈராஸ் இயக்கத்தின் சார்பாக ரத்தினசபாபதி கலந்து கொண்டார். டி.ஈ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன் வந்திருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராச பெருமாள் கலந்து கொண்டார். பிளாட் சார்பாக வாசுதேவர் கலந்து கொண்டார். மற்றும் மற்றும் முரசொலி மாறன், ஆர்க்காடு வீராசாமி, செ. கந்தப்பன், நண்பர் வைகோ என்று அத்தனை பேரும் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டோம். ஆனால் அந்த மாநாட்டிலே ஒரு செய்தி கிடைத்தது.

மறுநாள் டெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினத்தைக் கொல்லப் போகிறார்கள் என்ற செய்தி தான் அது! நான் இன்னொரு இயக்கத்தின் நண்பர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னேன். தமிழர் தலைவர் வீரமணி அவர்களுக்குக் கூடத் தெரியும். கையைப் பிடித்துக் கொண்டே சொன்னேன் - இது கை அல்ல, உங்களுடைய கால் என்று கருதிக் கொள்ளுங்கள், சபாரத்தினத்தைக் கொன்று விடாதீர்கள் என்றெல்லாம் சொன்னேன்.

ஆனால் 6ஆம் தேதி கிடைத்த செய்தி - சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்டார் என்பது தான். அவர் டெலோ இயக்கத்தின் தலைவர். இப்படி சகோதர யுத்தத்தினால் நாம் பலவீனப்பட்டு விட்டோம். இன்றைக்கு இலங்கையிலே நடைபெறுகின்ற இந்த அக்கிரமங்களை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் - நாம் பலகீனப்பட்டது தான்.

இன்னொன்றும் சொல்கிறேன். டெல்லியில் 18-6-1990 அன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் என்றால் வி.பி. சிங் அவர்களின் இல்லத்தில் அவரே ஏற்பாடு செய்த கூட்டம் - இலங்கைப் பிரச்சினைக்காக முதல் அமைச்சர்கள் ஜோதிபாசு, ஈ.கே. நாயனார், பிஜூ பட்நாயக், செகாவத், லல்லு பிரசாத், மகந்தா, குப்தா, சாந்தகுமார், பண்டாரி, டி. ராமச்சந்திரன் மற்றும் மத்திய அமைச்சர்கள் அருண் நேரு, முப்தி மகமது சையத், முரசொலி மாறன், குருபாதசாமி, தினேஷ் கோசுவாமி, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன் மற்றும் வாஜ்பாய், அத்வானி, ஈ.எம்.எஸ்., இந்திரஜித் குப்தா, பரூக்கி, ஜஸ்வந்த் சிங், சிட்டபாசு, சாமர் முகர்ஜி, டாக்டர் நகேந்திர சக்கரியா ஆகியோரிடம் ஈழப் பிரச்சினை குறித்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நாங்கள் விவாதித்திருக்கிறோம்.

பிரதமர் வி.பி. சிங் அவர்கள் முன்னிலையில் நான் பல விளக்கங்களை யெல்லாம் எடுத்துச் சொல்லி, எல்லோரும் நான் சொன்னதில் உடன்பாடு கொண்டு நாங்களும் இந்தப் பிரச்சினையில் அகில இந்திய அளவிலே அணி வகுக்கிறோம் என்று சொன்னார்கள். அவர்களிடம் பேசி விட்டு நான் தமிழ்நாடு இல்லத்திற்கு வருகிறேன். சென்னையிலிருந்து தொலைபேசி வருகிறது. பத்மநாபா அவர்களும், அவரோடு பத்து பேரும் சென்னையிலே கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று செய்தி வருகிறது. அவர்கள் ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் தான். இப்படி சகோதர யுத்தத்தால் நாம் பாழ் பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாமல், அந்தச் சகோதர யுத்தங்கள் காட்டிய பாடத்தை இப்போது நாம் பெற வேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய இந்தக் கூட்டத்திலே உறுதி எடுத்துக் கொள்வோம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களை சுரண்டும் திரையுலகம் தங்கர்பச்சான் ஆவேசம்!


தெய்வம் தந்த பூவே. பத்திரிகையாளர் வேணுஜி இயக்கியிருக்கும் டெலி பிலிம் இது. சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த படம் தாய் பாசத்தை மையமாக கொண்டது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள்

திரையுலக முன்னணி இயக்குனர்களான அமீர், கே.எஸ்.ரவிக்குமார், தங்கர்பச்சான், ஜெயம் ராஜா, சுப்பிரமணியம் சிவா ஆகியோர். இவர்களை தவிர, கூட்டத்தினரை கவர்ந்த மற்றொரு விவிஐபி டாக்டர் கமலா செல்வராஜ்.

ஜெர்மனியை சேர்ந்த சிறுவன் ஆதவன்தான் இப்படத்தின் ஹீரோ. இவனது தாயார் ஆனந்தி ஓரு மருத்துவர். இவரது கதையை உருக்கமாக கூறினார் கே.எஸ்.ரவிக்குமார். இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இனக்கலவரத்தில் தனது சொந்த பந்தங்கள் எல்லோரையும் பறிகொடுத்துவிட்டு கடல் போன்ற தனது வீட்டையும் இழந்தவர் ஆனந்தி. தனது ஒரே சொந்தமான மகன் ஆதவனை மார்போடு அணைத்துக்கொண்டு அந்த நாட்டை விட்டு வெளியேறி இன்று ஜெர்மனியில் புகழ் பெற்ற மருத்துவராக விளங்குகிறார். இந்த அன்னையின் கனவுதான் இந்த படம். நல்லவர்களை தேர்வு செய்து இந்த பட வாய்ப்பை வழங்கியிருக்கிறார் ஆனந்தி. சிறுவன் ஆதவன் எல்லா பெருமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

அங்கே நமது இனம் செத்துகிட்டிருக்கு. புலம் பெயர்ந்த தமிழர்கள் காசில் Deivam Thanda Veeduசாப்பிட்டது போதாது என்று அவ்வப்போது கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சுரண்டிக் கொண்டிருக்கும் நமது திரையுலகம், ஈழத்தில் நடக்கும் படுகொலைக்கு ஒரு குரல் கொடுக்க கூட யோசிக்கிறது என்று ரொம்பவே வேதனைப்பட்டார் தங்கர்பச்சான்.

ஈழம் தொடர்பான இவர்களின் கண்ணீர் சுரப்பியை மேலும் தூண்டியது மோகன்ராஜ் இசையில் உருவான டைட்டில் பாடல். (பிரமாதமான மெலடி) இறுதியாக நன்றியுரைத்த வேணுஜி, “அம்மா-மகனுக்குள்ளே என்ன கதை இருந்தது என்று தெரியாது. நான் தாய் பாசத்தை மையமாக வைத்து ஒரு கதை சொன்னேன். அவர்களுக்கும் பிடித்திருந்தது. எல்லாருக்கும் பிடிச்சிருக்கிற மாதிரி ஒரு படத்தை எடுத்திருக்கேன். பார்த்திட்டு சொல்லுங்க” என்றார்.

சீக்கிரம் காட்டுங்க...

தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும்: பா.ம.க.


இலங்கையில் தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் பா.ம.க. தலைவர் கோ.க. மணி கூறியதாவது:

தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்த
அனைத்து கட்சிக்கூட்டத்தின் முடிவுகளை வரவேற்கிறோம்.

தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும்.

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ் கட்சியின் செயலாளர் என்.வரதராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரும் இத்தீர்மானத்தை மகிழ்ச்சியோடு வரவேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியாவின் தலைநகரில் மாபெரும் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு


தொடர்ச்சியாக தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை அழித்து வரும் சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சரின் அவுஸ்திரேலிய வருகையையும் உலகளாவிய ரீதியில் அவர் எடுத்துச் செல்லும் பொய்ப்பிரச்சாரத்திற்கு எதிர்பு தெரிவித்தும் அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வினை நேற்று செவ்வாய்க்கிழமை (14.10.08) தலைநகர் கன்பராவில் நடத்தினர்.

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம கன்பராவில் சந்தித்த போது, சுமார் 600-க்கும் அதிகமான தமிழ் மக்கள் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா ஆகிய இடங்களில் இருந்து ஒன்றுதிரண்டு தமது செய்திகளை அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்களுக்கும் எடுத்துச்சொல்லும் வகையில் இக்கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரோகித போகல்லாகம, இலங்கையில் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டபின் அபிவிருத்தி தொடர்பில் பேசுவதாக இருந்தாலும் அவரது பேச்சின் 90% விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என நிரூபிக்க எடுக்கப்பட்ட ஒரு எத்தனமாகவே அமைந்தது.



பேச்சை தொடங்கும் போது, வெளியே நடத்தப்படும் கவனயீர்ப்பு பேரணியைக் குறிப்பிட்டு, அவுஸ்திரேலியாவைப் போல் இலங்கையும் ஒரு ஜனநாயக நாடு அங்கும் பேச்சுச் சுதந்திரம் மக்களுக்கு இருக்கிறது என்கிற தொனியில் பேசினார்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது சிந்தனைகளையும் செய்திகளையும் இலங்கையிலே பிரசுரிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மண்டபத்துக்கு வெளியே கூடியிருந்த தமிழ் மக்கள் அண்மைக்காலங்களில் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர் விவரம் தாங்கிய பதாகைகளை தாங்கியிருந்தனர். "ஊடகவியலாளர்களைக் கொல்லாதே சிங்கள அரசே" என்று தொடர்ச்சியாக முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.



இலங்கையில் நடைபெறுவது ஒரு இனப்பிரச்சினையே அல்ல என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் மட்டுமே என்று குறிப்பிட்ட அமைச்சர், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை இறக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் தாம் தீர்வு அளிப்பதாகவும் கிழக்கு மாகாணம் பூரணமாக அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும், இன்னும் இரண்டு மாவட்டங்கள் மட்டுமே விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் அவற்றையும் விரைவில் தாம் மீட்டு விடப் போவதாகவும் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக அவர் பொய்ப்பிரச்சாரத்தின் உச்சியைத் தொட்டுவிடும் அளவிற்கான பொய்களை எந்தவித கூச்சமும் இன்றி, அவுஸ்திரேலிய ஊடகவியாளர்களுக்கு உரைத்தார்.

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனர் என்பதை அவர்களின் கேள்விகளிலிருந்து அறியக்கூடியதாக இருந்தது.



"அவுஸ்திரேலியன்" பத்திரிகையில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் பல கட்டுரைகள் எழுதிய மார்க் டொய்ல் முதலாவதாகக் கேள்வி கேட்டிருந்தார்.

அவர் தனது கேள்வியில், "அவுஸ்திரேலிய அரசாங்கம், விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்க வந்திருக்கும் அமைச்சரே, சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் கணக்கிலடங்காதவை, அது வெட்கத்துக்குரிய விடயம், அது தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?" என்று கேட்டதற்கு நேரடியாகப் பதில் கூறாமல் விடுதலைப் புலிகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு போனார்.

அந்தக் கேள்வி மீண்டும் கேட்கப்பட்ட போது, மாண்புமிக்கவர்கள் குழு மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளில் இரண்டு வருடங்களின் பின் 10% வழக்குகளையே கையாள முடிந்தது என்றும் அவர்களால் செவ்வனே இயங்க முடியாத காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறினர் என்றும் குறிப்பிட்டு, இந்த வழக்குகளுக்கு சாட்சிகளாக யாரும் வருவதில்லை எனவே இந்தக் குற்றச்சாட்டுகளை அரசு தீர்க்க முடியாமல் போகின்றது என்று சாக்குப் போக்கு கூறினார்.



அடுத்து கேள்வி எழுப்பிய கத்ரீன் மக்கோலி என்ற ஊடகவியலாளர் மூன்று கேள்விகளை முன்வைத்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடகவியலாளர்களை எப்போது அனுமதிக்கப் போகின்றீர்கள் என்ற கேள்விக்கு, விரைவில் கிளிநொச்சியும் முல்லைத்தீவும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் அதன்பின்னர் யாரும் இந்தப் பகுதிகளுக்குத் தங்கு தடையின்றி செல்லலாம் என்றும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக் கருதி, சிறிலங்கா அரசு அனுமதி மறுக்கின்றது என்று கூறினார்.

அவரது இரண்டாவது கேள்வியான, "ஊடகலியலாளர்கள் சிறிலங்கா அரசால் கொல்லப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான கருத்து?" என்பதற்கு சிறிலங்கா அரசு சமாதானத் தீர்வுக்குப் பூரணமாகச் செயற்படுகின்றது என்று பதிலளித்தார்.

"அண்மையில் கொல்லபட்ட ஜானக பெரேரா, சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு என்ன பதில்" என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சியோ யாருமோ, அரசைக் குற்றம் சாட்டவில்லை, ஜானக பெரேராவுக்குத் தகுந்த பாதுகாப்பை வழங்கவில்லை என்றுதான் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன என்று குறிப்பிட்டு, 80 பேர் பாதுகாப்பளித்தும், சிறிலங்காவின் முன்னைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர் வீட்டிலேயே கொல்லப்பட்டார் என்று குறிப்பிட்டார்.

ஏபிசி வானொலி நிருபர், ஆயுதங்களைக் கீழே போடமுன்னர் தான் அயர்லாந்து விடுதலை அமைப்புடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை நடாத்தியது, அதிலிருந்து நீங்கள் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லையா என்றும் பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பும் வேறு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் வன்னிப் பிரதேசத்தை விட்டு வெளியேறியதும் உங்கள் மேல் உள்ள நம்பிக்கைத் தன்மையைக் குறைத்தருக்கின்றதல்லவா என்று இரண்டு கேள்விகளைக் கேட்டார்.

1985 இலிருந்து புலிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் அதனால் எந்தவித பலனும் இல்லை என்றும் அதனால் தான் போரினால் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள தாம் முனைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு, விடுதலைப் புலிகள் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல், போதை மருந்து கடத்தல் ஆகிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இவரது இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்கையில், போர் தொடங்கிய பின்னர் அவர்களின் பாதுகாப்பிற்காக மடடுமே ஐக்கிய நாடுகள் சபை அமைப்பும் வேறு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் வன்னிப் பிரதேசத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்றும் அவர்கள் 13 கிலோமீற்றர் மட்டுமே வெளியேறியிருக்கின்றனர் என்றும் அரச கட்டுப்படாட்டிற்குள் இந்தப்பிரதேசம் கொண்டு வரப்பட்டதும் மீண்டும் அவர்கள் தம் சேவையை செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் யாரும் நம்பாத ஒரு பதிலைக் கூறினார்.

இறுதியாக, ஊடகவியலாளர்கள் சங்கத்தின் போதகர், அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் வெளிநாட்டுச் செலாவணி சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வளவு முக்கியானவை என்று கேட்டார்.

விடுதலைப் புலிகள் பணம் சிறிலங்காவுக்கு வருவதில்லை என்றும் ஆயுதங்கள் வாங்குவதற்காக அவை வெளியே தான் அனுப்பப்படுகின்றது என்று குறிப்பிட்டு, மீண்டும், இலங்கையில் நடப்பது ஒரு இனப்பிரச்சினையே அல்ல என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் மட்டுமே என்று கூறி தனது உரையினை முடித்துக்கொண்டார்.

சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம மண்டபத்திற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் மக்கள் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் முழக்கங்கள் எழுப்பினர்.

இக்கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருந்த நகர காவலர்கள், இது சத்தமாக இருந்தாலும் ஒழுங்கான பேராட்டமாக இது இருந்தது என்று குறிப்பிட்டனர்.

சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவின் பொய்ப்பிரச்சாரத்தினை ஊடகவியலாளர்கள் நம்பியாதகத் தெரியவில்லை. அவர்களின் எதிர்கால எழுத்தில் தான் அதன் வெளிப்பாடுகளை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.

கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்- பரபரப்பை ஏற்படுத்திய வானூர்தி பதாகை



கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

நேற்றய நாள் மிகவும் சிறப்பான முறையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் மாணவர் அமைப்பினராலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

City இல் Dufferin & Blumington சந்திப்பிற்கு அருகில் உள்ள திடலிலேயே இந்த துடுப்பாட்டப் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.





கடந்த சனிக்கிழமை முதல் நடைபெறும் இந்தப் போட்டியின் போது கனடா வாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றினர்.

துடுப்பாட்ட வீரரும் சிறிலங்கா படையின் பீரங்கி படையைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசுக்கு எதிரான முழக்கங்களை கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் குறிப்பாக கனடிய தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், உணர்வாளர்களும் எழுப்பினர்.

வீதியால் சென்று கொண்டிருந்த கனடிய மக்களுக்கு ஆங்கில மொழியிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.





தமிழ் மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு கனடிய காவல்துறையினர் தமது ஒத்தாசையை வழங்கியிருந்ததோடு முதலுதவி காப்புப் பணியினரையும் அழைத்திருந்தனர்.

காவல்துறையினருக்கு ஒத்தாசை புரியும் வகையில் நிகழ்வின் ஏற்ப்பாட்டாளர்கள் மக்களை கட்டுப்படுத்தி வீதியின் ஒருபுறமாக மக்களை வழிநடத்தி ஒழுங்கமைப்பினை செய்திருந்தனர்

தமிழர்களை சிறிலங்கா அரசு கொல்வதை நிறுத்தவேண்டும் என்ற அங்கில மொழிப்பதாதை தாங்கியவாறு வானூர்தி ஒன்று ஒன்றரை மணிநேரத்தக்கு மேலாக மைதானத்தைச் சுற்றி பறப்பில் ஈடுபட்டு துடுப்பாட்டத்தினை பார்வையிட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த இளைஞர்களும், யுவதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டோரை கேலி செய்ததுடன் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு முனைந்தனர்.

இதனை அவதானித்த காவல்துறையினர் அவர்களில் இருவரை கைது செய்து கொண்டு சென்றனர்.