இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் --இயக்குனர் சீமான் ஆவேசம்


இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் செய்து வரும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சிங்கள அரசுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்றார்.

திரைப்பட இயக்குனர் சீமான் பேசுகையில், இந்திய அரசு நாங்கள் கொடுத்த வரிப்பணத்தில் எங்கள் உறவுகளை சுட்டுக் கொல்கிறது என்றால் நாங்கள் இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் என்றார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு பேசுகையில், சிங்கள அரசுக்கு இந்தியா கொடுத்துள்ள ராணுவத் தளவாடங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலாக முன்வைப்பதாகவும் இக்கோரிக்கையை அனைவரும் உரக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

யார் இந்த எம்.கே.நாராயணன்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.மகேந்திரன் பேசும் போது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் ஒர் மறைமுக கூட்டாளி போல எம்.கே.நாராயணனை அழைத்து பேச வைத்திருக்கிறதே, யார் இந்த எம்.கே.நாராயணன்? இவர் மக்கள் பிரதிநிதியா? ஓர் அதிகாரிக்கு இவ்வளவு உரிமைகளை கொடுத்தது யார்? இவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம் என்றார்.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சோழன் நம்பியார், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், புலவர் புலமைப்பித்தன், ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் ஒவியா, கவிஞர் தாமரை, வழக்கறிஞர்கள் அஜிதா, சேசுபாலன்ராஜா, எழுகதிர் இதழ் ஆசிரியர் அரு.கோபாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments: