40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகள் எச்சரிக்கை


இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசாங்கம் சரியான தீர்வை வழங்காவிடின் இந்திய பாராளுமன்றத்தில் தமிழக கட்சிகள் வகிக்கும் உறுப்பினர்கள் பதவிகளிலிருந்து விலக நேரிடும்

என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கப் பாராளுமன்றத்தில் தமிழகக் கட்சிகள் 40 உறுப்பினர்கள் பதவிகளை வகித்து வருகின்றனர்.
இலங்கைத் தமிழருக்கு உடனடியாக உரிய தீர்வு வழங்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க பின்நிற்கப்போவதில்லை என கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் இனஒடுக்குமுறை குறித்த தமிழக அரசியல் கட்சிகளின் குரல் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆரம்ப உரையில் கலைஞர் கருணாநிதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகள் மற்றும் பிரமுகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கலைஞர் தெரிவித்துள்ளார்.

சிங்கள அதிகாரிகள் மற்றும் சிங்கள இராணுவத்தினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளும் தி.மு.கவின் சிரேஸ்ட உறுப்பினர்கள், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், நடிகர் விஜய டி ராஜேந்தர், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், பல முக்கிய அரசியல் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.


முழுமையான உரை

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து 14.10.2008 அன்று மாலை 4.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைத் தொடங்கி வைத்து மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நான் விடுத்த வேண்டுகோள் அழைப்பிற்கிணங்க வருகை தந்துள்ள கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகக் கூட அல்ல. எல்லோரும் சேர்ந்து எடுக்க இருக்கின்ற, எடுப்பதற்காக முடிவு செய்து அறிவிக்கின்ற ஒரு செயலை எப்படி நிறைவேற்றுவது என்பதைப் பற்றி முடிவெடுப்பதற்காகக் கூட்டப்பட்டுள்ள கூட்டம் என்றே நான் கருதுகின்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட உண்ணா நோன்பில் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை இலங்கையில் நடைபெறுகின்ற இனப்படுகொலையைக் கண்டிக்கின்ற வகையிலே எடுத்துரைத்து, அதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் ஒரு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று,

வேறு பல இயக்கங்களின் சார்பாகவும் அவர்கள் கருதியவாறு பல நிகழ்ச்சிகள் - கண்டனங்கள் - கூட்டங்கள் வாயிலாக அல்லது அமைப்புகள் வாயிலாக, அல்லது அவர்தம் செயற்குழுக்கள் வாயிலாக, பேரணிகள் வாயிலாக நடத்தப்பட்டு, திராவிடர் கழகத்தின் சார்பாகவும் பேரணி ஒன்று நடத்தப்பட்டு, தொடர்ந்து இந்தப் போராட்டத்தை ஒவ்வொரு அமைப்பும் நடத்துகின்ற வகையிலே அமைந்து, தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய இயக்கத்தின் சார்பாக இலங்கையில் நடைபெறுகின்ற கொடுமைக்கு எதிரான குரலை உயர்த்தினால் மாத்திரம் போதாது.

எல்லோருடைய குரலும் ஒரு குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இது தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் குரல் எழுப்புவது தவறு என்ற கருத்தின் அடிப்படையிலே அல்ல. தனித்தனியாக குரல் எழுப்புகின்றவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் நம்முடைய வலிமையை, நம்முடைய பலத்தினைக் காட்டுகின்ற வகையில், தமிழர்களுடைய இதயம் எல்லாம் பக்கத்திலே வாடிக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய இனத்தின் - தமிழ் இனத்தின் வாழ்வைப் பற்றிய ஒன்றாக இருக்கின்ற காரணத்தால் அதிலே எப்படி வெற்றி காண்பது என்பதைத் தீர்மானிக்க நாம் எந்த முடிவுகளை மேற்கொள்வது என்பதைப் பற்றி கருத்தறிய,

அறிந்த கருத்துக்களை எல்லாம் ஒருமுனைப்படுத்த உதவிடும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம். இதிலே கலந்து கொண்டிருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் இந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இன்று நேற்றல்ல, நீண்ட பல காலமாக ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் எல்லாம் இந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே ஈடுபாடு கொண்டு, போராட்டங்களிலே கலந்து கொண்டு சிறை சென்று பல தியாகங்களுக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டு அதற்காகப் போராடியவர்கள் என்பதை நான் நன்கறிவேன்.

அவர்கள் எல்லாம் இங்கே இருக்கின்றீர்கள். எனவே, உங்களுடைய செழுமிய கருத்துக்களை - இலங்கைத் தமிழர்களை மீட்டெடுக்கக்கூடிய, அவர்களுடைய இனத்தை இன்றைக்கு நாசப்படுத்துகின்ற சிங்கள அதிகாரிகள், சிங்கள இராணுவம் இவர்களிடமிருந்து அவர்களை மீட்டெடுக்க என்ன வழிவகை என்பதையும் நாம் எப்படி நம்முடைய எண்ணங்களை செயல்படுத்துவது என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களுடைய அத்தகைய கருத்துக்களை எதிர்பார்த்து இந்த அளவில் என்னுடைய ஆரம்ப உரையை நிறைவு செய்கின்றேன்.

உரையின் 2ம்பகுதி: இங்கே நம்முடைய தம்பி டி. ராஜேந்தர் அவர்கள், வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்திற்கு வராதது குறித்து சற்று வேதனையோடும் வேகமாகவும் தனது கண்டனத்தைத் தெரிவித்தார். அவர்கள் இலங்கை பிரச்சினையிலே பின்னடைவு கொண்டு வரவில்லை என்று கருதத் தேவை யில்லை.

என்னுடைய பிரச்சினையிலே அவர்களுக்குள்ள அதிருப்தியின் காரணமாகத் தான் வரவில்லையே தவிர, இலங்கையிலே தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை சிங்கள வெறியர்களுக்கு களப்பலியாக ஆக்கக் கூடாது, அவர்கள் சிங்கள ராணுவத்திற்கு பலியாகி மாண்டு மடியக் கூடாது என்பதில் எல்லோரையும் போலவே ஒத்தக் கருத்து உடையவர்கள் தான் என்றாலுங்கூட, இன்று வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சிங்கள வெறியர்கள் நினைத்து விடக் கூடாது.

இந்தக் கூட்டத்தின் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்ட அந்த மறுப்புக் கருத்துக்கள் அவர்கள் காதுகளிலே விழுமேயானால் - நான் தம்பி ராஜேந்தரை குறை கூற இல்லை - அவருடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார் - ஆனால் இது சிங்கள வெறியர்களுக்கு ஒரு ஊக்கமாக, ஆக்கமாக அமைந்து விடக் கூடாது. அமைய விடவும் மாட்டோம்.

யார் நம்மிடமிருந்து விலகிச் சென்றாலுங் கூட இந்தப் பிரச்சினையிலே அவர்களை யெல்லாம் அழைத்து வைத்து, இழுத்து வைத்து ஓரணியிலே நாம் திரண்டு மத்திய அரசை வலியுறுத்தி நம்முடைய தமிழ் மக்களை இலங்கையிலே காப்பாற்றுகின்ற அந்த முயற்சியிலே வெற்றியடைவோம் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் நமக்கு இடையிடையே ஏற்படுகின்ற சில சங்கடங்களை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். சிலருக்கு இதிலே அபிப்பிராய பேதம் இருக்கலாம். என்னுடைய அருமை நண்பர் பழ. நெடுமாறன் அவர்களுக்கு, வேறு சில நண்பர்களுக்கு அதிலே வேறுபட்ட கருத்துகள் கூட இருக்கலாம்.

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் நான் நீண்ட காலமாக விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டவர்களுக்குள்ளே - அவர்களுக்குள்ளே சகோதர யுத்தம் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறேன். அத்தகைய சகோதர யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளை யெல்லாம் நாம் நன்கறிந்திருக்கின்றோம். திருமதி இந்திரா காந்தி அவர்களால் கிடைத்த உதவிகளைக் கூட நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் அந்தச் சகோதர யுத்தம், நம்முடைய இலக்கினைப் பாழ்படுத்தி விட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் உலகத்தில் உள்ள பல அமைப்புகளின் சார்பாக கண்டனங்களையெல்லாம் கூடப் பொருட்படுத்தாமல், நூறுக்கு மேற்பட்ட முகாம்களை இந்தியாவிலே விடுதலைப் புலிகளுக்கு அமைவதற்கும், அந்தப் போராளிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் அவர்கள் அன்றைக்கு ஆயத்தமாக இருந்தது மாத்திரமல்லாமல், ஆதரவும் அளித்தார்கள்.

அப்படிப் பட்டவர்களுடைய உதவிகளைக் கூடப் பெற்று, அந்தப் போராட்டத்திலே நாம் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம், நம்மிடையே ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் என்பதை மறந்து விடக் கூடாது. ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் . மதுரையிலே டெசோ மாநாடு நடத்தினோம். 4/5/1986இல் நாம் நடத்திய டெசோ மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராமுவாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த சிங், ராச்சையா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அந்த மாநாட்டில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும், நம்முடைய அன்பு நண்பர் நெடுமாறன் அவர்களும் அய்யணன் அம்பலம் அவர்களும், அப்துல் சமத் அவர்களும் முன் நின்று தான் அந்த மாநாட்டை மதுரையிலே நடத்தினோம். மாநில மாநாடு போல மிகவும் எழுச்சியாக நடைபெற்ற மாநாடு. அந்த மாநாட்டில் எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் இருந்தார்.

டி.யு.எல்.எப். சார்பாக பெரியவர் நாவலர் அமிர்தலிங்கம் வந்திருந்தார். டெலோ சார்பாக மதி என்ற நண்பர் கலந்து கொண்டார். புரோடெக் சார்பாக சந்திரகாசன், தந்தை செல்வா அவர்களின் மகன் வந்திருந்தார். ஈராஸ் இயக்கத்தின் சார்பாக ரத்தினசபாபதி கலந்து கொண்டார். டி.ஈ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன் வந்திருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராச பெருமாள் கலந்து கொண்டார். பிளாட் சார்பாக வாசுதேவர் கலந்து கொண்டார். மற்றும் மற்றும் முரசொலி மாறன், ஆர்க்காடு வீராசாமி, செ. கந்தப்பன், நண்பர் வைகோ என்று அத்தனை பேரும் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டோம். ஆனால் அந்த மாநாட்டிலே ஒரு செய்தி கிடைத்தது.

மறுநாள் டெலோவின் தலைவர் சிறீ சபாரத்தினத்தைக் கொல்லப் போகிறார்கள் என்ற செய்தி தான் அது! நான் இன்னொரு இயக்கத்தின் நண்பர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னேன். தமிழர் தலைவர் வீரமணி அவர்களுக்குக் கூடத் தெரியும். கையைப் பிடித்துக் கொண்டே சொன்னேன் - இது கை அல்ல, உங்களுடைய கால் என்று கருதிக் கொள்ளுங்கள், சபாரத்தினத்தைக் கொன்று விடாதீர்கள் என்றெல்லாம் சொன்னேன்.

ஆனால் 6ஆம் தேதி கிடைத்த செய்தி - சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்டார் என்பது தான். அவர் டெலோ இயக்கத்தின் தலைவர். இப்படி சகோதர யுத்தத்தினால் நாம் பலவீனப்பட்டு விட்டோம். இன்றைக்கு இலங்கையிலே நடைபெறுகின்ற இந்த அக்கிரமங்களை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் - நாம் பலகீனப்பட்டது தான்.

இன்னொன்றும் சொல்கிறேன். டெல்லியில் 18-6-1990 அன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் என்றால் வி.பி. சிங் அவர்களின் இல்லத்தில் அவரே ஏற்பாடு செய்த கூட்டம் - இலங்கைப் பிரச்சினைக்காக முதல் அமைச்சர்கள் ஜோதிபாசு, ஈ.கே. நாயனார், பிஜூ பட்நாயக், செகாவத், லல்லு பிரசாத், மகந்தா, குப்தா, சாந்தகுமார், பண்டாரி, டி. ராமச்சந்திரன் மற்றும் மத்திய அமைச்சர்கள் அருண் நேரு, முப்தி மகமது சையத், முரசொலி மாறன், குருபாதசாமி, தினேஷ் கோசுவாமி, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன் மற்றும் வாஜ்பாய், அத்வானி, ஈ.எம்.எஸ்., இந்திரஜித் குப்தா, பரூக்கி, ஜஸ்வந்த் சிங், சிட்டபாசு, சாமர் முகர்ஜி, டாக்டர் நகேந்திர சக்கரியா ஆகியோரிடம் ஈழப் பிரச்சினை குறித்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நாங்கள் விவாதித்திருக்கிறோம்.

பிரதமர் வி.பி. சிங் அவர்கள் முன்னிலையில் நான் பல விளக்கங்களை யெல்லாம் எடுத்துச் சொல்லி, எல்லோரும் நான் சொன்னதில் உடன்பாடு கொண்டு நாங்களும் இந்தப் பிரச்சினையில் அகில இந்திய அளவிலே அணி வகுக்கிறோம் என்று சொன்னார்கள். அவர்களிடம் பேசி விட்டு நான் தமிழ்நாடு இல்லத்திற்கு வருகிறேன். சென்னையிலிருந்து தொலைபேசி வருகிறது. பத்மநாபா அவர்களும், அவரோடு பத்து பேரும் சென்னையிலே கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று செய்தி வருகிறது. அவர்கள் ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் தான். இப்படி சகோதர யுத்தத்தால் நாம் பாழ் பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாமல், அந்தச் சகோதர யுத்தங்கள் காட்டிய பாடத்தை இப்போது நாம் பெற வேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய இந்தக் கூட்டத்திலே உறுதி எடுத்துக் கொள்வோம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

No comments: