சென்னையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி மாலையில் நடைபெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக - மஹிந்த அரசைக் கண்டித்து - சென்னையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி மாலையில் நடைபெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பவை வருமாறு:-நமது தமிழ் மக்கள் இலங்கையில் படும் தொல்லைகள், கொடிய துன்பங்களில் இருந்து விடுபட்டு இனப்படுகொலை நிறுத்தப்பட்டு நிலையான அமைதி காண்பதற்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆறு தீர்மானங்களையும் நினைவூட்டி வலியுறுத்திட அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிமுதல் சென்னையில் மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடைபெறும்.சென்னையில் உள்ளவர்கள் மாத்திரமல்லாமல், பிற மாவட்டங்களில் உள்ளவர்களும் கலந்துகொள்ளக்கூடிய பிரமாண்டப் பேரணியாக அது அமையும் என்பதால் எல்லா மாவட்டங்களிலுமிருந்து வந்து கலந்துகொண்டு மனிதச் சங்கிலியைப் பெருமளவில் நடத்திட அனைத்துக் கட்சியினரும் குறிப்பாக மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

முகமாலையில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி 40 பேர் காயம்

வடபோர்முனையான யாழ். முகமாலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.
முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் டாங்கி சூட்டாதரவுடகளுடன் பெருமெடுப்பில் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 11:30 மணி வரை தாக்குதல் நடத்தி படையினரின் முயற்சியினை முறியடித்தனர்.
இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை நிலவரம் தொடர்பில் இந்தியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்கு தீர்வாகது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் என்று கோரியுள்ள அவர் இந்திய அரசு இதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வன்னிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகள் இடைநடுவில் வவுனியாவுக்கு திரும்பியுள்ளன

இன்று பிற்பகல் அளவில் வன்னிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகள் இடைநடுவில் மீண்டும் வவுனியாவிற்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டுசுட்டான் பகுதியில் லொறிகள் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற ஆட்டிலறித் தாக்குதலின் காரணமாக மீண்டும் வவுனியாவிற்கு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு நிவாரணப் பொருட்களை சுமந்த லொறிகள் தற்போது வவுனியா நோக்கி திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளா கோர்டன் வைஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
வன்னிக்கு 50 லொறிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன - ஐ.நா.அமைப்பு
வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக இன்று பிற்பகல் 50 பார ஊர்திகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனமான உலக உணவுத் திட்டத்தினால் 50 லொறிகளில் சுமார் 750 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் வவுனியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி ஏ 9 வீதியின் ஊடாக ஓமந்தை, புளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஊடாக நிவாரணப் பொருட்களைச் சுமந்த பார ஊர்திகள் செல்லவுள்ளன. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்களின் ஊடாக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் தென்மராட்சி முன்னரங்க நிலை பகுதியில் கடும் மோதல்

யாழ்ப்பாணம் தென்மராட்சி முன்னரங்க நிலைப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இன்று மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று புதன்கிழமையன்று கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் யாழ்ப்பாண ஏரியில் இடம்பெற்ற நேரடி மோதல்களை அடுத்தே இன்று இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது இரண்டு தரப்பினரும் தீவிரமான எறிகணை வீச்சுக்களில் ஈடுபட்டனர். அத்துடன் தென்மராட்சி முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாண ஏரிப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இரவு சுமார் 2 மணித்தியாலங்களாகச் சண்டை இடம்பெற்றுள்ளது.
இலங்கைப் படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது நிலைகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசங்களின் மீது எறிகணை வீச்சுகளை நடத்தினர்.
இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் கரையோரங்கள் மற்றும் மண்டைதீவு ஆகிய இடங்களில் உள்ள இலங்கை படையினரின் நிலைகளின் மீது எறிகணை வீச்சுக்களை நடத்தினர்.
இந்தநிலையில் இரண்டு தரப்பிலும் மோதல்களின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.