ஞாநியின் பார்வையில் - குமுதம்


கலைஞர் கருணாநிதியின் பெயரில் இருக்கும் கலை அவரிடம் இருக்கிறது; நிதி இருக்கிறது; கருணை?

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே கையெழுத்தில் 1405 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தவர், கருணை இல்லாதவராக இருக்க முடியுமா?

ஆயுள் கைதிக்கு அறுபது வயதாகியிருந்தால் 5 வருடம் சிறைவாசமே போதுமானது. விடுதலை செய்யுங்கள்; அறுபதுக்குக் கீழே வயதா? 7 வருடம் சிறையில் இருந்திருந்தாலே போதும். விடுவியுங்கள்' என்று ஆயிரக் கணக்கானவர்களுக்குக் காட்டிய கருணையை ஏன் ஒரே ஒருவருக்கு மட்டும் காட்ட மறுக்கிறார்? அதுவும் 17 வருடங்களாகச் சிறையில் இருந்து வரும் நளினிக்கு?

ஆயுள் தண்டனை என்பது கொலைக் குற்றம் தொடர்பாக மட்டுமே தரப்படுவது. இந்த தண்டனை பெற்ற ஒரு கைதியை தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்க வேண்டுமானால், அதற்கான அதிகாரம் மாநில அரசிடம் மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் சட்டப்பிரிவுகள் இரு வகைப்பட்டவை.
அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலை அளிக்கலாம். குற்றவியல் சட்டம் எனப்படும் கிரி மினல் ப்ரொசீஜர் கோடின் 432, 433-ம் பிரிவுகளின் கீழும் செய்யலாம்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுவிப்பதில் பல நிபந்தனைகள் உள்ளன. மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவரானால், அவர் குறைந்தபட்சம் 14 வருடமாவது சிறையில் இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் போதைப் பொருள் தடுப்பு போன்ற சட்டங்கள் தொடர்பான குற்றம் செய்திருந்தால், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளின் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால், மத்திய அரசை ஆலோசிக்காமல் விடுவிக்கக் கூடாது என்பது இன்னொரு நிபந்தனை.

இந்த நிபந்தனைகளின்படி இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் 1405 கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்கவே முடியாது. அதனால்தான் குற்றவியல் சட்டத்தின் கீழ் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்காமல், அதைவிட பெரிய சட்டமான அரசியல் சட்டத்தின் 161-ம் பிரிவின் கீழ் தனக்கு இருக்கும் தடையற்ற அதிகாரத்தின் கீழ் 1405 கைதிகளையும் தமிழக அரசு விடுவித்திருக்கிறது.

ஆனால் நளினியை மட்டும் விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. ஏன்? எந்த விதி அவருக்கு எதிராக இருக்கிறது? குற்றவியல் சட்டத்தின் நிபந்தனைகளின்படி மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதால் குறைந்தபட்சம் 14 வருடம் சிறையில் இருந்திருக்க வேண்டும். நளினி 17 வருடம் இருந்துவிட்டார்.

அவர் மீது வழக்குத் தொடுத்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இருக்கும் சி.பி.ஐ என்பதால், விடுதலை பற்றி மத்திய அரசை ஆலோசிக்க வேண்டும் என்பது இன்னொரு தேவை. ஆனால் இதுவரை தமிழக அரசு நளினியை விடுவிக்கலாமா என்பது பற்றி மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கவும் இல்லை. மத்திய அரசும் எந்த ஆலோசனையும் தரவும் இல்லை.

17 வருடங்கள் சிறையில் இருந்தபின்னர் இனியேனும் தன் மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காகத் தன்னை விடுவிக்கும்படி கோரிய நளினியின் மனுவை, பரிந்துரைக் குழு நிராகரித்தது. இந்தக் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்படுவது அல்ல. கருணாநிதியின் மாநில அரசு அமைக்கும் குழுதான். சிறையில் நன்னடத்தை உடையவர்கள் என்று இந்தக் குழு ஏற்றுக் கொள்ளும் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய ஆயுள் கைதிகளின் விடுதலை மனுவையும் குழு நிராகரித்துவிட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இன்னமும் போர் நடந்துகொண்டிருப்பதால் நளினியையும் இவர்களையும் விடுவிக்க முடியாது என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே தர்க்கப்படி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்த தி.மு.க ரவுடிகளையும் இப்போது விடுவித்திருக்கக்கூடாதே. தி.மு.க- மார்க்சிஸ்ட் கட்சிகளின் அரசியல் பகையால் அந்தக் கொலை நடந்தது என்றால், இப்போதும் இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டு பகைமையுடன் இருப்பதாகச் சொல்லலாமே. இன்னும் உயிரோடு இருக்கும் லீலாவதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து இருப்பதாக வாதிடமுடியுமே. இப்படிப்பட்ட வாதங்களை விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களும் முன்வைக்க முடியுமே.

நீதிமன்றத்தின் முன்பு தமிழக அரசு சொல்லும் காரணங்களில் ஒன்று, சிறையில் நான்கு முறை நளினி செய்த `குற்றங்கள்'. என்ன குற்றம் அது? இலங்கையில் இருக்கும் தன் மகள் தன்னைக் காண வருவதற்கு விசா மறுக்கப்படுவதை எதிர்த்து இருமுறை உண்ணாவிரதம் இருந்தார். இது இரண்டு குற்றங்கள். பின்னர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று விசா பெறப்பட்டது.

விதிகளின்படி தன்னை சந்தித்துப் பேச இன்னொரு தண்டனைக் கைதியான கணவர் முருகன் ஒருமுறை வந்தபோது, அவருடன் நளினி வாக்குவாதம் செய்து சண்டை போட்டார். இது குற்றம் எண் 3!
கருணாநிதியுடன் அவர் மனைவியோ துணைவியோ இது வரை வாக்குவாதம் செய்திருக்க மாட்டார்களா என்ன? இதையெல்லாம் ஒரு குற்றம் என்று சொல்லுவது நளினியை விடுதலை செய்யாமல் தடுக்கக் கண்டுபிடிக்கப்படும் சாக்குகளே தவிர வேறென்ன?

இதர சிறைக் கைதிகளை கலவரம் செய்யத் தூண்டினார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. எப்போது, எதற்கு, என்ன என்று எந்த சாட்சியமோ ஆதாரமோ அளிக்கப்படாத குற்றச்சாட்டு இது!

நளினியின் வழக்கைப் பொறுத்தமட்டில் அவரை ராஜீவைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில் ஒருவராகப் பார்க்கமுடியாது என்பதை உச்ச நீதிமன்ற மூவர் பெஞ்ச்சில் ஒருவரான நீதிபதி தாமஸ் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். கொலை செய்யப்போகிறார்கள், இன்னாரைக் கொலை செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் எதுவும் தெரியாமல் கொலைகார சதியாளர்களுக்கு உதவி செய்தவராகவும், கடைசி நிமிடத்தில் தெரிந்தபின்னரும் கூட கொலையைத் தடுக்கவோ, தப்பித்துச் செல்லவோ வழியற்றவராகவுமே அவரை தாமஸ் கருதுகிறார்.
இந்தச் சூழலில், இன்னாரைக் கொல்லுவது என்று முடிவு செய்து கொடூரமாக அரிவாள், குண்டுகளுடன் சென்று கொன்று குவித்த கூலிப்படையினரெல்லாம் ஏழு வருட சிறைவாசத்திலேயே அண்ணா பெயரால் மன்னிக்கப்படும்போது, நளினிக்கு மட்டும் வேறு நீதியை கருணாநிதி காட்டுவது ஏன்?
நளினியை விடுவிக்க மறுப்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்கள் எல்லாமே அர்த்தமற்றவை.

இந்த வாதங்களிலேயே உச்சமான அபத்தம் என்பது தமிழக அரசு நீதிமன்றத்தில் சொல்லியிருப்பதுதான் - ஆயுள் தண்டனை என்றால் ஆயுளுக்கும் தண்டனைதான். சாகும்வரை சிறையில் இருக்க வேண்டுமாம். 10, 14 ஆண்டு என்றெல்லாம் எதுவும் கிடையாதாம். இதை நளினி வழக்கில் சொல்லிவிட்டு அடுத்த வாரமே 1405 பேரை 5, 7 வருட தண்டனையோடு விடுவித்திருக்கிறது!

தமிழக வரலாற்றிலேயே கண்டிராத ஒரு புதுமையான நிகழ்வாக, தமிழகத்தின் பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் மனிதாபிமான அடிப்படையில் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்ட கோரிக்கை மனுவாகும். கவிஞர் தாமரையும் கவிஞர் கிருஷாங்கினியும் பா.செயப்பிரகாசமும் நெய்வேலி பாலுவும் இந்த அதிசயத்தை சாத்தியப்படுத்தினார்கள்.
தங்களுக்குள் கடும் முரண்பாடுகள் இருக்கக்கூடிய பல எழுத்தாளர்கள் - அசோகமித்திரன் முதல் அ.மார்க்ஸ் வரை, புஷ்பா தங்கதுரை முதல் நாஞ்சில் நாடன் வரை, சாரு நிவேதிதா முதல் பூமணி வரை, அம்பை முதல் இந்துமதி வரை, சுஜாதா முதல் தங்கர்பச்சான் வரை, ந.முத்துசாமி முதல் பெரியார்தாசன் வரை, வசந்தி தேவி முதல் சாலமன் பாப்பையா வரை, திருமாவளவன் முதல் தமிழருவி மணியன் வரை, வாலி முதல் ஞாநி வரை ஏறத்தாழ தமிழகத்தின் அத்தனை முக்கியமான பொது வாழ்க்கை மனிதர்களும் இந்த மனுவில் கையெழுத்திட்டார்கள்.

நளினியை விடுவித்தால், தமிழக அரசியலில் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து தி.மு.க.வின் எதிர்காலக் கனவுகளைத் தரைமட்டமாக்கிவிடுவாரா? எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நின்று தன் மகளுடன் ஒரு அமைதியான வாழ்க்கையை எஞ்சிய காலத்தில் வாழும் கனவைத் தவிர அவருக்கு வேறென்ன இனி மீதியிருக்கிறது?

அதை கருணாநிதி மறுப்பது ஏன்? முழுக்க முழுக்க அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்ட இந்த முடிவை எடுக்க அவர் தயங்குவது ஏன்? கனிமொழியின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற எந்த தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் பாசமுள்ள தந்தையான அவர் ஏன் கனிமொழியும் கையெழுத்திட்டிருக்கும் இந்த மனுவை மட்டும் புறக்கணிக்கிறார்?அவரை பயப்படுத்துவது எது? யார்? நிச்சயம் சோனியா காந்தியாக இருக்க முடியாது. தன் கணவர் ராஜீவ் கொலைக்கு உடந்தையாக இருத்த நளினியின் சட்டபூர்வமான சாவைத் தடுத்து நிறுத்தியவர் சோனியா. நேரில் சந்தித்து மன்னித்தவர் சோனியாவின் மகள் பிரியங்கா. 1405 பேருடன் நளினியையும் கருணாநிதி விடுவித்திருந்தால், சோனியாவும் பிரியங்கவும் நிச்சயம் எதிர்த்திருக்கப் போவதில்லை.

அப்படியானால், கருணாநிதியைத் தடுப்பது எது? யார்? ஏன்?

1405 கைதிகள் விடுதலை பற்றி ஒரு நிருபர், பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் கருணாநிதியிடம் கேட்கிறார்: ``இந்த விடுதலையை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தலைமை நீதிபதியை சந்தித்து வழக்கு தொடுக்கப்போவதாக செய்தி வந்திருக்கிறதே?''

கலைஞர் பதில் : ``கருணை உள்ளத்தோடு நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்? ஏழு ஆண்டுகள் சிறையிலே இருந்தவர்களையெல்லாம் விடுவிப்பது சரியா, தவறா?''

கலைஞர் அவர்களே, கருணை உள்ளத்தோடு நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்? ஏழாண்டுகள் அல்ல, 17 ஆண்டுகள் சிறையில் இருந்தவரை விடுவியுங்கள் என்று தமிழகத்தின் பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் உங்களிடம் மனு கொடுத்தது சரியா? தவறா?

நன்றி. குமுதம்

திமுகவின் போலி முகம்- ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளிடம்


பதினெட்டு ஆண்டு சிறைவாசம். அதிலும், தனிமைச் சிறைச்சாலை. அதனினும் கொடியதாக எந்தவித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம். சாவின் நிழலில்தான் வாழ்வையே நகர்த்த வேண்டும் என்ற துன்பத்தின் எல்லை. நான் மொழி, இனப் பற்றாளன். ஈழத் தமிழரின் நிலைகண்டு நொந்தவன். இதுவே, என்னைக் கொலைக்களத்தில் நிறுத்தப் போதுமான காரணங்களாக இருந்தன. நான் செய்த தவறுதான் என்ன?' -தண்டனைக் குறைப்பு வேண்டி தமிழக முதல்வருக்கு தூக்குத் தண்டனைக் கைதி பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்தான் இவை.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு பதினெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவரது கொடூர மரணத்திற்குக் காரணமானவர்கள் என்று சி.பி.ஐ.யால் சுட்டிக் காட்டப்பட்டவர்கள் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர். இவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் கைதிகள். மற்றவர்கள் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தூக்குத் தண்டனைக் கைதிகளில் சாந்தன், முருகன் ஆகிய இருவரும் இலங்கைத் தமிழர்கள். பேரறிவாளன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர்தான் ராஜிவ் படுகொலைக்குக் காரணமான `பெல்ட் பாம்' தயாரித்தவர் என சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்டவர். உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசின் கருணைப் பார்வைக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் பேரறிவாளன் உள்ளிட்ட கைதிகள். அதிலும், கடந்த 15-ம் தேதி நடந்து முடிந்த அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு தண்டனையைக் குறைக்கும் என்ற நம்பிக்கையோடு, பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் பல பகுதிகள் மிக உருக்கமாக எழுதப்பட்டிருந்தன.

ஆனால், அவரது தண்டனைக் குறைப்பு பற்றிய எந்தவித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. பேரறிவாளனின் நிறைவேறாத அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் இதோ...

`நிலையற்ற இவ்வுலகில் தனது இருத்தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் ஒரு மனிதனின் விண்ணப்பம். அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன். கொலையாளன் அல்ல. `தடா' சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கை விரித்து வந்த கயவர்கள் எம்மைக் கொலையாளியாக்கிய உண்மையை உணராதவர் அல்ல தாங்கள். எனக்கு கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர, அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் செய்த `பெரும் பிழைகள்'. கடைசி நம்பிக்கைத் துளிகளும் அற்றுப் போன மனிதனாக, மெல்ல மெல்ல சாவை நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனாக இதனை எழுதுகிறேன்.

`நெஞ்சுக்கு நீதி'யின் நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள், `இருபது ஆண்டுகள் சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால், வனப்பும், வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்துவிடுகிறது. ஆயுள் தண்டனையைவிட, மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்' என எழுதியுள்ளீர்கள். ஆம். உள்ளபடியே, பிழைபட்டுப் போன நீதியின் விளைவால், 18 ஆண்டு வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன். உண்மைக்கு `கருணை' வேண்டி நான் எழுதவில்லை. `கனிவு' வேண்டி எழுதுகிறேன்.

அய்யா.. `யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம்' என்கிறீர்கள். மகிழ்ந்து போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது, `ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களைக் கிழித்துவிடாதீர்கள்' எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். `மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்குக் கூடாது' என்றீர்கள். வியந்திருக்கிறேன்.

ஆனால், அய்யா... வேதனையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், பிறகேன் எமது தூக்கினை மாற்றத் தயங்குகிறீர்கள்? `நால்வரையும் தூக்கிலிடுவதில் எனக்கோ, எனது புதல்வர்களுக்கோ விருப்பமில்லை' என திருமதி சோனியா அம்மையார் கூறிய பின்னர், நளினியின் தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள். மகிழ்ச்சி. அதேநேரம், அவருக்கு தூக்கினைக் குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால், அதைவிட கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏனெனில், இதேநிலை முடிவற்று நீடிப்பதால் தொலைந்துபோகும் எனது வாழ்வைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. மாறாக, கடந்த 18 ஆண்டுகளாகவே தமது வாழ்வே என்னை மீட்பதுதான் என சலிக்காது போராடிவரும் எனது பெற்றோரின் முதுமை தரும் அச்சம்தான் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக எனது கடமையைச் செய்யத் தவறியிருந்தாலும், எனது நிலையால் அவர்கள் இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வு காண ஆசை கொள்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டிருந்தால், எனது பெற்றோர் தமது பேரப்பிள்ளைகளோடு இனிமையைக் கண்டிருப்பர். என்னைப் பற்றிய துன்பம் எனது பெற்றோரையும், உற்றாரையும் ஆட்கொண்டிருக்காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை. எனது பெற்றோருக்கு அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை.

பிரியங்கா, நளினி சந்திப்பு அதற்கான வாய்ப்பினைத் தந்துள்ளது. திரு தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்கள் எமது துன்பத்தை எதிரொலிப்பதாக உள்ளன. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடுதலை கிட்டவில்லையானால், இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை. வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ தற்போதே இறுதி செய்யப்பட்டாக வேண்டும். அல்லது இன, மொழிப் பற்றுக்காக குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என்று வரலாறு குறிக்கட்டும். முடிவுரை எழுதி புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு கடிதத்தை நிறைவு செய்கிறேன்' என ஏழு பக்கங்களுக்கு தனது கோரிக்கையைப் பதிவு செய்திருக்கிறார் பேரறிவாளன்.

நாம் இந்தக் கோரிக்கை கடிதம் பற்றி பேரறிவாளனின் தாய் அற்புதத்திடம் பேசினோம். "அண்ணா நூற்றாண்டு விழாவில் கட்டாயம் அறிவிப்பு வரும் என நம்பிக்கையோடு என் மகன் முதல்வருக்குக் கடிதம் எழுதினான். எதுவும் நடக்கவில்லை'' என குமுறலோடு பேசியவர், சிறிது இடைவெளிக்குப் பிறகு, "எங்களுக்கு ஒரு பையன். இரண்டு பெண் குழந்தைகள். அறிவு சிறைக்குப் போகும்போது, அவனுக்கு 19 வயசு. அவன் அக்காவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இப்போது பேரன் ப்ளஸ்டூ படிக்கிறான். பேத்தி ஒன்பதாவது படிக்கிறாள். கடந்தமுறை சிறையில் அவனைச் சந்தித்துப் பேசும்போது, `செப்டம்பர் 15_ம் தேதிக்குள் அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால், `தயவு செய்து என்னைத் தூக்கில் போடுங்கள்' என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நான் கடிதம் எழுதப் போகிறேன்' என என்னிடம் அழுதான்'' என்றபடியே அழ ஆரம்பித்துவிட்டார் அற்புதம்.

`இன்றில்லாவிட்டாலும், நாளை, நாளை மறுநாள்.. என்றாவது ஒருநாள் தன் மகனின் விடுதலை தீர்மானிக்கப்படும்' என்ற நம்பிக்கைதான் அற்புதத்தின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

புலிகள் கவர்ந்து சென்ற பொருள் என்ன??? --குமுதம் ரிப்போர்ட்டர்


ஹாட் டாபிக்

எங்கிருந்து வந்தார்கள்? எப்படி ஊடுருவினார்கள்? தாக்குதல் நடத்தினார்கள்?'' - வவுனியா விமானப்படை தளம் மீது கடந்த 9-ம்தேதி புலிகள் நடத்திய அந்த அதிர்ச்சித் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு. இதுபற்றி விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏழு டிவிஷன் ராணுவத்தினர், ஒரு விசேஷ படைப்பிரிவு, கமாண்டோ பிரிகேட் போன்றவை உள்ள கட்டுக்காவல் நிறைந்த இடம்தான் வவுனியா ராணுவ முகாம். அந்தப் பக்கம் விமானப்படைத் தளம். அங்கே 2 பட்டாலியன் அணிகள், ஒரு விசேஷ படைப்பிரிவு. இந்த 2 தளங்களுக்கும் இடையில் ஒரே ஒரு தெரு. இவ்வளவு கட்டுக்காவல் உள்ள இடத்துக்குள்தான் புகுந்து இலங்கை ராணுவத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள் புலிகள்.

இந்தத் தாக்குதல் எப்படி நடந்தேறியது என புலிகளின் ஆவணக் காப்பகத் தலைமையகம் தற்போது தகவல் வெளியிட்டிருக்கிறது. அந்தத் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.முன்பு கட்டுநாயகா விமானதளம், அனுராதபுரம் விமானதளங்கள் மீது புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல் தொடுக்கக் காரணமாக இருந்தவர் கர்னல் சார்லஸ். புலிகளின் புலனாய்வுப் பிரிவு தளபதியான இவர், பள்ளமடுவில் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்து விட மகிழ்ச்சிக் கூத்தாடியது இலங்கை ராணுவம். அந்த நேரத்தில் சார்லஸ் இடத்துக்கு வந்தார் ரத்தினம் மாஸ்டர். `சார்லஸ் போனால் என்ன? நாங்கள் இருக்கிறோமே?' என்று உணர்த்த அவர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்தான் வவுனியா விமானதளம் மீது விழுந்த அந்த பேயறை!

வவுனியா விமானதளத்திலுள்ள இரண்டு ரேடார்கள் புலிகளுக்கு பலவகையிலும் இடைஞ்சலாக இருந்ததால், அவற்றைத் `தூக்க' முடிவு செய்தார் ரத்தினம் மாஸ்டர். அதற்காகப் புலிகளின் தலைமையிடம் பேசி ஒப்புதல் வாங்கினார். அதையடுத்து 5 ஆண் கரும்புலிகளும், 5 பெண் கரும்புலிகளுமாக பத்துப் பேர் அவரிடம் வந்து சேர்ந்தார்கள். ரகசிய இடத்தில் நடந்த ஓர் ஒத்திகைக்குப் பின் அந்த பத்துப் பேர் படை இலங்கை ராணுவச் சீருடையுடன் வவுனியாவின் வடக்குப் பகுதிக்கு ஊடுருவியது. நெடுங்கேணி வெடிவைத்த கல்லு வழியாக, மணலாறு வந்து, அங்குள்ள சிங்கள கிராமங்களைக் கடந்து ஆசிக்குளம், சமனங்குளம் காட்டுப்பகுதிக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தது.

இன்னொருபுறம் `கிட்டு பீரங்கிப் படையணியின்' ஒரு பிரிவு, வவுனியா விமானதளம் மீது குண்டுமழை பொழிய வசதியாக, ஆர்டிலரி பீரங்கிகள் சகிதம் புளியங்குளம் பகுதியில் நிலைகொண்டிருந்தது. `ம்' என்றால் போதும், விமானதளத்தை நீண்டதொலைவில் இருந்தே பொரித்துவிடத் தயாராக இருந்தார்கள் அவர்கள்.

8-ம்தேதி நள்ளிரவு தாண்டி நிலா மறைந்த நேரம், ரத்தினம் மாஸ்டரின் உத்தரவு, வானலை வழியே மிதந்து வர, லெப். கர்னல் வினோதன், லெப். கர்னல் மதியழகி ஆகியோர் தலைமையில் தற்கொலைப்படையினர் பத்துப் பேரும் வவுனியா விமானதளத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். அவர்கள் கையில் டி-56, ஆர்.பி,ஜி., எம்.பி.எம்.ஜி., கிரனேட், ராக்கெட் லாஞ்சர்கள். கூடவே டொபி டோக், சார்ஜர் எனப்படும் தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி.

இவர்களுடன் புலிகளின் சிறப்பு உளவுப்பிரிவைச் சேர்ந்த வழிகாட்டிகள், கண்ணிவெடி கண்டுபிடிப்பவர்கள் என நான்கு பேர். போதாக்குறைக்கு புலிகளின் வீடியோ படப்பிடிப்பாளர்கள் வேறு இவர்களுடன் சென்று கடைசிவரை அந்தத் தாக்குதலைப் படம் பிடித்திருக்கிறார்கள்(!).
விமானநிலையத்தைச் சுற்றியிருந்த முட்கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இவர்கள் உட்புகுந்தனர். இன்னும் 200 மீட்டா் தூரம் கடந்தால் விமானதளம். அந்த நேரம் பார்த்து எதிரே வந்த ஓர் இலங்கை ராணுவ வீரன் புலிகளின் அன்றைய சங்கேத வார்த்தையைக் கேட்டிருக்கிறான். ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட ராணுவ விமானப்படை முகாம்களில் வெளியாள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக தினமும் ஒரு சங்கேத வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம்.
சங்கேத வார்த்தை தெரியாத நிலையில் புலிகள் அந்த சிங்கள வீரனுக்கு துப்பாக்கிமூலம் பதில் சொல்லிவிட, அதிகாலை 3.05 மணியளவில் திட்டமிட்டதற்கு முன்பாகவே ஆரம்பமாகி விட்டது சண்டை. வழிமறித்த ஒரு தடையரண் மீது ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தினர் புலிகள். மறுபுறம் கட்டுப்பாட்டு கோபுரத்தைக் குறி வைத்தும் ராக்கெட்டுகள் பறந்தன. சிங்கள ராணுவம் சுற்றி வளைத்த நிலையில், தடையரணைத் தகர்ப்பதும் கடினமென்ற நிலையில் நவீன `ஐகாம்' வயர்லஸ் மூலம் தகவல் தந்தனர் புலிகள். அடுத்தநிமிடம் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்த ஷெல்கள் படைத்தளத்தை அதிர வைத்தன.

புளியங்குளத்தில் இருந்த கிட்டு பீரங்கிப்படை தந்த பரிசளிப்பு அது. அதில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் முடங்கிக்கொள்ள, சிங்கள ராணுவமும் பதுங்கிக் கொண்டது.

விமானப்படை தளத்தின் உள்ளே ஒரு பாறை மீதிருந்த ரேடார்களைக் குறிவைத்து முன்னேறினர் புலிகள். இன்னும் 75 மீட்டர் தூரம்தான். இந்தநேரத்தில் ரேடார் திரையில் ஒரு மர்மப்புள்ளி தெரிவதைக் கண்டு அதிர்ந்து போனார்கள் இலங்கை அதிகாரிகள். அது புலிகளின் விமானம்! உடனே கட்டுநாயகா விமானதளத்தில் இருந்த விங் கமாண்டர் சஞ்சயாவுக்குத் தகவல் பறந்தது. ஏர் வைஸ் மார்ஷல் ஷெரான் குணதிலகாவின் உத்தரவின்பேரில் `முதலை மூக்கு' எனப்படும் மிக்-27 விமானம், இரண்டு எப்-7 விமானங்கள் கட்டுநாயகாவிலிருந்து வவுனியாவை நோக்கி விரைந்தன. அப்போது அதிகாலை 3.34.

இதற்குள் 3.26-க்கு வந்த புலிகளின் முதல் விமானம் 3.31-க்கு 2 குண்டுகளை வீசியது. அடுத்த 2-வது நிமிடம் புலிகளின் 2-வது விமானமும் வந்து இரண்டு குண்டுகளை வீசிவிட்டுப் பறந்தது. பிறகு மீண்டும் வட்டமடித்து வந்து குண்டுவீசியது. புலிகளின் விமானங்கள் வீசிய மொத்த குண்டுகள் எட்டு. அந்த குண்டுகளில் ஒன்று விசேஷ படைப்பிரிவின் தளபதி கர்னல் நிர்மல் தர்மரத்னாவின் தங்குமிடம் அருகில் விழுந்தது. அன்று அவர் விடுமுறையில் போயிருந்ததால் தப்பினார்.தாக்குதல் முடிந்து புலிகளின் ஒரு விமானம் இரணைமடுவை நோக்கித் திரும்ப, மற்றொரு விமானம் புதுக்குடியிருப்பு நோக்கிப் பறக்கத் தொடங்கியது. அந்த விமானத்தை இலங்கை விமானப்படையின் எப்-7ஜி விமானம் ஒன்று, ஒன்றரை கி.மீ. தொலைவில் பின் தொடர்ந்தது. `சுட்டுவீழ்த்தவா?' என்று இலங்கை விமானி அனுமதி கேட்க, `சுடு!' என்ற அனுமதி தளபதியிடம் இருந்து வந்தது. இதன்பிறகு புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அது முள்ளியவளை காட்டுப் பகுதியில் விழுந்ததாகவும் பீற்றிக் கொண்டது இலங்கை விமானப்படை.

ஆனால் நடந்ததோ வேறு. இலங்கைப் போர் விமானம் நெருங்குவதை உணர்ந்து கொண்டதும் புலிகளின் விமானம் ஆகாயத்தில் ஓர் அந்தர்பல்டி அடித்து பலநூறு அடிகள் கீழே இறங்கி, பிறகு அதே வேகத்தில் வேறு திசையில் மேலெழுந்து `சுடுஎல்லையில்' இருந்து தப்பிவிட்டது என்பதே நிஜம் என்கிறார்கள் புலிகள்.

வவுனியா தாக்குதலில் இன்னும் சில மர்மங்களும் இருக்கின்றன. பிரபாகரனோடு சேர்ந்து படமெடுத்துக் கொண்டது பத்து கரும்புலிகள் மட்டும்தான். ஆனால் விமானப்படை தளத்தில் பதினோராவதாக ஒரு போராளியின் சடலம் ஒன்றை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள். அவர் யார்? இந்தக் கேள்வி ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்த, மறுபக்கம், சண்டை நடந்த இடத்திலிருந்து ஒரு பிஸ்டலின் 16 ரவைகளை எடுத்திருக்கிறது ராணுவம். அந்த பிஸ்டலைப் பயன்படுத்திய போராளி, தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதன்மூலம் புலிகளின் குறி வவுனியா படைத்தள ரேடார்கள் மட்டுமல்ல ஏதோ ஒரு முக்கிய ஆவணம் அல்லது பொருள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதை வெற்றிகரமாகக் கவர்ந்து கொண்டு புலிகளில் சிலர் தப்பிவிட்டதும் தெரிகிறது. புலிகள் கவர்ந்து சென்ற அந்தப் `பொருள்' என்ன? புலிகளின் அடுத்த தாக்குதலின் போது அது தெரிய வரலாம்.


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்.

தாயகத்தில் இன்னல்படும் உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு T.Y.O கனடா 30 மணிநேரம் உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு



கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர்.

தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வு 10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம் அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது.

நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்று தாயகத்தில் அல்லலுறும் எமது மக்களுக்கு ஆதரவு வழங்கிடுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகழ்வு தொடர்பான மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் (01) 647 834 1075 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறில் பொறிவெடித் தாக்குதலில் எஸ்.ரி.எவ் ஐச் சேர்ந்த ஒருவர் பலி



அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஊடுருவ முயற்சித்தனர்.

ஊடுருவ முயற்சித்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதல் நடத்தினர்.

இதில் சிக்கிய அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

ஐ.நா சபை முன்பு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.


சுவிற்சர்லாந்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் பாரிய கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் சுவிற்சர்லாந்தின் அனைத்து பாகங்களில் இருந்தும் தமிழ் மக்கள் கலந்துகொண்டதுடன், ஏனைய சில நாடுகளில் இருந்தும் ஒருசில மக்கள் கலந்துகொண்டனர்.


கவனயீர்ப்பு நடவடிக்கை நடைபெற்ற ஏக காலத்தில், வன்னி மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் மனு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியின் செயலரிடம் கையளிக்கப்பட்டது.


குறுகிய நாட்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு நடவடிக்கையில் 1,500இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதுடன், அவர்கள் தமது உறவுகளின் நிலை தொடர்பாக ஐரோப்பிய தொலைக்காட்சியுடன் தமது கருத்துக்களைப் பகிந்து கொண்டனர்.


அத்துடன், தமிழ் மக்கள் மனித அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் மெளனமாக இருப்பதாகவும் இதில் கலந்துகொண்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 9வது கூட்டத்தொடர் தற்பொழுது நடைபெற்று வருவதால், இன்றைய கவனயீர்ப்பு நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.


இன்றைய நிகழ்வில் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலர் கிருபாகரன், சுவிஸ் தமிழர் பேரவையின் துணைத்தலைவர் சண் தவராஜா, செயலர் நமசிவாயம், பிரித்தானிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பத்மநாதன், இராமலிங்கம் உட்பட பலர் உரையாற்றியிருந்தனர்.



மேலும் படங்களை பார்வையிட....
http://www.swissmurasam.info/images/stories/programe/24-09-08Geneva_1/album/