ஒரு நிமிட யுத்தத்திற்கு அரசு 6,800 ரூபாவைச் செலவிடுகிறது -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா


“நாட்டில் இன்று நடைபெறும் யுத்தத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 6 ஆயிரத்து 800 ரூபா செலவாகின்றது. அரசாங்கம் யுத்தத்தை விரும்பிச் செய்யவில்லை.

ஆனால், யுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்’. இவ்வாறு தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனா கதிர்காமம் ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போது கூறினார்.

300 பயிலுநர் ஆசிரியர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர்; இந்த யுத்தம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படும். பயங்கரவாதம் ஒழிக்கப்படவே இந்த யுத்தம். அரச ஊழியர்கள் தமது கடமைகளை சீராகச் செய்தால் நாட்டின் அபிவிருத்திப்பணிகள் எதுவித தடையும் இன்றி நடைபெறும். ஆனால், அதிகமான அரச ஊழியர்கள் தமது கடமைகளை உரியவாறு செய்வதில்லை. இதனால் பல வேலைகள் முடங்கிக்கிடக்கின்றன.

அரச ஊழியர்கள் 12 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் மற்றும் பல வசதிகள் அரசினால் செய்யப்பட்டுள்ளன. அதைப்பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. நாட்டின் சனத்தொகையில் 12 பேருக்கு ஒருவர் என்று அரச ஊழியர்கள் உள்ளனர். கல்விக்காக அரசு வருடம் தோறும் பல கோடி ரூபாவை செலவிட்டு எமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறையாக உள்ளனர். இலவச சீருடை, இலவச நூல், போக்குவரத்து வசதி, பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் என்றெல்லாம் அரசு செய்துவருகின்றது.
ஆனால் பல்கலைக்கழகத்துக்கு வந்த பின்னர் மாணவர்கள் காடைத்தனங்களில் ஈடுபடுகின்றனர். பல்கலைக்கழக சொத்துக்களை அழிக்கின்றனர். மாணவர்களும் மாணவர்களும் மோதிக்கொள்கின்றனர். இதனால் சில பல்கலைக்கழகங்களை மூடவேண்டியுள்ளது. எனது பிள்ளை பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாவான், பொறியியலாளர், டாக்டராவான் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்களை மாணவர்கள் பாழாக்கி வருகின்றனர் என்றார்.

No comments: