வன்னி மக்களுக்கு வைத்த பொறியில் யாரும் மாட்டவில்லையாம் - வன்னியிலிருந்து வவுனியாவிற்கு மக்களை வரவழைக்கும் திட்டம் பலனளிக்கவில்லை: அரசாங்கம்


வன்னியிலுள்ள மக்களை வவுனியாவுக்கு வரவழைப்பதற்கான திட்டம் எதிர்பார்த்தளவு பலனளிக்கவில்லையென அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

கொழும்பிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டன.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண இது பற்றி தெரிவிக்கையில்;

வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை வவுனியாவுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எதிர்பார்த்தளவுக்கு நிறைவேறவில்லை. சில நேரம் புலிகள் அம்மக்களை தடுத்து நிறுத்தி வைத்திருக்கலாம். இல்லாவிட்டால் வவுனியா வருவதை விட வன்னியிலிருப்பதே உகந்ததென மக்கள் நினைத்திருக்கலாம்.

எப்படியிருப்பினும் அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அரசினால் விநியோகிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன என்றார்.

இதையடுத்துப் பேசிய மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்கையில்.

வன்னியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறி வவுனியா வருவதற்கென அரசாங்கத்தால் கொள்கை ரீதியாக அறிவிக்கப்பட்ட "மனிதாபிமான வழி' குறித்த திட்டம் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மனிதாபிமான வழி தொடர்பான விபரங்கள் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் அவர்கள் ஏதேனும் முடிவெடுக்கக் கூடும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யாரையும் எதற்கும் பலவந்தப்படுத்த முடியாது.

வாகரையில் மக்களை புலிகள் பலவந்தமாகத் தடுத்து வைத்திருந்த போது ஒரு கட்டத்தில் மக்கள் அந்த தடையையும் உடைத்தெறிந்து வெளியில் வந்தனர். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பம் எப்போதும் ஏற்படலாம்.
எப்படியிருப்பினும் மக்கள் வவுனியா வந்தாலும் சரி, வன்னியில் இருந்தாலும் சரி அவர்களுக்குரிய பொருட்கள் அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும். அதற்கமையவே தற்போது வன்னியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதேநேரம், பிரதேசங்கள் மீட்கப்பட்ட பின்னரே மனிதாபிமான வழியை ஏற்படுத்த முடியும் என்றார்.

நன்றி : தினக்குரல்

No comments: