அவுஸ்திரேலியாவின் தலைநகரில் மாபெரும் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வு: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு


தொடர்ச்சியாக தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை அழித்து வரும் சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சரின் அவுஸ்திரேலிய வருகையையும் உலகளாவிய ரீதியில் அவர் எடுத்துச் செல்லும் பொய்ப்பிரச்சாரத்திற்கு எதிர்பு தெரிவித்தும் அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் கண்டன கவனயீர்ப்பு நிகழ்வினை நேற்று செவ்வாய்க்கிழமை (14.10.08) தலைநகர் கன்பராவில் நடத்தினர்.

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம கன்பராவில் சந்தித்த போது, சுமார் 600-க்கும் அதிகமான தமிழ் மக்கள் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா ஆகிய இடங்களில் இருந்து ஒன்றுதிரண்டு தமது செய்திகளை அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்களுக்கும் எடுத்துச்சொல்லும் வகையில் இக்கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரோகித போகல்லாகம, இலங்கையில் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டபின் அபிவிருத்தி தொடர்பில் பேசுவதாக இருந்தாலும் அவரது பேச்சின் 90% விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என நிரூபிக்க எடுக்கப்பட்ட ஒரு எத்தனமாகவே அமைந்தது.



பேச்சை தொடங்கும் போது, வெளியே நடத்தப்படும் கவனயீர்ப்பு பேரணியைக் குறிப்பிட்டு, அவுஸ்திரேலியாவைப் போல் இலங்கையும் ஒரு ஜனநாயக நாடு அங்கும் பேச்சுச் சுதந்திரம் மக்களுக்கு இருக்கிறது என்கிற தொனியில் பேசினார்.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது சிந்தனைகளையும் செய்திகளையும் இலங்கையிலே பிரசுரிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மண்டபத்துக்கு வெளியே கூடியிருந்த தமிழ் மக்கள் அண்மைக்காலங்களில் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர் விவரம் தாங்கிய பதாகைகளை தாங்கியிருந்தனர். "ஊடகவியலாளர்களைக் கொல்லாதே சிங்கள அரசே" என்று தொடர்ச்சியாக முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.



இலங்கையில் நடைபெறுவது ஒரு இனப்பிரச்சினையே அல்ல என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் மட்டுமே என்று குறிப்பிட்ட அமைச்சர், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை இறக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் தாம் தீர்வு அளிப்பதாகவும் கிழக்கு மாகாணம் பூரணமாக அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும், இன்னும் இரண்டு மாவட்டங்கள் மட்டுமே விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் அவற்றையும் விரைவில் தாம் மீட்டு விடப் போவதாகவும் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக அவர் பொய்ப்பிரச்சாரத்தின் உச்சியைத் தொட்டுவிடும் அளவிற்கான பொய்களை எந்தவித கூச்சமும் இன்றி, அவுஸ்திரேலிய ஊடகவியாளர்களுக்கு உரைத்தார்.

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனர் என்பதை அவர்களின் கேள்விகளிலிருந்து அறியக்கூடியதாக இருந்தது.



"அவுஸ்திரேலியன்" பத்திரிகையில் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் பல கட்டுரைகள் எழுதிய மார்க் டொய்ல் முதலாவதாகக் கேள்வி கேட்டிருந்தார்.

அவர் தனது கேள்வியில், "அவுஸ்திரேலிய அரசாங்கம், விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்க வந்திருக்கும் அமைச்சரே, சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் கணக்கிலடங்காதவை, அது வெட்கத்துக்குரிய விடயம், அது தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?" என்று கேட்டதற்கு நேரடியாகப் பதில் கூறாமல் விடுதலைப் புலிகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு போனார்.

அந்தக் கேள்வி மீண்டும் கேட்கப்பட்ட போது, மாண்புமிக்கவர்கள் குழு மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகளில் இரண்டு வருடங்களின் பின் 10% வழக்குகளையே கையாள முடிந்தது என்றும் அவர்களால் செவ்வனே இயங்க முடியாத காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறினர் என்றும் குறிப்பிட்டு, இந்த வழக்குகளுக்கு சாட்சிகளாக யாரும் வருவதில்லை எனவே இந்தக் குற்றச்சாட்டுகளை அரசு தீர்க்க முடியாமல் போகின்றது என்று சாக்குப் போக்கு கூறினார்.



அடுத்து கேள்வி எழுப்பிய கத்ரீன் மக்கோலி என்ற ஊடகவியலாளர் மூன்று கேள்விகளை முன்வைத்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடகவியலாளர்களை எப்போது அனுமதிக்கப் போகின்றீர்கள் என்ற கேள்விக்கு, விரைவில் கிளிநொச்சியும் முல்லைத்தீவும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் அதன்பின்னர் யாரும் இந்தப் பகுதிகளுக்குத் தங்கு தடையின்றி செல்லலாம் என்றும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக் கருதி, சிறிலங்கா அரசு அனுமதி மறுக்கின்றது என்று கூறினார்.

அவரது இரண்டாவது கேள்வியான, "ஊடகலியலாளர்கள் சிறிலங்கா அரசால் கொல்லப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான கருத்து?" என்பதற்கு சிறிலங்கா அரசு சமாதானத் தீர்வுக்குப் பூரணமாகச் செயற்படுகின்றது என்று பதிலளித்தார்.

"அண்மையில் கொல்லபட்ட ஜானக பெரேரா, சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு என்ன பதில்" என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சியோ யாருமோ, அரசைக் குற்றம் சாட்டவில்லை, ஜானக பெரேராவுக்குத் தகுந்த பாதுகாப்பை வழங்கவில்லை என்றுதான் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன என்று குறிப்பிட்டு, 80 பேர் பாதுகாப்பளித்தும், சிறிலங்காவின் முன்னைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர் வீட்டிலேயே கொல்லப்பட்டார் என்று குறிப்பிட்டார்.

ஏபிசி வானொலி நிருபர், ஆயுதங்களைக் கீழே போடமுன்னர் தான் அயர்லாந்து விடுதலை அமைப்புடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை நடாத்தியது, அதிலிருந்து நீங்கள் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லையா என்றும் பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பும் வேறு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் வன்னிப் பிரதேசத்தை விட்டு வெளியேறியதும் உங்கள் மேல் உள்ள நம்பிக்கைத் தன்மையைக் குறைத்தருக்கின்றதல்லவா என்று இரண்டு கேள்விகளைக் கேட்டார்.

1985 இலிருந்து புலிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் அதனால் எந்தவித பலனும் இல்லை என்றும் அதனால் தான் போரினால் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள தாம் முனைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு, விடுதலைப் புலிகள் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல், போதை மருந்து கடத்தல் ஆகிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இவரது இரண்டாவது கேள்விக்குப் பதிலளிக்கையில், போர் தொடங்கிய பின்னர் அவர்களின் பாதுகாப்பிற்காக மடடுமே ஐக்கிய நாடுகள் சபை அமைப்பும் வேறு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் வன்னிப் பிரதேசத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்றும் அவர்கள் 13 கிலோமீற்றர் மட்டுமே வெளியேறியிருக்கின்றனர் என்றும் அரச கட்டுப்படாட்டிற்குள் இந்தப்பிரதேசம் கொண்டு வரப்பட்டதும் மீண்டும் அவர்கள் தம் சேவையை செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் யாரும் நம்பாத ஒரு பதிலைக் கூறினார்.

இறுதியாக, ஊடகவியலாளர்கள் சங்கத்தின் போதகர், அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் வெளிநாட்டுச் செலாவணி சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வளவு முக்கியானவை என்று கேட்டார்.

விடுதலைப் புலிகள் பணம் சிறிலங்காவுக்கு வருவதில்லை என்றும் ஆயுதங்கள் வாங்குவதற்காக அவை வெளியே தான் அனுப்பப்படுகின்றது என்று குறிப்பிட்டு, மீண்டும், இலங்கையில் நடப்பது ஒரு இனப்பிரச்சினையே அல்ல என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் மட்டுமே என்று கூறி தனது உரையினை முடித்துக்கொண்டார்.

சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம மண்டபத்திற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் மக்கள் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் முழக்கங்கள் எழுப்பினர்.

இக்கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருந்த நகர காவலர்கள், இது சத்தமாக இருந்தாலும் ஒழுங்கான பேராட்டமாக இது இருந்தது என்று குறிப்பிட்டனர்.

சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவின் பொய்ப்பிரச்சாரத்தினை ஊடகவியலாளர்கள் நம்பியாதகத் தெரியவில்லை. அவர்களின் எதிர்கால எழுத்தில் தான் அதன் வெளிப்பாடுகளை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.

No comments: