இலங்கை தமிழர் பிரச்சனை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி இராஜினாமாக் கடிதத்தை கையளித்தார் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் கருணாநிதி மகள் கனிமொழி, இன்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக எமது தமிழக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

27 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இனப் படுகொலையை நிறுத்த இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்,
இலங்கையில் 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இந்தநிலையில்,திமுக நாடாளுமன்ற ராஜினாமா முடிவை வெளிப்படுத்தும் அடையாளமாக, அக்கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பின் திகதியிட்டு, அதாவது இந்திய மத்திய அரசுக்கு கொடுத்துள்ள இரண்டு வார காலக்கெடுவுக்கு பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கட்சித் தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய மத்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காக மதிமுகவும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனக்கொலையைத் தடுக்கவும், அனைத்து தியாகங்களையும் செய்ய தயாராக உள்ள மதிமுகவுக்கு, அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டே அல்ல என வைகோ கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் நடைபெறும் போரை 2 வாரத்துக்குள் நிறுத்த, இந்திய மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வார்கள் என தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (ஒக்14) மாலை நடைபெற்றது. 27 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கையில் நடைபெற்று வரும் போரால், ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர். போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஆயுத உதவி வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய மத்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் இனப் படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, அந்த வகையான உதவிகளை இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இலங்கையில் இரண்டு வாரத்துக்குள் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்.

போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம் பெயர்ந்து வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். உணவு, உறைவிடம், மருந்து போன்றவற்றையும் வழங்கவேண்டும். மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.

மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல் பாதிக்கப்பட்டோருக்கு சென்றடைய செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் உதவியை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்'' என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments: