இலங்கை பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை விளக்க திமுக 6 ஆம் திகதி கூட்டம்


இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்கள் நிலையினை விளககவும், மத்திய அரசு தலையீட்டைக் கோரியும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் பொதுக்கூட்டம் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுக தலைமையிலான கூட்டணியைவிட்டு வெளியேறிய இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியில் நாளை மறுநாள் நடைபெறும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அழைக்கப்படவில்லை.

அதுகுறித்து தனது மனவருத்தத்தினை மறைமுகமாகத் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, 1991 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இருந்த காரணத்தால்தான் தனது ஆட்சி கலைக்கப்பட்டது,

அதற்கு முன்னர் திமுக உறுப்பினர்கள் இலங்கைத் தமிழருக்கு இழைககப்படும் இன்னல்களைக் கண்டித்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள், தவிரவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக, தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பதையெல்லாம் நினைவு கூர்ந்திருககிறார்.

ஆனால் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காதவர்களுக்கெல்லாம் உண்ணாவிரதத்தில் பங்கு பெற அழைப்பு விடுக்கப்பட்டிருககிறது என்று மேலும் குறைகூறியிருக்கிறார் தமிழக முதல்வர்.

ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், திராவிடர் கழகமும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கின்றன.

அக்டோபர் 2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருக்கும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் அஇஅதிமுக உட்பட பல கட்சிகளும் பங்குபெறுகின்றன.

பா ம க ஆர்ப்பாட்டம்

சென்னையில் பாட்டாளி மககள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராமதாஸ், உண்மைநிலை கண்டறிய வவுனியாவுக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழு செல்லவேண்டும், இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடவேண்டும் என வற்புறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படவேண்டும், அவ்வாறு செய்யப்படாவிட்டால் சட்டமன்ற வளாகத்திலேயே பாமகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் அக்டோபர் 10ஆம் நாள் இலங்கைத் தமிழர்மீது நடைபெறும் தாககுதல்களுக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக சென்னையில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறது.

No comments: