வன்னிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகள் இடைநடுவில் வவுனியாவுக்கு திரும்பியுள்ளன

இன்று பிற்பகல் அளவில் வன்னிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகள் இடைநடுவில் மீண்டும் வவுனியாவிற்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டுசுட்டான் பகுதியில் லொறிகள் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற ஆட்டிலறித் தாக்குதலின் காரணமாக மீண்டும் வவுனியாவிற்கு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவு நிவாரணப் பொருட்களை சுமந்த லொறிகள் தற்போது வவுனியா நோக்கி திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளா கோர்டன் வைஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
வன்னிக்கு 50 லொறிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன - ஐ.நா.அமைப்பு
வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக இன்று பிற்பகல் 50 பார ஊர்திகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனமான உலக உணவுத் திட்டத்தினால் 50 லொறிகளில் சுமார் 750 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் வவுனியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி ஏ 9 வீதியின் ஊடாக ஓமந்தை, புளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஊடாக நிவாரணப் பொருட்களைச் சுமந்த பார ஊர்திகள் செல்லவுள்ளன. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்களின் ஊடாக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

No comments: