இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல் - முரண்பட்ட அரசியலாக உருவெடுப்பு

நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல்கள் கடும் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும் இந்த நிலைமையில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் இருந்து வருவதாகவும் சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காலி வீதியின் தடைகளை அகற்றுமாறு கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு திகதி குறிப்பிட்டு, வழங்கப்பட்ட தீர்ப்பு, முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளின் விதம், இந்தமோதல் உக்கிரமடைய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தவிர தற்போது உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் சில வழக்கு விசாரணைகளிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச சேவை மற்றும் நீதிச்சேவை ஆகியவற்றில் ஒய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் மற்றும் அரசாங்கத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் இடையிலான கொள்கைளில் முரண்பாடுகள் எழுந்தன. அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு வருவதால், அரசியல் பிரச்சினை ஒன்று உருவாகி வருகிறது.

எதிர்வரும் காலங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நிறைவேற்று அதிகாரம் கவனத்தில் கொள்ளாது செயற்படும் நிலை தோன்றும் என அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அரசாங்கம் பிரதம நீதியரசருக்கு எதிராக , அரச மற்றும் தனியார் ஊடகங்களைப் பயன்படுத்தி, பாரிய எதிர்நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்க அமைச்சர்கள் சிலர், பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவது குறித்த யோசனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : உலகத்தமிழ்ச்செய்திகள்

No comments: