இலங்கையின் வடபாகத்தில் ஏறத்தாழ 220000 பேர் மீளவும் இடம்பெயர்ந்துள்ளனர் --BBC

இலங்கையின் வடபாகத்தில் ஏறத்தாழ 220000 பேர் மீளவும் இடம்பெயர்ந்துள்ளதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் போஸ்டர் அங்கு நடந்த விவாதமொன்றின் போது தெரிவித்துள்ளார்.இலங்கையில் தற்போது நிலவும் சூழல் குறித்து பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற தனிப்பட்ட விவாதம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து இது பற்றிக் குறிப்பிடுகையில் ஆகக் குறைந்தது 30000பேர் ஐந்து தடவைகளாவது இடம் பெயர்ந்துள்ளனர் என்றும், இந்தப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காணப்பட முடியாதென்றும் தெரிவித்தார். இலங்கையின் மனித நேய நிலை குறித்து அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசினார். இவ்விவாதம் ஆளும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளின் பேரிலேயே நடாத்தப்பட்டது.இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சிறிலங்கா சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற கூற்றை கேள்வியெழுப்பியும் விமர்சித்தும் பேசினார் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பரி கார்டினர்.மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் தொழிற்பட சிறிலங்கா அரசு உறுதுணை புரிய வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கையின் நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்த போஸ்டர் ஐ.நாவின் உணவு உதவியை வடக்கிற்கு உடனடியாக வழங்க அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் சகிப்புத்தன்மையோ கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமோ இல்லை எனத் தெரிவித்த அவர் புலிகள் சமாதானத்தின் பங்காளர்களாவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். எவரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதற்காக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு சிறுவர்களைப் படையில் இணைத்துக் கொள்வதையும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.அதேபோல தெற்கிலும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கட்டுப்பாடுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பேணப்பட வேண்டும். அதற்காக கொல்வது தண்டிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தச் சில வருடங்களுக்குள்ளேயே ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுமுள்ளனர் எனத் தெரிவித்தார்.

No comments: